சத்யத்தின் கதை (10)

நடக்க வேண்டியதும், நடந்திருப்பதும்

நிதி விஷயத்தில் நிறுவனம்கள் முறை தவறாதிருக்க இப்போது சட்டபூர்வமாக என்ன நெறிமுறைகள் உள்ளன?

மூன்று மட்டங்களிலான கட்டுப்பாடு உள்ளது. அவையாவன:

1) Internal Audit என்னும் உள்ளார்ந்த தணிக்கை.
2) சட்ட ரீதியான வெளியார் தணிக்கை (External or Statutory Audit)
3) Audit Committee – தணிக்கைக் குழு.

முதலில் உள்ளார்ந்த தணிக்கை பற்றிப் பார்ப்போம்.

இது நிறுவனத்தின் இலாகா ஒன்றினால் செய்யப்படலாம், அல்லது வெளி தணிக்கை நிறுவனத்தால் செய்யப்படலாம்.

இந்த தணிக்கை அமைப்பு தங்கள் அறிக்கைகளையும் தகவல்களையும் தெரிவிக்க வேண்டியது தணிக்கைக் குழுவுக்கே தவிர, நிறுவனத்தின் முதன்மை அதிகாரிக்கு அல்ல. இவர்கள் முதன்மை அதிகாரிக்கு பதில் சொல்லக் கடமைப் பட்டவர்கள் அல்லர்.

இந்த அமைப்பு அன்றாட வரவு செலவுகளையும், செயல்பாடுகளையும் கட்டுப்பாட்டு நெறிமுறைகளையும் கண்காணிக்க வேண்டும். தாங்கள் தணிக்கை செய்யும் செலவு வரவினங்கள் சந்தேகத்துக்கு இடமளித்தால், அத்தனை கணக்கு வழக்குகளையும் புரட்டிப் போட்டு தணிக்கை செய்யவும் வேண்டும்.

இந்த உள்ளார்ந்த தணிக்கை அமைப்பை நியமிப்பது, அவர்கள் ஆற்ற வேண்டிய பணிகளை நிர்ணயிப்பது, அவர்கள் அறிக்கைகளைப் பெற்று, அவற்றுக்கான விளக்கங்களை நிர்வாகத்திடம் பெறுவது, அவை சரிதானா என்று இறுதி வரை தொடர்வது இத்தனையும் தணிக்கைக் குழுவின் கடமைகள். உள்ளார்ந்த தணிக்கை அமைப்பு தணிக்கைக் குழுவுக்கே பொறுப்பானது.

அடுத்து சட்டபூர்வ தணிக்கை.

தணிக்கை செய்யும் நிறுவனங்கள் குறைந்தபட்சம் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றப்பட வேண்டும். (சத்யத்தில் ப்ரைஸ்வாட்டர் 7 ஆண்டுகளாகத் தொடர்ந்து தணிக்கை செய்து வருகிறார்கள்!)

அதே போல, தணிக்கை நிறுவனத்தில், ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் தணிக்கைக்குப் பொறுப்பான முதுநிலை பார்ட்னர் அவ்வப்போது மாற்றப்பட வேண்டும்.

வங்கியிலிருந்து ஸ்டேட்மெண்ட்களை ஆடிட்டர்கள் நேரிடையாகக் கேட்டுப் பெற வேண்டுமே தவிர, நிறுவனம் மூலம் பெற்றுக் கொள்ளக்கூடாது.

முடிவாக, தணிக்கைக் குழு.

இந்த தணிக்கைக் குழுவிற்கு ஒரு சுயேச்சை டைரக்டர் தலைமை வகிக்க வேண்டும். இந்தக் குழுவில் சுயேச்சை டைரக்டர்கள் உறுப்பினராக இருப்பார்கள். இவர்கள் நிறுவனங்களின் தணிக்கை நிதி நிர்வாகம் சம்பந்தமான அடிப்படைப் பயிற்சி, அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

இந்த சந்தர்ப்பத்தில் சில விஷயங்களைச் சொல்லியாக வேண்டியிருக்கிறது.

சத்யத்தில் இன்டெர்னல் தணிக்கை என்று ஒரு துறை இருந்திருக்கத்தான் வேண்டும். யாருக்குமே தெரியாமல் எல்லா நிதி விவகாரங்களையும் ராமலிங்க ராஜுவே கையாண்டு (கையாடி?) இருக்கிறார் என்றால் இந்த இலாகாவினர் சம்பளம் வாங்கிக் கொண்டு பாண்டி ஆடிக் கொண்டிருந்தார்களா என்ற கேள்வி எழுகிறது!

இந்தியாவில் நாமறிந்த வரை எந்த ஆடிட்டரும் வங்கியிலிருந்து நேரடியாக ஸ்டேட்மெண்ட் பெறுவதில்லை. டி.வி.சோமநாதன் என்பவர் தமிழக அரசில் உயர் அதிகாரி. அவர் தணிக்கை சம்பந்தமான பல பரீட்சைகளில் தேர்வு பெற்றிருக்கிறார். அவர் எழுதுகிறார், "நாங்கள் படித்தபோது பாடப் புத்தகத்திலேயே இப்படித்தான் செய்ய வேண்டும் என்று திட்டவட்டமாகப் போட்டிருந்தார்கள். அந்த புத்தகத்தை எழுதியவர் ப்ரைஸ்வாட்டர் நிறுவனத்தின் பூர்வாஸ்ரமத் தலைவர்!" என்று. இப்போது தணிக்கை நிறுவனங்களைக் கேட்டால், "நாங்கள் மூன்றே மாதத்தில் முந்நூறு நிறுவனங்களை தணிக்கை செய்ய வேண்டியிருக்கிறது, இதெல்லாம் வேலைக்காகாது" என்கிறார்கள்! சத்யம் விஷயத்தில் அவர்களே, பேங்க் தருவது போல ஸ்டேட்மெண்ட்களை "உற்பத்தி" செய்திருக்க வாய்ப்பிருப்பதாகத்தான் தோன்றுகிறது.

இவ்வளவு கதை பேசுகிறீர்களே? இனிமேல் இப்படி தவறுகள் நடக்காமல் கண்காணிக்க உருப்படியான யோசனைகள் ஏதாகிலும் உண்டா என்கிறீர்கள்தானே? அடுத்த வாரம் "வேணி-வைத்தி கமிட்டி"யின் பரிந்துரைகளைப் படியுங்கள்!

(தொடரும்)

About The Author