ஏன் வடக்கே தலை வைத்துப் படுக்கக்கூடாது?
"அண்டத்தில் உள்ளது, பிண்டத்திலும் உண்டு". பிரபஞ்சத்தில் உள்ள எல்லா சக்திகளும் நம் உடலில் உள்ளன. இதில் காந்த சக்தியும் அடக்கம். நம் உடலில் தொப்புளுக்கு மேலே வடக்கு திசையாகவும், தொப்புளுக்குக் கீழே தெற்கு திசையாகவும் உடல் காந்தம் வேலை செய்து வருகிறது. இரு வேறு காந்தங்களின் ஒரே துருவங்களை – அதாவது, வடக்கோடு வடக்கையும், தெற்கோடு தெற்கையும் – ஒன்று சேர்க்க முடியாது; விலகிச் செல்லும். ஆனால் வேறு வேறு திசைகளைச் சேர்த்தால் ஒட்டிக்கொள்ளும்.
நாம் வடக்கே தலை வைத்துப் படுத்தால், நம் உடலின் வடக்கு திசையும் பூமியின் வடக்கு திசையும் எதிர்ப்படும். எனவே, இரவு முழுவதும் நம் காந்தத் தன்மையில் விலகும் செயல் நடக்கிறது. ஆகவே, நிம்மதியாகத் தூங்க முடியாது, இரத்த ஓட்டம் சீராக இருக்காது. உடலுக்கு நோய் வரும். எனவேதான் வடக்கே தலை வைத்துப் படுக்கக்கூடாது!
தெற்கே தலை வைத்துப் படுத்தால் நம் வட திசையும் பூமியின் தென் திசையும் ஒத்துப்போகும். இதனால், நிம்மதியான தூக்கம் வரும். தெற்கில் தலை வைத்துப் படுப்பது மிகவும் நல்லது.
"புது மாப்பிள்ளை தெற்கே தலை வைத்துப் படுக்க வேண்டும்" எனக் கேரளாவில் பாட்டிமார்கள் கூறுவார்கள். ஏனென்றால், புது மாப்பிள்ளைகள் குறைந்த நேரமே தூங்குவார்கள். அந்தக் குறைந்த நேரத் தூக்கமாவது நல்ல தூக்கமாக இருக்க வேண்டும் அல்லவா? அதனால்.
கர்ப்ப காலத்தில், குழந்தை வயிற்றில் இருக்கும்போது அம்மாவின் காந்த சக்தி தொப்புளுக்கு மேலே வடக்காகவும், தொப்புளுக்குக் கீழே தெற்காகவும் இருக்கும், வழக்கம் போல. ஆனால், குழந்தைக்குத் தொப்புளுக்கு மேல் பகுதி தெற்காகவும், கீழ்ப் பகுதி வடக்காகவும் இருக்கும். இப்படி இருந்தால்தான் குழந்தையின் தலை மேல் நோக்கி இருக்க முடியும்.
பத்தாவது மாதத்தில் குழந்தை வெளியே வருவதற்குச் சற்று முன்னால் இந்தக் காந்த நிலையில் மாற்றம் ஏற்படும். அதாவது, குழந்தையின் தொப்புளுக்கு மேல் வடக்காகவும், கீழே தெற்காகவும் மாறும். இந்த மாற்றம் ஏற்பட்ட உடனே குழந்தையின் தலைப்பகுதியான வடக்குத் திசை அம்மாவின் தெற்குப் பகுதியான கால் பகுதியை நோக்கித் திரும்பும். அதனால்தான் குழந்தைக்குத் தலை திரும்புகிறது.
வெறும் தரையில் படுக்கக்கூடாது, ஏன்?
நம் உடலின் வெப்பநிலை 37°C ஆகும். தரையில் படுத்தால் பூமியின் குளிர்ச்சியால் நம் உடல் வெப்பம் குறையும். அதனால், உடல் தன் வெப்பத்தை அதிகரித்துக் கொள்ள அளவுக்கு அதிகமாகச் சர்க்கரையையும் ஆக்ஸிஜனையும் பயன்படுத்தும். இதனால் தசை நார்களில் சேர்த்து வைக்கப்பட்டுள்ள கிளைக்கோஜன் எனும் சர்க்கரை தேவையில்லாமல் செலவாகும். மேலும், நுரையீரல் அதிகமாக வேலை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும். மூச்சிரைப்பு (wheezing), ஆஸ்துமா போன்ற நோய்கள் வரவும் வாய்ப்பு உள்ளது. எனவே, வெறும் தரையில் ஒருபோதும் படுக்க வேண்டாம்! ஏதாவது ஒரு விரிப்பை விரித்து அதில் படுங்கள். தியானம், யோகா போன்ற பயிற்சிகள் செய்யும்போது கூட வெறும் தரையில் செய்யாமல், விரிப்பின் மீது செய்வதே நல்லது!
இரவில் பல்துலக்கிப் படுத்தால் நன்றாகத் தூக்கம் வரும்.
இரவில் நன்றாகத் தூக்கம் வரவில்லை என்கிற கவலை உள்ளவர்கள், இரவு சாப்பிட்ட பின் குறைந்தது 1½ மணிநேரம் கழித்துப் பற்களைத் துலக்கிவிட்டுப் படுத்தால் நன்றாகத் தூக்கம் வரும்.
ஆனால், பல் துலக்கிய பிறகு பால், உணவுப் பண்டங்கள் என எதையும் சாப்பிடக் கூடாது. தண்ணீர் மட்டும் குடித்துக் கொள்ளலாம். ஒருவேளை ஏதாவது உணவு சாப்பிட்டால், மீண்டும் பல் துலக்க வேண்டும்.
கைதுறப்பு (Disclaimer): இப்பகுதியில் இடம்பெறும் கட்டுரைகள் எமது வாசகர்கள் அவர்களின் அனுபவத்தையோ படிப்பறிவையோ அடிப்படையாகக் கொண்டு எழுதியவை. இந்தக் கட்டுரைகளின் நம்பகத்தன்மைக்கு நிலாச்சாரல் பொறுப்பாக இயலாது. இவற்றைச் செயற்படுத்துமுன் மருத்துவரின் ஆலோசனை பெறுவது நலம்!
–அடுத்த அமர்வில் சந்திப்போம்…