"ஆழி சூழ் உலகு" என்பதற்கேற்ப இவ்வுலகில் மூன்றில் இரண்டு பங்கு தண்ணீரால் சூழப்பட்டுள்ளது. மனிதனின் உடலிலும் சுமார் 75% நீர்தான். நம் உணவில் உள்ள சத்துகளை தேவையான உறுப்புகளுக்கு எடுத்துச் செல்லவும் கழிவை கழிவு உறுப்புகளுக்கு அனுப்பவும் நீர் அவசியம். அதே போல் நம் சுற்றுப்புறம் தூய்மையுடன் அமையவும் நீர் இன்றியமையாதது.
ஒரு மனிதனின் உடலில் 42லி தண்ணீர் உள்ளது. அதில் 2.7லி என்னும் மிகச் சிறிய அளவு குறைந்தாலும் டிஹைரேஷன், உடலில் எரிச்சல், நடுக்கம், தலைவலி, மயக்கம் போன்றவை ஏற்படும். நீர் என்னும் அமுதம் பெரும்பாலான பொருட்களின் தயாரிப்பில் மிக முக்கிய மூலப்பொருள். மூன்றாம் உலகப் போர் ஏற்படுவதாக இருந்தால் அது தண்ணீருக்காகதான் இருக்கும் என்னும் அளவிற்கு அதன் தேவையோ அதிகம்; கையிருப்போ குறைந்து கொண்டே போகிறது. நம் அன்றாட வாழ்வில் தண்ணீர் எவ்வாறெல்லாம் வீணாகிறது, அதை எவ்வாறு சேமிக்கலாமெனப் பார்ப்போம்.
நீர் சேமிப்புக்கு நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் உங்கள் வாழ்நாளில் சில மணிநேரங்களை அதிகரித்துக் கொள்கிறீர்கள். உணவில்லாமல் ஒரு வாரம் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் தண்ணீர் இல்லாமல் ஒரு மணி நேரம் கூட இருக்க முடியாது. ஒரு கிராம் தங்கத்தைவிட ஒரு மிடறு தண்ணீரின் மதிப்பு அதிகம் என்பது தாகம் கொண்ட மனிதனுக்குத் தெரியும். நீர் பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றுவதன் மூலம் உலகம் வெப்பமயமாவதையும் குறைக்க முடியும்.
நீர் சேமிப்பு முறை என்பது ஏதோ மரம் நடு விழா என்பது போல் வருடத்திற்கு ஒரு சிலநாட்கள் செய்ய வேண்டிய செயல் அல்ல. இன்றைய பெருகிவரும் மக்கள்தொகையில் நீர் சேமிப்பு முறைகளை ஒவ்வொரு விநாடியும் கடைப்பிடிக்க வேண்டிய அவசரத்தில் அனைவருமே உள்ளோம். நீங்கள் இருக்கும் பகுதியில் தண்ணீர் பற்றாக்குறை இல்லாவிட்டாலும் நாளைக்கே பற்றாக்குறை வரலாம்.
வருமுன் காப்பதே சாலச் சிறந்தது. உங்களின் சிறு கவனமும் சில லிட்டர் தண்ணீரை சேமிக்கலாம். சேமிப்பு முறைகளைத் தொகுத்துத் தர நாங்க ரெடி! தொடர்ந்து பின்பற்ற நீங்க ரெடியா?
இல்லத்தில்:
1. சமையலறையிலோ, குளியலறையிலோ தண்ணீர்க் குழாயிலிருந்து நீர் கசியாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
2. உங்களுக்குத் தேவையான அளவு மட்டுமே தண்ணீரை உபயோகியுங்கள்.
3. மறக்காமல் பயன்படுத்தியதும் குழாயை நிறுத்துங்கள்.
4. குழாயில் நீர்க் கசிவு இருப்பின் பிளம்பரை அழைத்து வந்து உடனே சரி செய்யுங்கள்.
5. கூல் டிரிங்ஸ் தேடி ஓடாமல் உங்களின் குடி தண்ணீரையே குளிர்சாதனப் பெட்டியில் வைத்துக் குடியுங்கள்.
6. உங்களின் நீர் உபயோக பில்லை தொடர்ந்து கண்காணிப்பதன் மூலம் எங்கு, எப்படி தண்ணீர் வீணாகிறது எனக் கண்டறிந்து அதைத் தடுக்க முடியும்.
7. பயன்பாட்டுக்குப் பின்னர் தண்ணீர்க் குழாய்களை நன்கு மூட குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.
8. தண்ணீர்துப்பாக்கி போன்ற தண்ணீரை வீணாக்கும் பொம்மைகளை உங்கள் குழந்தைகளுக்கு வாங்குவதைத் தவிருங்கள்.
9. மழையின் போது தானியங்கி தண்ணீர் வழங்கும் உங்களின் சாதனத்தை நிறுத்தி வைக்கும் முறைகளை அறிந்து கொள்ளுங்கள்.
10. சுற்றுலா, வெளியூர்ப் பயணம் ஆகியவற்றின் போது மறக்காமல் உங்களின் வாட்டர் ஹீட்டரை நிறுத்தி விட்டுச் செல்லுங்கள்.
11. தண்ணீரைப் பயன்படுத்தாத போது உங்களின் வாட்டர் மீட்டரைப் பாருங்கள். அதன் முள்ளில் அசைவிருந்தால் உங்கள் வீட்டில் நீர்க் கசிவு உள்ளதாக அர்த்தம்.
12. தண்ணீர் பயன்படுத்தாத போது கிணற்றில் உள்ள பம்ப் அவ்வப்போது மேலேறி கீழிறங்கினால் உங்கள் கிணற்றிலும் நீர்கசிவு உள்ளதாக அர்த்தம்.
13. புதிதாக வீடோ, குளியலறையோ அமைக்கும் போது குறைந்த அளவு தண்ணீரை எடுத்துக் கொள்ளும் டாய்லெட்டை அமையுங்கள்.
(தொடரும்)
“