சத்யத்தின் கதை (7)

இறைவா, என் செயக் கருதி இருக்கின்றாய் எம் பாரத நாட்டை?

பிராவிடண்ட் ஃபண்ட் அதிகாரிகளிடமிருந்து ஒரு செய்தி வந்தது. 53000 ஊழியர்களா? இல்லையே? 40000 பேருக்குத்தானே பி.எஃப் பிடித்து அனுப்புகிறார்கள்? அதிலும் அவர்கள் அனுப்ப வேண்டி நிலுவையில் இருக்கும் தொகை கோடிக்கணக்கில் இருக்கிறதே?

இந்த மாதிரி விஷயங்களில் பி.எஃப் அதிகாரிகள் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும்? எடுத்தார்கள்?

ஆறு வருஷத்துக்கு முன்பு ஒரு வழக்கு. ஃபிக்செட் டெபாசிட்டில் ராஜு வைத்திருந்த தொகைகளுக்கு வந்த வட்டிக்கான வருமான வரி கட்டவில்லை. இதை விசாரித்துக் கண்டுபிடித்த அதிகாரியை (தண்ணியில்லாக் காட்டுக்கு) மாற்றி விட்டார்கள். கேசை வாபஸ் வாங்கி விட்டார்கள். வர வேண்டிய வருமான வரியை மட்டும் வசூலித்துக் கொண்டு விட்டார்கள். இது மாதிரி சலுகை நாட்டில் வேறெந்தக் குடிமகனுக்கு வருமான வரி அதிகாரிகள் காட்டுவார்கள்? அந்தக் கேஸ் தொடர்ந்து நடந்திருந்தால் பல விஷயங்கள் பல நாட்களுக்கு முன்பே அம்பலமாகியிருக்கும். (அம்பலமாகக் கூடாது என்பதுதானே நோக்கம்?)

போலீஸ், பி.எஃப் இலாகா, கம்பெனி சட்ட, வருமான வரி இலாகாக்கள்தான் இப்படி. மத்திய அரசு பொறுப்புடன் நடந்து கொள்ளும்தானே? அரசாங்கத் தரப்பில் பாராளுமன்றத்தில் இந்த விஷயத்தில் சொல்லப்பட்டது : "ஜனவரி 7ம் தேதி வரை இந்த சமாசாரமே எங்களுக்குத் தெரியாது" (சத்யம் என்று ஒரு கம்பெனி இருந்ததாவது தெரிந்திருக்குமோ?)

சரி, ஆடிட்டர்கள் "காவல் நாய்கள்" என்று (பெருமையாகத்தான்!) சொல்லிக் கொள்கிறார்கள். அவர்கள் சங்கதி என்ன என்று பார்ப்போம். பிரைஸ்வாட்டர் கம்பெனி, "ஆரம்பம் முதல் எங்கள் இன்ஸ்டிட்யூட் நிர்ணயித்த விதிமுறைகளின்படி என்னென்ன செய்ய வேண்டுமோ அதைத்தான் செய்திருக்கிறோம்; புலனாய்வு எங்கள் வேலையில்லை" என்றார்கள். ஆனால், ஆடிட் செய்த கோபாலகிருஷ்ணன், ஸ்ரீனிவாஸ் தல்லூரி இருவரையும் சஸ்பெண்ட் செய்கிறார்கள். ப்ரைஸ்வாட்டரில் ஆடிட் பிரிவின் தலைமைப் பொறுப்பில் இருந்த ஒருவர் அந்தப் பொறுப்பை விட்டு விலகுகிறார். கோபாலகிருஷ்ணனும் தல்லூரியும் கைதாகி விட்டார்கள். ஊழலில் சிக்கிக் கொண்டு மூடப்பட்ட குளோபல் டிரஸ்ட் பாங்கை ஆடிட் செய்ததும் இந்த இருவரில் ஒருவர்தான். இன்னொரு விஷயம், இதன் காரணமாக பிரைஸ் வாட்டர் கம்பெனியை நான்கு வருடங்கள் பேங்க் ஆடிட் செய்யக்கூடாது என்று ரிசர்வ் பேங்க் தடை விதித்திருந்தார்கள். அந்தத் தடை 2008ல்தான் நீங்கியது.

இருவரும் பிரைஸ்வாட்டரின் ஊழியர்களே அல்ல. outsourcing அடிப்படையில் ஆடிட் செய்கிறார்கள் என்றும் சொல்கிறார்கள்.

மேலும் சில உதிரி-உபரி-தகவல்கள் :

சத்யத்தின் வெளிநாட்டுக் கிளை ஒன்றில் 1700 கோடி ரூபாய் திடும் என்று அபேஸ் ஆகி விட்டது!

சத்யம் நிறுவனர்களுக்கு மைட்டாஸைத் தவிர 350 கம்பெனிகள் இருக்கின்றன!

ராஜுவின் அதிகம் அறியப்படாத சகோதரர் சூர்யநாராயண ராஜு அம்பேல்! அவர் மாதிரி யாரையோ சென்னையில் அங்கங்கே பார்த்ததாகச் சொல்லிக் கொள்கிறார்கள்!

சத்யத்தின் முக்கியமான ஆவணங்கள் எதுவும் கம்பெனியிலோ, நிலையான ஓர் இடத்திலேயோ இல்லை. தடம் தவறிய "ஸாட்டிலைட்" மாதிரி இப்போதும் ஒரு காரில் எங்கேயோ சுற்றிக் கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள்!

மைட்டாஸ் கம்பெனியில் ஊழல் என்பது முன்னமேயே தெரிந்திருந்தும், ஃபிப்ரவரி 6ம் தேதிதான் விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறார்கள். ஆவணங்கள் அந்தர்த்தியானமாக அவகாசம் வேண்டாமா?

கணக்குகளைத் திருத்தி எழுத ஆறு மாதம் பிடிக்கலாம். அதற்குள் பாராளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்து விடும். அது வரை, "குற்றம் நிரூபிக்கப்படும் வரை நிரபராதி" கதையை விடலாம். தேவைப்பட்டவர்கள் தேர்தல் நிதியும் வாங்கிக் கொள்ளலாம்! தவிரவும், மக்கள் இந்நாட்டு (மறதி) மன்னர்கள். வேறு திடுக்கிடும் செய்தி வந்ததும் இதை மறந்து விடுவார்கள் என்று நிச்சயம் நம்பலாம்!

பல துறைகள் விசாரணையை மேற்கொண்டு அவரவர்களுக்குத் தேவையான ஆவணங்களை (கிடைத்த வரை) அள்ளிக்கொண்டு போகின்றன. யாரிடம் என்ன ஆவணம் இருக்கிறது என்று யாருக்கும் தெரியாது.

புலன் விசாரணையை ஒருங்கிணைத்து செயல்படுத்த எந்த ஏஜென்சியும் இல்லை. அதே போல, கம்பெனி அளவில் ஒருங்கிணைத்து தேவையான தகவல்களைத் தர என்று யாரும் நியமிக்கப்படவில்லை. யாரும் எது கேட்டாலும் “எனக்குத் தெரியாது” என்றே பதில் சொல்லுகிறார்கள்!

இந்த நிலையில், மைனம்பட்டி, வாடிக்கையாளர்களிடம் தொடர்பு கொண்டு விளக்கப் போகிறேன் என்று சொல்லி விட்டு அயல்நாடு போய் விட்டார். "ஆஹா! போய் வாருங்கள்!" என்று அதிகாரிகளும் அனுமதி கொடுத்து விட்டார்கள்! அவர் போய் விட்டார். எங்கு போனார், எப்போ வருவார், எப்படி வருவார், என்பதெல்லாம் யாருக்கும் தெரியாது!

அமெரிக்காவில் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. குற்றம் உறுதியானால் ராஜுவுக்கு 25 ஆண்டு சிறைத் தண்டனை. பல மில்லியன் டாலர்கள் அபராதம். இந்தியாவில் வழக்கு தொடர்ந்தால் 10 ஆண்டு சிறை. 25 லட்சம் அபராதம். இந்தியாவில் வழக்கு தொடர்ந்து, அதைக் காரணம் காட்டி அமெரிக்காவுக்கு அவரை அனுப்ப மறுத்து விடலாம். இந்தியாவில் தேங்கிக் கிடக்கும் வழக்கு வரிசையில் இது ஏறத்தாழ ஒரு லட்சத்து தொண்ணூற்று ஒன்பதாக இருக்கலாம். பெயில் வாங்கிக் கொண்டு ராஜு அடுத்த வேலையைப் பார்க்கப் (அடுத்த கம்பெனியை ஆரம்பிக்கப்) போகலாம்! It will be business as usual, for him, and for the country.

இந்த நிலையில் நம்மைப் போன்ற பாமரர்கள் பேப்பரைப் பார்த்து விவாதித்துக் கொண்டு, ஆசிரியருக்குக் கடிதம் எழுதிக் கொண்டு, என்னமோ பெரிதாக நடக்கப் போகிறது என்று நினைத்து ஏமாந்து கொண்டிருக்கிறோம்!

ஒரு போனஸ் தகவல் :

ராமலிங்க ராஜுவுக்கு 63 நாடுகளில் சொகுசு பங்களாக்கள் இருக்கின்றன! அவரிடம் இருப்பது 1000 சூட்கள், 400 ஜோடி ஷுக்கள், 400 பெல்ட்கள்! (பண்ணையார் ஸ்டைலில் எதிர்ப்பவர்களை விளாசுவதற்காக இருக்குமோ?)

நமது ஆதங்கம். இந்த நாட்டில், தவறு செய்பவர்கள், தவறைக் கண்டு கொள்ளாமல் விடுபவர்கள், தவறுக்குத் துணை போகிறவர்கள் யாரும் வெட்கப்படுவதில்லை! இறைவா, என் செயக் கருதி இருக்கின்றாய் எம் பாரத நாட்டை?

பி.கு:- வரும் வாரங்களில் தொடர்ந்து வரும் தகவல்களைச் சுருக்கமாகச் சொல்லி விட்டு, சம்பந்தப்பட்ட ஏஜென்சிகள் என்னென்ன செய்யத் தவறி விட்டார்கள், இனி ஓர் ஊழல் இது போல் நடக்காமல் இருக்க ஒவ்வொரு ஏஜென்சியும் எப்படிச் செயல்பட வேண்டும், அப்படி தப்பித் தவறி நடந்து விட்டால் உடனடியாக மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் என்னென்ன என்பது பற்றியெல்லாம் அலசப் போகிறோம்.

(தொடரும்)”

About The Author