ராத்திரி இஷாத் தொழுகை தொழுதுவிட்டு வீட்டுக்குப் போனால் திருச்சியிலிருந்து எஸ்ட்டிடி. தில்லை நகரில் ஒரு கம்பெனிக்கு சரக்குக் கொடுத்த வகைக்கு ரொம்ப நாள் பேமென்ட் பாக்கி. காலையில் ஒன்பது மணிக்கு வந்தால் பார்ட்டியை மடக்கிச் செக்கைக் கறந்து விடலாம் என்று தகவல் வந்தது.
ராத்திரியோடு ராத்திரியாய் ராக்•போர்ட்டைப் பிடித்துக் கிளம்பினால், செக்கை வாங்கிக் கொண்டு பஸ் பிடித்து நாளை ராத்திரிக்குள் மெட்ராஸ் வந்து சேர்ந்து விடலாம்.
“திருச்சிக்குப் போய் வந்த பின்னால் மக்கா மதீனா படத்தைக் கொண்டு வந்து தருகிறேனப்பா” என்று போகிறபோக்கில் நம்ம ஓவியனைப் பார்த்துச் சொல்லிவிட்டுப் போக வேண்டும்.
ஆட்டோவில் எழும்பூருக்குப் போகிற வழியில் அவனுடைய இடத்தில் நிறுத்தி இறங்கினேன். ஒரு ஓரமாய் அவன் முடங்கிப் படுத்திருந்தான். பக்கத்தில் படுத்திருந்த அவனுடைய நாய் என்னைப் பார்த்ததும் எழுந்து வாலை ஆட்டிது. பிறகு தன் எஜமானுடைய முகத்தை நக்கி அவனை எழுப்பியது.
“பாய் சாமி, என்ன இன்னேரத்துல” என்று எழுந்தான்.
நான் என்னுடைய விஷயத்தைச் சொல்ல, அவன் அவனுடைய விஷயத்தைச் சொன்னான்:
“சாயங்காலம் இருட்டற நேரத்துல, கரை வேஷ்டிக் கோஷ்டியண்ணு வந்துச்சு சாமி. நாங்க சொல்ற எடத்துல வந்து எங்க தலைவரோட படத்த வரஞ்சிக் குடுத்துட்டுப் போடா, ஐநூறு ரூவா தர்றோம்னாங்க. அந்த கோஷ்டி போன கொஞ்ச நேரத்துல இன்னொரு கோஷ்டி வந்துச்சு, எங்க தலைவியோட படத்த வரஞ்சிக் குடுத்துட்டுப் போடா, ஆயிரம் ரூவா தர்றோம்னாங்க. சாமி படம் வரையற கையினால சாத்தான்கள வரைய மாட்டேன் போங்கடான்னு திட்டி அனுப்பிச்சிட்டேன். ஒரு கோஷ்டி போயிருச்சி. இன்னொரு கோஷ்டி நாளக்கித் திரும்பவும் வர்றோம் யோசிச்சு வைய்யின்னு மெரட்டிட்டுப் போயிருக்கு. இந்த மாதிரி எத்தன கோஷ்டிங்களப் பாத்தாச்சு. இவனுங்க மெரட்டலுக் கெல்லாம் அடி பணியிற ஆள் நா இல்ல. சரி நீங்க கெளம்புங்க சாமி, நாளக்கிப் பாப்போம்.”
அடுத்த நாள் காலையில் திருச்சி. மதியம் வரைக்கும் தாமதித்தால், செக்குக்கு பதிலாய்ப் பணமாகவே தந்து விடுவதாய்ப் பார்ட்டி சொன்னதால் பணத்தைப் பெற்றுக் கொண்டு தாமதமாய்த்தான் திருச்சியில் பஸ் பிடிக்க முடிந்தது. மெட்ராஸ் வந்து சேர்வதற்கு ராத்திரி மணி பத்தரையாகிவிட்டது. வீட்டுக்குப் போகுமுன்னால், ஓவியனைப் பார்த்துவிட்டுப் போக வேண்டுமென்று தோன்றியது. நேற்று ஒரு கோஷ்டி மிரட்டிவிட்டுப் போனதாய்ச் சொன்னானே!”
ஓவியனுடைய இருப்பிடத்தை அடைந்தபோது ஓர் அதிர்ச்சி. ஓவியன் ப்ளாட்•பாமில் அலங்கோலமாய்க் கிடந்தான். அவனுடைய நாய் அவன் முகத்தை நக்கிக் கொண்டு நின்றிருந்தது. கலர்ச் சாக்ப்பீஸ்கள் சிதறிக்கிடந்தன. வர்ணக் கலவைகள் கொட்டிக் கிடந்தன.
நடந்திருப்பது என்னவென்று புரிந்தது.
நேற்று வந்து மிரட்டிவிட்டுப் போன கோஷ்டி இன்றைக்கு வந்து அவனைப் புரட்டியெடுத்துவிட்டுப் போயிருக்கிறது.
அவன் வரைந்திருந்த கிருஷ்ண பரமாத்மாவின் ஓவியம் சோடியம் வெயிலில் தகதகத்துக் கொண்டிருந்தது.
‘புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே, எங்கள்
புருஷோத்தமன் புகழ் பாடுங்களே’
என்று பாடியிருப்பேன், சுமூகமான சூழ்நிலையாயிருந்திருந்தால்.
கோயம்பேட்டிலிருந்து நான் வந்த ஆட்டோவிலேயே, டிரைவரின் உதவியுடன் அந்த ஓவியனைத் தூக்கிப் போட்டுக் கொண்டு போய் ஒரு தனியார் மருத்துவ மனையில் சேர்த்தேன். திருச்சியில் கிடைத்த பணம் உபயோகமாயிருந்தது.
ஆட்டோவின் பின்னாலேயே ஓடி வந்த நாய், நர்ஸிங் ஹோம் வாசலில் தவங்கிடந்தது. சிகிச்சைக்குப் பிறகு கண் விழித்த ஓவியன், தான் படுத்துக்கிடக்கிற மேட்டுக்குடி சூழ்நிலையை நாலாபுறமும் பார்த்துவிட்டு நன்றிப் பெருக்கோடு என்னைப் பார்த்துக் கரங்கூப்பினான்.
பிறகு, நடந்த கதையைச் சொன்னான்.
நான் நினைத்தது சரிதான். அந்தக் கறை வேஷ்டிக் கோஷ்டிகளிலொன்று வந்து மிரட்டிப் பார்த்திருக்கிறது.
பணிய மறுத்த இவனைப் புரட்டிப் புரட்டி அடித்திருக்கிறது.
“என்னோட நாய் மட்டும் இல்லன்னா என்னக் கொலையே பண்ணிப் போட்டுட்டுப் போயிருப்பானுங்க சாமி” என்று நன்றியோடு நாயை நினைவு கூர்ந்தான்.
நான் கேட்டேன். “அவங்கதான் ஐநூறு ஆயிரம்னு தர்றாங்கள்ளப்பா, அவங்க கேக்கற படத்த வரஞ்சிக் குடுத்துர்றது தான. அப்படியே நீ தொழில் விருத்தி பண்ணி ஆயிர ஆயிரமா சம்பாதிக்கலாமே! ப்ளாட்•பாம்ல உண்டியல் குலுக்கி நீ எந்தக் காலத்துல அவ்வளவு சம்பாதிக்கப் போற! “
ஓவியனுக்குக் கோபம் வந்துவிட்டது.
“சாமி, நா போலியோ மனுஷன்தான், போலி மனுஷனில்ல, காசுக்காகக் கட்சி மார்ற ஜாதியில்ல. கடவுள வரஞ்ச கையால கண்டவங்களயும் வரையமாட்டேன். நா சொன்னா சொன்னதுதான்.”
“அதென்னப்பா அரசியல்வாதிங்க மேல அப்படியரு கோபம் ஒனக்கு? என்று அவனை நான் சாந்தப் படுத்தினேன்.”
“அரசியல்வாதிகள் எல்லாருமே அயோக்கியங்க இல்லப்பா. நாம தப்புத் தண்டாவுக்குப் போகாம அரசியல்ல சம்பாத்யம் பண்ண முடிஞ்சா அதுல தப்பே இல்ல.”
சுவாரஸ்யமே இல்லாமல் ஓவியன் என்னைப் பார்த்தபடி இருந்தான். அவனை சுவாரஸ்யப்படுத்துவதற்காகவும் உற்சாகப் படுத்துவதற்காகவும் எனக்குத் தெரிந்த விசேஷமான ஒரு விஷயத்தை அவனோடு பகிர்ந்து கொள்ள முற்பட்டேன்:
“ஒனக்கு பேப்பர், பத்திரிகையெல்லாம் வாசிக்கிற வழக்கம் உண்டா? நீ என்னத்தப் படிச்சிருக்கப்போற. இப்ப நா சொல்லப் போற விஷயத்தக் கேளு, ஒனக்கு சந்தோஷமாயிருக்கும், தெம்பாயிருக்கும். அஞ்சாறு வருஷத்துக்கு முந்தி நடந்த சங்கதி. ஒரு கிராமத்தான், ஒன்னயப் போலவே போலியோ விக்ட்டிம். சூம்பிப்போன கால். ஆனா அவனோட மனசு சூம்பிப்போகல. தன்னம்பிக்கையாலயும் விடாமுயற்சியினாலயும் கொஞ்சங்கொஞ்சமா முன்னேறினான். முன்னேறி, பஞ்சாயத்துத் தலைவரா ஆனான் அவன். அந்த கிராமத்துக்கே அவன் தலைவனப்பா! எல்லாப் பேப்பர்லயும் அவனோட •போட்டோ வந்தது. எல்லாப் பத்திரிகையிலயும் அவனோட பேட்டி வந்தது. தமிழ்நாடு பூரா அவனப்பத்தித்தான் பேச்சு. அரசியல்வாதிகள புத்திசாலித்தனமா பயன்படுத்திக்கிட்டு அவன் முன்னுக்கு வந்துட்டான். நீயும் கொஞ்சம் காம்ப்ரமைஸ் பண்ணிக்கிட்டு ஒன்னத் தேடிவர்ற அரசியல்வாதிகளப் புத்திசாலித்தனமா பயன்படுத்திக்கிட்டேன்னா, நீயும் முன்னுக்கு வந்துரலாம், அந்த ஆளப் போலவே.”
ஒரு பெருமூச்சோடு அவன் என்னைப் பார்த்தான்.
பிறகு சொன்னான் :
“பாய் சாமி, நாந்தான் சாமி அந்த ஆள்.”
நன்றி : கல்கி, 16.05.2004
(ஓவியன்)