கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது

இலக்கியத் துளிகள்

(வாகீச கலாநிதி, செந்தமிழ்ச் செல்வர், தமிழ்ப் பெரும்புலவர் கி.வா.ஜ. அவர்களின் கட்டுரைத் தொகுப்பான "புது டயரி" என்ற நூலிலிருந்து படித்து மகிழ்ந்த சில பகுதிகள் இங்கே பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.)

அவ்வைப் பாட்டி பாரி மகளிராகிய அங்கவை சங்கவை என்பவர்கள் வாழ்ந்த குடிசைக்குப் போனார். தந்தையை இழந்த அவர்கள் வறிய நிலையில் இருந்தார்கள்.

அவ்வையார் அங்கு போனபோது மிகவும் எளிய முறையில் கீரையை வதக்கிப் போட்டார்கள். ‘எங்களால் வேறு ஒன்றும் செய்ய முடியவில்லையே!’ என்று வருந்தினார்கள். அப்போது அவ்வையார் "நீங்கள் கீரையையா போட்டீர்கள்? அமுதத்தை அல்லவா போட்ட்டிர்கள்?" என்று அந்த எளிய உணவை சுவைத்து மகிழ்ந்து அந்தக் கீரையைப் பற்றி ஒரு பாட்டே பாடிவிட்டார்.

வெய்தாய் நறுவிதாய் வேண்டளவும் தின்பதாய்
நெய்தான் அளாவி நிறையிட்டுப் பொய்யே
அடகு என்று சொல்லி அமுதத்தை இட்டார்
கடகம் செறியாதோ கைக்கு?

(வெய்தாய் – சூடுள்ளதாய்; அடகு – கீரை)

ஒருவர் மொழியை ஒருவர் புரிந்து கொள்ளாததால் விளையும் சங்கடத்தைப் பற்றி
கம்பர் தனக்கு நேர்ந்த நிகழ்ச்சி ஒன்றின் மூலம் சொல்கிறார்.

கம்பர் சில காலம் தெலுங்கு தேசம் ஒன்றில் தங்கியபோது, ஒரு நாள் இரவில் ஒரு வீட்டின் திண்ணையில் படுத்துக் கொண்டார். அந்த வீட்டுக்காரி திம்மி என்பவள், "ஏமிரா ஓரி?" (என்னடா? நீ யார்) என்று கேட்டாள். கம்பர் தெலுங்கு புரியாமல் திரு திருவென விழிக்க, திம்மிக்கு சந்தேகம் வந்தது. "எந்துண்டி வஸ்தி?" (எங்கிருந்து வந்தாய்?) என்று அதட்டினாள். அதற்கும் அவரால் பதில் சொல்ல முடியவில்லை..

கோபமாக கதவைச் சாத்திக் கொண்டு போய் விட்டாள். இரவில் அவருக்குத் தாகம் ஏற்பட, தண்ணீர் கேட்கும் பொருட்டு கதவைத் தட்டினார். திம்மி நாய் போல சீறினாள். சைகையால் தாகம் என்று காண்பித்தார். அதைக் கண்டு கொள்ளாமல் கதவைச் சாத்திக் கொண்டுபோய்விட்டாள்.

இரவெல்லாம் கம்பருக்குத் தூக்கமே இல்லை. வேறிடத்துக்குப் போய்ப் படுக்கலாமென்றால் அங்கும் திம்மியைப் போல ஒரு பொம்மி வருவாளே.. இவளாவது வாயளவில் நின்றாள். அவள் கையில் எதையாவது எடுத்துக் கொண்டு வந்து விட்டால்.. என்ற எண்ணத்திலேயே உழன்றார்.

எப்போது விடியுமென்று காத்திருந்த அவர், காலையில் தான் பட்ட அவஸ்தையை ஒரு பாட்டிலே வைத்துப் பாடினார்:

ஏமிரா வோரி என்பாள்
எந்துண்டி வஸ்தி என்பாள்
தாம் இராச் சொன்ன எல்லாம்
தலைகடை தெரிந்ததில்லை.
போம் இராச் சூழும் சோலை
பொரும் கொண்டைத் திம்மி கையில்
நாம் இராப் பட்ட பாடு
நமன் கையில் பாடு தானே!

(இராச்சூழும் சோலை பொரும் கொண்டை – இரவைப் போல இருள் சூழ்ந்திருக்கும்
சோலையைப் போன்ற அடர்ந்த கூந்தல் உடைய)

ல, ழ, ள உச்சரிப்பு சரியாக வராத சில மாணவர்களுக்கு, உச்சரிப்பு சரியாக வருவதற்காக ‘அருணாசல புராணம்’ என்ற நூலில் உண்ணாமுலை அம்மன் மீதுள்ள துதிப் பாடல் ஒன்றை பலமுறை படிக்கச் சொல்வாராம் கி.வா.ஜ. அதில் நிறைய லகர, ழகர, ளகரங்கள் வருகின்றன.

இதோ அந்தப் பாடல்:

காரொழுகும் குழலாளைக் கறுணைவிழிந்
தொழுகும் இரு கடைக் கண்ணாளை

மூரலிள நிலவொழுகப் புழுகொழுக
அழகொழுகும் முகத்தி னாளை

வாரொழுகுந் தனத்தாளை வடிவொழுகித்
தெரியாத மருங்கு லாளைச்

சீரொழுகும் பதத்தாளை அருணை உண்ணா
முலையாளைச் சிந்தை செய்வாம்.

இந்தப் பாட்டை ஒருவர் சரியாகச் சொல்லத் தெரிந்து விட்டால் லகர, ழகர, ளகர பேதங்கள்
விளங்கும்படி உச்சரிக்க முடியும். அதுவும் "மூரலின நிலவொழுகப் புழுகொழுக
அழகொழுகும் முகத்தினாளை" என்ற இரண்டாவதடி அவர்கள் நாக்கில் புரண்டால்
ரோட் ரோலர் புரண்ட சாலை மாதிரி உச்சரிப்பு சீராகி விடும்.

(நம் தொலைக்காட்சி தொகுப்பாளர்களுக்கு (இரு பாலருக்குமே!) இதை சிபாரிசு செய்யாலாமோ?)

About The Author

3 Comments

  1. P.Balakrishnan

    சொல்லிய சொல்லின் பொருள் உணர்ந்து சொல்ல வேண்டும். சொல் சரியாக உச்சரிக்கப்படாவிட்டால் பொருளே மாறிவிடும். ழகரம் நிறைந்த ஒரு சில பாடல்கள் உண்டு. ஆழி மழைக் கண்ணா என்ற திருப்பாவையை எடுத்துக் காட்டலாம். திருஞானசம்பந்தரின் திருக்கழுமலம்(சீர்காழி) பற்றிய பாடல் சிறப்பானது.:- ஒழுகல் அரிது அழி கலியின் உழி உலகு / பழி பெருகு வழியை நினையா / முழுது உடலின் எழும் மயிர்கள் தழுவும் முனி / குழுவினொடு கெழுவு சிவனைத் / தொழுது உலகில் இழுகும் மலம் அழியும் வகை / கழுவும் உரை கழுமல நகர்ப் / பழுதில் இறை எழுதும் மொழி தமிழ் விரகன்….

    அண்மையில் திருப்புகழ்மணி மதிவண்ணன் 51 ழகரத்தில் ஆறுமுகன் துதி ஒன்றைப் படைத்துள்ளார்.(பார்க்க: சண்முக கவசம்-(சென்னை)-பிப்ரவரி 2010)

  2. Dr. S. Subramanian

    Another pronunciation is worth noting too. That is sh”. Take the word “pushpam”. A person was asked to pronounce the word by the teacher. He said it is the same “if you say poo, or puypam, or the way the teacher says” thereby avoiding the “sh” sounding word.”

  3. இரா.சேகர்(ஷக்தி)

    கட்டுரையும் ,வாசகர் கருத்தும் மிக அருமை.

Comments are closed.