நன்றி அம்மணி!

ஆஜானுபாகுவான உருவம் அவளுக்கு. அவள் பர்சும் பெரிசாய் இருந்தது. ஆணியும் சுத்தியும் தவிர எல்லாமே இருந்தன அந்தப் பையுள்ளே. பெரிய நாடாவில் மாட்டித் தோளில் இருந்து தொங்கியது பர்ஸ். அப்போது ராத்திரி பதினோரு மணி. தனியே அவள் நடந்து போகிறாள். அவள் பின்புறமாக ஓட்டமாய் ஒரு பையன் நெருங்கி, அந்தப் பர்சைப் பறிக்க முயன்றான். பின்பக்கமிருந்து அவன் இழுத்த ஒற்றை இழுப்பில் நாடா அறுந்து… ஆனால் பையனின் பாரமும், பர்சின் கனமுமாகச் சேர்ந்து அவன் நிலைகுலைய… பர்சைப் பறித்தோம் ஓட்டமெடுத்தோம் என்கிற அவன் கணக்குப் பிசகி, நடைபாதையில் அப்படியே மல்லாக்க விழுந்தான். கால்கள் அப்படியே தூக்கிக் கொண்டன. அந்த தாட்டிகப் பொம்பளை நிதானமாய்த் திரும்பி, நேரே அவன் நீல ஜீன்ஸ் போட்ட தொடை நடுவே விட்டாள் ஒரு எத்து. குனிந்து அவன் சட்டை முன்பகுதியைப் பற்றித் தூக்கினாள். அவன் பல் கிட்டிக்கும்படி உலுக்கினாள்.

"என் பையை எடுறா! பையா… ம், எடுத்து என்னாண்ட குடு…" என்றாள். பிடியை விடவில்லை அவள். ஆனால், அவனோடு தேவைப்படி குனிந்து அவன் எட்டிப் பர்ஸை எடுக்க வைத்தாள். பிறகு சொன்னாள். "ஏண்டா உனக்கு வெட்கமே கிடையாதா?"
சட்டைப் பிடி உடும்புப் பிடி. திமிற முடியவில்லை. "வந்து… இல்ல மேடம்…"

"எதுக்குடா இப்பிடி ஒரு காரியம் பண்ணினே?"

பையன் சொன்னான். "நான் திருட வர்ல மேம்…"

"அட, பொய் வேற சொல்றியா நாயே!"

ரெண்டு மூணு பேர் அப்போது அந்த வழியாக வந்தார்கள். சிறிது நின்றார்கள். அல்லது திரும்பிப் பார்த்துக்கொண்டே போனார்கள். ஒரு சிலர் நின்று வேடிக்கை பார்த்தார்கள்.’

"உன் பிடியை விட்டாக்க… ஓடிருவியா?" என்று அவள் கேட்டாள்.

"சரி மேடம்…"

"உன்னை நான் விடறாப்ல இல்ல…" என்றாள் அவள்.

"ரொம்ப சாரி, அம்மணி… மாப்பு மன்னிப்பு" என்றான் பையன் சன்னமாய்.

"ம் ம்…" என்றாள் அவள். "என்ன மூஞ்சிடா இது? ஒரே அழுக்கு! உன்னைப் பார்த்தாலே உன் முகத்தைக் கழுவிவிடணும்னு என் கை துறுதுறுக்குது. ஏண்டா! உங்க வீட்ல மூஞ்சி கீஞ்சி துடைக்கச் சொல்லி சொல்லித் தர யாருங் கிடையாதா?"

"இல்ல மேடம்” என்றான் பையன்.

"சரி, அப்ப இன்னிக்கு உன் முகத்தை அலம்பிறலாம்…" அந்தத் தாட்டிப் பொம்பளை தெருவில் நடக்க ஆரம்பித்தாள்.

வெலவெலத்திருந்த அந்தப் பிள்ளையைத் தரதரவென்று இழுத்துக்கொண்டு போனாள்.

பார்க்க பதினாலு பதினைந்து வயசாய்த் தெரிந்தான். ஒடிசலான உடைமரமான தேகம். டென்னிஸ் ஆடும்போது போட்டுக்கொள்கிறாப் போல கான்வாஸ் ஷூ. நீல ஜீன்ஸ்

அவள் பேசினாள். "நீ என் பிள்ளையா இருந்திருக்கணும்டா. தப்பு எது சரி எதுன்னு நான் கத்துக் கொடுக்கிறேன்… குறைஞ்சபட்சம் இப்ப உன் முகத்தை சுத்தம் செய்கிறேன். எலேய், பசிக்குதா?"

"ம்ஹூம்" என்றான் அவன் இழுபட்டபடி. "என்னை விட்டுட்டா போதும் மேம்…"

"நான் அந்த முக்கில் திரும்பினப்ப, உன் கை துறுதுறுன்னுதாக்கும்?"

"இல்ல மேம்."

"ஆனா நீதானே என்னாண்ட வந்து மோதின?" என்றாள் அவள். "நான் மாட்டலியானா, வழில வர்ற இன்னொரு ஆளை குறி வெச்சிருப்ப… அட ஐயா, என்னாண்ட மோதிப் பாத்திட்ட, இந்த லூயெல்லா பேட்ஸ் வாஷிங்டன் ஜோன்ஸை நீ மறக்க மாட்டே!"
பையனின் முகத்தில் இருந்து வியர்வை கொப்பளித்தது. அவன் நெளிந்தான். திருமதி ஜோன்ஸ் நின்றாள். அவனை முன்பக்கமாகச் சுண்டியிழுத்தாள். அவன் கழுத்தில் இறுகப் பிடி போட்டாள். அப்படியே தெருவில் நெட்டித் தள்ளிப் போனாள். தன் வீடு வந்ததும், அவனை அப்படியே உள்ளிழுத்தாள். பெரிய கூடம். தாண்டி வீட்டின் பின்பக்கத்தில், சமையல்மேடை ஓர் ஓரமாய் வைத்துக் கட்டிய பெரிய அறை. விளக்கைப் போட்டாள். கதவு திறந்து கிடந்தது. அப்படியே விட்டுவிட்டாள். பக்கத்து அறைகளில் இருக்கிறவர்களின் சிரிப்பொலியும், பேச்சொலியும் கேட்டது. அறை அறையாய்ப் பெரிய கூட்டு வீடு. சில அறைக் கதவுகள் திறந்து கிடந்தன. அவனும் அந்தப் பெண்மணியும் தனியே இல்லை என்று புரிந்துகொண்டான். அந்த அறையின் நடுப்புறத்தில் அவள், இன்னும் அவன் கழுத்தை அழுத்திப் பற்றியிருந்தாள்.

"உன் பேர் என்னடா?"

"ரோஜர்."

"சரி ரோர். நீ அந்தத் தண்ணித்தொட்டியில போயி மொதல்ல முகத்தைக் கழுவு போ" என்றாள் அவள். அப்படியே அவன் பிடியை விட்டாள் ஒருவழியாக. ரோஜர் வாசலைப் பார்த்தான். அந்தப் பெண்மணியைப் பார்த்தான். முகம் கழுவப் போனான்.

"தண்ணியைத் திறந்து விடு. கொஞ்ச நேரத்தில் சூடா வர ஆரம்பிக்கும்" என்றாள் அவள். "இந்தா நல்ல துண்டு, வாங்கிக்க."

"என்னை ஜெயில்ல போடப்போறிங்களா மேம்?" முகம் கழுவக் குனிந்தவண்ணம் அவன் கேட்டான்.

"இந்த மூஞ்சியோடவா? இந்த மூஞ்சி எங்கயுமே கூட்டிட்டுப் போக லாயக் கிடையாது!" என்றாள் திருமதி ஜோன்ஸ். "எதாவது சாப்பிட செய்ய வாங்கிட்டு வரலாம்னு நான் பாத்தால், நீ என் பையைப் பறிக்கறே! எலேய், நீயும் சாப்பிட்டிருக்க மாட்டேன்னு நினைக்கிறேன். இத்தன்னேரம் ஆயிட்டதே, சாப்ட்டியா இல்லியா?"

"எங்க வீட்ல யாருங் கிடையாது…" என்றான் அவன்.

"ம். நாம ஒண்ணா சாப்பிடலாம்" என்றாள் அவள். "உனக்குப் பசியாயிருக்கும்னுதான் படுது. எலேய், பசினாலதான் பையைப் பிடிச்சி அறுத்தியா?"

"நீல நிறத்தில் ஒரு ஜோடி தோல் ஷூ வேணுன்னு இருந்தது" என்றான் பையன்.

"அட, ஷூ வேணுன்னா பிக்பாக்கெட் அடிக்கணுன்னில்ல…" என்றாள் திருமதி லூயெல்லா பேட்ஸ் வாஷிங்டன் ஜோன்ஸ்.

"என்ட்ட கேட்டிருக்கலாமே."

"ம்?"

அவன் முகத்தில் இருந்து நீர் சொட்டியது. அவளைப் பார்த்தான். இருவரும் பிறகு பேசிக்கொள்ளவில்லை. ரொம்ப நேரம் பேசிக்கொள்ளவில்லை. முகத்தைத் துடைத்துக்கொண்ட பின், அவனுக்கு அடுத்து என்ன செய்ய, தெரியவில்லை. திரும்ப ஒருமுறை அழுத்தித் துடைத்துக்கொண்டான். அடுத்து என்ன நடக்கப்போகிறது என யோசித்தான். கதவு திறந்து கிடந்தது. ஒரு உதறலில் கூடத்தை எட்டிவிடலாம். வெளியே பாய்ந்தால் ஒற்ற ஓட்டம். ஓடு. ஓடு. ஓடு. ஓடு!

அந்தப் பெண்மணி சாய்வுநாற்காலியில் உட்கார்ந்திருந்தாள். சிறிது கழித்து அவள் சொன்னாள். "ஒரு காலத்தில் நானும் சின்னப் பிள்ளையாய் இருந்தேன்… எத்தனையோ சாமான்களுக்கு ஆசைப்பட்டு கிடைக்காமல் ஏங்கியிருக்கிறேன்."திரும்பவும் பெரும் அமைதி. அவன் வாயைத் திறந்து ஹா, என்றான். சத்தம் எழுப்பியதையே உணராமல் ஹா, என்றான்.

அவள் பேசினாள். "ஹூம்… நான் சொல்வேன்னு நீ நினைச்சே, இல்லியா இவனே? என்ன சொல்வேன்னு நினைச்சே, தப்பு… நான் அடுத்தாள் பர்ஸை பிக்பாகெட் அடிச்சேன்னு சொல்லப் போறதா நினைச்சேல்ல? நான் அப்பிடிச் சொல்ல வரல…” என்று திரும்பவும் இடைவெளி விட்டாள். அமைதி. “ச். ஒண்ணு ரெண்டு தப்பு பண்ணியிருக்கேன்தான். அதெல்லாம் உன்னாண்ட சொல்ல மாட்டேன், மகனே… கடவுளாண்ட கூட சொல்ல மாட்டேன். அவருக்கு முன்பே தெரியாட்டி நானாச் சொல்லப் போறதில்ல. ம். நீ சித்த இப்பிடி உக்காரு. நான் சாப்பிட எதும் பண்றேன். அந்தோ! சீப்பு இருக்கு பார். எடுத்துத் தலைய வாரிக்க. பார்க்க கொஞ்சம் லெட்சணமாயிருக்கட்டும்."

அறையின் இன்னொரு மூலையில் திரைபோட்டு ஒரு கேஸ் அடுப்பு. ஒரு குளிர்பெட்டி. திருமதி ஜோன்ஸ் எழுந்துகொண்டாள். திரைச்சீலைக்குப் பின்னால் போனாள். அவனை அவள் கவனிக்கவில்லை. அவன் ஓடிவிடுவானோ என்று கலவரப்படவில்லை. சாய்வுநாற்காலிக்குப் பக்கத்திலேயே தரையில் அந்தப் பையை விட்டிருந்தாள். அதை அவன் எடுத்துக்கொண்டு ஓடிவிடுவானோ என்றுகூடப் பார்க்கவில்லை. ஆனால், பையன் அறையின் மற்ற ஓரத்தில், அவள் கடைக்கண் பார்வையில் படுகிறவிதமாக உட்கார்ந்து கொண்டான். அவனை அவள் நம்பவில்லை என்ற நிலை வேண்டாம் என நினைத்தான். அவளுக்குக் கட்டுப்பட்டவனாகவே தன்னைக் காட்டிக்கொள்ள நினைத்தான். தன்னை அவள் நம்பவேண்டும் என்று நினைத்தான்.
"கடைக்குப் போயி சாமான் எதாச்சும் வாங்கிட்டு வரணுமா?" என்று கேட்டான் பையன். "எதும் பாலோ, வேறெதாவதோ?"
"வேணுன்றதில்ல” என்றாள் அவள். "உனக்கு இனிப்பு போட்ட பால் வேணுன்னா கடை வரை போணும். பால் டப்பி வாங்கிட்டு வந்திருக்கேன். கோகோ போடலாம்னிருக்கேன்…"

"எனக்கும் அதே போதும்" என்றான் பையன்.

குளிர்பெட்டியில் லிமா பீன்சும், ஆட்டிறைச்சியும் இருந்ததை வெளியெடுத்துச் சூடுபடுத்தினாள். கோகோ தயாரித்தபடியே சாப்பாட்டுமேசையைச் சரியாக்கினாள். அந்தப் பெண்மணி அந்தப் பையன் எங்கே வசிக்கிறான், அவங்க மக்கமனுசங்கள் யார் யார், அல்லது இதைப்போல் அவனை சங்கடப்படுத்தக் கூடிய கேள்விகள் கேட்கவில்லை. அதே சமயம், அவர்கள் சாப்பிட்டபோது, அவள் தன் வேலையைப் பற்றி, ஒரு விடுதி அழகுநிலையத்தில் தன் வேலை பற்றிப் பேசினாள். நல்ல வெயில் தாண்டி மெல்ல ஆரம்பிக்கும் வேலை அது. அந்த வேலை பற்றி எடுத்துச் சொன்னாள். அங்கு வந்துபோகும் நாரிமணிகள் பற்றியெல்லாம் பேசினாள். வெள்ளைத்தோல்காரிகள், செம்பட்டைத் தலைக்காரிகள் மற்றும் ஸ்பானியர்கள். பத்து சென்ட் விலையுள்ள கேக்கை எடுத்து வைத்து அதில் பாதியை நறுக்கி அவனுக்கு வைத்தாள்.

"இன்னுங் கொஞ்சம் சாப்பிடுறா, மகனே" என்றாள்.

அவர்கள் சாப்பிட்டு முடித்ததும் எழுந்துகொண்டபடி அவள் சொன்னாள். "இந்தா, பாரு! பத்து டாலர் நோட்டு… போயி நல்லதா பாத்து நீலக்கலர் தோல் ஷூ வாங்கிக்க! ஆனால், இன்னொரு தபா, என்னோட பையை லூட் அடிக்கலாம்னு நினைக்காத! என்னோடதோ, வேறு யாரோடதும்… கூடாது. தப்பு அது. தெரிஞ்சதா? தப்பான வழில வாங்கின பொருள் அது. அந்த ஷூ உன் காலையே சுட்டுரும்டா! நேராச்சி, நான் ஓய்வெடுக்கணும். நீ இனிம ஒழுங்குமுறையா நடந்துக்குவன்னு நம்பறேன்… மகனே, அதாவது இப்பலேர்ந்து. சரிதானே?"

வெளிக் கூடம்வரை அவள் முன்னால்போக அவன் பின்னால் போனான். அவள்போய் முன்கதவைத் திறந்தாள். "குட் நைட்! நல்ல பையனா நடந்துக்கடா, பையா!" என்றபடி அவள் தெருவைப் பார்த்தாள்.

"நன்றி மேம்…" என்கிறதைத் தாண்டி அவனுக்கு எதோ சொல்ல நா துடித்தது. ஆனால் வார்த்தை வெளிவரவில்லை. தெருவின் மண்மேட்டில் ஏறிக்கொண்டிருந்தபோது அவன் திரும்பினான். அந்தத் தாட்டிகமான பொம்பளையைப் பார்த்தான். அவனால் "நன்றி" என்று மாத்திரமே சொல்ல முடிந்தது. அவள் கதவைச் சாத்திக்கொள்ளுமுன் அதை அவசரமாய்ச் சொல்ல வேண்டியிருந்தது. பிறகு அவன் அவளைச் சந்திக்கவேயில்லை.

Thank you, Ma’m
By: Langston Hughes.

ஆப்பிரிக்க வம்சாவளி அமெரிக்கரான ஹியக்சின் எழுத்துக்கள் தன் இன மக்களின் மேன்மையை நெகிழ்ச்சியான மொழிநடையில், ஆனால், அழுத்தமாய்ப் பதிவு செய்கின்றன. அவரது கவிதைகள் செய்நேர்த்தி மிக்கவை. தனித்த குரல் அடையாளம் கொண்டவை. வாழ்வின் அத்தனை பாடுகளோடு, துயரங்களோடு சிறிது ரசனையும் நம்பிக்கையுமான பாத்திரங்களை அவர் சித்தரிக்கிறார்.

About The Author

2 Comments

  1. raman

    ரொம்ப நால் சென்ர பின் நல்ல கதை படித உனர்வு எர்ப்படது

Comments are closed.