சிவாய நம. அது அவரது டிரேட் மார்க்.
சொந்தப்பேர் தனக்கே மறந்தாச்சி. ஊரில்கூட எவன் அவரைப் பத்திப் பேசப்போறான். அவர் என்ன தாஜ் பீடி அண்ணாச்சியா, ஊரில் அத்தனை பேரையும் தெரியறதுக்கு. ஊர்தாண்டி ஊரணிக்கரையில் மண்டபத்துத் தூண் விழுந்துறாமல் சாய்ஞ்சிகிட்டிருப்பார். ஊருக்குள் தெருவில் உத்தேச எதிர்பார்ப்புடன், அதைக் காட்டிக்கொள்ளாத கௌரவத்துடன், காவிவேட்டி காவிதுண்டு, கழுத்தில் உத்திராட்சம் நெற்றியில் பட்டையாய்த் திருநீறு, ஆன்மிக பாவனை – கடவுளையா தேடிப் போகிறார், சோத்தைத் தேடிப் போகிறார்.. எந்த வீட்டிலாவது மிஞ்சியது கழிஞ்சது கிடந்தால் எட்டிப் பார்த்துவிட்டு… ”சாமி?” அல்லது நாலு அஞ்சி பேர் வரிசையில் நின்னால்… ”மொட்டச்சாமி…” சாமியையே பிச்சைக்காரன் ஆக்கி, பக்கத்து எதிர்வீடுகளுக்கு இவாளது கருணை கேக்கிறாப் போல ஒரு சத்த எடுப்பு. கரியழுக்கான ஒரு தோசை விள்ளல். நல்ல பகுதி டெய்லர்வெட்டு வெட்டப்பட்டு கன்னங்கரேல் ஐட்டம் மாத்திரம் கிடைக்கும். நேற்றைச் சோற்றைத் தண்ணியைப் பிழிந்து போடுவார்கள். சக்கையாய் விசுவிசுவென்று அலுமினியத் தட்டத்தில் விழும். தொட்டுக்கொள்ள பழங்கொழம்பு கிடைச்சாலும் தாவலை, ஆனால் பழங்கொழம்பு இருந்தால் நேத்தே அவர்களே இந்தச் சோத்தைக் காலிபண்ணீர்க்காதா, அரிசி விக்கிற விலையில் இரக்கமாவது தர்மமாவது?
”குங்குமம் துலங்க மவராசி நல்லாருக்கணும்…” என்று ஐஸ் வைப்பார். நாளைப் பின்ன எதும் மிஞ்சிப் போனால் என்னையே கூப்பிடுக. சில சமயம் இவர் போனநேரம் வீட்டில் அந்தம்மாவுக்கும் வீட்டுக்காரருக்கும் கடுமையான ரகளை. சோறு கிடைக்…? -காது என்று சொல்லவும் முடியாது. என்னாடி சமையல் இது, இதை மனுசன் திம்பானா… என்று ஆத்திரத்தில் வாசலுக்கு வந்து அந்தச் சோத்தை என் தட்டத்தில் – காத்திருத்தல் நலம் – கவுத்தக் கூடும். சமாதானம் ஆனபின் திம்பான் போல.
எல்லாம் அதிர்ஷ்டம் சார்ந்த விஷயங்கள். பொதுவாக ஆம்பிளைங்களுக்கு இந்த இரக்கமெல்லாம் கிடையாது. மிஞ்சியதைப் போட என்றே நாயை ஆடை வளர்க்கிறார்கள். சோறு திங்கும்போது உரிமையாய்ப் பூனைகள் மடியில் வந்து உட்கார்ந்துக்கும். மியாவ் எனக் கோரிக்கை வைக்கும். சாப்பிடுவது உப்புமாவாய் இருந்தால் சேமியாவ்… அவர்களும் சிரித்தபடி ஊட்டுவதும், அதைத் தூக்கிக் கொஞ்சுவதும், ”ஐயோ இதுக்கு எவ்ள அறிவுடீ?” (சோறுபோடு என்று சொல்ல என்ன அறிவு வேண்டிக் கிடக்கிறது.) அவர்கள் பிச்சைக்காரர்களைக் கொஞ்சவும் வேணாம். ஊட்டி விடவும் வேணாம். வாசல்ல வந்து நீட்டிய கைக்கு ஒரு பிடி சோறு, போடப்டாதா? மிருகங்களை விட மனுசாள் ஒசத்திதானே. இல்லைன்றீங்களா? சரி அடுத்த வீட்டைப் பார்ப்பம்… இதை எதிர்த்து இடஒதுக்கீடு கேட்டு பிச்சைக்காரர்கள் ஊர்வலமா போகமுடியும்? சிவாய நம.
சுத்துவட்ட எட்டுபட்டியும் அவரது ஊர். எங்கய்யா செத்துப்போகும் போது, இந்த வீட்டை எனக்கு விட்டுட்டுப் போனார்ன்னானாம் ஒருத்தன். அடுத்தவன் சொன்னான் – போடா எங்கய்யா இந்த உலகத்தை விட்டே போனார்! அந்தக் கதை. உள்ளவனுக்கு உள்ளூர். இல்லாதவனுக்கு யாதும் ஊரே.
பஸ் ஸ்டாண்டில் எவனோ விசிறியடித்துவிட்டுப் போயிருந்த போத்தல், எடுத்து வைத்துக் கொண்டிருந்தார். குளக்கரையில் படுக்குமுன், காலையில் கிளம்புமுன் அதில் தண்ணீர் நிரப்பிக் கொள்வார். படுபாவிப் பய காலம், தண்ணிக்குமில்ல காசு வாங்க ஆரம்பிச்சாச்சி, காத்துக்கு எப்ப விலை வைக்கப் போறாகளோ தெரியல.
சனங்களின் இரக்கம் சீஸன் சார்ந்ததாய் இருக்கிறது. நல்லநாள் விசேஷம் என்றால் நல்ல உடை மாட்டிக் கோவிலுக்கு வந்து, திடீர் பக்திசொரூபமாகிப் போகிறார்கள். கோவில் வாசலில் பிச்சைக்காரர்களின் நீண்ட வரிசை. நல்ல நாட்கள் பிச்சைக்காரர்களுக்கு எப்படியோ தெரிந்து விடுகிறது. சனங்களே, கோவில் குருக்களே காலண்டர் பார்த்துத் தான் தெரிந்து கொள்கிறார்கள். எந்தப் பிச்சைக்காரன்ட்ட காலண்டர் இருக்கு?
அன்றியும் பள்ளிக்கூடப் பரிட்சை, எதும் அநியாய ஆசை (நியாய ஆசையின்னா தன்னைப்போல நிறைவேறிரும்.) என்று வரும்போது பக்தி தன்னைப்போலப் பெருக்கெடுத்து ஓவர்பிளீடிங் போல ஆகிவிடுகிறது. ஒன்பது பிரதட்சிணம், நூத்தியெட்டாகி விடுகிறது. அழுகிய தேங்காயை அல்ல, சிறப்பு பிரார்த்தனையில் நல்ல தேங்காயையே எறிகிறார்கள். விடலைப் பிள்ளைகளின் பிரார்த்தனைகள். பரிட்சைல பாஸ் பண்ண தேங்கா உடைச்சிட்டுப் போன ஒருத்தன், ஃபெயிலாயிப் போயி… பிள்ளையாரையே உடைச்சிட்டான்!
சீஸன் பக்தி. இதில் நமக்கென்ன சிரமம்?… இருக்கிறது. ஒரே சமயம் ஒரே நாளில் எல்லாவனும் பிச்சைபோட அலைகிறான்கள். தர்மப் பெருக்கு! சோறு, பானகம், நீர்மோர்… கோவிலில் திருவிழா என்றால் ஊர் நாய்களும், எட்டுபட்டியில் இருந்து திரண்டிருக்கும் பிச்சைக்காரர்களும் பரபரக்கிறார்கள். வயிறு வெடிச்சிரும் போலுக்கேய்யா. அவரே ஓர் அதிகார தோரணையுடன் நாயைச் சுண்டிக் கூப்பிட்டு மிஞ்சிய சோத்தைப் போடுவார். தனக்கு மீந்தால் தானம், உலகப் பொதுமொழி. அரிசி வெச்சிக்கலாம். துட்டு வெச்சிக்கலாம். சோறுன்னா காலிபண்ணியாவணும். அடியே… என நாயைப் பார்ப்பார். ஆணா பொட்டையா தெரியாது. எங்களுக்கு யாதும் ஊரே. உங்களுக்கு ரெண்டு தெரு, அவ்வளவுதான் ஊரே.
போனவாரம் சோத்துப் பங்குக்கு வந்தபோது கல்லெடுத்து அடித்தவன் என்கிற லஜ்ஜையின்றி வாலாட்டி நிற்கிறது நாய். நாய்வாலை நிமிர்த்த முடியாது என்பது பழமொழி. அதை எதுக்கு நிமிர்த்தணும்? வேலைகெட்ட வேலையா அதைப்போயி ஒருத்தன் முயற்சி பண்ணியிருக்கான்!
சில நாட்கள் முங்க முங்க தின்னு தீர்க்கக் கிடைப்பதைப் போலவே, சில நாட்கள் கண்டார… எதுவுமே கிடைக்காமப் போயிரும். சேர்ந்தாப்போல ரெண்டு நாட்கள் பட்டினி கிடக்கிறாப் போல ஆகிப் போகும். ஊரணித் தண்ணியை போத்தலில் எடுத்து எடுத்துக் குடிப்பார். நாய் கூட வந்து வந்து நிற்கும். ஆத்திரத்தைத் தணித்துக் கொள்ள நாய் ரொம்ப உதவி. ஆசைதீர ஒரு எத்து. சிவாய நம.
மண்டபத்தில் பக்கத்துப் பிச்சைக்காரன் செரிக்காமல் கெடந்துருளுவான். ஏவ்.. நமக்கு உள்ள எலி ஓடுறாப்போல பிறாண்டும் சனி. ஏல என்னென்ன தின்னே? – என்று காதால் பசியை நிரப்பிக் கொள்ள முயல்வார்.
யாரோ ஒரு பக்தர் ஒருநாள் தலைமேல் தூக்கிய கையோடு கோவில் வாசலில் இருந்து ”சிவாய நம. ஓம் நம சிவாய…” என்று சொல்லியபடி கோவிலுள்ளே பரவசத்துடன் போனதைப் பார்த்தார். நல்லாருக்கே, என நினைத்துக் கொண்டார். ஏகப்பட்ட சொத்துக்காரன். தாஜ் பீடி ஓனர். அப்றம் ஏன் பரதேசி மாதிரி இந்த ‘சிவாய நம?’ தெரியவில்லை. அடுத்த முறை அவர் வீட்டு வாசலில் போய் நின்றார். சிப்பந்தி வந்து போ போ, என விரட்டப் பார்த்தான். முதலாளி பார்க்கிறார் என்றதும், கையைத் தலைக்குமேல் தூக்கி…
அஞ்சு ரூபாய் கிடைத்தது. சிவனுக்கு அஞ்சு ரூபாய் மதிப்பு! எப்ப அந்தப் பக்கம் போனாலும் அஞ்சு ரூபாய் கேரண்டி என்றிருந்தது. துட்டு பெருத்ததும் ஆள் ஊரில் தங்குவதே அபூர்வம் என்றாகிப் போயிற்று.
(தொடரும்)
(நன்றி: சன்டே இந்தியன் வார இதழ்)