ஹாவ்வ்வ்வ்! சுற்றிலும் யாருமில்லாத தைரியத்தில் சுதந்திரமாகக் கொட்டாவி விட்டாள் சாகரி! நீண்ட நேரமாகக் கணினியில் தட்டச்சு செய்ததில் விரல்கள் மரத்துப் போயிருக்கவே, அழகாகச் சோம்பல் முறித்துக் கை விரல்களில் சொடுக்கெடுத்தாள். சற்று ஓய்வெடுத்த பின் மீண்டும் தொடரலாம் என்று அவ்வளவு நேரம் குறிப்பெடுத்த புத்தகங்களை ஒரு பக்கமாக அடுக்கி வைத்தாள். சிறிது நேரம் தூங்கலாம் என்று முடிவு செய்தவளை தோட்டத்துக் குயில் "தூங்கினால்தான் ஓய்வா? சற்று வந்து என்னையும் இங்கிருக்கும் இயற்கையழகையும் பாரேன்" என்று கூப்பிட்டது! மனதை மாற்றிக்கொண்டு தோட்டத்துப் பக்கம் வேப்ப மரத்தடியில் இருந்த நாற்காலியில் சாய்ந்தாள். சுகமாக வீசிய காற்றில் அவளை அறியாமல் மூடிய கண்களுக்குள் அவள் கடந்த கால நினைவுகள் விழித்தெழுந்தன. .
சாகரி… பெயருக்கேற்றாற்போல் கடல் போன்ற கண்கள். அந்த விழிகளின் மௌன மொழியில் மயங்கியவன்தான் சுரேஷ்! இருவரின் முதல் சந்திப்பு இன்னமும் பசுமையாய் அவளுள் நிறைந்து கிடந்தது. ஒருவருக்கொருவர் உதவி செய்வதில் சளைத்தவர்களில்லை என்பதை அந்த முதல் சந்திப்பே அவர்களுக்கு பரஸ்பரம் உணர்த்தியது!
தமிழக அரசு கட்டித் தந்திருந்த தொகுப்பு வீடுகளில்தான் இருவரும் வசித்து வந்தார்கள். ஒரே குடியிருப்பில் இருந்தாலும் முன்பின் சந்தித்திராத அவர்களை ஒரு ஞாயிற்றுக்கிழமையின் பிற்பகலில் இடைவிடாது கேட்ட ஒரு நாயின் ஆக்ரோஷமான குரைப்பும், அதற்கு எதிர்மறையாக பயந்து நடுங்கிய குட்டியின் தீனமான கதறலும்தான் சந்திக்க வைத்தது.
அந்த நாயைத் துரத்திவிட்டு, ஏற்கனவே கடி வாங்கி விட்ட சின்னஞ்சிறு குட்டியைத் தூக்கிக் கொண்டு, ஞாயிற்றுக்கிழமை ஆதலால் அவ்வளவு சுலபமாகக் கிடைக்காத மருத்துவரைத் தேடி ஒவ்வொரு இடமாக அலைந்தது என்று இருவருமே ஒன்றாகவே சென்றாலும் நாய்க்குட்டிக்கு ஒன்றும் ஆபத்தில்லை என்று மருத்துவர் சொன்ன பிறகே இருவருக்கும் இன்னமும் தாங்கள் ஒருவருக்கொருவர் பெயரைக் கூட அறிந்து கொள்ளவில்லை என்பது நினைவுக்கு வந்தது.
விரைவிலேயே சிறிது சிறிதாக ஒருவர் மனதை மற்றொருவரிடம் பறிகொடுத்து, பெற்றவர்களிடம் போராடிப் பின் வெற்றிகரமாகத் திருமணமும் செய்து கொண்டார்கள்.
இருவருக்குமே மற்றவர்களுக்குச் சேவை செய்யும் ஆவல் அதிகம். தற்போது சாகரி சுரேஷைப் பிரிந்திருக்கவும் அதுதான் காரணம்!! பிரிவென்றால் மற்ற சாதாரண தம்பதியரைப் போல ஊடலினால் ஏற்பட்ட பிரிவு அல்ல, ஒரு உத்தமமான காரணத்திற்காக ஏற்பட்ட பிரிவு! உலகையே உலுக்கிய குஜராத் பூகம்பம் மென்மையான மனம் கொண்ட இத்தம்பதியரை மட்டும் விட்டு வைக்குமா என்ன? தன்னாலான உடலுழைப்பை நல்க அலுவலகத்தில் ஒரு மாதம் சம்பளமில்லாத விடுப்பு பெற்று சுரேஷ் குஜராத்திற்கு விரைந்தான். உள்ளூரில் வறுமையில் உழலும், உழைக்கும் ஆர்வம் மிகுந்த மகளிரைத் திரட்டி மகளிர் சுய உதவிக் குழுக்களை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்ததாலும், சேரிக் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பச் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்ததாலும் சாகரி சுரேஷுடன் செல்ல இயலவில்லை. சிறிது நாட்கள் கண்ணில் படாவிட்டால் மறுபடியும் சேரி ஜனங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதை விட்டு மறுபடி குப்பை சேகரிக்கவும், வீட்டு வேலை செய்யவும் அனுப்ப ஆரம்பித்துவிடுவார்களே!
என்னதான் பொதுப்பணியிலும் பெண்கள் முன்னேற்றம் குறித்த ஆராய்ச்சிக் கட்டுரையிலும் நேரம் அதிகமாகச் செலவிட்டாலும், இரவும் தனிமையும் வந்தால் சுரேஷின் நினைவு சாகரியை ஆட்டிப் படைத்தது. அதுவும் அன்று அதிசயமாகக் கிடைத்த ஓய்வு சுரேஷைப் பற்றிய ஏக்கத்தை இன்னமும் அதிகமாக்கியது.
"மேடம், போஸ்ட்" என்ற தபால்காரரின் குரல் சாகரியின் மோன நிலையைக் கலைத்தது. "ஒரு வேளை சுரேஷிடமிருந்து கடிதம் வந்திருக்குமோ!" நினைவே அவளைத் துடிப்போடு ஓடச் செய்தது. அவள் எதிர்பார்த்த மாதிரியே கடிதம் சுரேஷிடமிருந்துதான். மிகுந்த அவசரம் என்றாலே தவிர கூரியர் அல்லது ஸ்பீட் போஸ்டில் கடிதத்தை அனுப்பும் வழக்கம் அவனுக்கு இருந்ததில்லை. விமானத்தில் பயணம் செய்யுமளவுக்கு வசதியிருந்தாலும் இருவருமே ரயிலிலும், பேருந்திலும் பயணம் செய்வதையே விரும்புவார்கள். இயற்கையை ரசிக்கவும், சுற்றியுள்ள மனிதர்களைப் படிக்கவும் முடியும் என்பது ஒரு பக்கமிருக்க, அந்தக் காசை மிச்சம் பிடித்தால் தங்களது பொதுச் சேவைக்கு சிறுதுளியாய்ப் பயன்படுமே என்ற நல்லெண்ணம்தான் அதிகம்!
கடிதத்தை வாங்கிக்கொண்டு வீட்டிற்குள் போகும் பொறுமை கூட இல்லாமல் வாசற்படியிலேயே அமர்ந்து பிரித்துப் படித்தாள். படிக்கப் படிக்க அவள் முகம் மலர்ந்தது. "சுரேஷ் நாளை வருகிறாரா… நல்ல வேளை இன்றாவது தபால் வந்ததே!" என்று நினைத்துக் கொண்டாள்.
அடுத்த நாள் காலை, சுரேஷிற்குப் பிடித்த சமையலை விரைவிலேயே முடித்து விட்டு அவனை வரவேற்பதற்காக ரயில் நிலையத்திற்குச் சென்றாள். சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எதிரே சாலையைக் கடக்க அவளுடன் இளமையானதொரு பெண்ணும் அவளது துறுதுறு மகளுமாக நின்றிருந்தனர். அவளது சுட்டித்தனமான கேள்விகளுக்குப் பதில் கூறிய இளம்பெண் தங்களை ஆவலுடன் பார்த்திருந்த சாகரியைப் பார்த்துப் புன்னகைத்தாள். "சரியான கேள்வியின் நாயகி! ஓயாம கேள்வி கேட்டுக்கிட்டே இருப்பா"
சற்றே இவர்களின் கவனம் சிதறிய நேரத்தில் அந்தக் குழந்தை தன் கையிலிருந்து நழுவிய பந்தைப் பிடிக்கவென சாலையின் குறுக்கே பாய்ந்து விட்டது. குழந்தை சாலையின் நடுவில் சென்றதையும், எதிர்ப்புறச் சாலையின் வளைவில் ஒரு லாரி வேகமாத் திரும்புவதையும் ஓரப் பார்வையில் கவனித்த சாகரி, தன்னியல்பாய் தானும் பாய்ந்து குழந்தையை சாலையின் ஓரத்திற்குத் தள்ளிவிட்டாள். ஆனால் அவள் நகர்வதற்குள்ளாகவே லாரி, நிறுத்த முயற்சித்த ஓட்டுனரையும் மீறி அவளைத் தூக்கி எறிந்தது. அதிசயத்திலும் அதிசயமாக, வழக்கத்தை விட ஓரிரண்டு நிமிடங்கள் முன்னதாகவே ரயில் வந்து சேர்ந்து விட்டதால், ரயில் நிலைய வாசலிலேயே சாகரியை எதிர்கொள்ளக் காத்திருந்த சுரேஷ் இந்தக் காட்சியில் நொறுங்கிப் போனான்.
"சாகரீ… " என்ற அலறலுடன் சாலையோரம் தூக்கி எறியப்பட்டவளை நோக்கிப் பாய்ந்தான்.
(மீதி அடுத்த இதழில்)