விவேகானந்தர் பார்வையில் கர்ம யோகம் (3)

8. எங்கிருந்து ஆற்றல் வந்தது இயேசுவுக்கும் புத்தருக்கும்?

நாம் இந்த உலகில் காணும் அத்தனை செயல்களும், மனித சமுதாயத்தின் அத்தனை இயக்கங்களும், எண்ணங்களின் வரி வடிவமே. மனிதனின் மனத் திட்பத்தின் வெளிப்பாடே அவை. இயந்திரங்கள், சாதனங்கள், நகரங்கள், போர்த் தொழிலார், இவை அனைத்துமே மனித மனத்திட்பத்தின் வெளிப்பாடுகளே. (வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம் – திருவள்ளுவர்.)

இந்த மனத்திட்பம் குணத்தினால் வருகிறது. இந்த குணத்தின் காரணி -கர்மா. கர்மாவைப் பொறுத்தே ஒருவனது மனத்திட்பம் அமைகிறது. இந்த உலகம் அளித்துள்ள திண்ணிய மனத்தினர் அனைவரும் அசாதாரணப் பணி ஆற்றியவர்களே. மகத்தான ஆத்மாக்கள். அவர்களுடைய மனத்திட்பம் இந்த உலகையே புரட்டிப் போட்டிருக்கிறது. காலம் காலமாக அவர்கள் ஆற்றியுள்ள இடைவிடாத பணியினால் உருவானது அந்த மனத்திட்பம்.

புத்தருக்கும் இயேசுநாதருக்கும் அமைநதது போன்ற மனத்திட்பம் ஒரு பிறவியில் அடைந்திருக்க முடியாது. ஏனென்றால், அவர்களது பெற்றோர்களைப் பற்றி நமக்குத் தெரியும். அவர்களது தந்தையர் மனிதகுலத்தின் நன்மைக்காக ஒரு வார்த்தை கூடப் பேசியதாக நமக்குத் தெரியவரவில்லை.

ஜோசப்பைப் போன்ற லட்சோப லட்சம் தச்சர்கள் வந்து போயிருக்கிறார்கள். இன்னும் லட்சக்கணக்கில் இருக்கிறார்கள். புத்தரின் தந்தையைப் போன்ற லட்சக்கணக்கான சிற்றரசர்கள் இந்த உலகத்தில் வந்து போயிருக்கிறார்கள்.

இது பரம்பரையினால் வருவது என்றால், ஒரு குட்டி அரசர் அவரது வேலையாட்களால் கூட மதிக்கப்பட்டிருக்க மாட்டார். அவருக்குப் பிறந்த மகன், பாதி உலகத்தால் வணங்கப்படுவது எப்படி? ஒரு தச்சருக்கும் லட்சோப லட்சம் மக்களால் கடவுளாக வணங்கப்படும் அவரது மகனுக்கும், மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசத்துக்கு என்ன காரணம்? பரம்பரையைக் காரணம் சொல்லி இதை விளக்கிவிட முடியாது. புத்தரும் இயேசுநாதரும் இந்த உலகத்தின் மீது வீசிய மாபெரும் சங்கல்ப சக்தி எங்கிருந்து வந்தது? சேர்த்துக் குவித்த ஆற்றல் எங்கிருந்து வந்தது? காலம் காலமாக அது இருந்திருக்க வேண்டும்; தொடர்ந்து, பெரிதாகிப் பெரிதாகி வந்திருக்க வேண்டும்! இயேசுவாகவும், புத்தராகவும் வெடித்துப் புறப்பட்டு இன்றளவும் ஆற்றலை வெளியிட்டுக் கொண்டிருக்க வேண்டும்!

9. நம் வாழ்வைச் செதுக்கும் சிற்பி நாமேதான்!

இத்தனையையும் நிர்ணயிக்கும் சக்திதான் கர்மா. உழைத்துப் பெற்றால் ஒழிய எதையும் யாரும் அடைந்து விட முடியாது. இது என்றும் மாறாத விதி. சில நேரங்களில் அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது என்று நாம் நினைப்போம். என்றாலும் காலப்போக்கில் அதன் உண்மையை உணர்ந்து கொள்வோம்.

செல்வத்துக்காக ஆயுள் பூராவும் ஒருவன் உழைக்கலாம். ஆயிரம் பேரை ஏமாற்றலாம். கடைசியில், தனக்கு செல்வந்தனாகும் தகுதி இல்லை என்று உணர்ந்து கொள்கிறான். அவனது வாழ்க்கையே அவனுக்கு சங்கடம் தருகிறது. தொல்லை ஆகிறது. (விழுந்து புரண்டாலும் ஒட்டுவதுதானே ஒட்டும்?)

நமது உடலளவிலான சந்தோஷத்துக்காக, பொருட்களை சேகரித்துக் கொண்டே போகலாம். என்றாலும், எதற்கு நாம் உழைத்துத் தகுதி பெற்றிருக்கிறோமோ அதுதான் நமக்குக் கிட்டும். ஒரு மூடன் உலகிலுள்ள அத்தனைப் புத்தகங்களையும் வாங்கலாம்; அத்தனையும் அவனது நூலகத்தில் இருக்கும். அவனுக்கு எதைப் படிக்கத் தகுதி இருக்குமோ, அதை மட்டுமே அவனால் படிக்க முடியும்.

இந்தத் தகுதி என்பது கர்மாவினால் வருவது. எது நமக்குத் தகுதி, எதை நம்மால் ஜீரணித்துக் கொள்ள முடியும் என்று கர்மாவே தீர்மானிக்கிறது. நாம் இப்போது இருக்கிற நிலைக்கு நாமே பொறுப்பு. அதே போல, நாம் எப்படி ஆக விரும்புகிறோமோ, அவ்வாறே நம்மை வனைந்து கொள்வதற்கான ஆற்றல் நம்மிடமே இருக்கிறது. நாம் இப்போதுள்ள நிலைக்கு நமது பழைய வினைகளே காரணம் எனும்போது, அதேபோலத்தான், எதிர்காலத்தில் நாம் என்னவாக ஆக விரும்புகிறோமோ, அந்த நிலையை நமது இன்றைய வினைகள் மூலம் அடைய முடியும் என்பது நிச்சயம். அதற்காக நாம் உழைக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.

10. உழைக்கக் கற்றுக் கொள்வோம்!

என்னது? உழைக்கக் கற்றுக்கொள்வதா? எல்லாரும் ஏதாவது ஒரு வகையில் உழைத்துக்கொண்டுதானே இருக்கிறோம்? அதுவல்ல விஷயம். நாம் கற்றுக்கொள்ள வேண்டியது ஆற்றலை விரயம் செய்யாமல் உழைப்பதற்கு. கர்மயோகத்தைப் பொறுத்தவரை கீதை சொல்லுவது ‘புத்திசாலித்தனமாக உழைப்பதே ஒரு அறிவியல்’ என்பது. எப்படி உழைப்பது என்பதைத் தெரிந்து கொள்வதன் மூலம், உழைப்பின் அதிகபட்சப் பலனை அடையலாம்! இதை கவனத்தில் கொள்ளுங்கள். நமது உழைப்பின் நோக்கம் நமக்குள் இருக்கும் மனதின் ஆற்றலை வெளிக் கொணர்வது; உறங்கிக் கிடக்கும் ஆன்மாவை விழித்து எழுப்புவது! ஆற்றல் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கிறது. அறிவும் அப்படித்தான். நாம் ஆற்றும் பலவித வேலைகளும் நம்முள் உள்ள அசுர வல்லமையைத் தட்டி எழுப்ப விழும் அடிகளே!

(தொடரும்)”

About The Author

1 Comment

Comments are closed.