Q. உணவுக்கும், உணர்வுக்கும் சம்பந்தம் உண்டா?
ஏன் இல்லை? அம்புப் படுக்கையில் படுத்துக் கொண்டு உத்தராயண புண்யகாலத்தில் உயிரை விடுவதற்காக காத்திருந்த பீஷ்மர், பஞ்சபாண்டவர்களுக்கு அறநெறிகள் பற்றி உபதேசம் கொடுத்துக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் அவருடைய உபதேசங்கள் திரௌபதிக்கு கோபத்தை உண்டாக்கியது. ‘சூதாடிய அன்று நீங்கள் தர்ம நியாயத்தை துரியோதனாதியருக்கு எடுத்துச் சொல்லியிருந்தால் போருக்கே அவசியம் வந்திருக்காதே’ என்று வாதாடினாள். அப்போது பீஷ்மர், ‘அம்மா! நாம் உண்ணும் உணவிற்கும், நம் புத்தி பக்குவப்படுவதற்கும் நிறைய சம்பந்தம் இருக்கிறது. அறநெறிகளை நன்கு அறிந்தவனான நான், மகா பாபிகளான துரியோதனாதியருடன் சேர்ந்து, அவர்கள் அளித்த சாப்பாட்டினால் உடலை வளர்த்து வந்தேன். அதனால் என் புத்தி அவர்களுக்காகவே பரிந்து பேசியது. இப்போது அர்ச்சுனன் விட்ட அம்பினால் அந்த உணர்வுகள் என்னைவிட்டு நீங்கி தர்ம நியாயங்களை எடுத்துச் சொல்கிற பாங்குடனும் தகுதியுடனும் இருக்கிறேன்’ என்று சொன்னார். தீய உணர்வும் , தீயவர் அளிக்கும் உணவும் நம்மை நல்வழியில் செலுத்தாது என்ற உண்மையை உணர்த்தினார் பீஷ்மர்.