அம்மாவின் ஆகஸ்ட் 15 பொங்கல் மறுநாளில்!

பொங்கலுக்கு மறுநாள் போவது வழக்கம்.
எட்டு கல் தொலைவிற்கு முன்பே
அம்மாவிடம் மாற்றம் தெரியும்.
மண் வாசனை நுகரத் தொடங்கி விடுவாள்.
எங்களுடன் பேசிச் சிரித்தாலும்
மனம் பயணப்பட்டு
ஊரெல்லையைத் தொட்டிருக்கும்.
வண்டி நின்று இறங்கியதும்
அவர் எங்கள் ‘அம்மா’ இல்லை!
கால ஊர்தியில் பின்னோக்கிச்
சென்ற சிறுவயதுக்காரி!
அன்றைய தினம் முழுக்க
கிராம வீடுகளுக்குள் எங்கிருந்தோ
அவர் குரல் கேட்டுக் கொண்டிருக்கும்.
அவர் வாழ்ந்த வீடு இப்போது இல்லை.
அதன் மண்ணில் நின்றபோது
கண்களில் பழைய கட்டிடம் புலப்படும்.
மீண்டும் மாலை பயணப்படும்வரை
அவரின் சுதந்திரம்.
மாலை ஊர் எல்லையைத் தாண்டும்போது
அம்மாவின் மௌனம் உறுத்தலானது.
அடுத்த வருட இதே தினத்திற்காக
நாங்களும் காத்திருப்போம் அம்மாவுடன்..

About The Author