விவேகானந்தர் பார்வையில் கர்ம யோகம்-பகுதி – 1 : கர்ம யோகத்தின் அடிப்படை

1. கர்மா என்பது என்ன?

கர்மா என்ற சொல், ‘செய்’ என்று பொருள்படும் ‘க்ரு’ என்ற வடமொழிச் சொல்லின் அடிப்படையில் உருவானது. சொல்லப் போனால் இந்தப் பதம் செயல்களின் விளைவுகளையும் குறிக்கும். தத்துவார்த்தமாகப் பார்த்தால் நமது பழைய செயல்களின் காரணத்தினால் அமையும் விளைவுகளையும் சில சமயங்களில் இந்தப் பதம் குறிக்கும். ஆனாலும், கர்மயோகத்தில் இந்தச் சொல்லை ‘செயல்’ என்ற பொருளிலேயே குறிக்கிறோம்.

2. குணங்களைப் புரிந்து கொள்வோம்

நமது செயல்களுக்கும் நமது குணங்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. அது எப்படி என்பதைப் பின்பு பார்ப்போம். என்றாலும், கர்மயோகப் பயிற்சிக்கு அடிப்படையாக குணங்களைப் பற்றித் தெரிந்து கொள்வது அவசியமாகிறது.

இயற்கை மூன்று சக்திகளால் ஆக்கப்பட்டிருக்கிறது. அவை சத்வம், ரஜஸ், தமஸ் என்பனவாகும். தூல உலகில் இவை சமநிலை, செயல்நிலை, மந்தநிலை என்ற நிலைகளில் வெளிப்படுவதாகக் கொள்ளலாம். தமஸ் என்பது இருண்ட நிலை அல்லது செயலற்று இருப்பதைக் குறிக்கும். ஈர்த்தோ எதிர்த்தோ செயலாற்றுவது ரஜஸ். இவை இரண்டின் சமநிலையே சத்வம்.

நம் ஒவ்வொருவரிடமும் இந்த மூன்று தன்மைகளும் இருக்கின்றன.

சில சமயங்களில் தமஸ் மேலோங்கியிருக்கிறது. அப்போது நாம் சோம்பியிருக்கிறோம்; அசையக்கூட மாட்டோம்; எந்த வேலையும் செய்ய மாட்டோம்; ஏதோ கருத்துக்களைப் பிடித்துக்கொண்டோ, சுத்த மந்த நிலையினாலோ கட்டுண்டு கிடப்போம். சில நேரங்களில் சுறுசுறுப்பாக செயலாற்றிக் கொண்டிருப்போம். இன்னும் சில வேளைகளில் இரண்டு நிலைகளையும் சமன் செய்துகொண்டு அமைதியாக இருப்போம்.

மனிதர்களில், ஒவ்வொருவரிடமும் இந்த மூன்று குணங்களில் ஒவ்வொன்று மேலோங்கி இருக்கும். ஒருவரது சுபாவம் செயலற்று இருப்பது, சோம்பல், மந்த நிலை. மற்றொருவர் செயலாற்றல், சக்தி, ஆற்றலின் வெளிப்பாடாகக் காணப்படுவார். மூன்றாவது வகை மனிதர் இனிமை, அமைதி, மென்மையின் வடிவமாக இருப்பார். செயலும் செயலின்மையும் சமநிலைப்படுத்தப்பட்டதன் விளைவே இந்த நிலை. மனிதர்களாகட்டும், விலங்குகளாகட்டும், தாவரங்களாகட்டும், இறைவனின் அனைத்துப் படைப்புகளிலும் இந்த மூன்று நிலைகளின் வெளிப்பாடு இருப்பதைக் காண்கிறோம்.

கர்மயோகப் பயிற்சிக்கு, இந்த மூன்று குணங்களைப் பற்றிப் புரிந்து கொள்வது அவசியமாகிறது. இவை என்னென்ன என்பதையும் அவற்றை எப்படிப் பயன்படுத்தலாம் என்பதையும் புரிந்து கொண்டால் நாம் திறமையாகச் செயலாற்ற முடியும்.

அது சரி, இந்தக் குணங்கள் எப்படி உருவாகின்றன?

3. குணங்கள் உருவாகும் விதம்

நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம், மனித வாழ்க்கையின் குறிக்கோள் சந்தோஷமாக இருப்பதுதான் என்று. இது சரியல்ல. உலகின் அத்தனை துயரங்களுக்கும் காரணம் மகிழ்ச்சிதான் லட்சியம் என்று தவறாக நினைத்துக்கொண்டு அதை நோக்கிப் பயணித்துக் கொண்டிருப்பதுதான். கொஞ்ச காலத்தில் நமக்குப் புரிய வருகிறது, நாம் செல்லும் பாதை நம்மை அறிவை நோக்கி இட்டுச் செல்கிறது என்று.

இன்பமும் துன்பமும், சந்தோஷமும் துக்கமும் நமக்கு நிறையப் பாடங்களைக் கற்றுத் தருகின்றன. நமது ஆன்மாவின் முன்னர் மகிழ்ச்சியும் வேதனையும் சஞ்சரிக்கும்போது அவை பல்வேறு பதிவுகளை விட்டுச் செல்கின்றன. இத்தகைய பதிவுகளின் இணைந்த விளைவே நமது குணமாக அமைகிறது.

ஒருவரது குணம் என்பது அவரது ஒட்டுமொத்த மனப் போக்கைக் கொண்டே நிர்ணயிக்கப்படுகிறது. இந்த வகையில் நமக்கு நமது அனுபவங்கள் குணங்களை நிர்ணயிக்கும் காரணிகள் ஆகின்றன.

பாடம் கற்றுக்கொள்கிறோம், அறிவு பெறுகிறோம் என்றெல்லாம் சொல்கிறோம். ஆனால் உள்ளபடியே அறிவு என்பது வெளியில் எங்கிருந்தும் வருவதில்லை. ஏற்கெனவே நமக்குள் உறங்கி கிடக்கிறது. சந்தர்ப்பங்கள் அவற்றைத் தூண்டி விடுகின்றன. அவ்வளவே! ‘கற்றுக் கொள்கிறோம்’ என்பதற்கு உண்மையான பொருள் ஏற்கெனவே இருப்பதைக் ‘கண்டறிந்து கொள்கிறோம்’ என்பதே ஆகும்.

நியூட்டன் புவியீர்ப்பு விசையைக் கண்டுபிடித்தார் என்கிறோம். அது என்ன எங்காவது மூலையில் அமர்ந்து கொண்டு நியூட்டன் தன்னைக் கண்டுபிடிக்கட்டும் என்று காத்துக் கொண்டிருந்ததா? அது அவர் மனதிற்குள்ளேயே இருந்தது. காலம் கனிந்தது. கனி விழுந்தது. அவர் கண்டுபிடித்தார். உலகம் இதுவரை பெற்றுள்ள அத்தனை அறிவும் மனதினில் இருந்து வந்தவையே.

பிரபஞ்சத்தின் எல்லையற்று விரிந்த நூற்களஞ்சியம் நம் மனதிற்குள்ளேயே இருக்கிறது. புற உலகம் நமக்கு அளிப்பது நமது மனத்தையே ஆராய அளிக்கும் ஒரு வாய்ப்பு, ஒரு கருத்துப் பொறி, அவ்வளவே. நமது ஆய்வுப் பொருள் என்னவோ நம் மனமே. ஆப்பிள் கீழே விழுந்தது, நியூட்டனுக்கு ஒரு எண்ணத்தைத் தந்தது. அதை ஒட்டி அவர் தன் மனத்தை ஆராய்ந்தார். ஏற்கெனவே தம் மனதிற்குள் இருந்த எண்ணத் தொடர்களை அவர் வேறு விதமாக மாற்றி அமைத்துக் கொண்டார். அவற்றுக்குள் ஒரு புதிய தொடர்பைக் கண்டார். அதுதான் புவி ஈர்ப்பு விதி. அது ஆப்பிளிலோ, பூமியின் மையத்திலோ இல்லை.

ஆக, உலகியல் அறிவானாலும் சரி, ஆன்மிக அறிவானாலும் சரி, அனைத்து அறிவும் மனித மனதுக்குள் இருக்கிறது. நிறைய சந்தர்ப்பங்களில் அது மூடிக்கிடக்கிறது; கண்டறியப் படுவதில்லை. மூடிய திரை விலகியதும், ‘கண்டுபிடித்தோம்’ என்கிறோம். Discovered என்ற ஆங்கிலப் பதம் இதைச் சரியாக விளக்கும். அறிவு வளர்ச்சி அடைவது என்பது, இந்த கண்டுபிடிப்புச் செயல்பாட்டின் முன்னேற்றத்தையே குறிக்கும். எந்த அளவுக்கு ஒருவனிடம் இந்தத் திரை விலகியிருக்கிறதோ அந்த அளவுக்கு அவன் அறிவாளி ஆகிறான்; முற்றிலும் மறைத்திருப்பவன் மூடன்; முழுமையாக திரை விலகப் பெற்றவன் ஞானி.

நிறைய முற்றுணர்ந்த சர்வக்ஞர்கள் இருந்திருக்கிறார்கள். வரும் காலங்களில் இன்னும் லட்சோப லட்சம் வருவார்கள். விறகிடைத் தீ போல அறிவனைத்தும் மனதுக்குள் உறங்கிக் கிடகிறது. சரியான உரசலில் அனல் வரும். இது போலத்தான் நமது உணர்ச்சிகளும் செயல்களும், கண்ணீரும் புன்னகையும், மகிழ்ச்சிகளும் துயரங்களும், அழுகையும் சிரிப்பும், சாபங்களும் வரங்களும், புகழ்ச்சிகளும் இகழ்ச்சிகளும் – இவை அத்தனையும் யோசித்துப் பார்த்தால், நமக்குள்ளிருந்தே வெளிப்படுவது தெரிய வரும். நாம் பட்ட அனுபவ அடிகளின் விளைவுகளே இவை.

இத்தனை உணர்ச்சிகள், செயல்கள், அனுபவங்கள் தந்த அடிகளின் விளைவே நமது ‘கர்மம்’. ஒரு கணம் விடாமல் நாம் கர்மம் இயற்றிக் கொண்டிருக்கிறோம். பேசுவது, கேட்பது, மூச்சு விடுவது, நடப்பது அனைத்தும் கர்மமே. மனத்தாலும் உடலாலும் நாம் செய்யும் ஒவ்வொரு காரியமும் நம்மில் பதிவுகளை ஏற்படுத்துகின்றன.

நாம் செய்யும் ஒவ்வொரு காரியமும் நம் குணத்தை வெளிப்படுத்துகிறது. மகத்தான காரியங்கள் என்பது மட்டுமில்லை, சின்ன சின்ன காரியங்களைக்கூட நாம் எவ்வளவு நறுவிசாக, கச்சிதமாக செய்கிறோம் என்பதுதான் நம் குணத்தை வெளிப்படுத்தும். நாம் மகத்தான செயல்கள் என்று குறிப்பிடும் செயல்கள், சின்னச் சின்ன காரியங்களின் ஒட்டுமொத்த தொகுப்பே ஆகும். கடற்கரையில் நின்று கரையில் மோதும் அலைகளின் பேரிரைச்சலைக் கேட்கும்போது பிரமிப்பாக இருக்கும். என்றாலும் ஒரு பேரலை லட்சக்கணக்கான நுணுக்கமான அலைகளின் மொத்தமே என்பது நமக்குத் தெரியும். ஒவ்வொரு நுண்ணலையும் ஆரவாரிக்கிறது. என்றாலும் அது நமக்குப் புலப்படுவதில்லை. இவ்வாறுதான் இதயத்தின் ஒவ்வொரு துடிப்பின் பணியும். சிலவிதமான செயல்கள் நமக்குப் புலனாகின்றன. அவற்றை உணர்கிறோம். என்றாலும் அவை சிறு சிறு செயல்கள் பலவற்றின் ஒட்டுமொத்தத் தொகுப்பே ஆகும்.

ஒரு மனிதரின் குணத்தைப் பற்றித் தீர்மானிக்க வேண்டுமானால், அவரது பெரும் சாதனைகளைப் பார்க்காதீர்கள். ஒரு நேரம் இல்லாவிட்டால் ஒரு நேரம், ஒரு முட்டாள் கூட செயற்கரிய சாதனைகளைச் செய்து விடலாம். மிக சாதாரணமான காரியத்தை ஒருவன் எப்படிச் செய்கிறான் என்பதைக் கவனியுங்கள். உயர்ந்த மனிதனின் உண்மையான குணத்தை எடுத்துச் சொல்வன இத்தகைய சாதாரண செயல்களே. அசாதாரணமான சந்தர்ப்பங்கள், ஒரு அற்ப மனிதனைக் கூட மிக உயர்ந்த நிலைக்கு உயர்த்திவிடக்கூடும். ஆனால், எந்த நிலையிலிருந்தாலும் குணம் உயர்ந்தே காணப்படுபவனே உண்மையில் உயர்ந்த மனிதன்.

குணங்களின் மீது கர்மம் என்னும் செயலின் விளைவு மனிதன் எதிர்கொள்ள வேண்டிய பேராற்றல் ஆகும். இதன் தொடர்பான சில செய்திகளை அடுத்த அத்தியாயத்தில் சிந்திப்போம்.”

About The Author

2 Comments

Comments are closed.