புதிய சிறகுகள் – 2

வீடு திரும்பி என்ன ஆக வேண்டும், இப்படியே இந்தச் சந்தடியைப் பார்த்துக் கொண்டு நிற்கலாமே என்று தோன்றுகிறது.

சுஜி… கையில் குழந்தையை இடுக்கிக் கொண்டு, பை நிறைய அதற்கு வேண்டிய துணிமணி, பால் பாட்டில், பொம்மை என்று சுமந்து கொண்டு அலுவலகத்துக்குக் கிளம்பும்போது, இவள் முகத்தில் அடிப்பது போல் இருக்கிறது.

"நீ உன் மகனை வளர்த்து ஆளாக்கியிருக்கும் விதம் போதும். என் குழந்தையை நீ குலவ வேண்டாம்" என்பது போல் இவளை நிராகரித்து விட்டு, எங்கோ இருக்கும் குழந்தைக் காப்பகத்தில் விட்டுவிட்டு அலுவலகம் செல்கிறாள்.

"அபிராமி, உன் பிரார்த்தனை பலிச்சாச்சு. ரிடயராகிப் போனா, வீட்டில பேரனோ பேத்தியோ இருக்கும்… பேச. நீயும்… அந்தக் காலத்தில் சீனியக் கையில புடிச்சிட்டு, சந்து வீட்டில குடித்தனம் பண்ண வந்தது இன்னிக்குப் போல இருக்கு. இருபத்தேழு வருஷம் ஓடிப்போச்சு!" என்று சுந்தரம்மா இவளுக்கு விடைகொடுத்தாள்.

"ஏண்டி! குழந்தைய இடுக்கிட்டு ஆபீசுக்குப் போகணுமா? அந்தக் காப்பகத்தில், கூலி வேலை செய்யும் ஆயாவை விட நான் நம்பிக்கையில்லாதவளா? உனக்கே இது சரியாப்படுதா?" என்று நறுக்கென்று கேட்க, கடுமை பாராட்ட அபிராமிக்கு நா எழுவதில்லை. உள்ளூர வெம்பி நொந்து, கருகுகிறாள். நியாயம் இருக்கிறது…

புருஷன் துணையில்லாமல் ஓர் ஆண் பிள்ளையை ஒழுங்காக வளர்க்க முடியாது என்றல்லவோ முடிந்திருக்கிறது!

உச்சி வேளையின் கடுமையான வெயில். ஆடி மாதப் புழுக்கம். நுங்கு வெட்டிக் கொடுக்கிறான் ஒரு பக்கம். குஞ்சும் குழந்தைகளும் சூழக் கும்பல் விலை பேசி வாங்குகிறது. சீனிக்கு நுங்கென்றால் மிகவும் ஆசை. சந்து மூலை வீட்டில் இருந்த நாட்களில், தளதளவென்று சிவந்த மேனியும், சுருட்டை முடியுமாக, "அம்மா! நுங்கு வாங்கித் தாம்மா!" என்று அவள் பள்ளிவிட்டு வரும்போதே ஓடி வருவானே, அந்தக் காட்சி கண்களை மறைக்கிறது. சீனி… சீனி… நீ எப்படியடா ஆயிட்டே…!

வக்கீல் நோட்டீஸ்… கோர்ட்டு… ஆயிரங்காலத்துப் பயிர் முளைவிட்டதும், வேரோடு பெயர்க்க… இல்லை கூடாது. தேவி! நீ கூட்டி வைத்த குடும்பம்… நீயே துணை!

பஸ்ஸில் பிரசாதப் பையுடன் கூட்டத்தில் நெரிபட ஏறுகிறாள். பழமும் பூவும் கசங்கும்படி நெருங்கி நிற்கிறாள். "முன்ன போ, அம்மா. பெரிம்மா! முன்ன போ!"

அபிராமி திடுக்கிட்டாற் போல் தன்னைத்தான் சொல்கிறான் நடத்துநன் என்று முன்னே இன்னும் நெருங்குகிறாள்.

வியர்வைக் கசகசப்புடன் பட்டப்பகலில் பஸ்ஸில் எவரிடமிருந்தோ சாராய நெடியும் மூக்கைப் பிணிக்கிறது.

கிராமத்துக் கும்பல்…

எல்லாம் மிகவும் சகஜமாகிப் போய்விட்டது. பஸ்ஸில், வழியில், ரயிலில், எங்கும் இந்த வாடை… எந்தப் பக்கம் பார்த்தாலும், சாராயக் கடை, கள்ளுக்கடை… யாரிடமேனும் வாய்விட்டுக் கத்த வேண்டும் போல் இருக்கிறது.

ஓய்வு பெற்றதும், மூவாயிரம் கொடுத்துத் தொலைக்காட்சிப் பெட்டி வாங்கி வைத்திருக்கிறாள். நாடகம், சினிமா, ஒலியும் ஒளியும், எல்லாவற்றிலும் அநாச்சாரச் செயல்கள், பிஞ்சு மனங்களில் கூட வெறியேற்படுத்தும்வண்ணம் விரிக்கப்படுகின்றன…

"முன்ன போம்மா! பெரியம்மா! பாட்டியம்மா! அங்கியே நிக்கறே…"

"எங்கய்யா முன்ன போக? கால் வைக்க இடமில்ல! சாராய நாத்தம் வேற குமட்டுது. கோயிலில்லை, மடமில்லை, பள்ளிக்கூடமில்லைன்னு, எல்லா ரோட்டிலும் திறந்து தொலைச்சிருக்கே?"

பஸ்ஸை விட்டிறங்கிச் சிறிது தொலைவு அவளுடைய புதிய காலனி இல்லத்துக்கு நடக்க வேண்டும். பெரிய சாலையில் சினிமா கொட்டகை, பெட்ரோல் பங்க் கடந்து தெரு திரும்பும் முனையில் ஒரு பெண்கள் பள்ளி புதிதாக முளைத்திருக்கிறது. மதிய உணவு நேரம். ரோஜா வண்ணச் சட்டை சீருடை, பச்சையில் சிறு கட்டம் போட்ட பாவாடை. ரோஜா வண்ணச் சட்டை தொங்கத் தொங்கப் பாவாடை சட்டைகளில், குழந்தை ஒவ்வொருத்தியும் பூச்செண்டாகத் தெரிகிறாள். பள்ளிக்கூடச் சூழலே ரம்மியம். இந்த மணமே தனியான சுகம். வாழ்க்கை ஒன்றுமில்லை என்று ஒடிந்து போன பின், புதுச் சிறகுகளாய் அவளுக்கு ஒரு மேன்மையையும் மதிப்பையும் கவுரவத்தையும் அளித்த சூழல். "அபிராமி டீச்சர்" என்று யாரேனும் குரல் கொடுத்தாலே புல்லரிக்கும் தனிப் பூரிப்பு. இந்த வாழ்க்கைத் தடத்தில், சீனி சின்னஞ்சிறு பாலகனாய் அவள் ஒற்றை விரலைப் பற்றிக் கொண்டு தடம் மாறாமல் நடந்து வந்தான். அவனைத் தன்னுடனேயே தொடக்கப் பள்ளியில் சேர்த்துக் கொண்டாலும், மூன்றாம் வகுப்பிலேயே பையன்களுக்கான தனிப் பள்ளியில் மாற்றி விட்டாள். சிரமமே இல்லாமல் இராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் இடம் கிடைத்தது.

சீரான அவன் வளர்ச்சி… எத்துணை மகிழ்ச்சிகரமான நாட்கள்! தாய் சொல்லை மீறிய பையனாக அவன் ஒருபோதும் இருந்ததில்லை. அவனிடம் கைச் செலவுக்கு பஸ்ஸுக்குக் காசு கொடுத்தால் அவளறியாமல் ஒரு பைசா செலவு பண்ண மாட்டான். "அம்மா, ஐஸ்கிரீம் வாங்கிக்கட்டுமா? இன்னிக்கி?" என்று கேட்காமல் அவன் வாங்கித் தின்றதில்லை.

இந்த அடித்தளம் அவளுள் பையனின் மீது எத்தகைய நம்பிக்கையை வளர்த்து விட்டது!

அவனுடைய மாற்றம் எவ்வாறு நேர்ந்ததென்பதையே அவளால் நிர்ணயிக்க இயலவில்லை. அன்றாடம் முகத்தைக் கண்ணாடியில் பார்க்கிறாள். பன்னிரண்டு வயசுப் பருவத்துக்கும் இப்போதைய தோற்றத்துக்கும் மாறுதலை அன்றாடமா கண்டுகொள்ள முடிகிறது? அப்படித்தான் மைந்தனின் வளர்ச்சியும் அவளுக்கு எந்தப் பிசிறலையும் கற்பிக்கவில்லை.

குளியலறையில் அவன் விசிறிவிட்ட லுங்கி, ஜட்டி, துண்டு, பனியன் மூலைக்கொன்றாகக் கிடக்கும். காலையில் பள்ளிக்குச் செல்லுமுன், வாசலில் சைக்கிள் மணிகள் ஒலிக்கும். "சீனி… சீனி இருக்கிறானா டீச்சர்?" என்று வீச்சும் விறைப்புமாக மீசை அரும்பி வரும் பருவத்து உடையும் கட்டைக் குரல்களின் (ஆண்) மலர்ச்சிகள், தன் இல்லத்துக்கே ஒரு முக்கியத்துவத்தைக் கூட்டி விட்டதாக நெஞ்சின் ஓரங்களில் உவகையை மலர்வித்தன. பந்து மட்டைகள், சளசளவென்று கிரிக்கெட் அளப்பு, கிண்டல், கேலி, எல்லாம் அவளைப் புதிய ராச்சியத்தின் எல்லையில் மகிழ்வித்தன.

அவன் என்ன படிக்கிறான், வகுப்பில் எப்படி நடக்கிறான் என்று கணிக்கவே தேவையில்லை என்ற வகையில், அவனுடைய பேச்சு அரட்டல், நண்பர்கள் சூழ எப்போதும் நாயகனாக விளங்கும் தோற்றப் பொலிவு எல்லாம் அவனை விட உயர்ந்த வகையில் பிள்ளைகள் விளங்க முடியாது என்று நம்பிக்கை கொள்ளச் செய்து விட்டன. சீனி… அவளைப் போல் கறுப்பு அல்ல; குட்டை அல்ல. சிவந்த மேனியும் சுருள்முடியும், வாளிப்பாக வளர்ந்த வளர்ச்சியும், கனவாகி மறந்து போன அவன் தந்தையைத்தான் நினைவூட்டின.

"அம்மா, கிரிக்கெட் மாட்ச் டிக்கெட் வாங்கணும், பணம் வெட்டு" என்பான்.

பொங்கல் நாளாக இருக்கும். அதிகாலையில் எழுந்து இவனுக்கும் இவன் படைக்கும் பொங்கல் புளிச்சோறு வடை என்று கட்டிக் கொடுப்பாள். ஆரவாரமாகக் கலகலத்த பள்ளிப்பருவம், சுமாரான மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற முற்றுப்பெற்றது.

இவள் இடைநிலை ஆசிரியையாகச் சேர்ந்து, பட்டம் பெற்று இறுதிக் காலத்தில்தான் உயர்மட்டத்துக்கு ஊன்ற வந்தாள். இவள் பாடமும் புதிய கணக்கு, விஞ்ஞானம் என்ற பிரிவில் இல்லை. தமிழ், வரலாறு… என்று ஒட்டிக் கொள்ளும் ஆசிரியைதான். எனவே, சீனியாகத் தாயிடம் வந்து, பாடங்களுக்கு உதவி கேட்டதேயில்லை. அவனாக எந்த உதவியும் தள்ளலும் இல்லாமல்தான் தேர்ச்சி பெற்றிருந்தான்.

"எங்க சீனி புத்தகம் எடுத்துப் படிச்சே பார்த்ததில்ல. கொஞ்சம் படிச்சிருந்தான்னா ஸ்டேட் ஃபர்ஸ்ட் வந்திருப்பான். அததுவா மலரணும். சுகுணா, சின்ன வயசிலியே அவனுக்கு ஒரு தரம் கேட்டாப் போதும்; ஒப்பிச்சுடுவான். சீனியப் பத்தி எனக்குக் கவலை இல்லை. எனக்கு எந்த சிபாரிசும் நீ பண்ண வாணாம்மான்னுட்டான்” என்று தன் சக ஆசிரியைகளிடம் பெருமைப்பட்டுக் கொண்டாள்.

அப்படியேதான் அவனாகக் கல்லூரியில் சேர்ந்தான். என்ன பாடம் படிக்கவேண்டும் என்பதற்கும் அவளிடம் யோசனை கேட்கவில்லை. கணக்கு பி.எஸ்.ஸி என்று படித்தான்.

கல்லூரி என்றானதும், அவன் முற்றிலும் அவளால் ஊகிக்க முடியாத எல்லைக்குள் சென்றதை அவள் உணரவே இல்லை.

பள்ளி நாட்கள் வரையிலும் காலையில் அவள் சமைத்துத் தனக்கும் அவனுக்கும் மதிய உண்டியும் கட்டி வைப்பாள். அவன் சாப்பிட்டுப் பள்ளி சென்ற பின் அவள் தன் பள்ளிக்கு நடந்தே செல்வாள்.

கல்லூரி நியமத்தில், இரவு வீடு வரவே நேரமாகிறது. வந்த பின்னரும் வாயிலில் நின்று நண்பர்களுடன் பேச்சு.

பத்து மணியானால் இவளுக்கும் சோர்வாக உறக்கம் வந்து விடும். "மம்மி டியர்! அதுக்குள்ள தூங்கிட்ட?"

விளையாட்டுப் போல் முகத்தில் தண்ணீர் கூட அடிப்பான்.

"சீ, என்னடா சீனி…"

"ஏம்மா? உங்க ஸ்கூல்ல கிளாஸ்லயும் தூங்கற, இங்கயும் வந்து எட்டு மணிக்கே தூங்கற? அப்புறம் நீ இப்பக் கட்டும் வீட்டு நிலை உடைச்சு வைக்க வேண்டியிருக்கும். குள்ளமா, குண்டா, கால் தெரியாம, யார் வரான்னு நானே புரிஞ்சுக்க முடியாது!"

கேலி, கிண்டல்.

காலை எழுந்திருக்க ஏழே கால் – ஏழரை ஆகும்.

அபிராமி ரேடியோவைச் சமையலறையில் வைத்துக் கொண்டு காலைப் பாடல் நிகழ்ச்சி கேட்டுக்கொண்டு சமைப்பாள். சீனி பெரியவனாக வளர்ந்த பிறகு, அவள் ட்யூஷன் பெண்கள் யாரையும் வீட்டுக்கு வரச் சொன்னதில்லை. ஒன்றிரண்டு, பள்ளியிலேயே வகுப்பு முடிந்ததும் சொல்லிக் கொடுத்து விடுவாள்.

"என்னம்மா, ரேடியோ பெரிசா அலற விட்டிருக்கே?"

"மணி ஏழரை சீனி. எழுந்திருக்க வேண்டாமா? காலேஜ் உண்டில்லையா?" கஷ்டப்பட்டு எழுந்திருப்பான். ஒரு காபி. அவசரமாக ஒரு குளியல் இருந்தால் இருக்கும். இல்லையேல் மாலைதான். "என்னம்மா? எட்டு மணிக்கே சாப்பாடா? டிபன் குடும்மா… இனிமே காலம டிபன்தான். மதியம் நான் சாப்பிட்டுக்கறேன். உனக்குச் சிரமம் வேண்டாம்" என்று முதலிலேயே தீர்த்து விட்டான்.

காலையில் தினமும் இட்டிலி செய்வது எளிதாக இல்லை. அதற்கும் சட்டினி, சாம்பார் என்று இல்லையானால், "போம்மா, எனக்குப் பிடிக்கல…" என்று வைத்துவிட்டு வெளியே போய்விடுவான். எனினும் சிரமம் பாராட்டாமல், அவனுக்காக உழக்கரிசி அரைத்து இட்டிலி செய்தாள். நாவுக்குச் சுவையாக அவனை மகிழ்விக்கச் சமையலில் புதிய கவனம் செலுத்தினாள்.

ஆண் என்பவன் இப்படித்தான் இருக்க வேண்டும், அவன் புருஷனாக இருந்தாலும் சரி, மகனாக இருந்தாலும் சரி, அவன் நாச்சுவையறிந்து பெண்ணானவள் பணி செய்யவேண்டும் என்பது, ஒரு பெருமைக்குரிய இயல்பாக அவளுள் படிந்திருக்கிறது. அவனுடைய பகல் சாப்பாட்டைக் காரியரில் போட்டு வேறு குடித்தனக்காரர் வீட்டில் வைத்திருப்பாள். அது ஆள் மூலம் கல்லூரிக்குச் சென்றது.
அவன் கல்லூரியில் சேர்ந்த ஆண்டில் மாசக் கணக்கில் மாணவர் – நிர்வாகம், மாணவர் – பஸ் போக்குவரத்து ஊழியர், மாணவர் – ஆளுங்கட்சி என்று எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்றது. பொதுவாக மாணவர் உலகமே பாதிக்கப்படுகிறது என்று அவள் எல்லோரையும் போல் பேசுவதுடன் விட்டு விட்டாள். ஆனால், இவன் கல்லூரி மூடியிருக்கிறதா, வகுப்புக்கள் நடக்கின்றனவா, இவன் எங்கே போகிறான், எங்கே வருகிறான் என்றெல்லாம் கவலைப்படவில்லை. “அம்மா! நூறு ரூபாய் குடு! ஒரு புத்தகம் வாங்கணும், புதுசா ஷர்ட் பீஸ் ஒண்ணு சிங்கப்பூர் ஃபிரண்ட் கொண்டு வந்தான்.." என்றோ, "அம்மா, என் ஃபிரண்ட், அப்பா ஆஸ்ட்ரேலியாவில் இருக்கார். அவன் சைக்கிள்லேந்து விழுந்து அடிபட்டு, நான்தான் இப்ப ஆஸ்பத்திரிலே சேத்துவிட்டு வரேன். ஒரு டூ ஹன்ரட் தாயேன்!” என்றோ அவன் பணம் கேட்கும்போதெல்லாம் அவள் முகம் வாடியதே இல்லை. பையன் படிக்கிறான்; நான்கு பேரைப் பார்க்கிறான். நன்றாக உண்டு உடுத்து… அவனுக்கென்ன, என் மகன், என் சீனி ராஜகுமாரனைப் போல… என்று கேட்டபொழுதெல்லாம் பணம் கொடுத்தாள்.

வாங்கும் சம்பளத்தில் ஓட்ட முடியாமல் சேமிப்பில் இருந்தும் எடுத்து மகன் படிப்புக்குப் பணம் கொடுத்தாள்…

"அட… அபிராமி டீச்சர்!"

கூடையும் தானுமாக அம்சா எதிர்ப்படுகிறாள். இவளுடைய பழைய மாணவி. தாய் நான்கு வீடு கூட்டி, பத்துப் பாத்திரம் துலக்கி, வயிறு பிழைத்தவள். இந்தப் பெண் நன்றாகப் படிக்கிறாளே என்று, வலியத் தன்னிடம் வைத்துக் கொண்டு படிக்க வைத்தாள். சீனியை விட இரண்டு வயசு பெரியவளாக இருப்பாள். என்ன முயன்றும் ஆறாவதுடன் நின்று போனாள்.

"நீ இங்கயா இருக்கிற?"

"ஆமம்மா, அவுரு கொத்து வேல செய்றாரு. எங்கம்மா கட்டுப்படியாவுது? மூணு புள்ள. காய் வியாபாரம் பண்ற. போட்டுட்டுப் போற. சீனி எப்படீம்மாருக்கு? கண்ணாலமாயிடிச்சா?"

"இருக்கு, ஒரு குழந்தை…"

"தம்மாத்தூண்டு இருக்கும். கை புடிச்சிட்டு ரோடு தாண்டி விடுவ இஸ்கூலுக்கு" என்று பழைய நினைவுகளைச் சொல்லிப் புன்னகைக்கிறாள்.

"இப்பவும் அதே வூட்டலதா இருக்கிறீங்களா டீச்சர்?…"

"இல்லம்மா. கிருஷ்ணன் கோயிலுக்குப் பின்னால காலனில சின்னதா வீடு கட்டிட்ட. வாயேன்!…"

"வாரம்மா. நெதம் உங்களச் சொல்லுவேன். டீச்சரம்மாதா என்னப் படி படின்னு சொல்லி இஸ்கூல்ல போட்டாங்க. நா முட்டாத்தனமா ஆறாவதோட நின்னிட்டேன்னு… வாரம்மா, பஸ் வந்திட்டது."

காலனிப் பக்கமும் ஒரு மெட்ரிகுலேஷன் பள்ளி முளைத்திருக்கிறது. பிங்க்-வெண்மைச் சீருடைக் குழந்தைகள்.

"எங்க, அபிராமி டீச்சர், இந்த நேரத்தில…?"

புவனா புருஷோத்தமன். சௌந்தரிய லஹரி கிளாஸ் நடத்தும் மாதர் சங்கச் சேவகி.

வாயாடி; வம்பு என்றால் உயிர்.

"எங்க போயிட்டு வராப்பல?…"

"ஒண்ணுமில்ல… ஒரு காரியமா போயிட்டு வரேன்."

"மாட்டுப் பெண் பிரசவிச்சு வந்தாச்சில்லையா? பொண்ணுதானே?"

"ஆமாம்."

"குழந்தையை யார் பாத்துக்கறா? ஆபீஸ் போவாளே அவ?"

வெட்கமாக இருக்கிறது, காப்பகம் என்று சொல்ல.

"எனக்கும் வயசாச்சு, இத்தனைக்கு மேல் பழக்கமில்லாமல் சின்னக் குழந்தை பாத்துக்க. அவளுக்கு ஆபீஸ் பக்கத்தில் கிரீச் இருக்கு. நடுவில் வந்து தாய்ப்பால் குடுக்கறா."

"அப்படியா? எந்த கிரீச்… ஐ டபிள்யூ ஏ நடத்தறதா? இவ ஆபீஸ் குறளகத்துக்குப் பக்கத்தில் இல்ல?…"

"இல்ல… அடையாறுக்குப் பக்கம். தனியார் நடத்தும் காப்பகம்தான். தாய்ப்பால் குடுக்கணும்னுதா இப்ப எல்லா டாக்டரும் சொல்றாங்களே? வரேன்!" கத்தரித்துக் கொண்டு வருகிறாள்.

ஏதேனும் செய்தி கொஞ்சம் தெரிந்தால் போதும். அதற்குக் குஞ்சம் கட்டி, மணி கட்டி, எங்கும் தமுக்கடித்து விட்டுத்தான் மறுவேலை பார்ப்பாள்.

இவள்தான் சீனியைப் பற்றிய முதல் பிசிறை மூட்டை கட்டிக் கொண்டு வந்து வீட்டில் சொன்னாள். பழைய வீட்டின் குடித்தனக்காரர்கள் அனைவருக்கும் டாம்டாம் அடித்தாள்.

"அபிராமி டீச்சர், உங்க சீனி சிகரெட் புடிக்கிறான். எங்க டிக்கு வந்து சொன்னா. வாராந்தரி பத்திரிகையில், என் கஸின் ஜம்பு எழுதறான் இல்லியா? அவன் நேத்து வந்தான். ‘புவனி, ஒரு தாய் – முத முதல்ல தம் பிள்ளை சிகரெட் குடிக்கிறான்னு தெரிஞ்சதும் என்ன நினைக்கிறாள்னு ஒரு பேட்டி வாங்கிப் போடணும். யாரானும் உனக்குத் தெரிஞ்சவங்க இருந்தா சொல்லேன்’னா. எனக்கு யாரையும் தோணல. அப்படியே இருந்தாலுந்தா ‘இதெல்லாமா பேட்டி குடுப்பா’ன்னேன். அப்ப டிக்கு சொன்னான், ‘அபிராமி டீச்சர் வீட்டு சீனில்லம்மா, அவன் கல்வர்ட்ல உட்காந்து, நாலஞ்சு பேரோட சிகரெட் புடிக்கிறான், பாத்தேன்’னு. ‘சீச்சி, நீ யாரையானும் பாத்துட்டுச் சொல்லுவே’ன்னேன். ‘இல்லம்மா. நிசமா! அந்த ராம்ஜி, பாலு, அவங்க கூட இவனும் சிகரெட் புடிக்கிறான். புகையை ரிங் ரிங்கா விடறான்’ன்னான். அவ பொய் சொல்லமாட்டா எப்பவும். எங்க மகேஷ்னாலும் பொய் சொல்லுவன். எனக்குக் கேட்டதும் திக்குன்னுது. டீச்சர் எவ்வளவு நல்ல மாதிரி! ஒரு ஆம்பிளைத் துணையில்லாம இந்தப் பிள்ளைய வளர்க்கறா. இது இப்படி சகவாச தோஷம்னு ஆயிடக் கூடாதேன்னு. அந்த ராம்ஜி, பாலு இதுகள்ளாம் மகா மோசம். சீனிய அவங்க கூட ஏன் சேர விடுறீங்க டீச்சர்?" என்று ஒரு மூச்சு பொரிந்தாள்.

உள்ளூரக் குலுங்கினாலும், காட்டிக் கொள்ளவில்லை. "அப்படியா? கண்டிக்கிறேன்" என்றாள்.

அத்துடன் புவனா ஓய்ந்தாளா?

"அத்தோட டீச்சர், ஜம்பு சொன்னான், ‘அந்தக் காலேஜு முழுக்க ரவுடிக் கும்பலாப் போயிட்டுது. எல்லாம் தபதபன்னு ஓட்டல்ல பூந்து தின்னிட்டு, பணங்குடுக்காம ரகள பண்ணும். தெருவில் ஓராள் போக முடியாது, இவங்க அட்டகாசம்’ன்னான். பாவம் நீங்க டீச்சர். பேசாம இங்க ஜெயின் காலேஜியிலோ வைஷ்ணவாவிலோ சேத்திருக்கலாம்" என்றாள்.

அபிராமி அதுவரையிலும் தன் மகனை இவ்வாறு சந்தேகப் பார்வையில் துருவும் சமுதாயத்தைப் பற்றிக் கற்பனை கூடச் செய்ததில்லை. அவள் தன்னுடைய பெயரைக் காப்பாற்றிக் கொள்வதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்திருக்கிறாள்.

புருஷனில்லாமல் இளம் வயசில் வேலை செய்து குழந்தையைக் காப்பாற்றுகிறாள் என்ற நற்பெயரில் எந்தச் சிறு துரும்பும் கீறல் விழ, உராயக் கூடாது என்ற உணர்வு அவளை விட்டு அகன்றதேயில்லை.

பள்ளிக்குச் சிறுமிகளைச் சேர்க்க வரும் தந்தைமார் எத்தனை பேர்! எவரையும் நிமிர்ந்து பார்த்தறியாள். ஒண்டுக் குடித்தனத்தில் இருந்தாளே? விகற்பமாக எவருக்கும் இவள் காட்சியளித்ததில்லை; இவளுக்கும் எந்த ஆடவரும் தோன்றியதில்லை.

"அபிராமி டீச்சரா? ஒரு மாசு மறு ஒட்டாத டீச்சர். குனிந்த தலை நிமிர்ந்ததில்லை. எந்த வண்ண ரவிக்கை என்பது கவனித்தால்தான் தெரியும். குழந்தைகளை அவளைப் போல் பார்ப்பவர், சொல்லிக் கொடுப்பவர், யாருமே இருக்கமாட்டார்கள்…"

"எங்க உமாவுக்கு டீச்சரை நாலு நாள் பார்க்கலேன்னா சரிப்படாது. தலைக்குத் தண்ணி விட்டப்புறம் ஸ்கூலுக்குப் போகலாண்டின்னா கேக்கல…"

"டீச்சர், எங்க கல்யாணத்துக்கு நீங்க காலமேயே கண்டிப்பா வந்துடணும்… ஸ்கூல் லீவு போட்டுடுங்க!"

இத்தகு சான்றுரைகள் ஒன்றா இரண்டா?

ஆனால்… சீனி… அவனுடைய தாய்க்கு எந்த நற்சான்றையும் தேடித் தரவில்லை.

மதிய உணவு நேரம் இன்னும் முடியவில்லை. சீருடைக் குழந்தைகள் பள்ளியில் நிற்கும் ஐஸ்கிரீம் வண்டிக்காரன், கடலைக் கிழவி ஆகியோரைச் சுற்றிக் கொண்டிருக்கின்றனர். ஓரமாகப் பள்ளிச் சுவரை ஒட்டி உள்ளே வளர்ந்திருக்கும் வேப்ப மரத்து நிழலில், ஒருவன் அலையக் குலையப் படுத்திருக்கிறான். வாரிய தலையும், சட்டை டிரௌசரும் அவனை கௌரவப்பட்ட வர்க்கத்தினனாகக் காட்டுகின்றன. இளைஞன், நடுத்தர வயசில் கூடப் புகவில்லை. தன் நினைவில்லாமல் மண்ணில் விழுந்து கிடக்கிறான். சராயோடு, சிறுநீர் வழிந்து… ஓடி…

அடி வயிற்றைக் குபீர் என்று சங்கடம் கிளர்த்துகிறது.

இவள் மகனை ஒத்த வயசுடைய பிள்ளை ஏனிப்படிக் கிடக்கிறான்?

ஒருகால் வலிப்பு – ஃபிட்ஸ் வந்து விழுந்திருக்கிறானோ?

வியாபாரக்காரர் கவனிக்கவில்லை. ஃப்ராக் அணிந்தும், அரைக்கால் சட்டை அணிந்தும் அங்கே குழுமியிருக்கும் மாணவ மாணவியரும் கவனிக்கவில்லையே!

ஓ… இந்தப் பெரிய பெண்களுக்குக் கூட ஈரம், அபிமானம் தோன்றவில்லையா? என்ன கல்வி பெறுகிறார்கள் இவர்கள்!

அபிராமி அவனையே பார்த்துக் கொண்டு நிற்பவள், சற்றே பெரியவளாக ஐஸ்கிரீம் சப்பிக் கொண்டு தென்படும் ஸல்வார் கமீஸ் பெண்ணின் முதுகைத் தட்டுகிறாள், “ஏம்மா, இப்படிப் பரிதாபமாக ஓராள் கிடக்கிறானே? எத்தனை நேரமாகக் கிடக்கிறானோ? வலிப்பா? யாரையேனும் கூப்பிட்டு வண்டியிலேற்றி ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்லலாமில்லையா?”

இளமை வீச்சாய்ப் பூரிக்கும் முகத்துக்குரிய அந்தப் பெண், இந்தத் தலைநரைத்த மௌட்டீகத்தை ஏளனமாகப் பார்ப்பது போல் உதடுகளில் ஓர் இகழ்ச்சியை நெளிய விடுகிறாள்.

"தட் ஃபெலோ இஸ் ட்ரங்க். நத்திங் எல்ஸ்!" என்று சொல்லிவிட்டு ஐஸ்கிரீமை ருசித்துக் கொண்டு போகிறாள்.

அபிராமிக்குத் தலையில் யாரோ பட்டென்று அடித்தாற்போல் இருக்கிறது.

விருவிரென்று வீட்டுக்கு நடக்கிறாள். சே…! என்ன புத்திக் குறைவு!

கதவைத் திறந்து பிரசாதப் பையை மேசையில் போடுகிறாள்.

குங்குமம், பூ, நசுங்கிய பழம், தேங்காய்… எலுமிச்சம் பழம்!… ஓ! இவள் எலுமிச்சம்பழம் கொண்டு போகவில்லையே? குருக்கள்… ஆபரணங்களைச் சேவர்த்திகள் முன் அலட்சியமாகக் கழற்றிப் போட்டு, எண்ணிக்கை சொல்லும் மனசில், கை எலுமிச்சம்பழத்தை இவள் தட்டில் வைத்ததா?

ஏதோ புதிய வேண்டாத கனம் வந்து உட்கார்ந்தாற்போல் ஓர் அச்சம் படிகிறது. என்ன அறிவீனம்? அந்தப் பதினைந்து வயசுப் பெண்ணுக்கு இருக்கும் உலகியல் அறிவு இவளுக்கு இல்லையே?

‘தட் ஃபெலோ இஸ் ட்ரங்க்!’ அவன் குடித்து விட்டு விழுந்திருக்கிறான். இதற்கு என்ன அபிமானம், கசிவு எல்லாம்? கொழுப்பெடுத்துப் போன உழைக்காதவருக்கத்தான் கண்களைத் திறந்து கொண்டு குழியில் விழுந்தால் அதற்கு மற்றவர் பரிவு காட்டுவது இன்னும் தவறு!

சீனி… சீனி… அவனும் கூட இப்படி விழலாம், விழுந்திருக்கலாம். அவன் சம்பாதிப்பதில் ஒரு காசு குடும்பத்துக்கு வருவதில்லை. இரவு பன்னிரண்டு மணிக்கும், ஒரு மணிக்கும் தட்டுத் தடுமாறி வீடு வருகிறான்…

தலையைப் பிடித்துக் கொண்டு பசி தெரியாமல் உட்கார்ந்திருக்கிறாள்.

–முளைக்கும் மீண்டும்…

About The Author