கோர்ட்டில் பரபரப்பு நிலவியது. தொழில் பங்குதாரர் கோவிந்தனை பிரபல மில் அதிபர் ரங்கசாமி தனது மில் தொழிலாளர்கள் முன்னாலேயே துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற வழக்கு. அன்றுதான் தீர்ப்பு வழங்கப்படும் நாள். பலநாட்கள் ‘வாய்தா வாய்தா’ என்று இழுத்தடித்து இன்று முடிவுக்கு வருகிறது.
ரங்கசாமிக்காக வாதாடியவர் பிரபல கிரிமினல் வக்கீல் கில்லாடி கிருஷ்ணசாமி. மணலைக் கயிறாகத் திரிப்பவர். சட்டத்தின் இண்டு இடுக்கெல்லாம் புகுந்து சாட்சிகளைத் தடம் மாறச் செய்து குற்றவாளிகளைச் சிறிதும் சிராய்ப்பில்லாமல் வெளியே கொண்டு வருபவர்.
இந்த வழக்கிலும் நேரில் பார்த்த சாட்சிகளைத் தன் வலையில் போட்டுக்கொண்டு முன்னுக்குப் பின் முரணாக சாட்சியளிக்க வைத்து வழக்கையே திசை திருப்பியிருந்தார்.
இறந்த கோவிந்தனின் மனைவியோ கண்களில் கண்ணீர் மல்க தன் கணவனுக்கு நியாயம் கிடைக்கவேண்டுமே என்று ஆதங்கத்தில் காத்திருந்தாள்.
நீதிபதி தன் இருக்கையில் அமர்ந்து தீர்ப்பைப் படிக்கத் துவங்கினார்.
”திரு.ரங்கசாமிக்கு எதிரான வழக்கில் சரியான ஆதாரங்களுடன் குற்றங்களை நிரூபிக்கத் தவறியதால் சந்தேகத்தின் பலனை குற்றம் சாட்டப்பட்டவருக்குத் தந்து அவரை விடுவிக்கிறேன்"
ரங்கசாமி முகத்தில் வெற்றிப் புன்னகை. தன்னை யாரும் எதுவும் செய்துவிட முடியாது என்ற அகம்பாவம் முகத்தில் தெரிந்தது. கோவிந்தனின் மனைவியைப் பார்த்துக் கேலியாக சிரித்தவாறே நீதிமன்ற வளாகத்தை விட்டு வெளியேறினார் வக்கீல் சகிதமாக.
”அடப்பாவி! பல பேர் முன்னிலையில கொலை செஞ்சுட்டு ஒண்ணுமே நடக்காதது போல் தண்டனையிலிருந்து தப்பிச்சுட்டானே! கொறஞ்சபட்சம் ஆயுள் தண்டனையாவது கிடச்சிருக்கணுமே இந்தக் கொலைகாரனுக்கு” அங்கலாய்த்துக் கொண்டனர் பார்வையாளர்கள்.
வெற்றிக் களிப்பில் காரில் கிருஷ்ண மற்றும் ரங்க சாமிகள் ஏறி கிளம்பினர்.
சிறிது தூரத்தைக் கடந்த கார், எதிரே லாரி ஒன்று திருப்பத்தில் எக்குத் தப்பாக திரும்ப, லாரியை மோதாமல் தடுக்க கார் டிரைவர் இடது பக்கம் வண்டியை ஒடிக்க, அங்கே ‘தேமே’ என்று நின்று கொண்டிருந்த மரத்தில் போய் கார் மோதியது பலமாக.
கண் விழித்துப் பார்த்தபோது ரங்கசாமியின் எதிரில் அவரது மனைவி.
என்ன இது? தலையெல்லாம் நரைத்துக் கண்கள் இடுங்கி வெளிறிய பார்வையோடு மனைவியைச் சட்டென்று அடையாளமே தெரியவில்லை! என்ன ஆயிற்று?
கொஞ்சம் கொஞ்சமாக கொலை வழக்கு, தான் காரில் திரும்பியது, கார் மரத்தில் மோதியது என்று ஒவ்வொன்றாக நினைவுக்கு வந்தன.
‘டாக்டர், டாக்டர் !’ என்று அலறத் தொடங்கினார் ரங்கசாமி.
"கவலைப்படாதீர்கள்! உங்களுக்கு இப்போது ஒன்றுமில்லை. பூரணமாகக் குணமாகி விட்டீர்கள். அன்று நடந்த விபத்தில் நீங்கள் கொஞ்ச நாள் கோமாவில் இருந்தீர்கள். இனிமேல் கவலையில்லை” என்றார் டாக்டர் ஆறுதலாக.
முகத்தில் தாடியுடன் கிழடு தட்டிய தன் முகத்தைக் கண்ணாடியில் பார்த்த ரங்கசாமி, "கொஞ்ச நாள் என்றால்?" என்று கேட்டார் பதட்டத்துடன்.
"பதினைந்து வருஷங்கள்" என்றார் டாக்டர் அமைதியாக.