கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது

எது உண்மையான தேர்தல் வெற்றி?

மக்களாட்சியில் எவ்வாறு வெற்றி பெற வேண்டும் என்றும், அதே போல் எவ்வாறு தோல்வியை கண்ணியத்துடன் எதிர்கொள்ள வேண்டும் என்றும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். வெற்றி பெறுபவர்கள் வெற்றியினால் மமதை அடையக் கூடாது. அதேபோல் தோற்பவர்கள் மனம் தளரக்கூடாது. வெற்றியோ தோல்வியோ, அதை எவ்வாறு அடைந்தோம் என்பது தேர்தல் முடிவை விட முக்கியமானது. நேர்வழியைக் கையாண்டு தோல்வி அடைவது நேர்மையற்ற வழியைக் கையாண்டு வெற்றி அடைவதைவிட மேலானது. நேர்மையற்ற வழிகளினாலோ அல்லாது தவறான முயற்சிகளாலோ வெற்றி வருமானால் அந்த வெற்றி அதன் மதிப்பை இழந்துவிட்டது என்பதுதான் பொருள்.

("முதல் தேர்தலுக்கு முன் 22.11.1951 அன்று வானொலியில் பிரதமர் நேரு ஆற்றிய உரையிலிருந்து" – நன்றி : குடிமக்கள் முரசு)

நன்றாகச் சொன்னார் நாராயணமூர்த்தி!

இந்திய இளைஞர்களுக்கு ஒரு ஆதரிசமாகவும், வழிகாட்டியாகவும் இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி பல பொது விஷயங்களைப் பற்றி சொன்னவை:

உலகம் வெகு வேகமாய் முன்னேறிக் கொண்டிருக்கிறது. நீங்கள் ஒரு விஷயத்தை முடியவே முடியாது என்று சொல்லி முடிப்பதற்குள், வேறொருவன் அதைச் செய்து முடித்து உங்கள் வாக்கைப் பொய்யாக்கி விடுகிறான்.

மக்களின் யதார்த்த நிலையை உணர்ந்து அதற்கேற்பச் செயல்படுகிறவர்கள்தான் நல்ல தலைவர்கள்; எங்கோ ஒரு உயர கோபுரத்தில் அமர்ந்து கொண்டிருப்பவர்கள் அல்ல.
ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் நிறைய சம்பாதிப்பது என்பதை சமூகத்தில் ஒரு நல்ல மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்பாகவே நினைக்க வேண்டும்.

உயர் பதவி என்பது சிம்மாசனமல்ல. அது நமக்குச் சரிப்படாவிட்டால், மற்றவர்களுக்கு இடம் தந்து விலகிவிட வேண்டும்.

எந்தச் சூழ்நிலையிலும், யாருக்காகவும், எதற்காகவும் நாம் கொண்டிருக்கும் மதிப்பீடுகளை (values) விட்டுத் தரக் கூடாது.

(என். சொக்கன் எழுதிய ‘Infosys நாராயணமூர்த்தி’ நூலிலிருந்து)

ஆட்சியாளர்கள் கவனிக்க!

"யதார்த்த அரசியல் களத்தில் ஜனரஞ்சகமான, ஆழமற்ற, தற்காலிக கரவொலிகளை ஈர்க்கும் சில பகட்டுச் செயல்பாடுகள் தேவையாக இருக்கலாம். ஆனால் இவற்றின் சாயம் விரைவில் வெளுத்துவிடும் என்பதை மனதிலிறுத்திக் கொண்டு இவற்றைச் சோற்றுக்கு ஊறுகாய் போல் மட்டும் பயன்படுத்தும் விவேகம் வேண்டும்"

("சிந்தனை அலைகள்" டாக்டர். கே.எஸ்.சுப்பிரமணியன்)

செலவு இத்தனை! வரவு எத்தனை?

2009 பொதுத் தேர்தலுக்கான மொத்தச் செலவு 1200 கோடி ரூபாய். ஒவ்வொரு வாக்காளருக்கும் தலைக்கு 16 ரூபாய் 80 பைசா வருகிறதென தேர்தல் கமிஷனின் கணக்கு!

ரசித்த கதை – இரண்டும் ஒரே நாள்

ரே-ப்ராட்ரி என்பவரின் சிறுகதை ஒன்று.

ஒரு மாணவன் தன்னை விட வயதில் மூத்த ஆசிரியையைக் காதலித்து, அவளை மணம் செய்து கொள்ள ஆசைப்பட்டு அதை அவளிடம் சொன்னான். ஆசிரியை, அதை சமூகம் ஏற்றுக் கொள்ளாதென்பதை விளக்கி சமாதானம் செய்கிறாள். அவர்கள் பிரிந்து விடுகிறார்கள்.

அந்த மாணவன் சில ஆண்டுகளுக்குப் பின்பு வேறு ஒரு பெண்ணைக் காதலித்து மணம் செய்து கொள்கிறான். மனைவியிடம் தன் சிறு வயது காதலைப் பற்றி சொல்ல, இருவரும் சிரிக்கிறார்கள். அவன் தான் படித்த பள்ளிக்குச் சென்று அந்த ஆசிரியை
மணம் செய்து கொள்ளாமலேயே இறந்து விட்டதைத் தெரிந்து கொள்கிறான்.

அவன் தன் மனைவியுடன் அந்த ஆசிரியையின் கல்லறைக்குச் செல்கிறான். கல்லறையில் ஆசிரியையின் பிறந்த தினமும், இறந்த தினமும் பொறிக்கப்பட்டிருக்கிறது. கூட இருந்த மனைவி ஆச்சரியத்துடன் சொன்னாள்.

"இவள் இறந்த தேதியில்தான் நான் பிறந்திருக்கிறேன்!"

(சுஜாதா, "கடவுள் இருக்கிறாரா?" என்ற தன் புத்தகத்தில் குறிப்பிட்ட கதையின் சுருக்கம்)

குழப்பாத குதம்பாய்

தங்கப்பதுமை என்ற படத்தில் நடிகர் திலகம், "சிங்காரம் கெட்டு சிறைபட்ட பாவிக்கு சம்சாரம் ஏதுக்கடி குதம்பாய், சமாச்சாரம் ஏதுக்கடி!" எனப் பாடும் ஒரு பாடல் வரும்.

அதென்ன குதம்பாய்?

கம்மல் என்ற பெயர் பலருக்கு தெரியும். சுருள் ஓலையால் செய்யப்பட்ட கம்மலுக்கு ‘குதம்பம்’ என்று பெயர். அதை அணிந்த பெண்களை குதம்பாய் என இலக்கியம் சொல்கிறது.

About The Author

1 Comment

  1. panneerSelvam

    மிகவும் அருமையாக இருக்கிறது

Comments are closed.