நீ திட்டம் போடுவதையெல்லாம் விட்டுவிட்டு சாமியை மாத்திரம் பிடித்துக் கொள். உனக்கு என்ன வரவேண்டுமோ அது கட்டாயம் வந்துதான் தீரும். உனக்கு எது தகுதியோ, அதைக் கட்டாயம் அவன் கொடுப்பான். தகுதியுடையவன் எவனோ அவனுக்கு எல்லாம் கொடுக்கப்படும். தகுதியற்றவனிடத்தில் உள்ளதும் பறிக்கப்படும். அதனால் உனக்குக் கடவுளிடத்தில் உண்மையான அன்பு இருந்தால், தானாக உனக்கு எல்லாம் நடந்துவிடும். உன்னை யார் நேசிக்கிறானோ அவனால் உன்னை எப்படி வெறுக்க முடியும்? அந்தமாதிரி சிவசங்கர் பாபாகூட தன்னை யார் ஏற்றுக் கொண்டாலும், ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், இன்னும் ஆன்மீகத்தில் தொடர்ந்து எல்லாருக்கும் நல்லது செய்து கொண்டிருப்பதன் காரணம் என்னிடம் அன்பு மட்டும்தான் இருக்கிறது. யாரிடமும் வெறுப்பு என்பதே இல்லை. இதுதான் என்னுடைய குணம்.
கிராமத்தில் நெல்லை அறுவடை செய்து கொண்டிருப்பார்கள். அப்போது முதலில் நெல் எல்லாவற்றையும் குவித்து வைத்து அதன் மீது திமிசு போடுவார்கள். பிறகு அவற்றை முறத்தில் வைத்து, காற்றில் உயர வைத்துக் கொண்டு ஆட்டுவார்கள். அதற்கு கிராமத்து பாஷையில் தூற்றுதல் என்று பெயர். உமி எல்லாம் போய் வெறும் அரிசி மாத்திரம் நிற்கும். அப்போது உமியை துடைப்பத்தினால் தள்ளிவிட்டு அரிசியை மட்டும் ஒரு இடத்தில் குவித்து வைப்பார்கள்.
அந்த மாதிரி சிவசங்கர் பாபா போன்ற ஒரு உண்மையான மகானை இந்த உலகம் எவ்வளவு தூற்றுகிறதோ அவ்வளவு நல்லது, ஏனெனில் என்னிடம் வருகின்ற பதர்கள் எல்லாம் போய்விடும். அரிசி மட்டும் ஜோராக மணி மணியாக நிற்கும். அதனால் தூற்றுவதில் நான் தோற்பது கிடையாது. நான் பாராட்டுகளுக்காகப் பரிதவிக்கிற ஆளும் கிடையாது. ஏனெனில் எல்லாவற்றையும் அறிந்து எல்லா மாயைகளையும் கடந்த நிலையில் மகமாயை களைந்திட வல்ல பிரானையே நாம் பெற்றிருக்கும் போது நமக்கு ஏது மகமாயை எல்லாம்? நாம் தூற்றுதலையெல்லாம் லட்சியப்படுத்துவதே இல்லை. போற்றுதலைப் பற்றியும் கவலையில்லை………, I have only love and I do not hate.”