கணக்குப் போடாமல் கவி பாடியவர்!
சரோஜினி தேவி உப்புச் சத்தியாக்கிரகத்திலும், சட்ட மறுப்பு இயக்கத்திலும் ஈடுபட்டுச் சிறை சென்றிருக்கிறார்.
அப்போது அவர் எரவாடா சிறையில் இருந்தார். சிறையில் இருக்கும்போதே பல மலர்ச் செடிகளை அவர் பயிரிட்டு வளர்த்து வந்தார்.
செடிகள் வளர வளர சரோஜினியின் ஆனந்தமும் வளர்ந்து கொண்டே வந்தது. அவர் தினமும் அதிகாலையில் எழுந்ததும், தாம் வளர்த்த செடிகளைப் போய்ப் பார்த்து மகிழ்ச்சி அடைவார்.
ஒருநாள் சரோஜினி வழக்கம் போல் எழுந்து அந்தச் செடிகளைக் காணச் சென்றார். சில செடிகளில் மொக்குகள் அரும்பியிருந்தன. அவற்றைப் பார்த்ததும், சரோஜினிக்குச் சொல்ல முடியாத ஆனந்தம்.
‘நான் வைத்த செடிகளில் மலர்களைக் காணப் போகின்றேன். இனி நாள்தோறும் மலர்களைக் கண்டு மகிழலாம்; அவற்றின் மணத்தை நுகர்ந்து இன்பம் பெறலாம்’ என்று பெருமைப்பட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கே வந்தார் சிறை அதிகாரி. “அம்மா உங்களுக்கு இன்று விடுதலை. வெளியேறலாம்” என்றார்.
இதைக் கேட்டதும் சரோஜினி திடுக்கிட்டார். "என்ன! எனக்கு விடுதலையா? இப்போது அது வேண்டாம். இன்னும் ஒரு வாரம் இங்கேயே நான் தங்கிவிட்டுப் போகிறேன். என் அருமைச் செடிகளில் பூக்கும் மலர்களைக் கண்டு இன்பம் பெற ஒரு வாரமாவது வேண்டும்" என்று கெஞ்சிக் கேட்டார். ஆனால், பயனில்லை. விடுதலையானவரை எப்படி அங்கேயே வைத்திருப்பது?
கன்றைப் பிரியும் பசுவைப் போல் கலக்கத்துடன் வெளியேறினார் சரோஜினி தேவி.
* * *
அது ஒரு பெரிய மண்டபம். அங்கே கவியரசி மாலை 6 மணிக்குப் பேசப் போகிறார் என்பதை அறிந்து பெரிய கூட்டம் கூடிவிட்டது. எள் விழக்கூட இடமில்லை!
அச்சமயத்தில், மின்சாரத்தில் ஏதோ கோளாறு ஏற்பட்டு விட்டது. விளக்குகள் எரியவில்லை; மக்கள் முகத்தில் ஏமாற்றக் குறி படர்ந்தது.
அப்போது சரோஜினி தேவியும் வந்து விட்டார். இருட்டாக இருப்பதைப் பற்றி அவர் கவலைப்படவில்லை. நேராகச் சென்று மேடைமீது ஏறினார்; பேச ஆரம்பித்தார். ஆரம்பித்ததும், இருள் விலகிவிட்டது.
உடனே, சரோஜினி தேவி ‘லைட், லைட்’ என்ற ஓர் ஆங்கிலப் பாடலை அபிநயத்துடன் பாட ஆரம்பித்தார். சமயத்திற்குப் பொருத்தமாயிருந்த அந்தப் பாடலைக் கேட்டு மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
* * *
சரோஜினி தேவி ஒரு முறை சிறையிலிருந்து விடுதலை பெற்று அலகாபாத்துக்குச் சென்றார். அவர் போய்ச் சேருவதற்கு முன்பே, அவருடைய பெட்டிகளும் பிற பொருட்களும் அங்கு வந்து தயாராகக் காத்திருந்தன.
சரோஜினி எல்லாப் பெட்டிகளையும் பார்த்தார். "இவ்வளவு பெட்டிகள் எதற்கு? இந்தப் பெட்டி ஒன்று மட்டும் இருந்தாலே போதும். மற்றவற்றை ஊருக்கே திருப்பி அனுப்பிவிடுங்கள்" என்று அங்கிருந்தவர்களிடம் கூறினார்.
உத்தரவுப்படியே பிற பெட்டிகள் திருப்பி அனுப்பப்பட்டன. நிறுத்தி வைக்கப்பட்ட பெட்டியில்தான் தம்முடைய உடைகள் இருக்கின்றன என்று சரோஜினி நினைத்திருந்தார். ஆனால் பெட்டியைத் திறந்ததும் அவர் ஏமாந்து போய்விட்டார்! அதில் சரோஜினி தேவியின் சேலையோ, ரவிக்கையோ இல்லை; சில பாத்திரங்களே இருந்தன.
அதுகண்டு சரோஜினி வருந்தவில்லை. பெட்டியிலிருந்த ‘டீ செட்’டைக் கையிலே எடுத்தார். அதை உற்றுப் பார்த்துக்கொண்டே, "ஐயோ, என் ‘டீ செட்’டே! உன்னை நான் எப்படி உடுத்துவேன்!" என்று சிறுபிள்ளைபோல் குதித்துக் கொண்டே கூறினார்!
படம்: நன்றி விக்கிப்பீடியா
–நிகழ்ச்சிகள் தொடரும்…
“