எங்கள் பயணம் அந்தப் படகில் தொடர்ந்தது. நதியின் தெற்குக் கரையை அடைந்தோம்- பின்னர் கிட்டத்தட்ட ஐந்து மைல்கள் கடந்த பிறகு இரவில் படு மோசமான அந்த விடுதியில் தங்கினோம் . எங்களது எஜமானர் எங்களுக்கு காளான் சூப் வாங்கிக் கொடுத்தார். பிறகு நாங்கள் அனைவரும் பிணைக்கப்பட்ட சங்கிலியுடன் வெறும் கட்டாந்தரையில் படுத்தோம். எங்களுடன் இருந்த பெண் அடிமைகள் அறையின் ஒரு பக்கத்தில் படுத்திருந்தார்கள். நாங்கள் இன்னொரு பக்கம். என் மனைவி குழந்தைகளைப் பற்றிய நினைவுகளால் நான் இரவு முழுவதும் தூங்கவேயில்லை- இனி வாழ்நாளில் அவர்களைக் காணவே முடியாதோ என்ற கவலை. என்னுடையா தாத்தா ஆப்பிரிக்காவில் அவர் பட்ட துன்பங்களைப் பற்றி என்னிடம் சொன்னது நினைவுக்கு வந்தது. கடைசியாகத் தூங்கியபோது என்னென்னவோ கனவுகள், மோசமான சொப்பனங்கள்! என்னுடைய மனைவியும், குழந்தைகளும் எனக்கு ஏற்பட்ட இந்த நிலையைக் கண்டு அழுது அரற்றுவது போலக் கனவு- அவர்கள் என் எஜமானர் முன்னால் மண்டியிட்டு நின்று என்னை விட்டுவிடும்படிக் கதறுகிறார்கள். என்னுடைய மகன் என் கைகளைப் பிடித்துக் கொண்டு தன்னை விட்டுப் போகவேண்டாமென்று கெஞ்சுகிறான். அவனது பிஞ்சுக் கைகளால் என்னைக் கட்டியிருக்கும் விலங்குகளை அவிழ்க்க முயற்சி செய்கிறான். நான் தூக்கத்திலிருந்து ஒரு வலியோடு விழித்துக் கொண்டேன். ஏன் பிறந்தோம் என்ற கழிவிரக்கம் தோன்றியது- கடவுளைக் கும்பிடக் கூட மனசில்லை. கடவுள்கூட எனக்குக் கருணை காட்டவில்லை- இந்த உலகத்தில் என்னைக் கண்டு பரிதாபப் படுவோர் யாரும் கிடையாது – வாழ்க்கை முழுவதுமே துன்பம், துன்பம், துன்பம்தான்! ஒரு அடிமையாகப் பிறந்தவனுக்கு விமோசனமே கிடையாது.
ஒருவழியாகப் பொழுது விடிந்தது. நாங்கள் எங்கள் பயணத்தைத் தொடர்ந்தோம். நாங்கள் செல்லும்போது வழியில் பல அடிமைகள் சோளக்காட்டிலும் புகையிலைத் தோட்டங்களிலும் வேலை செய்வதைப் பார்த்தோம். அவர்களும் நாள் முழுவதும் கஷ்டப்பட்டுத்தான் வேலை செய்கிறார்கள்- அவர்களுக்கும் தேவையான உணவு கிடைப்பதில்லை- இதெல்லாம் எனக்குத் தெரியும்- ஆனாலும் அவர்கள் என்னைப் போல சங்கிலிகளால் கட்டப் பட்டு, மனைவி மக்களைப் பிரியவில்லை. என்னைவிட அவர்கள் நல்ல நிலையில்தான் இருக்கிறார்கள். இரவு நேரத்திற்கு முன்னால் நாங்கள் ‘பொடமாக்’கைக் கடந்துவிட்டோம். அன்று இரவு ஒரு வீட்டில் தங்கினோம். அந்த வீட்டிலிருந்தவர் மிகவும் ஏழ்மையானவர். அவர் சாலைக்கு அருகாமையில் வீடு என்று சொல்லப்பட்ட, சுண்ணாம்பையே பார்க்காத சிதிலமடைந்த கட்டிடத்தில் இருந்தார். அவருடைய தோட்டம் முழுவதும் புதர் மண்டியிருந்தது. கொஞ்சம் நஞ்சமிருந்த நிலமும் வறண்டிருந்தது. இவ்வளவு வறுமையிருந்தாலும் அவர்கள் வீட்டிலும் இரண்டு அடிமைகள் இருந்தார்கள்-அரை வயிற்றுடன், அரை நிர்வாணமாக. ஆனாலும் அவர்கள் அதிர்ஷ்டம் அவர்கள் எங்களைப்போல சங்கிலியால் பிணைக்கப்படவில்லை. எங்களுக்கு ஒரு கவளம் சோளம் கொடுக்கப்பட்டது- அதைச் சுட்டு சாப்பிட்டு எங்கள் வயிற்றை நிரப்பிக் கொண்டோம்.
அடுத்தநாள் காலை அங்கிருந்து புறப்பட்டுத் தென்மேற்காகச் சென்றோம். எங்கள் எஜமானர் எங்களை விரட்டிக் கொண்டே வருவார். பெண்கள் பின்வரிசையில் இருந்தார்கள். ஒன்பது மணிக்கு சோளரொட்டி காலை உணவாகக் கொடுக்கப்பட்டது-அதோடு பன்றி இறைச்சியும் கொடுத்தார்கள். அங்கிருந்து கிளம்பும்போது சங்கிலிப் பிணைப்பில் நடுவில் இருந்த என்னை முதலாக இடம் மாற்றினார்கள்- நான் மற்ற அடிமைகளுக்குத் தலைவனாக இருந்தேன். இந்தப் பெருமை எனக்குத் தெற்குக் கரோலினாவிலுள்ள கொலம்பியா நகருக்குச் செல்லும் வரை கிடைத்தது- அங்கேதான் எங்களைச் சங்கிலியிருந்து விடுவித்தார்கள். நாங்கள் பயணம் செய்தகாலம் மே மாதம்- அதனால் வானிலை வர்ஜீனியாவில் மிகவும் இதமாக இருந்தது-எனவே எங்கள் எஜமானர் இரவு வேளையில் எங்களுக்குப் போர்வை கொடுக்கவில்லை. எந்த இடங்களில் இரவில் தங்குகிறோமோ அங்கு வெறும் தரையில்தான் படுப்போம். எங்களிடம் நாங்கள் அணிந்திருந்ததைத் தவிர வேறு உடையில்லை- பொடமாக் நதியைக் கடந்து செல்லும் நேரத்தில் எங்களில் பலர் உடைகள் வெறும் கந்தலாகத்தான் இருந்தன.
பெண்களில் இருவர் கர்ப்பமாக இருந்தார்கள்- ஒருவருக்குப் பிரசவ நேரம். அவரால் மற்றவர்களைப்போல வேகமாக நடக்கமுடியவில்லை. ஆனால் அவர் கஷ்டத்தை யாரும் காதில் போட்டுக் கொள்ளவில்லை. போர்ட் ராயலில் ராபமாக் நதியைக் கடந்து பவுலிங் கிரீன் என்ற கிராமம் வழியாகச் சென்றோம். அப்போது இந்தக் கிராமத்தைப்பற்றி ஏதும் நினைக்காவிட்டாலும் பிற்காலத்தில் அது என் வாழ்க்கையில் ஒரு இடத்தைப் பிடித்தது. நாட்கள் செல்லச் செல்ல சங்கிலியால் பிணைத்திருந்தது எனக்குப் பிடிக்காததாக இருந்தாலும் பழக்கமானதாகிவிட்டது. மனைவி குழந்தைகளிடமிருந்து பிரிந்த அந்தக் கொடுமைகூடப் பழகிவிட்டது. இப்போது இந்த ஒன்றுமே செய்ய இயலாத சூழ்நிலையில் மனதை அமைதிப்படுத்திக் கொண்டு யோசிக்க ஆரம்பித்தேன். என்னுடைய எஜமானரிடமிருந்து எப்படியாவது தப்பிக்க முடியுமா என்று எண்ண ஆரம்பித்தேன். ஆனால் சங்கிலி மிகவும் பலமாக இருந்தது- என்னால் அதனின்று நிச்சயம் வெளிவரமுடியாது- இது தெரிந்தவுடன் என்னை நானே சமாதானப் படுத்திக் கொண்டேன். என் எஜமானர், ஒரு இரவில் விடுதியில் தங்கியபோது அந்த விடுதிக்காரரிடம் என்னை ஜார்ஜியாவில் ஐநூறு டாலருக்கு விற்க முடியும் என்று சொன்னதைக் கேட்க முடிந்தது- அப்போது எனக்கு ஒரு விலை மதிப்பிருக்கிறது என்பதை உணர்ந்தேன்.
வரும் வழியில் தோட்டங்களில் வேலை செய்யும் அடிமைகளையும், அவர்கள் நிலையையும் பார்த்து நாம் எவ்வளவோ பரவாயில்லை என்று என்னை நானே ஏமாற்றிக் கொண்டேன்.
எங்களுக்குத் தேவையான அளவு சோளரொட்டி கொடுக்கப்பட்டது. பலநேரங்களில் ஹெர்ரிங் என்ற வகை மீனும் கிடைத்தது. ஞாயிற்றுக்கிழமைகளில் சமைத்த பன்றி இறைச்சியும் கொடுத்தார்கள். நான் முதலில் அடிமையாக இருந்த கால்வெர்ட்டில் அடிமைகளுக்கு வாராவாரம் தேவையான சோளமும், மீனும் கொடுப்பார்கள். அப்படிக் கொடுக்காத எஜமானர்களைக் கொடுமைக்காரர்கள் என்று சொல்வார்கள். அதைவிட அதிகமாகக் கொடுப்பவர்களை ரொம்பவும் அன்பான எஜமானர் என்று கருதுவார்கள். நிறைய ஆடுமாடு வைத்திருப்பவர்கள் அடிமைகளுக்கு ஆடை நீக்கிய பாலைக் கொடுப்பார்கள். ஆப்பிள் தோட்டம் வைத்திருப்பவர்க்ளிடமிருந்து ஆப்பிளும் கிடைக்கும். அடிமைகளுக்கு இரவு வேளைகளில் வேறு வேலை செய்யவும், ஞாயிற்றுக்கிழமைகளில் மீன்பிடிக்கச் செல்லவும் கூட அனுமதி கொடுப்பார்கள். பிடித்தமீனை விற்று அவர்களே அந்தப் பணத்தை உபயோகப் படுத்திக் கொள்ளலாம். இந்தப் பணத்தைக் கொண்டு காஃபி, சர்க்கரை போன்ற பொருட்களைத் தவிர தங்களது மனைவிமார்களுக்குத் தேவையான உடைகளையும் வாங்கலாம். ஆண்களுக்கும் , பெண்களுக்கும் எஜமானர்கள் வாங்கிகொடுத்த துணிமணிகள் அவர்களுக்குத் தேவையான அளவு இல்லாததால் இந்தமாதிரி உழைத்து வரும் பணத்தில் அவர்கள் தேவையைப் பூர்த்திசெய்து கொள்ள முடியும். வயல்வெளிகளில் வேலைசெய்யாத குழந்தைகளுக்குத் துணியே தரமாட்டார்கள். ஆண் அடிமைகள் உழைப்பாளிகளாக இருந்து ஞாயிற்றுக் கிழமைகளிலும் வேலை செய்தால் தங்கள் குடும்பத்திற்க்கத் தேவையான ஆடைகளை அவர்கள் வாங்கிக் கொள்ள முடியும்
வர்ஜீனியா மாகாணத்தில் அடிமைகள் மிகவும் கொடுமையாக நடத்தப்படார்கள் என எனக்குத் தோன்றியது. கருப்பு நிறத்து அடிமைகளைப் பார்க்கும் போதே ஒருவனுக்குச் சரியான உணவு கிடைத்திருக்கிறதா, இல்லைப் பட்டினியால் அவதிப்படுகிறானா என்று சொல்ல முடியும். அவர்களைப் பார்க்கவே பரிதாபமான பிராணிபோல இருக்கும். அவர்கள் தோல் வறண்டு முகத்தில் வெறுமை இருக்கும். முடியின் பளபளப்பு போய் குச்சியால் தட்டினால் அந்த முடியிலிருந்து தூசிகள் பறக்கும்அளவுக்கு இருக்கும். அழகான பெண்களோ சரியான உணவு கிடைக்காவிட்டால் அவர்கள் தன் பொலிவையிழந்து காணப்படுவார்கள். அவர்களது பள பளப்பான முடி , நிறம்மாறி சிவப்புநிறத்தில் செம்பட்டையாக இருக்கும். கழுத்தைச் சுற்றி ஏதோ பழுப்பு நிற கம்பளிநூலைச் சுற்றியதுபோலத் தோன்றும்.
தொடரும்….