கார்ட்டூன் படங்கள்
கார்ட்டூன் படம் என்பது வரைகலை மற்றும் திரைப்படவியல் ஆகியவற்றின் இணைப்பினால் உருவாவதாகும். எந்த ஒரு கார்ட்டூன் படத்திற்கும் அடிப்படையாக இருப்பது "சட்டங்கள் (frames)" ஆகும். சட்டம் என்பது அசையும் பொருள் ஒன்றின் குறிப்பிட்ட ஒரு நிலையாகும்; பொருளின் அத்தகைய பல நிலைகள் தொடர்ச்சியாக ஒன்றிணைக்கப்பட்டு அப்பொருள் அசைவது அல்லது நகர்வது போல் தோற்றமளிக்கச் செய்யப்படுகிறது. ஒவ்வொரு சட்டமும், அதற்கு முந்தைய சட்டத்திலிருந்து நுட்பமாக வேறுபட்டிருக்கும். கார்ட்டூன் படத்தின் தயாரிப்புக்கு, ஒவ்வொரு சட்டமும் படமாக்கப்பட்டு ஒரு வினாடிக்கு 24 சட்டங்கள் என்னும் வீதத்தில் தொடர்ந்து ஓடுமாறு தயாரிக்கப்படுகிறது. படத்தின் ஒலி மற்றும் ஒளி ஆகியவை தனியாக பதிவு செய்யப்பட்டு பின்னர் ஒருங்கிணைக்கப்படுகின்றன. படத்தை ஒரு வினாடிக்கு 24 சட்டங்கள் என்னும் வீதத்தில் திரையிடும்போது, உண்மையான உருவங்கள் பேசுவது போலவும் நகர்வது போலவும் காட்சியளிக்கும். தற்போது கணினி மென்பொருள்கள் வாயிலாக நகரும் படங்களை உருவாக்க இயலுகிறது; எனவே கையால் சட்டங்களை வரையும் வேலை இல்லாமல் போய்விட்டது.
சமையல் எண்ணெய் தூய்மைப்படுத்தப்படுதல்
தாவர எண்ணெய் என்பது கிளிசரைட்கள் மற்றும் கொழுப்பு அமிலங்களின் நீண்ட தொடர்கள் ஆகிய வேதிப்பொருட்களின் கலவையாகும். நிலக்கடலை, சூரியகாந்தி விதை, எள் போன்றவற்றை செக்கில் இட்டு நசுக்கி எண்ணெய்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவ்வகையில் உண்டாகும் எண்ணெய்ப் பொருட்களில் பிசின் மற்றும் கட்டற்ற கொழுப்பு அமிலங்கள் (Free Fatty Acid – FFA) ஆகிய தூய்மையற்ற பொருட்கள் கலந்திருக்கும். சமையலுக்குப் பயன்படுத்துவதற்கு முன்னர் இத்தகைய தூய்மையற்ற பொருட்களை எண்ணெயிலிருந்து நீக்கிவிட வேண்டும். எண்ணெயைத் தூய்மைப்படுத்த, முதலில் ஆல்கலியைப் (alkali) பயன்படுத்துவர்; இது கொழுப்பு அமிலங்களுடன் கலந்து சோப்பு நிலையை அடையும்; இச்சோப்புப் பொருட்கள் தம்முடன் வண்ணப் பொருட்களை எடுத்துச் செல்லும். ஃபுல்லர்ஸ் எர்த் (Fuller’s earth) போன்ற உறிஞ்சு பொருளைப் பயன்படுத்தி எண்ணெயின் நிறம், மணம் ஆகியவற்றை நீக்குவர். ஹெக்ஸேன் போன்ற கரிமக் கரைசலைப் பயன்படுத்தி தூய்மையான எண்ணெய் உருவாக்கப்படும்; பின்னர் வடிகட்டல் முறையில் கரைசல் நீக்கப்பட்டு, எண்ணெய் பதப்படுத்தப்படும்.
“