மிகக் கடினமான சதுரங்க பந்தத்தை நன்கு பாடியவர்களுள் ஒருவர் மாம்பழக் கவிச்சிங்க நாவலர். இவர் மதுரை ஜில்லாவில் பழநி நகரத்தில் கி.பி 1836ஆம் ஆண்டு முத்தையாசாரியாருக்குப் பிறந்த நற்புதல்வர். மூன்றாம் வயதில் வைசூரி நோயினால் இவர் கண்களை இழக்க நேரிட்டது. முருகன் அருளால் அகக் கண் திறந்தது.
எத்தகைய பெரிய நூலானாலும் ஒருமுறை பாடக் கேட்டால் அப்படியே நினைவில் கொள்ளும் திறன் இவருக்கு வந்தது. அதனால் இவரை ‘ஏகசந்தகிராகி’ என்பார்கள். பல நூல்களைக் கற்றார். கடல் மடை திறந்த வெள்ளம் போலக் கவி மழை பொழியலானார். சேது சமஸ்தான மன்னராக இலங்கிய முத்துராமலிங்க சேதுபதி அவர்கள் மற்றும் பொன்னுசாமித் தேவர் ஆகியோரது சமூகத்திலும் தமது கவித்திறத்தைக் காட்டி அவர்களால் ‘கவிச்சிங்க நாவலர்’ என்ற பட்டமும் பெற்றார். சென்னை முதலிய பல இடங்களுக்கும் சென்று அனைவராலும் பாராட்டப் பெற்றார்.
பல்லக்கு முதலிய விமரிசைகளுடன் யாத்திரைகள் செய்து பிரபுக்கள் எதிர்கொண்டழைக்க வாழ்ந்தார். இது போலச் சிவிகை மீதூர்ந்து வாழ்ந்த தமிழ்ப் புலவர் இவருக்குப் பின் வேறொருவரும் இல்லை என்றே சொல்லலாம். நாற்பத்தியெட்டே வயது வாழ்ந்த இவர் 1884ஆம் ஆண்டு மறைந்தார். இவர் செய்த நூல்கள் பல. தனிப்பாடல்களோ கணக்கிலடங்கா. இவற்றை எல்லாம் ஒருங்கு சேர்த்து ‘மாம்பழக் கவிச்சிங்க நாவலர் திரட்டு’ என்ற பெயரில் ஒரு நூலை மார்க்கயன்கோட்டை வித்துவான் எம்.பி.பழநிச்சாமியாசாரியார் அவர்கள் அச்சிட்டார்.
இவர் பாடிய சித்ர கவிகள் பல உண்டு. அவற்றுள் ஒரு சதுரங்க பந்தம் இது:-
நேம னதிவித காம னனைவர்க்கு நேயகம
சேம சகாயன் சிதபுஞ்சன் சீர் சின வாவிசய
தாமன் மனதிற் சலிக்கா னருட்கல்வி சால்பினொடு
மாமணி நேர வளர்மானு வேல்கன வாசகனே
இந்தச் செய்யுளில் முதல் வரியில் 18 எழுத்துக்களும் இரண்டாம் வரியில் 20 எழுத்துக்களும் மூன்றாம் வரியில் 22 எழுத்துக்களும் கடைசி வரியில் 18 எழுத்துக்களும் உள்ளன. மொத்த எழுத்துக்கள் 78.
இதை சதுரங்க பந்தமாகக் கீழ்க்கண்ட முறையில் அமைக்கலாம்:-
பாடலை எப்படி சதுரங்க பந்தத்தில் படிப்பது? 1, 10, 19, 28, 37, 46, 55, 64, 63, 62, 61, 59, 58, 57, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 48, 47, 46, 45, 44, 43, 42, 41, 3, 34, 35, 36, 37. 38. 39, 40, 32, 31, 30, 29, 28, 27, 26, 25, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 16, 15, 14, 13, 12, 11, 10, 9, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 15, 22,29, 36, 43, 50, 57 என்ற கட்டங்கள் (சதுரங்க அறைகள்) வழியே சென்றால் பாடலைப் படிக்கலாம்.
இப்படி சதுரங்க பந்தம் எப்படி அமைப்பது? அதற்கு ஏதேனும் ரகசிய வழி உண்டா? உண்டு.
என்னிடம் கிட்டத்தட்ட சுமார் நூறு ஆண்டுகள் பழமையான ‘தனிப்பாடல் திரட்டு’ என்ற ஒரு நூல் இருக்கிறது. புத்தகத்தின் முதல் பக்கமும் இல்லை. கடைசிப் பக்கமும் இல்லை. அதை அடிக்கடிப் பிரித்துப் படிப்பேன். சதுரங்க பந்தம் பற்றிய அருமையான ஒரு பாடல் அதில் இருந்தது. மாம்பழக்கவிச் சிங்க நாவலரின் எழுபத்தெட்டு எழுத்துக்கள் கொண்ட சதுரங்க பந்தம் பற்றியும் அதில் ஒரு குறிப்பு இருந்தது. ஆனால் அது என்னெவென்றே விளங்கவில்லை. பல காலம் பிரிப்பதும், படிப்பதும் மூடுவதுமாகக் கழிந்தது. ஆனால் இந்தத் தொடரை எழுதும்போது ஒரு நாள் மாலை திடீரென உள்ளொளி (insight) மின்னியது.
மேலே உள்ள பாடலை சதுரங்க பந்தத்தில் அமைத்து அந்தத் திறவுகோல் பாட்டையும் அதில் உள்ள ‘துருவக்குறிப்பையும்’ ஒப்பிட்டுப் பார்த்தேன். பளிச்சென அனைத்தும் விளங்கின.
அது என்னவென்று அடுத்த வாரம் பார்ப்போம்!
–விந்தைகள் தொடரும்…
“