கோவில் வாசலில் காத்திருக்கும்போது காவிவேட்டியுடன் வரும் பக்தர்களை, முருகா… அய்யப்பா… என்று சீஸனுக்குத் தக்கபடி விளித்துக் காசு தேத்தலாம். விசேசநாள் என்றால் பக்தி பெருத்து ஆண்கள் காவி கட்டுகிறார்கள் பெண்கள்? அப்பதான் நல்ல புடவை, பட்டுப் புடவை பாச்சா உருண்டை மணக்க உடுத்துகிறார்கள். தலையில் இருமுடி – உண்மையில் தலையில் மாத்திரம் அல்ல, முகம்முழுக்க அவர்களுக்கு முடி, இருமுடி என்கிறார்கள்! – ஐயப்பா ஐயப்பா என்று வாய். மகாக்கோரமாய்ப் புருசன், இல்லறம் துறந்த பாவனை. கூட மகராசி, கொஞ்சம் அடக்கி வாசிக்கப்டாதா? பட்டுப்புடவையும் தலைகொள்ளாப் பூவும்… புருசனின் துறவைக் கொண்டாடுறாப் போலிருந்தது. அவர்களை மகாலெக்ஷ்மி, என்று அழைக்க வேண்டும். பொம்பளையாளுக்குத் துறவு கிறவு எல்லாங் கிடையாது. அவர்கள் ஆண்களைத் துறவியாக்குவர். சிவாய நம.
சளி இன்ஹேலர் மாதிரி சிவலிங்கம். இதைப் பார்த்து உருகுகிறார்கள், சளிபோல. பஞ்சாமிர்தமும் பாலபிஷேகமும் சளி போலத்தான் இருக்கிறது.
தாஜ் பீடிக்கார அண்ணாச்சிக்கு இந்த சாமிமேல் ஒரு பக்தி. மேல்துண்டை எடுத்து பொம்பளையாள் குளிக்கிறாப் போல நெஞ்சுவரை மறைத்துக் கட்டி, ”சிவாய நம” என்று கன்னத்தில் அறைந்து கொள்வார். என்ன தப்பு பண்ணினாரோ. சாமி அறையுமுன் தானே அறைந்து கொள்கிறாப் போல.
சாமியாருக்கு ஒரு வாரத்துக்கு மேல் எங்கும் தங்கக் கொள்ளாது. அடுத்த ஊருக்கு நடந்தே போவார். வெயிலில் நடக்க முடியாது. இராத்திரிதான் வசதி. கையில் அவரைவிட ஒல்லியாய் ஒரு குச்சி. தெரியாத தெருவில் நாய்கள் ஆட்சேபிக்கின்றன. நான் உங்கள் ஜாதி என்றால் அவை புரிந்து கொள்வதில்லை. அவருக்கு நாய் பாஷை தெரியாது. தன் ஜாதியில் இன்னொரு நாயைத் தன் வளாகத்தில் அவை அனுமதிப்பதில்லை தான். அந்நேரங்களில் கைக்கம்பே பாதுகாப்பு. கைக்கம்பை உயர்த்தினால் போதும். அதுவே பாஷை. நாய்கள் ஜுட்.
இருட்டுக்கசமான வீதி. தள்ளித் தள்ளி மரங்கள். வெளிச்சம் கிடையாது. இருமருங்கும் வயல். ஜிலுஜிலுவென்று வேட்டிக்குள் கெட்டபொம்பளையாய்த் தொடையை வருடும் காற்று. தவளைகள் கொர் கொர் என்று ஏனோ ராத்திரி பேச ஆரம்பிக்கின்றன. பாம்புகளுக்கு அது சௌகரியமாய் இருக்கிறது. கரிந்த தோசைபோல் தார் ரோடு. ஓரங்களில் மண்ணும் கல்லும் குத்தும். ரெண்டு காலுக்கும் வெவ்வேறு ஜோடியில் எருக்க இலையாய்ச் செருப்புகள். சர்ரக் சர்ரக். சீரான நடைக்கு அந்தச் சத்தத்தில் ஒரு ஒழுங்கு. தவளைச் சத்தமாய்ச் செருப்பு பதில் சொல்லிக் கொண்டே வந்தது. காற்றசைப்பில் ஸ்திரீ தலைவாரிக் கொள்வதைப் போல மரங்கள் இலையை விரித்து காற்றை உள்ளனுப்பி சிலிர்த்துக் கொள்கின்றன.
பக்கத்தூர் கோவில் திருவிழா போன்ற காலங்களில் இதே சாலையில் பிச்சைக்காரர்கள் சாரி சாரியாகப் படையெடுப்பு நடத்துவார்கள். கையில் மண்டையோடாய்க் குடுக்கை. எல்லாரிடமும் கம்பு உண்டு. தலை மொட்டையாகவோ, மீசை தாடியுடனோ. பிச்சைக்கு காவிதான் சரியான உடை. பிரார்த்தனை முடிந்து காவி அவிழ்க்கிற சனங்கள் காவியைப் பிச்சைக்காரர்களுக்குக் கொடுக்கிறார்கள். வெள்ளை வேட்டி தரார். பெண்கள் உடை கிழிந்தால், அதுவும் பாத்திரக்காரனுக்குப் போடுவர்.
பிச்சைக்கார ஜோடிகளும் உண்டு. பெரும்பாலும் அவர்களில் ஒருவருக்கு, ஆணோ பொண்ணோ, குஷ்டரோகம் இருக்கிறது. அல்லது இருவருக்கும். புண்ணியம் பண்ணியதால் அவர்களுக்கு குஷ்டரோகத்தைக் கடவுள் தந்திருக்கிறார். அவர்களுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு. நமக்குக் காசு போட என்று கையில் எடுத்தவர்கள் கூட, அடுத்து உட்கார்ந்திருக்கும் மொட்டைக் கைக்குக் காசை வீசிவிட்டுப் போய்விடுகிறார்கள். பெரும் ரகளையாகி, கட்டி உருளல் என்றெல்லாம் கூட கைகலப்பு ஆகிவிடுவதும் உண்டு. ரெண்டு பேருக்கும் நடுவே காசு விழுந்தால் தேங்காய் விடல் பொறுக்குவது போல ஒரு அவசரம், ஆவேசம்.
பட்டுப்புடவையுடன் வரும் மகாலெக்ஷ்மிகளைக் குஷ்டரோகப் பிச்சைக்காரர்கள் தொட்டுவிடுவது போல பயமுறுத்தி பிச்சை கேட்கிறார்கள்.
வாழ்க்கையை அதன் அடியாழம் வரை குச்சிஐஸ் உறிஞ்சுகிறாப் போல அனுபவிக்கிறதில் மனுசாளை விட பிச்சைக்காரர்கள் ஒசத்தி. எந்தப் பிச்சைக்காரனும் எந்த சூழலிலும் சாக விரும்புகிறானில்லை. இழவு வீட்டில் கூட அவர்களுக்குத் தன் சாவு ஞாபகம் கிடையாது. அவர்கள் ஒரு ஓரமாய்க் காத்திருந்தால், பொறுமைக்குப் பலன் உண்டு. துட்டு காரண்டி. சில சமயம் வாய்விட்டுக் கேட்டு, பழைய வேட்டி – வெள்ளை – பெற்றுக் கொள்ளலாம். செத்தவன் போட்டிருந்த மோதிரத்தைப் போடப்டாதா?
பத்து பதிமூணு என வீட்டுக்காரர்கள் மறந்தாலும் இவர்களுக்கு ஞாபகசக்தி அதிகம்.
அடிக்கடி ஷேவ் எடுக்க முடிவெட்ட என மயிரைப் பராமரிக்க அலுத்துத்தான் அவனவன் மீசை தாடியை அப்படியே விட்டு விடுகிறான். ரொம்ப அரிப்பாக் கெடக்கா, எல்லாமா வாரிப் போட்டாப்போல ஒரு மொட்டை. அன்னிக்கு ஒருத்தன் தலைக்கு திருவோடு வெச்சிப் படுத்திருந்தான். ரெண்டு மண்டையாட்டம் இருந்தது… தலையைத் தடவுகையில் கைச் சொரசொரப்பு, அது ஒரு சுகம். ஆடுமாடுகள் நாய்கள் சுவரில் உரசி அனுபவிக்கின்றன.
என்னவோ எந்த ஊரிலும் தங்காமல் ஒரு சுத்தில் இந்தக் குளத்தங்கரை மண்டபம் திரும்புதல் என ஆகிப் போயிருந்தது. பிள்ளையாருக்குத் துணையாய் ஒரு சொந்தம். அர்ச்சனை கிடையாது. மரமே சருகுதிர்க்கும் தலையில். மழை வந்தால் அபிஷேகம். உம்மென்று உட்கார்ந்திருப்பார். எதாவது இலையில் வாங்கிவந்து சாப்பிடுகையில் வேணுமா, என்று வேடிக்கையாய் நீட்டிவிட்டுச் சாப்பிடுவார். அதற்குள் நாய் முன்வந்து வாலாட்டும்… எனக்கு வேணும்.
ஒக்காள, டிஷ்யூம்.
சாயல்குடித் திருவிழா முடிந்து கால் சக்கரம்போலப் பின்னோக்கி இறங்கியது. ஆனால் ஆச்சர்யமாக அங்கிருந்து சனம் முழுசும் பரபரப்பில் கிளம்பிக் கொண்டிருந்தது. வரும் வழியெல்லாம் ராத்திரி ஜே ஜே என்று பெரும் படை.
விசுக் விசுக் என்று கம்பை முன் அழுத்தி சப்பாணி ஒருத்தன். சடைமுடிக்காரி ஒருத்தி. முகக் குங்குமம் பயமுறுத்தியது. தனக்குள் எதையோ ரசித்துச் சிரித்தபடி உடம்பெங்கும் கலர் கலராய்த் துணி சுற்றி ஒரு பைத்தியம். டரடரவென்று ஒரு குஷ்டரோக வண்டியைப் பின்னால் இருந்து தள்ளிவரும் ஒரு அசிஸ்டென்ட்….. பத்திரிகை இல்லாமலேயே இவ்ள கும்பல்.
”என்னவே விசேசம்?”
”தாஜ் பீடி அண்ணாச்சி வீட்ல கல்யாணம்லா…”
”உமக்கு ஆர் சொன்னாஹ…”
”எட்டு பட்டியிலயும் பெரிசு பெரிசா போஸ்டர் அடிச்சிருக்கானுக, உம்ம கண்ணுல படல்லியாக்கும்?”
கையில் சக்கரம் சுத்த ஆரம்பித்ததும் அண்ணாச்சி ஊர்ப்பக்கம் வருவதில்லை. வந்தாலும் பிளஷர்லதான் வரவு. ஸ்வைங்கென்று ஊருக்குள் உருமி புழுதிகிளர்த்திப் போகையில் நம்மூர்ல இப்பிடியொரு மகராசனா என்றிருக்கும். வேப்பங்குச்சி தண்டி பீடியில் இத்தனை துட்டா… பீடிக்குச்சியாட்டம் இருந்த மனுசன் பீப்பாயா ஆயிட்டாரு. நடையே போச்சு… சாமிக்கு சப்பரம். அண்ணாச்சிக்குக் கார்னு ஆயாச்சி.
பீடிக்கு தாஜ் பீடி, கவர்னர் பீடி என்றெல்லாம் மகாப்பெயர் வைக்கிறார்கள். எந்த கவர்னர் பீடி குடிக்கிறார் தெரியவில்லை.
ஒருதரம் எலெக்ஷன்ல நின்னு தோத்துப் போனார். வெள்ளை முழுக்கைச் சட்டை. பளீர் பாலியெஸ்டர் வேஷ்டி. தங்கபிரேம் கண்ணாடி. கையில் தங்க வாச். குவிந்த விரல்களில் மோதிர வரிசை. (யாரோடும் கை குலுக்க மாட்டார்.) சிரித்த ஒருபல் தங்கப்பல். அரைஞாண் கயிறைக் காட்டவில்லை. தங்கமாத்தான் இருக்கும். இந்த பவிஷோடு பீடி குடிக்கப் படுமா. நீள வெளிநாட்டு சிகெரெட் பிடிக்கலாம்.
(அடுத்த இதழில் முடியும்)
(நன்றி: சன்டே இந்தியன் வார இதழ்)
“