மனிதரில் எத்தனை நிறங்கள்!-105

Sometimes when one person is missing, the whole world seems depopulated.
– Lamartine

சிவகாமியும், அர்ஜுனும் அசோக் சொன்ன இடத்திற்கு காரில் போய்க் கொண்டிருக்கையில் சிவகாமி மனதில் ஒரு விஷயம் நெருடிக் கொண்டிருந்தது. போன் செய்த கடத்தல்காரன் குறிப்பாக அர்ஜுனை மட்டும் அழைத்து வரச் சொன்னது விசித்திரமாக இருந்தது. கடத்தல்காரன் யாராக இருந்தாலும் அவர்களைப் பற்றி நன்றாக அறிந்தவனாகத் தான் இருப்பான் என்பதில் அவளுக்குச் சந்தேகம் இல்லை. அர்ஜுன் அந்தப் பகுதியில் பலருக்கு சிம்ம சொப்பனமாக இருந்தான். உடல்பலத்தில் அவனுக்கு ஈடு இணை இல்லை என்ற பெயர் எடுத்திருந்தான். அப்படியிருக்கையில் கடத்தல்காரன் "அர்ஜுனை மட்டும் கூட்டிக் கொண்டு வராதே" என்று சொல்லியிருந்தால் அது இயற்கையாக இருந்திருக்கும். அர்ஜுனை வரச் சொன்ன காரணம் என்ன என்பதை அவளால் ஊகிக்க முடியவில்லை.

அந்த பங்களாவை அவர்கள் அடைந்த போது இருட்டியிருந்தது. அசோக் சொன்ன இடத்தில் காரை நிறுத்தி இருவரும் இறங்கினார்கள். தூரத்தில் இன்னொரு வேன் நின்று கொண்டிருந்ததும், அதனுள் ஆட்கள் இருப்பதும் இருவருக்கும் மங்கலாகத் தெரிந்தது. அர்ஜுன் பணம் இருந்த சூட்கேஸை எடுத்துக் கொண்டான். சிவகாமி பங்களாவின் அழைப்புமணியை அழுத்தினாள். பின் இருவரும் அமைதியாகக் காத்திருந்தார்கள்.

மாடி ஹால் ஜன்னல் வழியே பைனாகுலர் வழியாக அவர்களை யாராவது பின் தொடர்கிறார்களா என்று பார்த்துக் கொண்டிருந்த மூர்த்தி அந்த ஹால் நாற்காலியில் அமர்ந்திருந்த பஞ்சவர்ணத்திடம் சொன்னான். "பாட்டி. யாரும் பின் தொடரலை"

பஞ்சவர்ணம் திருப்தியுடன் தலையசைத்தாள். அசோக் முன்பே கணித்துச் சொல்லியிருந்தான். "அந்தம்மா கண்டிப்பா போலீஸுக்குப் போகாது. இந்தப் பத்து லட்ச ரூபாய்க்கு எல்லாம் ரிஸ்க் எடுக்காது. பயப்படாதீங்க". அவன் கணிப்பு பொய்க்கவில்லை. அவன் தான் டில்லிக்குப் போவதையும் அவர்களுக்குத் தெரிவித்திருந்தான். போகும் முன் எல்லா ஏற்பாடுகளையும் செய்து வைத்திருப்பதாகவும் சொல்லி இருந்தான். சிவகாமி மற்றும் அர்ஜுனின் உடல் எடுக்க வருபவர்கள் கண்ணில் கூட பட வேண்டாம் என்று சொல்லியிருந்தான். அவர்கள் நம்பகமானவர்கள், எந்த நிலையிலும் வாய் திறக்காதவர்கள் என்றாலும் கூட அவர்கள் கன்ணில் பட அவசியம் என்ன இருக்கிறது என்று கேட்டது அவளுக்குப் பிடித்திருந்தது. கச்சிதமாக, பின்னாளில் கூடப் பிரச்சினை வராத அளவு சிந்தித்திருப்பது அவளுக்கு அவன் மீதிருந்த மதிப்பை அதிகப்படுத்தி இருந்தது.

ஆர்த்தியைக் கடைசி வரை மயக்க நிலையில் தான் வைத்திருக்க வேண்டும் என்று அசோக் சொல்லியிருந்தான். நான்கு மணி நேரத்திற்கு ஒரு தடவை மயக்க ஊசி ஒன்று போடச் சொல்லியிருந்தான். உண்மையில் ஆர்த்தி நூலகத்தில் இருந்து வெளியே வந்த போது ஒரு கைக்குட்டையை பின்னாலிருந்து யாரோ மூக்கருகே கொண்டு வந்ததை மட்டும் உணர்ந்திருந்தாள். அதன் பிறகு மயக்க நிலையில் தான் ஆழ்ந்திருந்தாள். அவளை அந்த பங்களாவில் ஒரு அறையில் அடைத்து வைத்திருந்தார்கள்.

மேலும் அவன் மூர்த்தியிடம் தெளிவாகச் சொல்லி இருந்தான். ‘உன் துப்பாக்கி எப்போதுமே அவர்களைக் குறி பார்த்துத் தயாராக இருக்க வேண்டும். நீ முதலில் அர்ஜுனைத் தான் சுட வேண்டும். சிவகாமியை சுட்டு விட்டால் அவனை சமாளிப்பது உன்னால் முடியாத காரியம். இரண்டாவதாக சிவகாமியை சுட்டுக் கொன்று விடு"

பஞ்சவர்ணம் பேரனிடம் சொல்லியிருந்தாள். "அந்த சண்டாளியையும், தடியனையும் கொன்னுட்டா நீ இஷ்டப்படி மயக்க நிலையில் இருக்கிற ஆர்த்தியை அனுபவி. நம்மளோட முதல் திட்டமே இப்ப கை கூடவும் சான்ஸ் இருக்கு. இல்லைன்னா கூட அந்த ஆகாஷ¤க்கு முன்னால் அவளை அனுபவிச்சவன் நீயிங்கற திருப்தியாவது மிஞ்சும்"

மூர்த்தி இன்றைய தினம் தனக்கு அதிர்ஷ்டமான தினம் என்று நம்பினான். அப்பழுக்கில்லாத திட்டம் அசோக்கினுடையது என்பதால் அவனுக்கு அந்த இருவர் மரணத்திலும், ஆர்த்தியைத் தான் அனுபவிக்கப் போகிறவன் என்பதிலும் சிறிதும் சந்தேகமில்லை.

மூர்த்தி துப்பாக்கியோடு கீழே போய்க் கதவைத் திறந்தான். துப்பாக்கியுடன் குறி வைத்து நின்ற மூர்த்தியைக் கண்ட சிவகாமி திகைத்தாள். தன் வாழ்க்கையில் எத்தனையோ பார்த்திருந்த சிவகாமி கூட இதை எதிர்பார்த்திருக்கவில்லை.

"பெட்டியை அங்கே வச்சுட்டு ரெண்டு பேரும் கைகளை மேலே தூக்குங்க"

"ஆர்த்தி எங்கே?" சிவகாமி அமைதியாகக் கேட்டாள்.

"கவலைப்படாதே. மேல ஒரு ரூம்ல இருக்கா. மயக்கத்துல இருக்கா. ரெண்டு பேரும் கைகளை மேலே தூக்கிகிட்டே படியேறி மேல போங்க"

அர்ஜுன் சிவகாமியைப் பார்த்தான். சிவகாமி அவனிடம் தலையசைத்து விட்டு கைகளை மேலே தூக்கிக் கொள்ள அர்ஜுனும் கைகளை மேலே தூக்கிக் கொண்டான். சிவகாமி முன் செல்ல அர்ஜுன் பின் சென்றான். மூர்த்தி துப்பாக்கியை நேராகப் பிடித்தபடி பின் தொடர்ந்தான். படியேறி மேலே சென்றவர்களை பஞ்சவர்ணம் வரவேற்றாள். "வா சிவகாமி. வாடா தடியா"

சிவகாமி பஞ்சவர்ணத்தை ஏதோ அபூர்வ ஜந்துவைப் பார்ப்பது போல் பார்த்தாள். "உனக்கு என்ன வேணும் பஞ்சவர்ணம்?"

"எனக்கு சில உண்மைகள் தெரியணும். என் மருமகளைக் கொன்னது யாரு? நீயா இந்த தடியனா?"

"இதைக் கேட்கறதுக்கா இத்தனை டிராமா?"

"உன் மருமகளைக் கடத்தாமல் இருந்தா நீ வந்திருப்பாயா? என் பேரன் துப்பாக்கியோட தயாரா இல்லாமல் இருந்தா நீ வாயைத் திறப்பாயா? சொல்லு சிவகாமி என் மருமகளைக் கொன்னது யாரு?"

"நான் தான்" என்று சிவகாமியும் அர்ஜுனும் ஒரே நேரத்தில் சொன்னார்கள். பின் சிவகாமி அர்ஜுனை எரிச்சலுடன் பார்த்தாள். "எதையெல்லாம் எனக்காக உன் தலையில் போட்டுக்கறதுன்னு இல்லையா?"

அர்ஜுன் சிவகாமியை தவிப்போடு பார்த்தான். கல்யாணியைச் சுட்டது அவன். அப்படியிருக்க சிவகாமி அந்தப் பழியைத் தான் எடுத்துக் கொள்வது அவனுக்குப் பொறுக்கவில்லை. ஆனால் சிவகாமியின் பார்வை அவனை மௌனமாக இருக்கச் சொன்னது.

"கல்யாணி ஆனந்தியைக் கொன்னதுக்கு அவளை நீ கொன்னுட்டே இல்லையா? சரி பிணத்தை என்ன செய்தாய்?"

சிவகாமி மௌனம் சாதித்தாள். பின் புறம் இருந்த மூர்த்தி துப்பாக்கியோடு முன்னால் வந்து பஞ்சவர்ணம் அருகே வந்து நின்றான்.

"பேசு சிவகாமி. இல்லாட்டி என் பேரன் கைல இருக்கிற துப்பாக்கி பேசும்"

"எரிச்சிட்டேன்"

"எப்படி?"

"ஆனந்தின்னு சொல்லி எரிச்சுட்டேன்"

பஞ்சவர்ணம் திகைத்தாள். "அப்படின்னா ஆனந்தி பிணத்தை என்ன செய்தாய்"

"அது அவ செத்தவுடனே தானே முடிவு செய்யணும்?"

"என்ன ஆனந்தி சாகலையா?"

மிகச்சுருக்கமாக நடந்ததை நாலே வரிகளில் சிவகாமி சொல்ல கோபத்தில் மூர்த்தியும், பஞ்சவர்ணமும் எரிமலையானார்கள். பஞ்சவர்ணம் ஆத்திரத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு கேட்டாள். "எல்லாம் தெரிஞ்ச நீ ஏன் பவானியை சந்திரசேகருக்குக் கட்டிக்கொடுக்க சம்மதிச்சாய்"

"என் தம்பி மனைவி இல்லாமல் வாழ முடியும்னு எனக்குத் தோணலை. அவன் உன் மகள் கிட்ட அத்துமீறி நடந்தாச்சுன்னு தெரிஞ்சப்ப ஏதோ ஒரு பொண்ணைக் கட்டி வைக்கிறதை விட உன் மகளையே கட்டி வைக்கிறது சரின்னு தோணுச்சு. அப்புறம் உன் அளவுக்கு உன் மகள் மோசமில்லைங்கறதும் ஒரு காரணம்"

"அதுக்கு நான் உன் கிட்ட நன்றியோட இருக்கணும்னு எதிர்பார்க்கிறாயா சிவகாமி"

"உன் கிட்ட எந்த நல்லதையும் நான் எப்பவுமே எதிர்பார்த்ததில்லை பஞ்சவர்ணம்" ஏளனமாகச் சொன்னாள் சிவகாமி.

"இனி மேல் நீ எதிர்பார்க்க வேண்டியது சாவைத்தான் சிவகாமி. ஆனா முதல்ல இந்த தடியனோட சாவைப் பார்த்துட்டு போய் சேரு"

சிவகாமிக்கு தற்போதைய நிலைமையின் பூதாகாரம் புரிந்தது. அவர்கள் இருவர் கண்ணிலும் வெறுப்பும், கொலைவெறியும் மின்னின. சிவகாமி கேட்டாள். "ஆர்த்தி"

"அவளை மூர்த்தி பார்த்துக்குவான். கவலைப்படாதே…." பஞ்சவர்ணம் புன்னகை செய்து விட்டு பேரனைப் பார்த்து தலையசைத்தாள். மூர்த்தி சந்தோஷமாக அர்ஜுனுக்குக் குறி வைத்து விரலை அழுத்த சிவகாமி மின்னல் வேகத்தில் இயங்கி அர்ஜுனுக்கு முன்பக்கம் பாய்ந்தாள். துப்பாக்கிக் குண்டு அவள் மார்பில் பாய்ந்த அதே நேரத்தில் அவள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து மின்னல் வேகத்தில் நான்கு முறை சுட்டாள். தொடர்ந்து சுடப்பட்ட குண்டுகள் பஞ்சவர்ணத்தையும், மூர்த்தியையும் பதம் பார்த்தன.

சிவகாமி கீழே சரிந்த போது தாங்களும் குண்டடிபட்டு கீழே சரிவோம் என்று எண்ணியிருக்காத திகைப்பும், அதிர்ச்சியும் பஞ்சவர்ணத்தின் முகத்திலும், மூர்த்தி முகத்திலும் தெரிந்தன. சிவகாமி குறி பார்த்து சுடுவதில் வல்லவள் என்பதால் அவர்கள் இருவரும் பிணமாக அதிக நேரம் ஆகவில்லை.

எல்லாம் கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்து விட அர்ஜுன் திக்பிரமையுடன் சிலையாக சமைந்து நின்றான். சிவகாமி அவனிடம் அவசரமாகச் சொன்னாள். "அர்ஜுன். ஆர்த்தி ஏதோ ஒரு ரூம்ல தான் இருக்கணும். நீ அவளைக் கூட்டிகிட்டு போயிடு"

சிவகாமி உடுத்தியிருந்த சிவப்பு சேலையெல்லாம் இரத்தத்தில் மேலும் சிவப்பாகிக் கொண்டிருக்க அர்ஜுன் பதறியபடி சொன்னான்."மேடம். ரத்தம் அதிகமா கொட்டுது. முதல்ல டாக்டர் கிட்ட உங்களை…."

வெளியே இருந்து சிலர் ஓடி வந்து படியேறும் சத்தம் கேட்க சிவகாமி அசுர பலத்தைப் பிரயோகித்து எழுந்து நின்று பஞ்சவர்ணம் முதலில் அமர்ந்திருந்த நாற்காலியை நிமிர்த்தி அதில் உட்கார்ந்து கொண்டாள். "அர்ஜுன். இத்தனை வருஷம் நீ என் வார்த்தையை மீறினதில்லை….இப்ப கடைசியா மீறிடாதே. ஆர்த்தியைக் கண்டுபிடிச்சு அவளைக் கூட்டிட்டு… போயிடு…..நான் எத்தனை நேரம் தாக்குப் பிடிப்பேன்னு….தெரியலை…..ஆனா வர்றவங்களை நான் சமாளிச்சுக்கறேன்…..போ"

மாடியேறி உள்ளே நுழைந்த மனிதர்களை நோக்கி சிவகாமி துப்பாக்கியை நீட்ட வந்தவர்களில் ஒருவன் அவசரமாகச் சொன்னான். "அம்மா சுட்டுடாதீங்க. நாங்க அசோக் சொன்ன ஆளுங்க தான். இந்த ரெண்டு பாடியையும் எடுத்துட்டு போக தான் வந்திருக்கோம்…"

அசோக் அவர்களிடம் தெளிவாகச் சொல்லியிருந்தான். "துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டதும் நீங்கள் போய் ஒரு வயதான அம்மாள் பிணத்தையும், ஒரு இளைஞன் பிணத்தையும் எடுத்துக் கொண்டு போய் விடுங்கள். அங்கே இருக்கும் மனிதர்களை ஆராயப்போக வேண்டாம்…"

அவர்கள் பிணங்களை எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கையில் சிவகாமி அர்ஜுனைப் பார்த்து தலையசைத்தாள். பல வருடங்களுக்குப் பின் முதல் முறையாக கண்களில் நீர் நிறைய அர்ஜுன் அவளைப் பார்த்தான். சிவகாமி உதடு அசைந்தது. "ப்ளீஸ்…"

என்றுமே அந்த ஒரு வார்த்தையை அவளிடமிருந்து எதிர்பார்க்க முடியாதிருந்த அர்ஜுன் அதற்கு மேல் தாமதிக்கவில்லை. கண்களில் நீர் கங்கையாக வழிய அவசரமாக அங்கிருந்து ஓடினான்.

பிணத்தை அப்புறப்படுத்தியவர்கள் செல்லும் வரை தாக்குப் பிடித்துக் கம்பீரமாக அமர்ந்திருந்த சிவகாமி அவர்கள் சென்ற மறு கணம் சாய்ந்தாள். உயிர் பிரியும் அந்தக் கணத்தில் அவள் மனதில் அவள் கணவனைப் பற்றிய எண்ணம் மட்டுமே மேலோங்கி நின்றது. அவர் தனிமைப்பட்டு விடுவார் என்ற உணர்வு ஆழமாகத் தங்கியது. மானசீகமாகக் கடைசியாக கணவனிடம் சொன்னாள். "சாரிங்க…."

+++++++++++++

சங்கரன் தளர்ந்து போய் தன் மனைவி பிணத்திற்கு அருகே உட்கார்ந்திருந்தார். வெளி உலகிற்கு சிவகாமி மாரடைப்பால் காலமாகி விட்டாள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அவள் உடலைச்சுற்றி எல்லோரும் அழுது கொண்டிருந்தார்கள். எல்லோர் முகத்திலும் நிஜமான துக்கம் குடிகொண்டிருந்தது. சம்பிரதாயத்திற்கான வருத்தமாக அது இல்லாததை சங்கரனால் காண முடிந்தது. இமயம் இதயத்தை அழுத்த குடும்பத்தினரை சங்கரன் கவனித்தார்.

சந்திரசேகரின் துக்கம் ஒரு குழந்தையுடையதாக இருந்தது. சந்திரசேகர் தமக்கையின் காலைப்பிடித்து குழந்தையைப் போல் கதறிக் கொண்டிருந்தார். "அக்கா நான் இனி எந்தத் தப்பும் பண்ண மாட்டேன்க்கா. சத்தியம்க்கா. நீ என்னை எவ்வளவு வேணும்னாலும் திட்டு. ஆனா என்னை விட்டுட்டு போயிடாதேக்கா ப்ளீஸ்". கடைசியில் டாக்டர் வந்து அவருக்கு மயக்க ஊசி போட்டு அமைதிப்படுத்த வேண்டியதாயிற்று.

அர்ஜுனின் துக்கமும் எல்லையில்லாததாக இருந்தது. தன்னைக் காப்பாற்றி சிவகாமி உயிரை விட்டதை அவனால் சிறிதும் ஜீரணிக்க முடியவில்லை. சங்கரனிடம் அவன் சொன்னான். "நான் தான் பிணமாய் இருக்க வேண்டியவன். ஏன் மேடம் என்னைக் காப்பாத்திட்டு…." அவனுக்கு மீதியைச் சொல்ல துக்கம் விடவில்லை. தன் மனைவி மனதில் என்ன நினைத்திருப்பாள் என்பதை ஊகிக்க முடிந்த சங்கரன் குரலடைக்கச் சொன்னார். "நீ இப்ப தான் வாழவே ஆரம்பிச்சிருக்கே அர்ஜுன். உன்னை நம்பி ஒரு பொண்ணு இருக்கா…. சிவகாமி வாழ்ந்து முடிச்சவ…. அது தான் அப்ப அவள் மனசுல இருந்திருக்கும்"

மற்றவர்கள் எல்லாம் நேசித்த ஒரு மனுஷியை இழந்திருக்கிறார்கள். ஆனால் அவன் தெய்வத்தையே இழந்திருக்கிறான். அவன் சமாதானப்படுத்த முடியாதவனாக இருந்தான்.

ஆர்த்தியின் துக்கமும் அர்ஜுனுடையதைப் போலவே அளவிட முடியாததாக இருந்தது. ஆனந்தியின் தோளில் சாய்ந்து கொண்டு அவள் அழுதாள். பதினெட்டு வருடங்களுக்கு முன் அந்த வீட்டின் வாசற்படியை மிதிக்க மாட்டேன் என்று பிரதிக்ஞை செய்து இருந்த ஆனந்தி தன் வாழ்வில் முதல் முறையாக அதை மீறி அங்கு வந்திருந்தாள். திருமணமாகி வந்த கணம் முதல் இந்தக் கணம் வரை சிவகாமி தனக்கு செய்த நல்லதெல்லாம் ஒவ்வொன்றாக நினைவில் வர தன்னையும், மகளையும் சமாதானப்படுத்த வகையறியாது நந்தினியாக அங்கு நின்று கொண்டிருந்தாள்.

அமிர்தம் தன் கையால் கட்டிய பெரிய மல்லிகைப்பூ மாலையை தமக்கை உடலுக்குப் போட்டு அழுது கொண்டிருந்தாள். சொத்தைத் திருப்பித் தந்த பெரியம்மாவுக்கு நன்றி கூட சொல்லவில்லை என்பது பார்த்திபனின் பெரிய வருத்தமாக இருந்தது. இத்தனை வருடங்களாக அவளைத் தவறாக நினைத்துக் கொண்டிருந்ததற்கு அவன் தன்னையே சபித்தான். அதே போல் நீலகண்டன் கண்ணீருடன் சிவகாமியிடம் மானசீகமாக மன்னிப்புக் கேட்டுக் கொண்டிருந்தார்.

எப்போதும் பேச்சை நிறுத்தத் தெரியாத டேவிட் வாழ்வில் முதல் முறையாக பேச்சிழந்து சோகமாக மனைவியுடன் நின்றிருந்தார்.

ஆகாஷ் தான் எல்லாப் பொறுப்பையும் எடுத்துக் கொண்டிருந்தான். தாய் மீது அவன் வைத்திருந்த பாசம் அதீதமானது. எல்லோரும் சோகத்தில் மூழ்கி இருக்க காரியங்களை எடுத்துச் செய்ய ஆளில்லாமல் போயிருந்தது. இது வரை அங்கு எல்லாவற்றையும் சிவகாமி தான் நடத்திக் கொண்டிருந்ததால் அவள் இறந்த பின் அங்கு எல்லாமே ஸ்தம்பித்துப் போயிருந்தது. அம்மா இருந்திருந்தால் என்ன செய்திருப்பாள் என்று யோசித்து அவன் தான் செயல்பட வேண்டியிருந்தது. துக்கத்தை அடக்கிக் கொண்டு அவன் செய்த முதல் காரியம் தாயின் மரணத்திற்கான காரணத்தை மாரடைப்பாக மாற்றியது தான். பின் தொடர்ந்து மற்ற காரியங்களைக் கவனித்தான். கலெக்டர், மந்திரிகள், தொழிலதிபர்கள் என வந்த பெரிய மனிதர்களிடமும் பேச வேண்டியிருந்தது.

அத்தனை வேலைகளுக்கு மத்தியிலும் தந்தையை அவன் அடிக்கடி கவனித்துக் கொண்டிருந்தான். அவர் இழப்பு ஈடு செய்ய முடியாதது என்று அவனுக்குத் தெரியும். தாயிற்கும் தந்தைக்கும் இடையே இருந்த ஆழமான அந்த பந்தத்தின் வலுவை அவன் நினைவு தெரிந்த நாள் முதல் பார்த்திருக்கிறான். அம்மா அன்று அவருடன் உலகப் பயணம் போவதாகச் சொன்ன போது சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வர மனம் கனத்தது. அவர் அழாமல் அமர்ந்திருந்த விதம் அத்தனை பேர் அழுகையையும் விட அதிகமாய் நெஞ்சை உருக்கியது.

அவரிடம் வந்து தோளைத் தொட்டான்.

"என்ன ஆகாஷ்.?"

"அப்பா அழுது முடிச்சிடுங்கப்பா. மனசுக்குள்ளேயே வச்சு உடைஞ்சி போயிடாதீங்கப்பா. அம்மா மனசு சாந்தியடையாதுப்பா….ப்ளீஸ்ப்பா"

மகனைக் கட்டிக் கொண்டு அந்தத் தந்தை நிறைய நேரம் அழுதார்.

பவானி கூட மிகவும் சோகமாக இருந்தாள். சிவகாமியின் மரணத்திற்கு அவளும் வருத்தப்பட்டாள் என்றாலும் அவள் மனதை இன்னொரு விஷயம் அரித்துக் கொண்டிருந்தது. பஞ்சவர்ணத்தின் உடலையும், மூர்த்தியின் உடலையும் யாரோ சிலர் எடுத்துக் கொண்டு போனார்கள் என்ற தகவல் கிடைத்தது. ஆனால் அவர்கள் உடல்களை யார், எங்கே, எடுத்துக் கொண்டு போனார்கள் என்று யாருக்கும் தெரியவில்லை. அவளைத் தவிர யாருக்கும் அதைப் பற்றிய கவலையும் இருக்கவில்லை. மாலைகளும், மலர் வளையங்களும், சிவகாமியின் உடல் மீது விழுந்த வண்ணம் இருக்க பஞ்சவர்ணத்தின் பிணமும், மூர்த்தியின் பிணமும் என்ன ஆயின என்று தெரியாமல் அவள் ஒருத்தி மட்டுமே துக்கத்துடன் இருந்தாள்.

++++++++

ரயிலில் தன் லேப் டாப்பை எடுத்துத் தமிழகச் செய்திகளைப் பார்த்த போது அசோக் திடுக்கிட்டான். "சிவகாமியம்மாள் மாரடைப்பால் காலமானார்" என்ற செய்தி தலைப்புச் செய்தியாக வந்து கொண்டிருந்தது. அவர் உடலுக்கு அஞ்சலி செலுத்த மந்திரிகள், தொழிலதிபர்கள், பிரமுகர்கள், பொதுமக்கள் எல்லாம் வந்தபடி இருக்கிறார்கள் என்ற செய்தியைப் படித்த அசோக் தன் செல்லை எடுத்து ஒரு எண்ணிற்கு அழைத்துப் பேசினான்.

"சார். எல்லாம் நீங்க சொன்னபடி கச்சிதமாய் நடந்துகிட்டிருக்கு. இப்ப அந்த ரெண்டு பேர் பிணத்திலும் எலும்புத்துண்டுகள் மட்டும் தான் மிச்சமிருக்கு……"

செல்லில் வெற்றிச் செய்தியாக சொல்லப்பட்ட விவரங்களை இடைமறிக்காமல் ஐந்து நிமிடம் கேட்ட அசோக் ஒன்றும் சொல்லாமல் செல்லை ஆ•ப் செய்தான். வயதான கிழவி, ஒரு இளைஞன் என்று மட்டுமே ரகசியத்திற்காக தெரிவித்திருந்தது இப்போது வேறு விதமாக வேலை செய்து விட்டது அவனுக்குப் புரிந்தது. என்ன நடந்திருக்கும் என்பதை அவனால் ஊகிக்க முடிந்தது. இன்னும் ஐந்து லட்சம் ரூபாய் வர வேண்டியது இனி கிடைக்கப் போவதில்லை என்ற வருத்தம் சிறிது நேரம் அவனுக்கு இருந்தது. "கொலை செய்யற வேலையை ப்ரொ•பஷனல் கிட்ட விடுங்கன்னு சொன்னா முட்டாள்கள் கேட்கலை" என்ற கோபம் சிறிது வந்தது. பின் எல்லாவற்றையும் சுலபமாக மறந்தான். அடுத்த ஸ்டேஷனில் அமைதியாக இறங்கிக் கொண்டான். "இனி இந்தப் பயணத்தில் அர்த்தமில்லை".

அவனை இறக்கி விட்ட இரயில் தன் பயணத்தைத் தொடர்ந்தது. அதையே பார்த்துக் கொண்டிருந்தவன் மனதில் ஒரு எண்ணம் தத்துவார்த்தமாய் எழுந்தது. "என்ன தான் கச்சிதமாகத் திட்டமிட்டாலும் சில பயணங்களின் முடிவு திட்டமிட்டபடி இருப்பதில்லை."

அதை ஆமோதிப்பது போல் இரயில் கூக்குரலிட்டது.

(முற்றும்)

About The Author

23 Comments

  1. ponnee

    கதை சுவாரசியமாக இருந்தது . இன்னும் கொஞ்சம் சுருக்கி இருக்கலாம் சில பகுதியை திரும்ப திரும்ப சொல்லாமல் தவிர்ப்பதன் மூலம். இருந்தபோதும் வாழ்த்துகழ். தொடர்ந்து எழுதவும்.

  2. citra

    Good Story. But i think there is no reason to finish the Sivagami character. Anyway u r the one who created her, so u have all the rights to destroy her.

  3. janani

    its very nice. But i am very much disappointed with your end because of killing sivakami

  4. suamthi

    end of the story is not nice.. we are feeling so bad…sivakami should not have not been died.

  5. Venkatesh

    திரு, கணேசன்…
    தங்களின் இந்த தொடருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்…… தொடரின் ஆரம்பம் முதல் இறுதி வரை சுவாரஸ்யம் குறையாமல் அளித்தமைக்கு மிக்க நன்றி…….. சிவகாமி கதாபாத்திரத்தில் இருந்து நான் கற்ற பாடங்கள் மிக அதிகம்….. இப்படியும் ஒரு பெண்ணா?…….. மிக அருமை….. தங்களின் அடுத்த தொடருக்காக காத்திருக்கும் முதல் ரசிகன் நான்……..

  6. RaviKrishnan

    What the hell. Sivagami does not need to die before seeing her sons wedding. pretty bad ending…. CHANGE THE FINISHING………… We dont want this ending

  7. madhumitha

    Dear Mr.Ganesan, Of course the story is well-written but you have rushed the story towards the ending.Now we dont knw whether chandrasekar,amirtham,sankaran knew that anandhi is still alive? And what is their expression in knowing that she is alive, nw she is inside the house, Didnt those people asked who she is? and more questions are left unanswered… You could have given answers for all and very important you should not have killed sivagami.. Very sad ending.. but still a very very nice story. As vvenkatesh told we all are waiting for your next story.Pls come back with an another nice story.

  8. N.Ganeshan

    அன்பு வாசகர்களுக்கு,

    இந்த நீண்ட தொடரைப் படித்து தங்கள் கருத்துகளை சொல்லி வந்த ஒவ்வொருவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். பாராட்டி ஊக்குவித்தவர்களுக்கும், குறைபாடுகளாய் நினைத்ததை சுட்டிக் காட்டியவர்களுக்கும் சரிசமமாக நான் கடமைப்பட்டுள்ளேன். ஏனென்றால் இரு வகையினரும் என் எழுத்துக்களை மேம்படுத்திக் கொள்ள எனக்கு ஒவ்வொரு விதத்தில் உதவுகிறீர்கள். அதிலும் விளக்கமாக கருத்துகள் தெரிவித்தவர்களுக்கு என் இரட்டிப்பு நன்றிகள்.

    இக்கதையில் விளக்காமல் போனதாக மதுமிதா அவர்கள் சொன்னவைகளை இப்போது விளக்குகிறேன். ஆனந்தி இறக்காமல் இருப்பது சந்திரசேகருக்கு ஆரம்பத்திலேயே தெரியும். சிவகாமி ஆர்த்தியை பாட்டி தாத்தா வளர்த்த ஆனந்தி சொன்ன நிபந்தனைக்கு சந்திரசேகரை ஆரம்பத்திலேயே சம்மதிக்க வைக்கிறாள். தவறு செய்த சந்திரசேகர் வேறு வழியில்லாமல் அதற்கு ஒத்துக் கொள்ள நேரிடுகிறது. அமிர்தம், சங்கரன் இருவரும் ஆனந்தி உயிரோடு இருப்பதை அறிந்திருக்கவில்லை. சங்கரன் ஜீரணிக்க முடியாத விஷயங்களை ஆரம்பத்திலிருந்தே அவரிடம் சொல்லாமல் சிவகாமி தவிர்த்து வந்தாள். சந்திரசேகர், அர்ஜுன் தவிர மற்றவர்கள் அறிவது கடைசியில் தான்.

    ஆனந்தியைப் பொறுத்த வரை அவள் அந்த வீட்டில் அவள் மீண்டும் அடியெடுத்து வைத்ததே சிவகாமியின் தகனத்திற்காகத் தான். அது முடிந்து சென்ற அவள் என்றும் அந்த வீட்டுக்கு வருவதில்லை. சந்திரசேகரின் மனைவி என்ற பதவியை அவன் துறந்தது துறந்ததாகவே இருக்கிறது. பவானியே சந்திரசேகரின் மனைவியாக கடைசி வரை இருக்கிறாள். ஆர்த்தி தன் தாயையும், சித்தியையும் கடைசி வரை ஒரு போலவே நேசிக்கிறாள்.

    இரண்டு வருடங்கள் இந்தக் கதையுடனும் என்னுடனும் இருந்த ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக மீண்டும் நன்றி.

    என்.கணேசன்

  9. Kumaraguruparan

    Dear Mr. Ganesan,
    This story is well-written and we all enjoyed that but sad ending. There is no need of killing Sivagami. Anyway may be something else will be in your thoughts about the ending. We will again wait for your another interesting story.

  10. t.v.indhumathi

    இறப்பு மட்டுமே சிவகாமியை என்றும்
    நம்மிடை வாழ வைக்கும்.அருமையான கதை

  11. madhumitha

    Thanks a lot for your answers Mr.Ganesan, As per the title of this story you have given different colours of people of course.. Sivagami,anandhi,arthi,akash, bavani,chandrasekaran, panjavarnam,moorthy,amirtham, parthiban,sankaran, neelakandan, parvathi and even arjun….all these people have very different colours. We cant forget anybody, They will just live in our memories. Please come back with an another interesting story,with more suspense like this. WELL DONE SIR

  12. suj

    மதிப்பிற்குரிய எழுத்தாளர் கணேசன் அவர்களுக்கு,

    மிக மிக அருமையான, சுவை குறையாத கதை அளித்தமைக்கு நன்றிகள் பல கோடி.

    ஆர்த்தியும்,ஆகாஷும் சேருவார்களா? அடுத்து சிவகாமி என்ன செய்ய போகிறார்கள் என வெள்ளி இரவில் இருந்தே யோசிக்க ஆரம்பித்து விடுவேன்.இனி இந்த பாத்திரங்கள் இல்லாமல் எப்படி இருக்க போகிறேனோ தெரியவில்லை 🙁

    சிவகாமி போல் தன்னலம் இல்லாத,அறிவாளியான, தைரியம் மிகுந்த ஒரு பெண் கதாப்பாத்திரதை ஏன் கொன்றீர்கள் 🙁 மூர்த்தி,பஞவர்ணம் மட்டும் கொன்று, அதை சிவகாமி காக்கும் அடுத்த ரகசியமாக வைத்து இருக்கலாமே!

    கதையை இறுதியில் மிக வேகமாக முடித்து விட்டீர்கள். ஒரு தாழ்மையான கருத்து – உங்கள் கதை உங்கள் பிள்ளை போல. அடுத்தவர் விமர்சிப்பதால், உங்கள் பிள்ளையின், தனித்தன்மையை விட்டு கொடுக்க வேண்டாம்”

    மிகவும் தேர்ந்த நடை உங்களது. இந்த கதையை நாவலாக வெளியிட வேண்டுகோள்! இன்னும் நிறைய நிறைய வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

  13. நிஷா

    மனிதரில் எத்தனை நிறங்கள்
    அருமையான நாவல் , நான் இந்தக்கதையை ஆரம்பத்திலிருந்தே படித்து வருகிறேன். எப்போது அடுத்த் பாகம் வரும் எனக்காத்திருந்து படிப்பேன்.முடிவு சற்்று கவலை தருவதாகவே இருந்தது.

    சிவகாமியைப்போன்ற நல்ல பெண் இறந்து விடுவதாக கதையை முடித்திருக்க வேண்டாம். நல்லவர்கள் எப்போதும், வாழவேண்டும். கதையில் மட்டுமாவது…..
    அருமையான கதையைக்கொடுத்தமைக்கு நன்றிகள்

    தங்களின் அடுத்த கதைக்காக காத்திருக்கிறேன்.

  14. Mini

    சுஜ் உங்க கருத்து அருமை! அழகு! கனெசன் சர் நானும் இந்த கருத்துகல வழிமொழிகிறன். மிக நன்றி!

  15. shanta

    ஒக் இட் நச் அ ரெஅல்ல்ய் அ பட் என்டிங் நித் ஒஉட் அன்ய் ச்டொர்ய் இன் இட் . Tகெ எச்சென்cஎ ஒf தெ ச்டொர்ய் லிஎச் இன் தெ என்டிங் புட் இட் ஷொஉல்ட் கவெ பேன் ச்டில்ல் மொரெ ரெஅடப்லெ. Hஒபெ தெ நெ௯ட் ச்டொர்ய் இச் மொரெ கோட் அன்ட் எஞொயப்லெ

  16. Rishi

    இதுதான் சகோதரி சாந்தா சொல்ல வருவது.

    ok it was a really about ending with out any story in it. The essence of the story lies in the ending put it should have peen still more readable. Hope the next story is more good and enjoyable

  17. Antony

    மனதை விட்டு அகலாத தொடர். சிவகாமியின் மரணத்தைப் போலவே முற்றும் என்ட்ர சொல்லும் நெஞ்சை அழுத்துகிறது. இனி இந்த கேரக்டர்களைப் பார்க்க முடியாதே என்ட்ரு. இதை சீரியலாக யாராவது எடுத்து சிவகாமி கேரக்டருக்கு ராதிகாவைப் போட்டால் நன்ட்ராக இருக்கும். கணேசனுக்கும் நிலாச்சாரலுக்கும் நன்ட்ரி. அடுத்த தொடர் எப்போது எழுதுவீர்கள் கணேசன் சார்?

  18. N.Ganeshan

    ஆர்த்தியும் ஆகாஷும் சேர்வது அவர்களுடைய திருமண நாள் நிச்சயித்த போதே உறுதியாகி விட்டதே ரவி அவர்களே. சிவகாமியை கடைசியில் இறக்க வைத்ததற்கு நான் வாசகர்களிடம் மன்னிப்பு கேட்கிறேன். தன் உயிரைக் காட்டிலும் தான் காப்பாற்றி அழைத்து வந்த அர்ஜுனின் உயிர் முக்கியம், அவன் இப்போது தான் வாழத் துவங்கி இருக்கிறான் என்ற சிந்தனை கடைசியில் அவளுக்கு ஏற்பட்டது என்பதைக் காட்ட நினைத்தேன். மற்றபடி மற்றவர்கள் மனதில் நிரந்தரமாக வாழ இவ்வுலகில் இறப்பது உண்மையில் இறப்பில்லையே. வாசகர்கள் காட்டிய பேராதரவுக்கு மீண்டும் மீண்டும் நன்றிகள்.

  19. rajam

    ஆர்தியின் பிரன்த நால் போட்டோ ஆல்பம் ஏன் அப்படி சிவகாமி எடுக்க வைத்தார்கல்?

  20. N.Ganeshan

    ஆர்த்தியின் பிறந்த நாள் விழாவை நேரில் வந்து காண முடியாத ஆனந்திக்காக அந்த வீடியோ எடுக்கப்பட்டது. மகள் ஒவ்வொருவரிடமும் எப்படி நடந்து கொள்கிறாள், எந்த மனநிலையில் இருக்கிறாள் என்று ஆனந்தி அறிய ஆசைப்பட்டதால் முழுக்க முழுக்க ஆர்த்தியையே மையமாக்கி விடியோ எடுத்து ஆனந்தியின் வேண்டுகோளுக்கிணங்கி சிவகாமி அனுப்பி வைக்கிறாள். ஆனந்தி கடைசியில் பழைய கதையைச் சொல்லும் போது இதையும் சொல்ல நினைத்திருந்தே. விடுபட்டு விட்டது. சுட்டிக் கட்டியதற்கு நன்றி ராஜம் அவர்களே.

  21. Surya

    வனக்கம். கதை மிகௌவ்ம் அருமை. மின்டும் மின்டும் படிக்க தொன்ருகிரது. கதை முடிந்துவிட்ட செஇதி மிகௌவ்ம் மனதை பாதித்து விட்டது. சிவகாமி உயிரொடு இருப்பதாக சொல்லி இருந்தால் மிகௌம் அருமையாக இருந்து இருக்கும். உன்கல் கதைகல் படிக்க ஆர்வமக இருகிரென். உன்கல் பயனஙல் சிரக்க வால்துகல். நன்ரி.

Comments are closed.