11. உழைப்பதன் நோக்கம் என்ன?
ஒவ்வொருவரும் ஒவ்வொரு நோக்கத்துடன் உழைக்கிறார்கள்.நோக்கமே இல்லாமல் உழைப்பது என பணத்துக்காக உழைப்பவர்கள் இருக்கிறார்கள். அதிகாரம் வேண்டி, சுவர்க்கத்துக்குப் போக வேண்டி உழைப்பவர்களும் இருக்கிறார்கள். இறந்தபின் தன் பெயரை இந்த உலகில் விட்டுச்செல்லவேண்டும் என்பதற்காக உழைப்பவர்களும் இருக்கிறார்கள்.
நாம் செய்ய வேண்டுவது, உழைப்புக்காகவே உழைக்க வேண்டும். உலகுக்கு வளமை சேர்க்கும் சிலர் எல்லா நாடுகளிலும் இருக்கிறார்கள். அவர்கள் பொருளையோ, புகழையோ, சுவர்க்கத்தையோ நாடுவதில்லை. உழைப்புக்காகவே உழைக்கிறார்கள். உழைத்தால் நல்லது நடக்கும் என்பதற்காகவே அவர்கள் உழைக்கிறார்கள்.
இன்னும் சிலர் இருக்கிறார்கள். அவர்களது நோக்கம் மேலும் உயர்ந்தது. நன்மை செய்ய வேண்டும் என்பதை அவர்கள் நம்புகிறார்கள். நன்மை செய்வதை விரும்புகிறார்கள். இந்த நோக்கத்துடன் அவர்கள் ஏழைகளுக்கு நல்லது செய்கிறார்கள். உலகத்துக்கு உபகாரமாக இருக்கிறார்கள்.
சுயநல நோக்கம் இன்றிப் பணியாற்றுவதால் ஏதாவது லாபம் இருக்கிறதா? இருக்கிறது. உண்மையில் மிக அதிக அளவிலான பலன் தருவது அதுவே. ஆனால், அதைக் கடைப்பிடிக்கத்தான் மக்களுக்குப் பொறுமை இல்லை. உடல் நலம் என்ற அளவில் கூட அது பயனளிப்பது. அன்பு, சத்தியம், தன்னலமின்மை என்பன எல்லாம் வெறும் அலங்காரச் சொற்கள் அல்ல. அவையே உன்னதமான லட்சியங்கள். மாபெரும் ஆற்றலின் வெளிப்பாடு அவற்றிலேயே அடங்கியிருக்கிறது. முதற்கண், ஒரு மனிதன் ஐந்து தினங்களுக்கு, ஏன்.. ஐந்து நிமிஷங்களுக்குக் கூட, எந்தவித சுயநல நோக்கமும் இல்லாமல்-எதிர்காலம், சுவர்க்கம், தண்டனையிலிருந்து தப்புதல் இவை போல-பணிபுரிவானாகில், மகத்தான ஆன்மிக ஆற்றல் பெற்றவராகும் சக்தி அவருக்கு வருகிறது. கடைபிடிப்பது கஷ்டம்தான். என்றாலும், அதன் மதிப்பையும், அது தரக்கூடிய பேராற்றலையும் நம் உள் மனது தெரிந்துதான் வைத்திருக்கிறது.
தீவிர சுயகட்டுப்பாடு என்பது மாபெரும் ஆற்றலின் வெளிப்பாடாகும். நமது புறச்செயல்கள் அத்தனையையும் விட அதிகமான ஆற்றலை வெளிப்படுத்துவது சுய கட்டுப்பாடுதான். நான்கு குதிரைகள் பூட்டிய ஒரு வண்டி, மலைச்சரிவில் கட்டுப்பாடின்றி வேகமாக வருகிறது; அல்லது, வண்டியோட்டி குதிரைகளை அடக்குகிறான். இவற்றில் எது அதிக சக்தியின் வெளிப்பாடு? தறிகெட்டு ஓடுவதா? அடக்கி நிறுத்துவதா?
ஒரு பீரங்கிக் குண்டு வான்வழியே நெடுந்தூரம் விரைந்து சென்று கீழே விழுகிறது. மற்றொன்று, வழியில் சுவரில் மோதி, அதன் விளைவாக அபரிமிதமான வெப்பத்தை உருவாக்குகிறது. தன்னல நோக்கத்துடன் வெளியாகும் ஒவ்வொரு சக்தியும் விரயமாகிறது. அது ஆற்றலை உருவாக்கி உங்களுக்கு திருப்பித் தராது. ஆனால், அதையே அடக்கி ஆண்டால், அது ஆற்றலை வளர்க்கும்.இத்தகைய சுய கட்டுப்பாடு, ஒரு மகத்தான மனத்திட்பத்தை (சங்கல்பம்) உருவாக்கும். இந்தப் பண்புதான் ஒரு இயேசுநாதரையோ ஒரு புத்தரையோ உருவாக்க வல்லது.
மூடர்களுக்கு இந்த ரகசியம் தெரிவதில்லை. மனிதகுலத்தையே ஆள வேண்டும் என்ற ஆசை அவர்களுக்கு இருக்கிறது. காரியத்தைச் செய்துவிட்டுக் காத்துக் கொண்டிருந்தால் ஒரு முட்டாள் கூட இந்த உலகை ஆள முடியும். சில ஆண்டுகள் அவன் காத்திருக்கட்டும். ஆள வேண்டும் என்ற ஆசையை அடக்கி வைத்துக் கொள்ளட்டும். அந்த எண்ணம் முற்றிலுமே அவன் மனத்திலிருந்து அகன்று விடும்போது, அவன் உலகில் ஆற்றல் நிறைந்த ஒருவனாவான். நம்மில் பெரும்பாலானோருக்கு, சில ஆண்டுகளைத் தாண்டி யோசிக்கத் தெரிவதில்லை; மிருகங்களுக்கு, சில அடிகளைக் கடந்து பார்க்கத் தெரியாதே, அது போல! நமது உலகம் ஒரு சின்ன வட்டம்-அவ்வளவுதான்! தொலை நோக்கு இல்லாததால்தான், நெறி தவறுகிறோம்; கெட்டவர்கள் ஆகிறோம்!
இப்படிப் பணி ஆற்றும்போது, நமது வேலை தாழ்ந்ததாயிற்றே என்றெல்லாம் யோசிக்க வேண்டாம். அறியாதவர்கள் சுயநல நோக்கத்துடன்பொருளுக்காகவும், புகழுக்காகவும் உழைத்துக்கொண்டு போகட்டும்! ஆனால் ஒன்று. ஒவ்வொருவரும் மேலும் மேலும் உயரிய நோக்கங்களைப் புரிந்து கொள்ள அவற்றை நோக்கி உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும்! "பணி புரியத்தான் உனக்கு உரிமை;பலனுக்கு அல்ல." பலன்களை அதன் போக்கில் விட்டு விடுங்கள்! அவற்றைப்பற்றி ஏன் கவலை? ஒருவருக்கு உதவி செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள். அவர் உங்களைப்பற்றி என்னகருத்து கொண்டிருக்கவேண்டும் என்றெல்லாம் நினைக்காதீர்கள். ஒரு பெரிய அல்லது நல்ல காரியம் செய்ய விரும்புகிறீர்கள். அதன் விளைவு எப்படி இருக்கும் என்று யோசித்துக் கஷ்டப்படாதீர்கள்!
12. இடைவிடாத உழைப்பா? அப்ப ஓய்வு?
கர்ம யோகத்தில் ஒரு சங்கடம் எழுகிறது. தீவிர உழைப்பு அவசியம். எப்பொழுதும் உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும்.ஒரு நிமிஷம் கூட உழைப்பின்றி இருக்கக் கூடாது. அப்படி என்றால் ஓய்வுக்கு என்ன வழி? இங்கே வாழ்க்கைப் போராட்டத்தின் ஒரு பக்கம்வேலை செய்து நாம் ஓயாமல் பம்பரம்போல் சுழன்று கொண்டிருக்கிறோம். மறுபக்கம்அமைதியான, அனைத்திலிருந்தும் விடுபட்ட துறவு. சுற்றிலும் அப்படி ஓர் அமைதி. ஓசை ஒளி எதுவும் இல்லாத அமைதி.விலங்குகள், மலர்கள்,மலைகள் மட்டுமே நிறைந்த இயற்கை. இந்த இரண்டு நிலைகளுமே முழுமை பெற்றவை அல்ல.
ஏகாந்தத்தில் பழக்கப்பட்ட ஒருவன் உலகின் ஆரவாரச் சுழலுக்குள் வர நேர்ந்தால் அதனால் நசுக்கப்படுவான். எது போல? கடலின் அடி ஆழங்களில் வாழும் மீன் மேற்பரப்புக்குக் கொண்டு வரப்பட்டால் நீரின் அழுத்தத்தால் அது வரை ஒன்றாக இருந்த அதன் உடல் உறுப்புகள், இப்பொழுது அந்த நீரின் அழுத்தம் இல்லாத காரணத்தால் உடல் உறுப்புகள் சிதறுண்டு போவதுபோல.அவசர உலகத்தின் சந்தடிக்கும் ஆரவாரத்துக்கும் பழக்கப்பட்ட ஒருவன் அமைதியான ஓர் இடத்துக்கு வந்தால் நிம்மதியாக இருக்க முடியுமா? கஷ்டப்படுவான். ஒருவேளை மனநிலை பிறழ்ந்து போகவும் கூடும். இலட்சிய மனிதன் என்பவன் யார் தெரியுமா?ஆழ்ந்த மௌனத்துக்கும் அமைதிக்கும் இடையே தீவிர செயல்பாடுகளைக் காண்பவன்; தீவிரப் பணிக்கு மத்தியில் பாலைவனத்தின் அமைதியையும் தனிமையையும் காண்பவன். சுய கட்டுப்பாட்டின் ரகசியத்தை அவன் கண்டு கொண்டிருக்கிறான். சுய கட்டுப்பாடு கொண்டிருக்கிறான்.போக்குவரத்து நெரிசல் மிக்க ஒரு பெரிய நகரத்தின் வீதிகளில் அவன் நடந்து சென்றாலும் எந்த ஓசையும் புக முடியாத குகைக்குள் இருப்பது போன்றஅமைதியில் இருக்கிறது அவன் மனம். இத்தனைக்கும், எல்லா நேரமும்அவன் தீவிர உழைப்பில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறான். இந்த நிலையை நீங்கள் அடைந்து விட்டீர்கள் என்றால், உழைப்பின் ரகசியத்தை உண்மையிலேயே நீங்கள் புரிந்து கொண்டு விட்டீர்கள் என்று அர்த்தம்.
(தொடரும்)
“