கணினி நச்சுநிரல் (computer virus)
கணினி நச்சுநிரல் என்பது சுய படியெடுத்துக்கொள்ளும் (self replicating) ஒரு கணினி நிரல் (program) அல்லது ஒரு குறிமுறைப் பகுப்பு (segment of code) ஆகும். இது தனது நகல்களையே பிற நிரல்களில் செருகித் தொற்றிக் (infect) கொள்ளும். இதன் விளைவாக மூல நிரல்கள் (original programs) எளிதாக இயங்க முடியாமல் கணினியின் செயல்பாடே முழுமையாகச் சிதைந்துவிடும்.
தொற்றுக்கு ஆளான நிரல் கணினியில் செயல்படும்போது, மறைந்திருக்கும் நச்சுநிரல் தூண்டப்பெற்று அது கூடுதல் நிரலாகச் சேர்க்கப்பெறும். இச்செயல்முறை உயிரினம் ஒன்றின் உடலில் இருக்கும் நச்சுக்கிருமி (virus) ஓர் உயிரணுவிலிருந்து (cell) மற்றோர் உயிரணுவுக்குப் பரவுவதற்கு ஒப்பானதாகும். உயிரியல் நச்சுக்கிருமியைப் போன்றே ஒரு கணினியின் நச்சுநிரல், செல்வதற்கான வழி கிடைக்குமானால், எத்தனை கணினிகளில் வேண்டுமானாலும் பரவக்கூடியதாகும்.
நச்சுநிரலின் தொற்றுக்கு உட்பட்ட குறுவட்டுகள் (diskette) அல்லது தொடர்பு இணைப்புகள் (communication links) வாயிலாக அவற்றுடன் தொடர்பு கொள்ளும் ஒரு கணினி அமைப்பும் நச்சுநிரலுக்கு உட்படும்; தொடர்பு இணைப்புகளில் குறும்பரப்புப் பிணையங்கள் (Local Area Network – LAN) அல்லது தொலைவுக் கணினி அமைப்புகளிலிருந்து பரப்பப்படும் நிரல்கள் ஆகியவை அடங்கும்.
கணினி நச்சுநிரலால் உண்டாகும் சிதைப்பு (destructive) நிகழ்வுகளில், பதியப்பட்ட தரவுகள் அழிந்து போதல், சாதன இயக்கிகள் (device drives) செயற்படாமல் போதல், தொடர்புகளில் இடையீடு (interference) உண்டாதல், புரவன் கணினியின் (host computer) பாதுகாப்புத் தடுப்பரண் (security cordon) சிதைந்து போதல் ஆகிய பலவும் அடங்கும். அசாதாரணச் செய்திகள் தோன்றுதல், உரை பின்னோக்கித் தோன்றுதல், ஆகியவையும் கூட நச்சுநிரலால் ஏற்படும் நிகழ்வுகளாகும். பாகிஸ்தானி பிரெய்ன் (Pakistani Brain), லெஹ்லிக் (Lehlig) , ஃபிரைடே தி 13 (Friday the 13th) , கிறிஸ்துமஸ் மற்றும் பிளடி (Christmas and Bloody) ஆகியவை சில முக்கியமான நச்சுநிரல்களாகும்.
குறும்பரப்புப் பிணையம் (Local Area Network – LAN)
ஒரு கட்டடத்தில் உள்ள பல கணினிகளை இம்முறையினால் ஒன்றிணைக்க இயலும். தொழிற்கூடம், அலுவலகக் கட்டடம், பல்கலைக்கழக வளாகம் போன்ற நெருங்கிய தொடர்புடைய இடங்களில் உள்ள பல கணினி முனையங்களை (computer terminals) ஒன்றிணைப்பதால் ஒவ்வொன்றும் பிறவற்றோடு தொடர்பு கொள்ளமுடிகிறது. எனவே LAN என்பது ஒரு பன்முகப் பயன்பாட்டு (multi-user) அமைப்பாகும். ஒன்றிணைக்கப்பட்ட பல்வேறு கணினிகளின் தரவுகளைப் பகிர்ந்து கொள்வதோடு மட்டுமன்றி, மிகப் பெரிய கணினி ஒன்றிலிருந்தும் LAN வாயிலாக தகவல்களைப் பகிர்ந்து கொள்ள முடியும். இவ்வாறு குறும்பரப்புத் தன்னியக்கச் செயல்முறைகள் (automated tasks) மற்றும் தரவு மேலாண்மை (data management) ஆகியவற்றை LAN வாயிலாக மேற்கொள்ள இயலும்.
"நுழைவாயில் (gateway)" வசதியைப் பயன்படுத்தி வெளிப்புறக் கணினிப் பிணையத்துடனும் கூட LANஐத் தொடர்புபடுத்த இயலும். தரவுகளின் வடிவங்கள் (formats) இரண்டு பிணையங்களுக்கு இடையே ஒத்திசைந்து செல்வதற்கு நுழைவாயில் பயன்படுகிறது.
எண்டோஸ்கோபி (Endoscopy)
உடலின் உள்ளே அமைந்திருக்கும் (தொண்டை, வயிறு, குடல் போன்ற) உறுப்புகளில் ஏற்பட்டுள்ள நோய்களை எண்டோஸ்கோப் எனப்படும் உள்நோக்குக் கருவியின் உதவியுடன் பாதிக்கப்பட்ட பகுதிகளில் எவ்விதத் தீங்கும் வலியும் ஏற்படாமல் கண்டறியும் நோயறி முறையே (diagnosis) எண்டோஸ்கோபி எனப்படுகிறது. எண்டோஸ்கோப் எனப்படும் கருவி, ஒளி ஆதாரமும் (light source) காட்சி அமைப்பும் பொருத்தப்பட்ட மெல்லியதொரு உலோகக் குழாய் ஆகும்.
நவீன எண்டோஸ்கோப்களில் நெகிழ்ச்சித் தன்மை (flexibility) கொண்ட ஒளியிழைக் கம்பிகள் (optical fibres) பயன்படுத்தப்படுகின்றன. ஒளியை பாதிக்கப்பட்ட உறுப்புக்கும், உறுப்பின் உருவத்தை, காண்பதற்கான வெளியமைப்புக்கும் இக்கம்பிகள் பரப்புகின்றன.
பாதிக்கப்பட்ட உறுப்புகளின் நேரடியான காட்சியை எண்டோஸ்கோப் அளிப்பதால், நோயாளிகள் சிக்கல் நிறைந்த ஆய்வுகள் எவற்றுக்கும் ஆளாக வேண்டியதில்லை. முன்னேறிய எண்டோஸ்கோப் கருவிகளில் அறுவைச் சிகிச்சைக்கான இணைப்புகளும் இருப்பதால் சிறிய அளவிலான அறுவை சிகிச்சைகள், உடல்திசு ஆய்வுகள் (biopsy) ஆகியவற்றை மேற்கொள்ள இயலும்.
“