தமிழர்களின் பெரும் புகழ் கூறும் சிலப்பதிகாரத்தைப் பதிப்பித்த பின்னர் புறநானூறு நூலைத் திருத்தமுறப் பதிப்பிக்கும் முயற்சியில் ஐயர் அவர்கள் ஈடுபட்டார். அதைத் திருத்தமுற முடித்த அவர் இப்படிப் பெருமிதப்பட்டார்:-
"புத்தகம் முடிந்து பார்க்கும்பொழுது, ‘நானா இவ்வளவும் செய்தேன்!’
என்று எனக்கே பிரமிப்பாக இருந்தது. இறைவன் திருவருளை வழுத்தினேன். புத்தகத்தின் அமைப்பைப் பார்த்து நண்பர்களெல்லாம் பாராட்டி எழுதினர்."
புறநானூற்றைப் பார்த்து மிகவும் மகிழ்ந்த பாண்டித்துரைத் தேவர் ஐயரை வெகுவாகப் பாராட்டி அடுத்த நூலுக்கென ஐந்நூறு ரூபாய் வழங்கினார்.
அடுத்து மணிமேகலை ஆராய்ச்சியில் அவர் தீவிரமாக இறங்கினார். புத்த சமயம் பற்றிய கருத்துக்களையும் புத்தரின் வாழ்க்கை வரலாற்றையும் நன்கு ஓர்ந்து பயின்றார். மணிமேகலையில் வரும் நல்ல கருத்துக்கள் அவரை வெகுவாகக் கவர்ந்தன.
அவரே கூறி வியக்கும் சில பகுதிகளைக் காண்போம்:-
"பௌத்த சமயத்தினர் கூறும் நான்கு சத்தியங்களாகிய துக்கம், துக்கோற்பத்தி, துக்க நிவாரணம், துக்க நிவாரண மார்க்கம் என்னும் நான்கையும்,
"பிறந்தோ ருறுவது பெருகிய துன்பம்;
பிறவா ருறுவது பெரும்பே ரின்பம்;
பற்றின் வருவது முன்னது; பின்ன
தற்றோ ருறுவ தறிக"
என்று மணிமேகலை சுருக்கமாகக் கூறுகிறது. புத்தபிரானைப் புகழும் பகுதிகள் பல. தயாமூல தர்மத்தைக் கடைப்பிடித்து வாழ்ந்த அவர் திறத்தை நன்கு வெளிப்படுத்தும் அடிகளை நான் படிக்கும்போதெல்லாம் என் உடல் சிலிர்க்கும்.
(புத்தரைத்) ‘தனக்கென வாழாப் பிறர்க்குரியாளன், மாரனை வெல்லும் வீரன், தீநெறிக் கடும்பகை கடிந்தோன், பிறர்க்கற முயலும் பெரியோன், துறக்கம் வேண்டாத் தொல்லோன்’ என்பன போன்றதொடர்களால் பாராட்டி இருக்கிறார் மணிமேகலை ஆசிரியர்.
அன்ன தானத்தைச் சிறப்பிக்கும்,
"மண்டிணி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம்
உண்டி கொடுத்தோ ருயிர்கொடுத் தோரே"
என்ற அடிகள் என் உள்ளத்தைக் கவர்ந்தன."
பல்வேறு அறிஞர்களை நாடித் தகுந்த விளக்கங்களை எல்லாம் பெற்று மணிமேகலை நூல் வெளியிடப்பட்டவுடன் தமிழ் உலகம் வியந்தது,
1897-ஆம் வருஷம் பிப்ரவரி மாதம் மகாமகம் நடந்தது. அப்போது கும்பகோணத்திற் கூடிய கூட்டம் கணக்கில் அடங்காது. திருவாவடுதுறை ஆதீனகர்த்தராக விளங்கிய அம்பலவாண தேசிகர் தம்முடைய பரிவாரங்களுடன் கும்பகோணம் பேட்டைத் தெருவிலுள்ள மடத்தில் விஜயம் செய்திருந்தார். பல தேசங்களிலிருந்தும் பிரபுக்களும் வித்துவான்களும் வந்து கூடினர்.
அப்போது தினந்தோறும் அம்பலவாண தேசிகருடைய முன்னிலையில் வித்துவான்களுடைய உபந்நியாசங்களும் சல்லாபங்களும் நடைபெற்றன. ஒருநாள் மிகச்சிறந்த வித்துவான்களைப் பூசித்து உத்தம சம்பாவனை செய்வதாக ஏற்பாடாகியிருந்தது. அம்பலவாண தேசிகர் ஆறு ஆசனங்களைப் போடச் சொல்லிப் பிரசித்தமான ஸம்ஸ்கிருத வித்துவான்கள் ஐவரை ஐந்து ஆசனங்களில் அமரச் செய்தார். அவர்கள் அமர்ந்த பிறகு என்னை நோக்கி "அந்த ஆசனத்தில் இருக்க வேண்டும்" என்று ஆறாவது ஆசனத்தைக் காட்டினார். எனக்குத் துணுக்கென்றது. வாழ்நாள் முழுவதும் சாஸ்திரப் பயிற்சியிலே ஈடுபட்டு எழுத்தெண்ணிப் படித்துத் தாம் கற்ற வித்தைக்கே ஒளியை உண்டாக்கிய அந்தப் பெரியவர்கள் எங்கே! நான் எங்கே? நான் யோசனை செய்து நிற்பதை அறிந்த தேசிகர், "என்ன யோசிக்கிறீர்கள்? அப்படியே இருக்க வேண்டும்!" என்றார். "இவர்களுக்குச் சமானமாக இருக்க எனக்குத் தகுதி இல்லையே!" என்றேன். தேசிகர், "தகுதி உண்டென்பதை இந்த உலகம் அறியும். இவர்களைப் போன்ற மகா வித்துவான்கள் இந்த நாட்டில் தேடிப்பார்த்தால் ஒருவேளை கிடைத்தாலும் கிடைப்பார்கள். தங்களைப் போல ஒருவர் அகப்படுவது அரிது" என்று அன்பொழுகக் கூறி வற்புறுத்தவே அந்த மகா மேதாவிகளுடைய வரிசையிலே பணிவோடு அமர்ந்தேன். இரட்டைச் சால்வையும் சம்மானமும் பெற்றேன். மணிமேகலையில் மேற்கொண்ட உழைப்பே அந்தப் பெருமைக்குக் காரணமென்று நான் எண்ணி இறைவன் திருவருளை வாழ்த்தினேன்."
இப்படி உத்தம சம்பாவனையைத் திருவாவடுதுறை ஆதீனகர்த்தரிடம் பெற்று மகிழ்ச்சி அடைந்தார் ஐயர் அவர்கள்.
வாழ்நாள் முழுவதும் தமிழ்ப் பணியே தன் பணி என்ற சீரிய கொள்கையை மேற்கொண்டு அதற்காகவே வாழ்ந்தார் அவர்.
அவரது வாழ்க்கையை ஊன்றிக் கவனித்தால் உழைப்புக்கும் தியாகத்திற்கும் தகுந்த மதிப்பை அவர் பெறவில்லை என்பதை நாம் நன்கு அறிய முடிகிறது.
மஹாகவி பாரதியாரே தம் கவிதையில் இதை எண்ணி வருந்தி அவருக்கு ஆறுதல் கூறி இருக்கிறார்,
மஹாமஹோபாத்தியாய என்ற விருதை பிரிட்டிஷ் அரசு வழங்கிக் கௌரவித்ததை ஒட்டிப் பிரஸிடென்ஸி காலேஜ் மாணவர்கள் ஒரு விழாவிற்கு ஏற்பாடு செய்து அதற்கு மஹாகவி பாரதியாரையும் அழைத்தனர். விழாவிற்கு வந்த பாரதியார், ஐயர் அவர்களைப் போற்றிப் பாடிய பாடலில்,
நிதியறியோம், இவ்வுலகத்தொரு கோடி
இன்பவகை நித்தம் துய்க்கும்
கதியறியோம் என்று மனம் வருந்தற்க
குடந்தை நகர்க் கலைஞர் கோவே!
பொதியமலைப் பிறந்த மொழி வாழ்வறியும்
காலமெலாம் புலவோர் வாயிற்
துதியறிவாய் அவர் நெஞ்சின் வாழ்த்தறிவாய்
இறப்பின்றித் துலங்குவாயே!
என்று அற்புதமாகக் குறிப்பிட்டு, அவர் நிதியின்றியும் உலகத்தின் கோடி இன்பம் துய்த்தலின்றியும் வாழ்ந்ததை வருத்தத்துடன் நினைவு கூர்கிறார். அதனால் என்ன, பொதியமலைப் பிறந்த தமிழ் உள்ளளவும் அதைப் பாடும் புலவர் உள்ளளவும் அவர் நா உன் துதி செய்யும் என்று அற்புதமாக வாழ்த்துகிறார்!
அன்னியரே மஹாமஹோபாத்தியாய பட்டம் தருகின்றனர் எனில் முன்னால் இருந்த "அப்பாண்டியர் நாள் இருந்திருப்பின் இவன் பெருமை மொழியலாமோ" என்று வியக்கிறார்.
தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதையரின் சரித்திரம் மகத்தானது. தமிழர்களுக்கு உத்வேகம் ஊட்டுவது. அனைவரும் படிக்க வேண்டியது! அன்னாரை நெஞ்சின் ஆழத்திலிருந்து துதி செய்து போற்றுவோம்; அவர் புகழ் பரப்புவோம்!
அற்புதமான "என் சரித்திரம்" நூலை முழுவதுமாக (122 அத்தியாயங்கள் சுமார் 772 பக்கங்கள் அடங்கியது) ஒரு முறையேனும் தமிழர் என நாமம் கொண்டோர் படிக்க வேண்டும்!
இணையத்தில் அதைக் கட்டணமின்றிப் படிக்கலாம்; இலவசமாகத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்; பிறருக்கும் அனுப்பலாம்.
அதற்கான இணையத்தளத் தொடர்பு இதோ:-
http://www.tamilvu.org/library/lA471/html/lA471ind.htm
அடுத்த வாரம் "பார்த்ததில் ரசித்தது"…
“