மலர்களின் மணம்
மலரின் இதழ்களில் (petals) சில இன்றியமையாத எண்ணெய்ப் பொருட்கள் இருக்கும் போது நறுமணம் உருவாகிறது. இந்த எண்ணெய்ப் பொருட்கள் தாவர வளர்ச்சியின் ஒரு பகுதியாக உற்பத்தி செய்யப்படுகின்றன. இவை மிகவும் சிக்கலானவை மற்றும் குறிப்பிட்ட சில நிலைமைகளில் இவை சிதைவுற்று (decomposed) பிசுபிசுப்பான எண்ணெயாக மாறுகின்றன. இந்த எண்ணெய் ஆவியாகும்போது வெளிவிடும் நறுமணத்தையே நாம் முகர்கிறோம்.
இந்த பிசுபிசுப்பான எண்ணெயிலுள்ள பல்வகை வேதிப்பொருட்களுக்கு ஏற்ப மலரின் மணம் அமைகிறது. வேதிப்பொருட்களின் பல்வகைச் சேர்க்கைகளுக்குத் தகுந்தவாறு பல்வேறு நறுமணங்களும் உற்பத்தி ஆகின்றன. இதே எண்ணெய்ப் பொருட்கள் தாவரத்தின் இலைகள், பட்டைகள், வேர்கள், பழங்கள் மற்றும் விதைகளிலும் கூட அமைந்துள்ளன. எடுத்துக்காட்டாக, ஆரஞ்சு மற்றும் எலுமிச்சைகளில் அவற்றின் பழங்களிலும், துளசியில் அதன் எல்லாப் பகுதிகளிலும், பாதாம் செடியில் அதன் கொட்டைகளிலும், லவங்கத் தாவரத்தில் (cinnamon) அதன் பட்டையிலும் இந்த எண்ணெய்ப் பொருட்கள் அமைந்து நறுமணம் வீசுகிறது.
ரோஜா இதழ்களை நீருடன் கலந்து வடிகட்டி ரோஜாத் தண்ணீரை (rose water) முதன்முதலில் அராபியர்கள் உருவாக்கினர். சுமார் 1200 ஆண்டுகட்கு முன்னர் கண்டறியப்பட்ட இம்முறையின் வாயிலாக மலர்களிலிருந்து இன்றும் நறுமண நீர் வடிகட்டி உருவாக்கப்படுகிறது.
மலர்கள் உருவாதல்
ஒரு பூவின் முக்கிய பகுதிகளாக உள்ளவை: வெளிப்புறத்தில் பசுமையான கோப்பை வடிவ இலை போன்ற புற இதழ்கள் (sepals) அமைந்துள்ளன. புற இதழ்களுக்கு உள்ளே மலர் இதழ்கள் (petals) இருக்கும். இந்த இதழ்களுக்கு உள்ளே விதைகளை உற்பத்தி செய்வதற்குத் தேவைப்படும் இனப் பெருக்க உறுப்புகள் (reproductive organs) அமைந்துள்ளன. மலரின் நடுப்பகுதியில் பூந்தாதுவை ஏற்று விதைகளை உண்டுபண்ணும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சூலகங்கள் (pistils) இருக்கின்றன.
சூலகங்களைச் சுற்றிலும் மகரந்தத்தை உண்டுபண்ணும் வளையம் போன்ற சிறிய மகரந்தக் குழல்கள் (stamens) உள்ளன. சூலகம் என்பது மலரின் பெண் உறுப்பாகும். இதன் அடிப்பகுதி கருவகம் (ovary) என அழைக்கப்படும் பரந்த பகுதியாகும். கருவகத்தின் உட்பகுதியில் சின்னஞ்சிறு வட்டமான கருவணுக்கள் (ovules) அமைந்திருக்கும்; இவையே பின்னர் விதைகளாக மாற்றம் அடைபவை. ஆனால் பூந்தாதுக்களால் (pollen) கருவுறுதல் நடைபெற்ற பின்னரே விதைகள் தோன்றும். இப்பூந்தாதுக்கள் மகரந்தக் குழல்கள் எனப்படும் மலரின் ஆண் உறுப்புகளால் உற்பத்தி செய்யப்படுபவை. பூந்தாதுக்கள் சூலகங்களின் மேற்பகுதி வழியாக அடிப்பகுதியிலுள்ள கருவணுக்களைச் சென்றடையும். கருமுட்டை உயிரணுவுடன் இது ஒன்றிணைந்து கருவுறுதல் செயல்பாடு நிறைவடைகிறது. பூந்தாதுக்கள் காற்று அல்லது பூச்சிகளாலும் கூடப் பரவி கருவுறுதல் நிகழலாம். பூந்தாதுக்கள் ஒரு விலங்கின் விந்தணுக்களுக்கு (sperms) இணையானவை.
“