வெற்றிக்கலை இரண்டாம் பாகம்: ( 5)

ஆதிசங்கரரின் அருளுரை: நல்லோரைச் சேருங்கள்!

அறம், பொருள், இன்பம், வீடு தரும் நல்லோர் இணக்கம்

வாழ்க்கைப் பயணத்தில் ஏராளமான மேடு பள்ளங்கள் உள்ளன. திடுக்கிடும் திருப்பங்களும் உண்டு. இரட்டையாகப் பிரியும் பாதைச் சந்திப்புகளோ ஏராளம். மேடு பள்ளங்களைச் சமாளித்து, திருப்பங்களை எதிர்கொண்டு, எந்தப் பக்கம் சரியானது என்பதை அறிந்து கொள்ளச் சரியான வழிகாட்டி வேண்டும். இதற்காகத்தான் ஆன்றோர்கள் ‘சேரிடம் அறிந்து சேர்’ என்று சொல்லி வைத்தார்கள்.

ஆதிசங்கரர் மனிதகுலம் முழுமைக்குமாக ‘பஜகோவிந்தம்’ நூலை அருளியுள்ளார். அதில் அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு பேறுகளையும் பெற எளிய வழி ஒன்றை அருளியுள்ளார்.

ஸத்சங்கத்வே நிஸ்ஸங்கத்வம்
நிஸ்ஸங்கத்வே நிர்மோகத்வம்
நிர்மோகத்வே நிஸ்சல தத்வம்
நிஸ்சல தத்வே ஜீவன் முக்தி

(பஜகோவிந்தம், பாடல் 9)

இதன் பொருள்:- நல்லோர் இணக்கம் (Satsanga) மூலம் உலக விஷயங்களில் பற்று அறுபடும் (Non-attachment). உலக விஷயங்களில் பற்று இல்லாமல் போகும்போது மோஹம் (Delusion) இருக்காது. மோஹம் இல்லாதபோது உறுதியான தத்துவம் (self-settledness) மேலிடும். உறுதியான தத்துவம் மேலிட்டால் முக்திப் பேறு (Liberation) கிடைக்கும்.

நூலின் ஒரு முனையைப் பிடித்தால் அடுத்த முனையை அடைவது போல, நல்லோரைச் சேர்ந்தால் அது வீடு என்னும் பெரும் பேற்றைத் தரும் என்பதை அழகுற ஆதி சங்கரர் இப்படி அருளியுள்ளார்.

கண்கள், காதுகள், வாய் செய்த புண்ணியம்
இதையே அறப்பளீசுர சதகம் இன்னும் விரிவாக விளக்குகிறது இப்படி:-

காணரிய பெரியோர்க டெரிசனம் லபிப்பதே
கண்ணிணைகள் செய் புண்ணியங்
கருணையா யவாசொன்மொழி கேட்டிட லபிப்பதி
ருகாதுசெய் திடு புண்ணியம்
பேணியவர் புகழையே துதிசெய லபித்திடுதல்
பேசில்வாய் செய் புண்ணியம்
பிழையாம லவர் தமைத் தொழுதிட லபிப்பதுகை
பெரிதுசெய் திடுபுண்ணியம்
வீணேறி செலாமலவர் பணிவிடை லபிப்பதுதான்
மேனிசெய் திடு புண்ணியம்
விடைவொடவர் சொற்படி நடந்திட லபிப்பதே
மிக்கபூ ருவ புண்ணியம்
ஆணவ மெலுங்கலைக ளைந்தறிவி னைத்தந்த
வண்ணலே யருமை மதவே
ளனுதினமு மனதினினை தருசதுர கிரிவள
ரறப்பளீ சுர தேவனே.

(பாடல் – 76)

வரலாற்று ஏடுகள் தரும் உண்மைகள்

வரலாற்றை எடுத்துப் பார்த்தால் அது நமக்குக் காட்டும் அற்புத சம்பவங்கள் ஏராளம்.
நாடிழந்து தவித்த சந்திரகுப்தன் சாணக்யரை நாடினான். அவனுக்கு சாம்ராஜ்யம் கிடைத்தது. உலக சரித்திரத்தில் இன்றளவும் ‘பொற்காலம்’ என்று சொல்லக்கூடிய அளவு அவனது ஆட்சி புகழ் பெற்று விட்டது.

சமர்த்த ராமதாஸரை நாடினார் சத்ரபதி சிவாஜி. ஒரு பெரும் ஹிந்து சாம்ராஜ்யத்தையே அவரால் உருவாக்க முடிந்தது.
ஏழ்மையான, படிப்பறிவில்லா ஹரிஹரரும், புக்கனும் ஸ்வாமி வித்யாரண்யரை நாடினர். பிரம்மாண்டமான சாம்ராஜ்யமாக விஜய நகரப் பேரரசு எழுந்தது.

அறிவியல்ரீதியான மனப்பான்மை கொண்டு அலைந்த நரேந்திரன் ராமகிருஷ்ண பரமஹம்ஸரை நாடினார். வீறு கொண்ட துறவியாக விவேகானந்தராக மாறி உலகெங்கும் ஹிந்து மதத்தின் மாண்பினைப் பரப்பினார். அவரை அயர்லாந்தைச் சேர்ந்த மார்கரட் நோபிள் என்னும் இளம் பெண்மணி நாடினார். சகோதரி நிவேதிதையாக உருவாகி பாரதம் வந்து, பெரும் ஆன்மிக சமூகப் பணியை ஆற்றினார். அவரை நாடி வந்தார் மஹாகவி சுப்ரமண்ய பாரதியார். அவரால் உத்வேகம் ஊட்டப்பட்டு மேலும் மேலும் சாகாத வரம் கொண்ட அரும் தமிழ்ப் பாக்கள் பல இயற்றினார்.

காஞ்சி பரமாசார்யாளை பால் பிரண்டன் என்னும் மேலை நாட்டு எழுத்தாளர் சந்தித்தார். அவரது அருளுரையின்படி மஹரிஷி ரமணரை நாடினார். அவர் ஆன்ம லாபம் பெற்றதோடன்றி, உலகப் புகழ் பெற்ற நூல்களை எழுதினார். ரமணர் புகழ் பரவியது. இந்து மதத் தத்துவம் பற்றியும் ஏராளமானோர் அறிய ஆரம்பித்தனர்.

மஹாத்மா காந்திஜியை நாடிய ஆயிரக்கணக்கானோர் தங்கள் பட்டம் பதவியைத் துறந்து சுதந்திர யக்ஞத்தில் ஆகுதியாக இறங்கினர். பாரதம் விடுதலை பெற்றது. வினோபா பாவே உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் நல்லறத்தை மக்களிடையே பரப்பலாயினர்.

நல்லோர் சேர்க்கை பற்றிய நாரதரின் கேள்வி

நல்லோரின் இணக்கம் பற்றிய நாரதரின் கதை ஒன்று உண்டு. நல்லோரைச் சேர்ந்தால் என்ன பயன் என்பதை நாராயணனிடம் நாரதர் கேட்க, அவர் ஒரு புழுவிடம் செல்லுமாறு அறிவுறுத்தினார். வியப்பு மேலிட, ‘ஒரு புழுவா நல்லோர் இணக்கம் பற்றிச் சொல்லப் போகிறது’ என்று நினைத்தவாறு அதை நாடினார் நாரதர். அந்தப் புழு நாரதரை நமஸ்கரித்தது. உடனே மரணமடைந்தது. திடுக்கிட்ட நாரதர் விஷ்ணுவிடம் வர, அவர், அப்போதுதான் பிறந்த ஒரு கிளிக் குஞ்சைப் பார்க்குமாறு சொன்னார். கிளிக்குஞ்சும் நாரதரை வரவேற்று நமஸ்கரித்தது. அத்தோடு அதுவும் உயிரை விட்டுவிட்டது. அதிர்ந்து போன நாரதர் விஷ்ணுவிடம் செல்ல, அவர், "பயப்படாதே! இந்த முறை பசு ஈன்ற கன்றைப் பார்" என்றார். பயந்து கொண்டே போன நாரதர் கன்றைப் பார்க்க, கன்றும் அவரை வணங்கி உயிரை விட்டது. நாரதர் விஷ்ணுவிடம் வந்தார். "எங்கும் மரணம் அல்லவா தாண்டவம் ஆடுகிறது! என் கேள்விக்கு விடை இல்லையே" என்று புலம்பினார். "கடைசி கடைசியாக, இப்போது மன்னனுக்குப் பிறந்த ராஜகுமாரனாகும் குழந்தையைப் பார்" என்றார் விஷ்ணு. குழந்தையைப் பார்த்தார் நாரதர். அது சாகவில்லை. மகிழ்ந்து ஆசீர்வதித்த நாரதர், "சத்சங்க மஹிமைதான் என்ன" என்று குழந்தையை வினவினார்.

நாரதரை நோக்கிப் புன்முறுவல் பூத்த குழந்தை, "மஹரிஷியே! என்னை அடையாளம் தெரியவில்லையா? புழுவும் நானே, கிளியும் நானே, பசுவும் நானே, அரசகுமாரனாக இப்போது இருப்பவனும் நானே. நான்தான் சத்சங்க மஹிமையின் விளக்கம். உங்களை ஒரு கணம் தரிசித்த நான் கிளியானேன். கிளியாய் இருந்து உங்களின் தரிசனம் பெற்ற காரணத்தால் கன்று ஆனேன். கன்றாய் இருந்து உங்களைப் பார்த்த புண்ணியத்தால் இதோ ராஜகுமாரனாகி விட்டேன். நல்லோரின் ஒரு கண தரிசனம் தரும் பேறு இது என்றால், அவர்களோடு இணங்கி இருந்தால் எதுதான் சாத்தியம் இல்லை?" என்று கேட்டது குழந்தை.

நாரதர் புளகாங்கிதம் அடைந்து "நாராயண!… நாராயண!" என்று ஜபித்து நாராயணனைச் சரண் அடைந்தார். புராணம் தரும் இந்த சத்சங்க விளக்கம் அனைவருக்கும் உத்வேகம் ஊட்டும் ஒன்று.

நம்மைப் பண்படுத்த வல்ல நல்லோரின் இணக்கம் நமக்கு வெற்றியைத் தரும். வெற்றியை விரும்புவோர் நல்லோரை நாட வேண்டும். அவரோடு இணங்கி இருந்து அவர் வழிகாட்டுதலைப் பெற வேண்டும்!

–வெல்வோம்…

About The Author