தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் (23)

கயிலாசநாதர் ஓவியம்

சித்தன்னவாசல் ஓவியத்துக்குச் சற்றுப் பிற்பட்ட காலத்தது காஞ்சிபுரத்துக் கயிலாசநாதர் கோயில் சுவர் ஓவியங்கள். கயிலாச நாதர் கோயிலுக்கு ‘இராஜசிம்மேசுவரம்’ என்பது பழைய பெயர். ஏனென்றால், இராஜசிம்மன் என்னும் இரண்டாம் நரசிம்மவர்மன் (கி.பி.680-700) இக்கோயிலைக் கட்டினான். கற்றளிகளைக் கட்டும் புதிய முறையை உண்டாக்கினவன் இவ்வரசனே.

மாமல்லபுரத்துக் கடற்கரைக் கோயிலைக் கட்டியவனும் இவனே. இவன் காஞ்சியில் கட்டிய இக்கயிலாசநாதர் கோயிலிலே சுவர் ஓவியங்களையும் எழுதுவித்தான்.

நெடுங்காலம் மறைந்திருந்த இக்கோயிற் சுவர் ஓவியங்களை ழூவோ தூப்ராய் அவர்கள் 1931இல் கண்டுபிடித்து, அவற்றை வெளிப்படுத்தினார்கள். ஆனால், இங்குள்ள ஓவியங்கள் பெரிதும் சிதைந்து அழிந்துவிட்டன. உருப்படியான ஓவியங்கள் இங்குக் காணப்படவில்லை. முகத்தின் ஒரு பகுதி ஓர் இடத்திலும், இன்னோர் ஓவியத்தின் உடல் மட்டுமே ஓர் இடத்திலும், இன்னோர் ஓவியத்தின் கை மட்டும் இன்னோர் இடத்திலும், மற்றோர் ஓவியத்தின் கண், காதுகள் மட்டும் இன்னோர் இடத்திலும் இப்படிச் சிற்ப உறுப்புகள் சிதைந்து சிதைந்து காணப்படுகின்றன. சில, மங்கலான வர்ணங்களுடன் காணப்படுகின்றன. சில, வர்ணங்கள் முழுவதும் அழிந்து கரிய கோடுகளையுடைய புனையா ஓவியங்களாகக்1 காணப்படுகின்றன.

சில ஆண்டுகளுக்கு முன்னர் இக்கோயில் ஓவியத்தைக் கண்டபோது அவலச் சுவையும் உவகைச் சுவையும் என் மனத்திலே தோன்றின. இவ்வளவு அழகான ஓவியங்கள் ஒன்றேனும் உருத்தெரியாமல் சின்னாபின்னப்பட்டுப் போயினவே என்பது பற்றித் துன்ப உணர்ச்சியும், சிதைந்து போன சித்திரங்களையேனும் காணப்பெற்றேனே என்னும் உவகையுணர்ச்சியும் தோன்றின. இயல்பாகவே சித்திரங்களில் ஆர்வம் உள்ள எனக்கு அழிந்துபோன இச்சித்திரங்களைக் கண்டபோது, எனது நெருங்கிய உற்றார் உறவினர் இறந்தபோது உண்டான உணர்ச்சியே உண்டாயிற்று.

இவற்றில் ஒரு காட்சி இன்னும் என் மனதைவிட்டு அகலவில்லை. அது என்னவென்றால், முழுவதும் அழிந்துபோன ஓர் ஓவியத்தின் ஒரு சிறு பகுதியே. இந்த ஓவியத்தில் நான் கண்டது ஒரு வாலிபனுடைய முகத்தின் ஒரு பாதிதான். நெற்றியின் ஒரு பாதி, ஒரு கண், மூக்கின் ஒரு பாதி, வாயின் ஒரு பாதி ஆகிய இவை மட்டும்தான் அதில் காணப்பட்டன. இதன் அளவு ஏறக்குறைய இரண்டு அங்குலம் இருக்கும். இதில் வர்ணங்கள் முழுவதும் அழிந்துபோய், கரிய நிறக்கோடுகள் மட்டுமே இவ்வோவியத்தின் கண், புருவம், மூக்கு, வாய், காதுகளைப் புனையா ஓவியமாகக் காட்டி நின்றன. இந்தச் சிறிய ஓவியத்தை, முகத்தின் ஒரு பாதியைத் தற்செயலாகக் கண்ட எனக்கு ஏதோ உணர்ச்சி தோன்றி, அங்கேயே நின்று விட்டேன். அந்தக் கண் என்னிடம் ஏதோ சொல்லுவது போலத் தோன்றிற்று. அதையே பார்த்துக் கொண்டு நெடுநேரம் நின்றேன். அந்த ஓவியப் பகுதி என் மனத்தில் பதிந்து இன்றும் மனக்கண்ணில் காணப்படுகிறது. அது அழியாமல் முழு ஓவியமாக இருந்தால் எவ்வளவு அழகாக இருக்கும்!

பனைமலை ஓவியம்

வடஆர்க்காடு மாவட்டம் விழுப்புரம் தாலுக்காவில் உள்ள பனைமலை என்னும் ஊரில் உள்ள கோயில், கயிலாசநாதர் கோயிலைக் கட்டிய இராஜசிம்ம பல்லவன் கட்டியதாகும். இக்கோயிலிலும் மிக அழகான, ஆனால், சிதைந்துபோன ஓவியம் உண்டு. இப்போது இவ்வோவியத்தில் காணப்படுவது மகுடம் அணிந்த ஒரு பெண்மணியின் உருவம். இப்பெண்மணியின் முடிக்கு மேலே அழகான குடை இருக்கிறது. தூணின் மேல் சாய்ந்து நிற்கும் இப்பெண்மணியின் உருவத்தைப் பார்வதி தேவியின் உருவம் என்று கூறுகின்றனர். ஆனால், இது ஓர் இராணியின் உருவம்போலக் காணப்படுகிறது. இடையிடையே அழிந்து போன இந்த ஓவியம், இந்நிலையிலும் வெகு அழகாக இருக்கிறது. நன்னிலையில் இது இன்னும் எவ்வளவு அழகாக இருந்திருக்கும்! இந்த ஓவியத்தின் பிரதியொன்று சென்னைப் பொருட்காட்சி சாலையில் ஓவியப் பகுதியில் இருக்கிறது.

வேறு சில ஓவியங்கள்

திருநெல்வேலி மாவட்டம் திருமலைபுரத்தில் உள்ள குகைக்கோயிலிலும் பழைய சுவர் ஓவியங்கள் காணப்படுகின்றன. இவற்றைக் கண்டுபிடித்தவரும் ழூவோ தூப்ராய் அவர்களே. இங்குள்ள ஓவியங்கள் காலப் பழைமையால் பெரிதும் ஒளி மழுங்கியிருப்பதோடு, அழிந்தும் சிதைந்தும் உள்ளன. மத்தளம் வாசிப்பவள் உருவம், ஆண் பெண் உருவங்கள், இலைக்கொடி, பூக்கொடி, வாத்து இவைகளின் ஓவியங்கள் சிதைந்தும் அழிந்தும் காணப்படுகின்றன. மலையடிப்பட்டி குகைக் கோயிலிலும் பழைய காலத்து ஓவியங்கள் காணப்படுகின்றன. இவையும் காலப்பழைமையால் மழுங்கி மறைந்து விட்டன.

தஞ்சைக் கோயில் ஓவியம்

கி.பி.11ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலே இராஜராஜ சோழனால் அமைக்கப்பட்டது தஞ்சாவூர்ப் பெரியகோயில் என வழங்குகிற இராஜராஜேச்சுரம். இக்கோயிலில் இராஜராஜன் காலத்திலேயே எழுதப்பட்ட சோழர் காலத்து ஓவியங்கள் உள்ளன. இந்த ஓவியங்கள் நெடுங்காலமாக மறைந்திருந்தன; இல்லை, மறைக்கப்பட்டிருந்தன.

சோழர் காலத்தில், கி.பி.11ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இந்தச் சித்திரத்தின் மேலே, கி.பி.17ஆம் நூற்றாண்டிலே தஞ்சையை அரசாண்ட நாயக்க மன்னர்கள் (இவர்கள், விஜயநகர அரசருக்குக் கீழடங்கி அரசாண்ட தெலுங்கர்கள்), வேறு புதிய ஓவியத்தை எழுதி மறைத்துவிட்டார்கள். புதிய ஓவியத்தின் கீழே இருந்த சோழர் காலத்துச் சித்திரம் நெடுங்காலம் மறைக்கப்பட்டிருந்தது. மறைக்கப்பட்டிருந்த சோழர் காலத்துச் சித்திரங்களைக் கண்டுபிடித்தவர், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்த காலஞ்சென்ற திரு.S.K.கோவிந்தசாமி அவர்கள்.

இந்தப் பழைய சித்திரம் அவ்வளவாகச் சிதைந்து அழிந்துவிடவில்லை. வர்ணம் மட்டும் சிறிது மங்கிவிட்டது. இந்த ஓவியம் சுந்தரமூர்த்தி நாயனாருடைய வரலாற்றை விளக்குகிறதாக உள்ளது. சுந்தரமூர்த்திகளை இறைவன் வயோதிகப் பிராமணன் வேடத்துடன் வந்து அடிமை முறியோலையைக் காட்டி ஆட்கொண்டதும், சுந்தரமூர்த்திகள் சேரமான் பெருமாள் நாயனாருடன் கயிலையங்கிரிக்குச் செல்வதும், கயிலையங்கிரியில் பரமசிவன் பார்வதியுடன் வீற்றிருக்கும் காட்சியும், இசைப் பாடல்களுடனும் இசைக்கருவிகளுடனும் சிலர் நடனம் ஆடும் காட்சியும் இந்த ஓவியத்திலே இடம் பெற்றிருக்கின்றன. அன்றியும், இராஜராஜ சோழன், கருவூர்த்தேவர் முதலியவர்களின் ஓவியங்களும் காணப்படுகின்றன.

–கலை வளரும்…
________________________________________
1. Outline Drawing.

About The Author