"பாட்டி, சாமி கூட நமக்கு கஷ்டங்கள் தருவாரா?"
"இன்றைய கதையை கேட்டு உன் கேள்விக்கு நீயே பதில் சொல், ராஜா."
சந்தரும் புவனாவும் பாட்டியின் மடியில் ஆளுக்கொரு பக்கமாக படுத்துக் கொள்ள கதை ஆரம்பமானது.
"சங்ககிரி முருகன் கோவில் மிகவும் பிரசித்தமானது. குன்றின் மேல் அமர்ந்து குறை தீர்க்கும் குமரனை வணங்க விஷச நாட்களில் கூட்டம் அலை மோதும். அதுவும் ஆடி பூரத்தின் போது உடலில் பல விதமான அலகுகள் குத்திக் கொண்டு காவடிகள் எடுத்து வருவார்கள். சிலர் குழுக்காளாக வரும்பொழுது அதில் ஒருவர் உடம்பு முழுதும் அலகு குத்திக் கொண்டு இருப்பார். அவரைச் சுற்றி மற்றவர்கள் வாத்தியக் கருவிகளுடன் இசை அமைத்து பாடுவார்கள். இதை பார்க்கவும் கேட்கவும் திரளாக ஜனங்கள் கூடி விடுவார்கள்.
கந்தசாமி முருக பக்தன். புத்தியை மறைக்கும் அளவுக்கு தீவிர பக்தன். ஒவ்வொரு ஆண்டும் விதவிதமாக அலகு குத்திக் கொண்டு காவடி எடுப்பான். அவனுக்கு நல்ல குரல் வளம். அவனே பாடல்கள் புனைந்து குன்றத்தின் அடியில் உள்ள மைதானத்தில் ஆடிப்பாடி பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைப்பான். அவன் பாடின பாட்டுக்கள் மற்றவர்களையும் பாடவைக்கும். அப்படி பாடுவதை கேட்ட ஒரு பாட்டை உங்களுக்காக பாடுகிறேன், கேளுங்கள்:
சேயைக் கொடுப்பது தாய் என்றால்
தாயைக் காப்பது நீ கந்தா
மண்ணில் பயிர்கள் வருவதற்கு
மழையைக் கொடுப்பது நீ கடம்பா (சேயைக்)
காரிருள் நீக்கும் கதிரவனை
கட்டுக்குள் வைக்கும் கார்த்திகேயா
சினம் கொண்டு தாக்கும் கடும்புயலை
வேல் கொண்டு விரட்டும் வேலவனே (சேயைக்)
இப்படியாக பாடல் நீண்டு கொண்டே போகும். ஆனால் ஒவ்வொரு பாட்டுக்கும் இறுதியில்:
உன்னை நம்பி வந்தோர்க்கு
உயிர்ப் பயம் ஏதும் இல்லையப்பா
மடமையில் மரணத்தை தேடினாலும்
உரிமையாய் வந்து காத்திடுவாய்,
என்றுதான் பாடி முடிப்பான்.
ஒரு சமயம் காவடி எடுத்து காணிக்கை செலுத்திய பின் கோவில் வாசலில் இருந்த வேப்ப மரத்தடியில் இளைப்பாறிக் கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்த ஒருவர் அவனை வாஞ்சையோடு பார்த்துப் பேசினார். அவன் பாடல்களைப் புகழ்ந்ததோடு குரல் வளத்தையும் மெச்சினார். ஆனால், கடைசியில் முடிக்கும் ஒரு வரியில் குறை உள்ளதாகச் சொன்னார்."
"அப்படி அவர் என்ன குறை சொன்னார். அதற்கு கந்தசாமி என்ன பதில் கொடுத்தார், பாட்டி."
கடவுளிடம் உள்ள நம்பிக்கை நல்ல செயல்களை செய்யும்போது ஏற்படும் இடையூறுகளை தடுக்கும் மனவலிமையைக் கொடுக்கும். ஆனால், முட்டாள்தனமாக தெரிந்தே தவறு செய்து விட்டு அவர் மேல் பழி போடக்கூடாது: அதனால், "மடமையில் மரணத்தை தேடினாலும் என்பதற்கு பதில் மடமையில் வினைகள் செய்தாலும்" என்று மாற்றும்படி அறிவுறுத்தினார்.
அதிதீவிர பக்தி கொண்ட கந்தசாமி அவர் சொன்னதை உதாசீனப் படுத்தி விட்டான். காவடி எடுத்த களைப்பால் தூங்கியும் போனான்.
ஊரில் வந்து நண்பர்களிடம் தன் பாட்டை குறை சொன்னவரை பற்றி இகழ்ச்சியாகப் பேசினான். இசையில் உள்ள ஆர்வத்தில் ஆழ்ந்து போன அவர்கள் இப்பொழுது பாட்டில் உள்ள குறையை உணர்ந்து கொண்டு அந்த வரியை மட்டும் மாற்றும்படிச் சொன்னார்கள்.
கந்தசாமிக்கு கோபம் வந்து அந்த வரியில் குற்றமே இல்லை என்று வாதிட்டான். உண்மையான பக்தி இல்லாதவர்களுக்கு ஏற்படும் சந்தேகத்தை தீர்க்க விரைவில் வரும் திருச்செந்தூர் சூரசம்ஹார விழாவில் செய்து காட்டுவதாக சவால் விட்டான். நண்பர்களும் அதை ஏற்றுக்கொண்டார்கள்.
அந்த நாளும் வந்தது. கட்டுக்கடங்காத கூட்டம் சூரசம்ஹாரத்தை காண திருச்செந்தூர் முருகன் கோவிலில் கூடியது. கடற்கரையில் கந்தசாமி நண்பர்களிடம் அவன் அருகில் இருந்தவர்களிடம் தன் திட்டத்தைச் சொன்னான். ‘கடலுக்குள் போகும் என்னை காப்பாற்று கந்தா’ என்று சொல்லிக் கொண்டே கடலுக்குள் போகப் போவதாகச் சொன்னதைக் கேட்டு அனைவரும் அதிர்ந்து போனார்கள். சவாலை வாபஸ் வாங்கிக் கொள்வதாகச் நண்பர்கள் கெஞ்சினார்கள். மற்றவர்கள் தடுத்தார்கள். ஆனால், ‘முருகா காப்பாத்து, வேலா காப்பாத்து, கடம்பா காப்பாத்து’ என்று சொல்லிக் கொண்டே கடலுக்குள் போனான்.
இடுப்பு வரை தண்ணீர் வந்த சமயம் கட்டுமரம் அவனருகில் வந்தது. அதில் இருந்த ஒருவர் அபாயகரமான இடம் வந்து விட்டதாகச் சொன்னதை கந்தசாமி காதில் வாங்கிக் கொள்ளவில்லை.
கட்டு மரமும் போய்விட தண்ணீர் கழுத்து வரை வந்து விட்டது. அப்போது ஒரு படகு அங்கு வர அதிலிருந்தவர் கையை நீட்டி பிடித்துக்கொள்ளச் சொன்னார். அவர் கையை தட்டி விட்டு விட்டு ‘சிங்கார வேலா, சிங்காரவேலா’ என்று சொல்லிக் கொண்டே முன்னேறினான். அவன் தலை முழுகும் பொழுது பெரிய அலை வந்து சுருட்டிக் கொண்டு உள்ளே போகவும் உயிரும் போனது.
பிரிந்த உயிர் மேலோகத்துக்குப் போகும் பொழுது அவனுக்கு முருகன் காட்சி அளித்தார். அவரிடம் தீவிர பக்தனின் உயிரை காப்பாற்றாதது பற்றி குறை சொன்னான்.
கோவில் முன் இளைபாறிக் கொண்டிருந்த போது பாட்டை மாற்றச் சொன்னதையும், இடுப்புவரை தண்ணீர் வரும் பொழுது கட்டுமரத்தில் வந்து எச்சரித்ததையும் அதற்குப் பின் படகில் வந்து அழைத்ததையும் விளக்கினார். ‘மூன்று முறை வந்து வழி காட்டியும் அதை பயன் படுத்த முடியாதவன் பக்தியை ஏற்றுக்கொள்ளமாட்டேன்’ என்று சொன்னார்.
‘ஐயோ நான் மடையன், முட்டாள், மூடன்’ என்று கத்திக் கொண்டே பகல் கனவு கண்டு கொண்டிருந்த கந்தசாமி விழிப்படைந்து இந்த உலகத்திற்கு வந்தான்.
கனவு கந்தசாமியின் அறியாமையைப் போக்கியது. ‘மடமையில் மரணத்தை தேடினாலும்’ என்ற வரியை உடனே திருத்தி ‘மடைமையில் வினைகள் செய்தாலும்’ என்று மாற்றி அமைத்தான்.
"ராஜா, இப்போ கடவுளைப் பற்றி என்ன சொல்கிறாய்?"
பதில் சொல்ல புவனா முந்திக் கொண்டாள்.
"யானைக்கு தும்பிக்கை இருப்பது போல நமக்கு கடவுள் மேல் நம்பிக்கை வைத்து காரியங்கள் செய்ய வேண்டுமே தவிர முட்டாள்தனமாக நடந்து கஷ்டப்படும் போது அவர்மேல் பழி போடக் கூடாது."
சந்தரும் தன் கேள்விக்கு நல்ல பதில் கிடைத்தததின் காரணமாக தலையை ஆட்டினான்.
சபாஷ், அருமையாக புரிந்து கொண்டீர்கள் என் கண்களே என்று இருவரையும் அணைத்து முத்தமாரி பொழிந்தாள்.
அன்பின் பரிமாற்றம் ஆனந்த தூக்கத்தை விரைவில் கொண்டு வர தூங்கிப்போனார்கள்.
னானும் முருகனுடய தீவிர பக்தை யாராவது முருகன் கதைய சொன்னகன்ன யென்னையெ மெஇ மரந்து கேட்பென் ஆனால் இந்தகதை யென் நம்பிக்கயெஇ மிகவும் அதிகப்படுதியது நானும் முருகனை பட்ரி பாடல்கல் சொந்தமாகவெ யெலுதி அத்ர்க்கு ராகமும் போட்டு முருகர் முன்னாடி பாடியிருக்கேன் இதொ அதிலிருந்து சில வரிகல் திருபரன்குன்ரம் அது திருபனிமன்ரம்
முருகன் அவனின் அது ஆனந்தமன்ரம்(திருபரன்)
கந்த வீரவா யென்னை நாலும் காக்கவா
கருனை வீரவா யெந்தன் குரைகல் தீர்க்கவா
வந்த வீரவா உன் வேதம் சொல்லவா
சரவனபவனா உன்னெல் சரன் புகுந்திடவா(திருபர)
“
I WILL VERY FEEL
மிக நன்றாக இருந்தது…..