சாபம் (2)

நான் ஓடிப்போய் அவளைக் கண்டபோது, ஊருக்கு வெளியே இருந்த சேரியில் போய் நின்றிருந்தாள். அது வீரன் இருந்த சேரி. சரியாக வீரன் வீட்டு வாசலில்தான் அவள் நின்றாள். அவள் சத்தம் கேட்டுச் சேரி முழுவதும் விழித்துக் கொண்டு அவள்முன் வந்து சேர்ந்திருந்தது. எந்தப் புண்ணியவானோ, புண்ணியவதியோ அவளுக்கு ஒரு சேலையையும் கட்டி விட்டிருந்தார்கள். அவள் ஆவேசமாகத் தண்ணீர் வாங்கிக் குடித்துக் கொண்டிருந்தாள். ஒரு பாட்டையா அவளுக்குத் திருநீறு பூசி மந்திரித்துக் கொண்டிருந்தார். நான் அருகே போனதும் எல்லோரும் விலகிக் கொண்டார்கள்.

"என்ன சாமி! காத்து அண்டியிருக்கிற புள்ளய சாக்கிரதையாப் பாத்துக்க வேண்டாமா?" என்று புத்தி சொல்லி அனுப்பி வைத்தார்கள். அங்கிருந்து வரும் வரை அமைதியாக இருந்த பைரவி, அவள் வீட்டு வாசலுக்கு வந்ததும் ஆடத் தொடங்கிவிட்டாள். வழக்கம்போல நொடியில் அம்மணமாகிவிட்டாள். இந்த முறை, நான் அவளை வேறு வழியின்றிப் பிடித்து, வீட்டுக்குள் கொண்டு சென்று, ஓர் அறைக்குள் அடைத்துவிட்டு வெளியே வந்தேன். அதற்குள் அவள் சத்தம் பெருத்து அறைக் கதவுகளையும் தாண்டி வெளியே கேட்டது. இப்படியே விட்டால் அது நல்லதல்ல என்று எல்லோரும் பேசி, ஆலங்குளத்துக்காரனுக்கு ஆள் அனுப்புவதென்று முடிவு செய்த சமயம், ஒவ்வொருவராகக் கிளம்பி அவரவர் வீடுகளுக்குப் போய்விட்டனர். எஞ்சியிருந்தது, சில கிழங்களும், பெண்களும், நானும்தான். கிழவர்களைப் போகச் சொல்லமுடியாது. வேறு வழியின்றி நானே போகும்படியானபோது, நான் கிழித்த ஐந்து ஜோக்கர்கள் முகமும் ஒருமுறை வந்துபோயின. பைரவியை அடைத்து வைத்த அறையின் ஜன்னல்கள் பட் என்று திறந்து கொண்டன. பைரவி தனது பெருத்த விழிகளை உருட்டி,
"டேய்! யாருடா? நீயா ஆலங்குளத்துக்காரனக் கூப்பிடப் போறது? போ! போனா திரும்பி வரமாட்டே. வழில நிறையப் பேய்க இருக்குது. அதுங்க உன்ன சும்மா விடாது" என்று சொல்லிப் பயமுறுத்தினாள்.

அங்கிருந்து வெளியே வந்த பின்பும் அவள் குரல் கேட்டபடி இருந்தது. அங்கிருந்த பெரியவர் ஒருவர் என்னை அருகே கூப்பிட்டார்."தம்பி! நீ இதுக்கெல்லாம் பயப்படாத! தைரியமாப் போ! போற வழியெல்லாம் ஒங் கொலதெய்வத்த நினைச்சுக்கோ! வடக்கால மாட்டுத்தாவணி வழியாப் போகாத! அங்க துர் தேவதைங்க நிறஞ்சிருக்கும். மெயின் ரோடு வழியாப் போ! வழில யாராவது ஒம் பேரச் சொல்லிக் கூப்பிடற மாதிரி இருக்கும். திரும்பிப் பாத்துறாத! சைக்கிளப் பிடிச்சு இழுக்கும் பேய்ங்க. நீ பயந்தையோ, போச்சு! நாக்குல தெய்வ நாமத்த வச்சிக்கிட்டு தைரியமாப் போய் வா" என்று விடைகொடுத்து அனுப்பினார்.
எவ்வளவு எளிதாக எல்லோரும் தைரியம் சொல்லி அனுப்புகிறார்கள்! பைரவியின் தூரத்துச் சொந்தக்காரன் என்கிற பெருமையினால் வந்த சிக்கல்கள் இவை என்று நினைக்கும்போது, எல்லாம் தலை எழுத்து என்று நொந்துகொண்டேன். இருள் விரிந்து கிடந்த சாலையில் அதைக் கிழித்துக்கொண்டு நானும் என் சைக்கிளும் பயணிக்கத் தொடங்கினோம். ஒவ்வொரு திருப்பத்திலும் சைக்கிளின் வேகம் குறைந்துகொண்டே வந்தது. மிதிக்கச் சிரமமாக இருந்தது. யாரோ அதைப் பிடித்து இழுப்பதுபோலத் தோன்றியது. யாரோ என் பேர் சொல்லி அழைப்பது போலவும், அது என் அம்மா அப்பாவின் குரல் போலவும் இருந்தது. நானோ உதடுகளில் குலதெய்வத்தின் பெயரைத் தவிர எதையும் சொல்லவேயில்லை. என் வாழ்நாளில் அந்த நாமத்தை அத்தனை பயபக்தியோடு இதுவரை நான் சொன்னதேயில்லை. சாலையின் இருபுறங்களிலும் கோரைப் பற்களைக் காட்டிக்கொண்டு பேய்கள் நின்று கூச்சலிடுவதுபோல இருந்தது. உடலின் கடைசிச் சொட்டுத் துணிவையும் திரட்டிச் சைக்கிளை மிதித்து ஆலங்குளத்தை அடைந்தேன். கோடங்கி, அவர் வீட்டு வாசலிலேயே தயாராய் இருந்தார்.

"தம்பி! எனக்குத் தெரியும் இப்போ நீ வருவேன்னு. ஜக்கம்மா ஒரு சாமத்துக்கு முன்னாடியே வந்து இது நடக்கப் போகுதுன்னு சொல்லிட்டா. நீ பயப்படாத! வா! எல்லாம் சரியாயிரும்" என்று சொல்லி சைக்கிள் கேரியரில் ஏறி அமர்ந்துகொண்டார். வரும் வழியில் பேய் பிடித்து இழுத்தபோது இருந்ததைவிட இப்பொழுது சைக்கிள் மிதிக்க இன்னும் கடினமாயிருந்தது.

*************

அந்த இரவிலேயே கோடங்கி பூசையைத் தொடங்கிவிட்டார். பைரவி இருந்த அறைக் கதவைத் திறந்து அவளை வெளியே அழைத்து வந்தோம். அவள் வந்ததும் கோடங்கி மேல் ஆவேசமாய்ப் பாய்ந்தாள்.

"டேய் ஆலங்குளத்துக்காரா! சொன்னாக் கேளு! இங்க இருந்து போயிரு" என்று மிரட்டினாள். அவன் ஆயிரம் பேய்களைப் பார்த்தவன். இதற்கெல்லாம் அஞ்சுவானா? கையிலிருந்த சாட்டையால் அவளை ஓர் அடி அடித்தான். அவள் சுருண்டு விழுந்தாள். அவள் மேனியில் அடி விழுந்த இடம் சிவப்பாக இரத்தம் கன்னிப்போய் விட்டது. அவள் மேலும் அடாவடி செய்வாள்போலத் தோன்றவில்லை. அவளை அமர வைத்து எலுமிச்சம் பழங்களைச் சுற்றி, சில மந்திரங்களைச் சொல்லி அவளை மிரட்டி, "யார் நீ? உம் பேரென்ன? எதுக்கு இவ மேல வந்திருக்க?" என்று கேட்டான்.

ஆரம்பத்தில் சொல்ல அடம்பிடித்தவள் மேலும் சில அடிகளுக்குப் பின் பேச ஆரம்பித்தாள்.

"நான்தான் வீரன்!"எல்லோருக்கும் ஒரு கணம் மூச்சு நின்று திரும்பியது.

"சரி, எதுக்கு இவ மேல வந்த?"

"நாங்க ரெண்டு பேரும் ஒருத்தர் மேல ஒருத்தர் ஆசையா இருந்தோம். பிரிச்சுட்டாங்க பாவிக!"

"சரி, அதுக்கு என்ன செய்ய? எல்லாம் தல எழுத்து. நீ செத்துட்டயே அப்படியே போக வேண்டியதுதான? ஏன் வாழ வேண்டிய பொண்ணக் கெடுக்குற?"

"என்ன விட்டுட்டு அவ வாழ மாட்டா. இது எனக்குச் சொந்தமான உடம்பு. அதுல நான்தான் இருப்பேன். வாழ்ந்திருந்தா தனித் தனியாத்தான் வாழ்ந்திருப்போம். இப்போ ஒரே உடம்புல வாழ்றோம். எங்களத் தொந்தரவு பண்ணாதீங்க! தயவு செஞ்சி விட்டுருங்க!"

"அதெப்படி விடமுடியும்? நீ நெனைக்கிற மாதிரியெல்லாம் விடமுடியாது. இப்போ விட்டுப் போயிரு. அடுத்த ஜென்மத்துல விதி இருந்தா சேர்ந்துக்கோங்க!"

இதற்குமேல் பேச்சுவார்த்தை செய்வதில் அர்த்தம் இல்லை என்று அவள் நினைத்துவிட்டாளோ என்னவோ! அங்கிருந்த அனைத்தையும் அள்ளி எறிந்தாள். பொறுமையிழந்த கோடங்கி சாட்டையால் மேலும் சில அடிகளைக் கொடுத்தார். மந்திரித்து சில தாயத்துகளை அவள் கையில் கட்டினார். அதன்பின் அவள் கொஞ்சம் நிதானம் பெற்றாள்.

"நாள மறுநாள் ராத்திரி சுடுகாட்டுல பூச போட்டு, அங்கன உள்ள மரத்துல பேய அறஞ்சிற வேண்டியதுதான். நா இப்பக் கட்டியிருக்கிற கட்டு ரெண்டு நாளைக்குத் தாங்கும். அதனால கவலைப்படாதீங்க! எல்லாம் அந்த மகமாயி பாத்துக்குவா" என்று சொல்லி அவர் புறப்பட்டபோது விடிந்து விட்டிருந்தது. திரும்பக் கொண்டுபோய் விடச் சொல்லுவார் என்று எதிர்பார்த்தேன். நல்லவேளை, அவர் கேட்கவில்லை. அசதி அதிகமாக, வீட்டிற்கு நடந்தேன். தூரத்தில் பெட்டிக்கடைக்காரன் கடையைத் திறந்துகொண்டிருப்பது தெரிந்தது.

***************

இரண்டு நாட்களும் ஒரு பிரச்சினையும் இல்லை. வீரன் அவளுக்குள்ளிருந்து வெளியே வரவேயில்லை. பைரவி கொஞ்சம் சாதுவாக நடந்துகொண்டாள். வீட்டில் இருந்தவர்களுக்கே அவள்மேல் நம்பிக்கை பிறக்க ஆரம்பித்திருந்தது. அதனால் ஆலங்குளத்தானை வரச் சொல்வதா வேண்டாமா என்று எண்ணிக் கொண்டிருந்தபோதே கோடங்கி அங்கு வந்து சேர்ந்தார். அழையாத விருந்தாளியைப் பார்ப்பதுபோல பைரவியின் அம்மா அவரைப் பார்த்தாள்.

"பொண்ணு இப்ப எப்படி இருக்கா?"

"நல்லபடியாயிருக்கா, எல்லாம் உங்க ஆசீர்வாதம்தான்."

"என்ன என் ஆசீர்வாதம்னுட்டீங்க? எல்லாம் அந்தக் கருமாரி கருணைனு சொல்லுங்க!"

"ஆமா, இப்போதான் நல்லாயிருக்காளே நீங்க சொன்ன பூசையெல்லாம் வேணுமா? இல்ல இன்னும் கொஞ்சம் மந்திரிச்சாப் போதுமா?"

பைரவியின் அம்மா லேசுப்பட்டவள் இல்லை என்று அம்மா சொல்வது சரிதான்.

"ஏன்? எதாவது செலவாகிடும்னு பாக்கீகளோ?"

"ஐயோ சாமி! என்ன அப்படிச் சொல்லிப்புட்டீங்க! என்ன செலவானா என்ன? பொம்பளப் புள்ள சுடுகாட்டுக்கெல்லாம் வரணுமான்னுதான் நெனச்சேன்."

"புரியுது தாயி! சாதுவாயிருந்தா விட்டுருவாங்கன்னு அந்தப் பேய் நினைக்குது. புடிச்சிருக்கிறவன் யாரு? வீரன். முரடன். நாம காணாத நேரத்தில புள்ளய ஏதாவது பண்ணிட்டான்னா என்ன பண்ணுவ? அப்புறம் ஐயோன்னா வருமா இல்ல அம்மான்னா வருமா, சொல்லு?"

"சரிதான் பூசாரி! தெரியாம சொல்லிப்புட்டேன்."

இரவில் பூசைக்கு ஏற்பாடுகள் ஆகிவிட்டிருந்தன. பைரவியோடு யாராவது ஆண் ஒருவர் கூட வந்தால் போதும் என்று சொன்னபோது எல்லோரும் என்னையே ஒருமனதாகத் தேர்ந்தெடுத்து அனுப்பினர். எத்தனை முறை கிழித்தாலும் எனக்கு வரும் ஜோக்கரைப்போல இவர்கள் எதற்கெடுத்தாலும் என்னையே கைகாட்டுவது எனக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை. என்றாலும் வேறு வழியில்லாமல் அவர்களோடு போனேன்.

நல்லவேளை, அந்த இரவில் எந்தப் பிணமும் எரியவில்லை. பைரவி மிகவும் பழக்கப்பட்ட பாதையில் நடப்பவளைப்போல நடந்து வந்து கொண்டிருந்தாள். தலைவிரித்துப் போட்டிருக்கும் வயதான சூனியக்காரக் கிழவியைப்போல இருந்தது அந்த மரம். அதன் கீழே அவளை அமர வைத்து, திருஷ்டிக் கழித்து, அவள் உச்சி முடியைப் பிடித்துக் கொத்தாக இழுத்தார். இழுத்த இழுப்பில் அவள் தலையைக் கோணிக் கொண்டாள். கொத்தாக அதைப் பிய்க்குமுன் கைநீட்டி அவரைத் தடுத்தாள்.

"இன்னும் என்ன வேணும் உனக்கு? ஆசயிருந்தா சொல்லு நிறவேத்துறன்!"

அவள் மேலும் கீழும் பார்த்து விட்டு, "ஒரு நிமிஷம் பேசணும் அவன் கூட" என்றாள்.

‘நல்லாத்தானே போய்க்கிட்டிருந்துச்சு’ என்று சொல்ல வேண்டும் போலிருந்தது. அடிவயிற்றைக் கலக்கத் தொடங்கிவிட்டது. அவள் குரல் கனத்து, கட்டைக்குரலில் பேசினாள்.

"டேய்! என் அப்பன் என்னையும் வீரனையும் பிரிச்சான். அவன மன்னிச்சுட்டேன். இதோ என்னையும் அவனையும் நிரந்தரமாப் பிரிக்கப் போறானே, இவனையும் மன்னிச்சுட்டேன். ஆனா நான் எவ்வளவு சொல்லியும் கேக்காம இவனக் கூப்பிட்டு வந்து எங்களப் பிரிக்கையே, நான் உனக்கு என்ன பாவம் பண்ணினேன்? நீ கூடத்தான் என்ன ஆசப்பட்ட. அது எனக்குத் தெரியாதுன்னு நினைச்சயா? உன் அதிர்ஷ்டம் ஊருக்கே தெரியும். உனக்கு நான் கிடைக்கலங்கிறதுக்காக என் சந்தோசத்தக் கெடுக்கறியே, இது என்ன நியாயம்? இப்போ சொல்றேன் கேட்டுக்கோ! எப்படி என் வீரன் என்னத் தொடாம செத்தாரோ, அதேமாதிரி நீ சாகிற வரைக்கும் எந்தப் பொண்ணையும் தொடவே முடியாது. இது என் சாபம்! யோவ் ஆலங்குளத்துக்காரரே! இப்ப அடி என் மசுர அந்த மரத்துல” என்று சொல்லிச் சிலுப்பிக்கொண்டாள்.

"சரி சரி! வாய மூடு” என்று அவளை அதட்டிய கோடங்கி, அவளுடைய தலைமுடியை மரத்தில் அடித்தார். அவர் என்னைத் தொட்டு உசுப்பியபோது நான் வியர்த்திருந்தேன். பேசியது வீரனா இல்லை பைரவியா என்று விளங்கிக்கொள்ளவே என்னால் முடியவில்லை.

"என்ன தம்பி பயந்துட்டீகளா? அது கெடக்குது முட்டாமூதி! அத மரத்துல அறயப்போறோம்கிற பயத்துல உங்கள மிரட்டியிருக்கு. அதல்லாம் மனசுல வச்சிக்கிறாதீக. இப்போ பாருங்க இந்தப் பொண்ண, எவ்வளவு தெளிவாயிருக்கு. இனி இதுக்கு எல்லாம் நல்ல காலம்தான்" என்று சொல்லி எங்கள் இருவரையும் அழைத்து வந்து வீட்டில் விட்டுவிட்டு, தட்சணையாக பைரவியின் அம்மாவிடம் ஒரு கறவைப் பசுவைக் கேட்டு வாங்கிப் போனார் கோடங்கி. அந்த வாரம் முழுக்க ஒவ்வொருவராக வந்து என்னிடம் பேய் ஓட்டிய கதையைக் கேட்டு, "பரவாயில்லலே! நீ ஒண்ணுக்குமாகாதவன்னு நினைச்சோம். ஆனா நீ பலே ஆளாயிருக்கயே"என்று பாராட்டிவிட்டுப் போனார்கள். அதன் பின்பு, பெட்டிக்கடைக்காரன் என்னை அழைத்துக் கிண்டல் செய்வதை நிறுத்திக்கொண்டான். அடுத்த மாதத்தில் நல்லநாள் பார்த்து பைரவியின் மாமியார் வந்து அவளை அழைத்துப் போனாள்.

அப்பாவுக்கு வேலை வேறு ஊருக்கு மாற்றலாக, நாங்கள் ஊரைக் காலி பண்ணிவிட்டுப் பட்டணம் வந்து சேர்ந்தோம். அதற்குப் பின் ஊர்ப்பக்கம் நான் போகவேயில்லை. அதனால் பைரவியைப் பார்க்கவும் இல்லை. இப்போதும் ஒரு நெருங்கிய சொந்தக்காரர் கல்யாணத்தில்தான் பைரவியைப் பார்க்க முடிந்தது. அவள் பையன் அவளை மாதிரியே இருந்தான். அம்மா, அவளோடு நிறையப் பேசினாள். நான் பேசவேயில்லை. என்ன பேச என்று சும்மா இருந்துவிட்டேன். ஆனால், அவள் கண்கள் அடிக்கடி வந்து என்னைத் தொட்டுக் கொண்டிருப்பதை உணர முடிந்தது. அவள் பார்வை அவளை உடைகளின்றிப் பார்த்த அன்று கண்டதைப் போன்று இன்றும் இருப்பதாகப் பட்டது. சீக்கிரம் கிளம்பினால் தேவலை என்று நினைத்துக் கொண்டிருந்தபோது, பைரவியின் கணவன் அவளை அவசரப்படுத்திக் கிளப்பிக் கூட்டிப்போனான். புறப்படுமுன் அவள் என்னருகே வந்தாள். மரியாதை நிமித்தம் சொல்லிக்கொள்ள வருகிறாள் என்று நினைத்தேன். நெருங்கி வந்தவள், என்னைப் பார்த்து மெல்லச் சிரித்தாள்.

"கல்யாணமாயிருச்சா?"

"இல்லை."

மீண்டும் சிரித்த அவள் "அவ்வளவு சீக்கிரம் ஆயிருமா என்ன?" என்று சொல்லித் திரும்பிப் பார்க்காது போனாள். அவள் பேசிய வார்த்தைகள் எனக்குள்ளாகப் போய் எதிரொலித்து எதிரொலித்துத் திரும்பி வர, கால்கள் நடுக்கமுற்று, அருகிலிருந்த நாற்காலியைப் பிடித்துக் கொண்டு அமர்ந்தேன். அதற்குள் பைரவி அங்கிருந்து போயிருந்தாள்.

(நிறைந்தது)

About The Author