1996 – எரியும் வினாக்கள் (1)

திருப்பம் வருமா?
தீப்பந்தங்களாய் எரியும் வினாக்களுக்கு
விடைகள் வருமா?

கண்களில்
கொப்பளிக்கும் கனாக்களுக்குக்
காரியங்கள் வந்து
மாலை சூட்டுமா?

இருட்டுக்கு
வெற்றிலை மடித்துக் கொடுக்கும்
இந்த ஜன நாயகம்,
பார்வையைத் திருப்பிப்
பார்க்குமா மக்களை?

முதலாளியத்துக்கு
முதுகு சொரியும் இந்த அரசு,
ஏக போகங்களுக்கு
இரத்தினக் கம்பளம் விரிக்கும் இந்த அரசு
சாவின் மார்பைச்
சப்பிக் கொண்டிருக்கும் மனிதனுக்குச்
சவப் பெட்டியேனும்
சலுகை விலையில் தருமா?

அசோகத்தூண்
சிங்கத்திற்கு
ஆத்திரம் எப்போது வரும்?
அக்கிரமங்களின் குரல்வளைகளை
எப்போது கடித்துக் குதறும்?

முடம்பட்ட
தேசிய மயிலுக்கு எப்போது
முடியும் மருத்துவம்?
களங்கம் நீங்கிய
அரசியல் அரங்கில்
எப்போது கலாபம் விரிக்கும்?

நடை மேடைகளில்
தெருவோரங்களில் நாறும்
வாழ்க்கையின்
கைகளில்
ஓட்டை விழுந்த ஈயக்கிண்ணங்கள்
ஒழுகும் ஜனகனமனக்கள்!

குருட்டுக் கோபுரச் சின்ன
அரசுக் கோப்புகளில்
ஓடும்
திருட்டுத் தேர்களால்
தெறிக்கும் சேறு!

மதவாதிகள்
இரத யாத்திரைகளுக்கு இன்னுமா
இரத்த ஆரத்தி?
கரசேவைகளால் புதுப்புதுக்
கல்லறைகளா?

About The Author