இவ்வளவு நாள் கழித்து பைரவியை ஒரு திருமண வீட்டில் சந்திப்பேன் என்று நினைக்கவேயில்லை. கணவன், மகன் ஆகியோருடன் அங்கு வந்திருந்தாள். எனக்கு முதலில் அவளை அடையாளம் தெரியவில்லை. அந்த அளவிற்கு அவள் உடல் மாற்றம் கொண்டிருந்தது. அதிக எடை போட்டிருந்தாள். மலர் போன்ற அவள் முகம் இப்போது வெறும் சதைத் திரட்சியாக மாறிவிட்டிருந்தது. அவள் கண்களைச் சுற்றிச் சுருக்கங்களும், வெளிர்ப்பும் பார்க்க விகாரமாயிருந்தன. அவள் உடைகூட நல்லதாக இல்லை. அவள் கணவன், அவளருகில் நிற்பதைத் தவிர்த்து அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருப்பதாகப் பட்டது. அவள் மகனோ கையில் செல்போனை வைத்து விளையாடிக் கொண்டிருந்தான். பைரவி எங்கோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் என்னை அடையாளம் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. நான் அவளைப் பார்ப்பதைத் தவிர்த்தேன். என் நினைவுகளில் பதிந்திருக்கும் பைரவி இவள் இல்லை எனப் பட்டது.
என் பருவத்தில் பைரவியைப்போல அழகான பெண்ணை நான் பார்த்ததேயில்லை. சூரியன் முளைக்கப்போகும் வானத்தில் பாவியிருக்கும் நிறத்தைப்போல அவள் மேனியின் நிறம் குளுமையும் பளபளப்பும் மிகுந்து கொண்டே போன நாட்கள் அவை. அவளைப் பார்த்து ஆசை கொள்ளாத ஆண்மையே இருக்கமுடியாது என்பதுபோல அவள் அழகு பெருகிக்கொண்டிருந்த காலம். எதிர்வீட்டில் இருப்பவன் என்பதனாலும், தூரத்து உறவினன் என்பதாலும் அவள் அழகை அருகில் இருந்து ரசித்துக் கொண்டிருக்க எனக்கு எந்தத் தடையும் இருந்ததில்லை. எங்கள் ஊரின் பெருமை என அவள் உலா வந்துகொண்டிருந்த காலத்தில் அந்தப் பெருமையை ஆண்டு அனுபவிக்கப்போகும் அதிர்ஷ்டசாலி யார் எனும் புலம்பல் ஊரின் ஆண், பெண் ஒவ்வொருவரின் மனசுக்குள் இருந்து ஒலித்தபடியே இருந்தது.
எனது அதிர்ஷ்டம் ஊரறிந்த ரகசியம். ஐந்து பைசா லக்கி பிரைசில் எப்போதும் எனக்குக் கிடைப்பது ஜோக்கர்தான். என்றாலும், மனம் நைலான் கயிற்றால் கட்டப்பட்டிருக்கும் அலுமினியப் பிளேடை ஆசையோடுதான் பார்த்துக் கொண்டிருக்கும். இப்படிப்பட்ட அதிர்ஷ்டக்கட்டையான நான் தங்கத்தட்டு போன்ற பைரவியின் மேல் ஆசைப்படுவது கொஞ்சம் அதிகம்தான். ஆனாலும் ஆசை யாரை விட்டது?
யானை யார் கழுத்தில் மாலையிடும் என்று யாருக்குத் தெரியும்? அப்படித்தான் அழகு மதம் பிடித்த பைரவி யானை ஊரெங்கும் ஓடி, ஊருக்கு வெளியே சேரியில் போய் நின்று மூச்சு வாங்கி, கையில் இருந்த மாலையை அங்கு மரம் வெட்டிக் கொண்டிருந்த வீரன் கழுத்தில் போட்டுவிட்டது. அன்றிலிருந்து வீரன் அவள் அழகை ஆட்கொண்ட அரசனாக ஆகிப்போனான்.
அலர் பெருகி, அவள் தமர் செய்தியை அறிந்துகொண்டபோது பைரவி ரொம்பவும் உறுதியாக இருந்தாள். அவனும்தான். இற்செரிப்பு நிகழ்ந்தது. எனக்கோ கிழிக்கும் ஒவ்வொரு கட்டமும் ஜோக்கரே வர, வருத்தமே மிஞ்சியது. அடுத்த முகூர்த்தத்திலேயே பைரவிக்கும் அவள் மாமன் மகனுக்கும் திருமணம் காதும் காதும் வைத்தாற்போல நடந்து முடிந்தது. இவற்றையெல்லாம் கேள்விப்பட்ட வீரன், ஊருணியில் வீழ்ந்து உயிரை விட்டான். வீரன் இறந்த செய்தி பைரவியை அடையாதபடிக்கு எல்லோரும் பார்த்துக் கொண்டனர். முதலிரவுகூட முடியாத நிலையில் பைரவியை இரவோடு இரவாக அவள் ஊருக்கு அனுப்பி வைத்தனர். மார்பில் தாலியையும் மனசில் வீரனையும் சுமந்துகொண்டு பைரவி ஊரைவிட்டுப் போய்க்கொண்டிருந்தாள். ஊருக்கு வெளியே மசானத்தில் எரிந்துகொண்டிருக்கும் பிணம் வீரன்தான் என பைரவி அறிந்திருக்கவில்லை.
********
அன்றைக்குத் தெருமுனைப் பெட்டிக்கடைக்காரர் கூப்பிட்டு வெறுப்பேற்றினார்."தம்பி, இதோ பாருங்க! டவுன்ல இருந்து புது லக்கி பிரைஸ் வாங்கியாந்துருக்கேன். மொத பரிசு கடியாரம். வந்து ஒரு போணி பண்றது!"
இந்த வயசு வரை ஒருநாளும் ஐந்து பைசாகூட ஜெயித்ததேயில்லை எனும் என் அதிர்ஷ்டத்தைக் கிண்டல் செய்வதுதான் அவன் நோக்கம். அவனை முறைத்துவிட்டு வீட்டுக்கு வந்தபோது பைரவி வீட்டு வாசலில் கார் நின்றது. பைரவி ஊருக்கு வந்திருப்பதாக அம்மா சொன்னாள். சரி, மாப்பிள்ளையோடு மறுவீடு வந்திருப்பாள்போல என்று எண்ணிக் கொண்டேன். ஆனால், அம்மாவுக்கு வீட்டில் இருப்புக் கொள்ளவில்லை. இரண்டு முறை பைரவி வீட்டுக் கதவைப் போய்த் தட்டிவிட்டு வந்தாள். யாரும் வந்து திறக்கவில்லை. நான் "என்னம்மா என்னம்மா"ன்னு கேட்க அவள் பதிலே சொல்லவில்லை. நானும் கேட்பதை விட்டுவிட்டு, சாப்பிட்டுப் படுத்தேன். கண்களுக்குள் ஒருமுறை லக்கி பிரைஸில் தொங்கிய கடியாரம் வந்துபோனது. அப்படியே படுத்திருந்து எழுந்தபோது மாலை வந்திருந்தது. அம்மா அதற்குள் எப்படியோ பைரவி வீடு போய் விசாரித்து வந்திருந்தாள்.
நான் கேட்காமலேயே என் கைகளைப் பிடித்து வீட்டினுள் அழைத்துப்போய் எல்லாவற்றையும் சொல்லி முடித்தாள்.
"கார்ல வந்ததுலேர்ந்தே பாத்தேன். அவ மூஞ்சே சரியில்லை. அவள நடடின்னு அவ மாமியா சொன்னா, ஆனா அவ நவரவேயில்ல. போதாக்குறைக்கு அவ முழிச்ச முழியிருக்கே? அது பாக்கவே நல்லால்ல. அவ மாமியா அவள ஏதோ மரச்சாமான இழுக்காப்ல இழுத்துக்கிட்டுதான் வீட்டுக்குள்ள போனா. உள்ளுக்குள்ள போனதுமே கதவு மூடிக்கிச்சு. அதான் எனக்கு ஒண்ணும் ஓடல. இப்போ போய் விசாரிச்சா அவளுக்குப் பைத்தியம் புடிச்சிருக்காம். அவ மாமியாக்காரி இவளுக்குப் பேய்தாம் பிடிச்சிருக்குங்காளாம். என்னதான் எல்லாம் ஒண்ணுக்குள்ள ஒண்ணுன்னாலும் பைத்தியத்த வச்சிக் குடுத்தனம் பண்ண முடியுமா என்ன? அவ மாமியா அவ சரியானப்புறம் வந்தா போதுன்னுட்டாளாம். சாயங்காலம் ஆலங்குளத்து கோடங்கிக்குச் சொல்லிவிட்டுருக்கு. அவன் வந்துதான் இது பைத்தியமா இல்ல பேய் பிசாசான்னு சொல்லணும். எல்லாம் தல எழுத்து. அவ அம்மாக்காரி பேசின பேச்சுக்கு இதெல்லாம் சர்வ சாதாரணம். ஏன்னா………"
அம்மா நீட்டி முழக்கிக் கொண்டே போனாள். எனக்கு என்ன சொல்வதென்றோ அல்லது எப்படி உள்வாங்கிக் கொள்வதென்றோ புரியாமல் இருந்தது. மெல்லக் காலார நடந்தேன். பெட்டிக்கடை வந்துவிட்டது.
"தம்பி! என்ன ட்ரை பண்றீகளா?" என்று பிரைஸ் அட்டையைக் காட்டினான்.
சட்டைப்பையைத் துழாவியபோது ஒரு இருபத்தைந்து பைசா கிடைத்தது. அவனிடம் கொடுத்துவிட்டு ஐந்து கட்டங்களைப் பிய்த்து எடுத்தேன். வழக்கம்போல ஐந்தும் ஜோக்கர்.
"விடுங்க தம்பி! ஒரு நா இல்லனா ஒரு நா விழாமலா போயிரும்?"
************
ஆலங்குளத்துக்காரனைக் கண்டதும் பைரவி அலறி ஓடியிருக்கிறாள். ஓர் அறைக்குள் புகுந்து தாளிட்டுக் கொண்டாள். எவ்வளவு தட்டியும் திறக்கவேயில்லை. ஆலங்குளத்துக்காரனோ நடு வீட்டிலேயே உட்கார்ந்து விட்டான். அவன் அடிக்கும் கோடங்கிச் சத்தம் நேரம் ஆக ஆக அதிகமாகிக் கொண்டே போனது. ஆனால், பைரவி கதவைத் திறக்கவேயில்லை. பைரவியின் அப்பா கதவை உடைக்கப் போனார். ஆனால், கோடங்கி தடுத்துவிட்டார்.
"இது நிச்சயம் பேய் வேலதான். இப்போ அத ஒண்ணும் பண்ண முடியாது. நாள மறு நா அமாவச. அதுவரைக்கும் அது என்ன வேணா பண்ணட்டும். நான் துண்ணூறு தரேன். அத அவ மேல போடுங்க. கொஞ்சம் கட்டுப்படும். நாள மறுநாள் அமாவாச ராத்திரி பூச பண்ணி சுடுகாட்டுல அறஞ்சிருவோம். இடைல ரொம்ப முடியலன்னா என்னக் கூப்பிடுங்க. வந்து பாக்கறேன்."
பைரவியின் அப்பா தந்த தட்சணையை மறுத்துவிட்டு, கேட்டு இரண்டு வாழைப்பழங்களை வாங்கிக்கொண்டு வேகமாக நடக்கத் தொடங்கிவிட்டார் கோடங்கி. அவர் போய் ரொம்பநேரம் கழித்துதான் பைரவி கதவைத் திறந்தாள். ஆலங்குளத்தான் தந்த திருநீற்றை அவள் மேல் போட்டார்கள். அவள் அசந்து படுத்துவிட்டாள். எல்லோருக்கும் கொஞ்சம் நிம்மதி வர, அவரவர் படுக்கைக்குப் போனார்கள். அவள் அம்மா மட்டும் அவள் அருகிலேயே இருப்பதாகச் சொல்லிவிட்டாள். நானும் அம்மாவும் வீடு வந்து சேர்ந்தோம். ஐந்து கட்டத்தில் ஒன்றுகூடப் பிரைசாக இல்லாததைவிட வேறெதுவும் எனக்கு வருத்தமாயில்லை. வருத்தம் மேலிட அப்படியே தூங்கிப்போனேன்.
சத்தம் கேட்டு விழித்துக் கொண்டபோது மணி பன்னிரண்டைத் தாண்டியிருந்தது. அது பைரவியின் சத்தமும் அவள் அம்மாவின் சத்தமும்தான். கதவைத் திறந்துகொண்டு வாசலுக்கு வந்தபோது கண்ட காட்சி கொஞ்சமும் எதிர்பாராததாக இருந்தது. பைரவி வாசலில் நின்று கத்திக் கொண்டிருந்தாள். அவள் மேனியில் ஒரு துளியும் உடையில்லை. அவள் அம்மா கொண்டு வந்து கொண்டு வந்து போர்த்தும் உடைகளை அவள் கணத்தில் தூக்கியெறிந்தாள். பைரவி பார்ப்பதற்கு வஸ்திரம் சார்த்தாத ஏதோ ஒரு பெண் சிலையின் சாயலில் தெரிந்தாள். அவள் அங்கங்கள் பார்ப்பதற்குக் கூடாததுபோலப் பளபளப்போடு இருந்தன. அவள் உடல் பற்றிய கற்பனைகளில் ஊறிக் கழித்த நாட்களில் அதைவிடப் போதை தரக்கூடியதாக எதையும் நான் எண்ணியதில்லை. ஆனால், இப்போது கற்பனை செய்யத் தேவையற்று கண்முன்னே நிற்கிற சமயத்தில் அடிவயிறு சில்லிட்டுப்போய், செய்வதறியாது பயந்து, மனம் பின்வாங்குகிறது. சத்தம் கேட்டு இன்னும் சில வீட்டு ஆட்கள் வெளியே வந்தவர்கள் அதிர்ந்துபோய் ஆங்காங்கே நின்றுவிட்டார்கள். பெண்கள் தங்கள் கணவன்மார்களை உள்ளே போகுமாறு விரட்டிக் கொண்டிருந்தனர். இதற்கிடையில் பைரவி இன்னும் ஆவேசமாய்க் கத்தியபடி ஓட ஆரம்பித்தாள். அவள் சத்தத்தில் விழித்துக் கொண்டு குரைக்க ஆரம்பித்த நாய்கள், அவள் வரும் வேகம் கண்டு அஞ்சி ஓடி ஒளிந்து கொண்டன. இதைக் கண்டபின் யாரும் அவள் அருகே போகவேயில்லை. அவளோ ஓடி அந்தத் தெருவைக் கடந்து கண்களிலிருந்து மறைந்தாள். பைரவியின் அம்மா பாதி தூரம் ஓடிக் கல் தடுக்கி விழுந்து, "யாராவது எம் பொண்ணக் காப்பாத்துங்க" என்று கெஞ்சியபடி அழுதுகொண்டிருந்தாள்.
அம்மா என்னிடம், "ஏண்டா! நீயாவது போய் அவளப் பிடிக்கக் கூடாதா?" என்றாள்.
"எப்படிம்மா? அவ முண்டமா நிக்கா. நா எப்படி…"
"ஏண்டா தொடநடுங்கி! அவ பேய் பிடிச்சுக் கிடக்கா. அவளுக்கு முண்டம்ன்னு தெரியுமா ஒண்ணா? ஒனக்கு பயமாயிருந்தா விடு! இல்ல, இப்பவே போய் அவள பிடிச்சுக்கிட்டு வா!"
அம்மா வேறு எதையாவது சொல்லிக் கிளப்பிவிடுவாள். நான் வேறுவழியின்றி பைரவியின் புடவையை வாங்கிக்கொண்டு அவள் போன வழியே ஓடினேன். நாய்கள் எல்லாம் இப்போது வீரமாகக் கத்திக்கொண்டே என்னைத் துரத்த ஆரம்பித்தன.
–முடிவு அடுத்த வாரம்...