ஒவ்வோர் – ஆண்டும்
திரும்பத் திரும்ப
உருப்போட்டபடி உருப்படிகள்
பேதமில்லாத
‘வாதாபி கணபதி’ –
ஒரே மாதிரி சிரித்து
உதடு நொந்த ‘ நகுமோமு’.
அகாதமி, சபாக்களில்
வசூலைப் பொருத்து ‘ நிதி சால சுகமே!’
காரியதரிசிகளின்
‘வீட்டோ’ வீச்சால் தடை செய்யப்பட்ட
கற்பனை, மனோபாவங்கள்,
புது முயற்சிகள்,
பொருமும் இடங்களில்
இரக்கத்திற்குரிய இசை தேவதை!
எவரை
எப்படிச் சமாளிப்பதெனத்
‘தாட்டுவரிசை’ தெரிந்தவரிடம்
‘சண்டை வரிசை’ செல்லுபடியாகாது!
கிழச் சாரீரங்களில்
தூக்கிலிடப்படும் கீர்த்தனைகளுக்காக
எந்த
ஜனாதிபதியிடம் யார் கொடுப்பது
கருணை மனு?
‘ஸரஸ ஸாம தான
பேத தண்ட சதுரனை’
விபத்தில்
வீழ்த்தும் ஆரோகண
அவரோகணங்கள்!
பாட்டுக்குள்
கொரில்லாத் தாக்குதலாய்
நடத்தும்
சரிகமபதநிகளைத்
தடுப்பதற்கு – எந்தச்
சபையிலும் ஆள் கிடையாது.
பாடகரால்
படுகாயப்படும் இராகங்களைப்
பத்திரமாய்க்
கொண்டு செல்ல அவசர மருத்துவ
வண்டி இல்லை!
தியாகையர்,
சாஸ்திரி
தீட்சிததர்கள்
திசம்பர் தோறும், சபா
அகாதமிகளுக்கு
வருகிறார்கள் – வந்து
வாசலில் விற்கும் தின்பண்டங்களைத்
தின்றுவிட்டுத்
திரும்பிவிடுகின்றார்கள்!
கவிதை அற்புதம். எவ்வளவு நாட்கள் தான் கற்பனை சிறிதும் இல்லாத குரல்களைச் செவிமடுப்பது.கவிஞர் தமிழன்பன் பலரது மனக்குரல்களைப் பிரதிபலித்துள்ளார்.
இசை என்றில்லை, இன்றைக்கு எல்லாக் கலைகளின் நிலைமையும் இதுதான் ஐயா. நீங்களே சொன்னது போல, ஜனங்க என்ன ஆனா என்ன, நம்ம ஜன நாயகம் வாழ்ந்தா போதும்-ங்கிற மனப்பான்மை ! காலம்தான் காப்பாற்ற வேண்டும். – வை. கலைச்செல்வி, சிங்கப்பூர்.