அம்மா புளிய விளாரை எடுத்துக் கொண்டு அடிக்க வரும். "பாடம் படிக்கிற நெனப்பேல்ல வரமாட்டது…" என்று ஆவேசமாய் அது வருமே தவிர அவளுக்கு அவனை அடிக்கத் தெரியாது. கையில் விளார் சும்மா ஒரு மிரட்டலுக்குத்தான். ஐயா ஊரில் இல்லாத பிள்ளை. அவளும் அடித்து உடைத்தால் பிள்ளை மிரண்டு விடும் என்று உள்ளூர அவள் கவலை அவளுக்கு.
நாள் போனதே தெரியவில்லை. கொண்டு வந்த மிலிட்டரி ரம்முக்காகவே அவனைச் சுற்றி வந்தார்கள் சிநேகிதக் கூட்டம்.
"மாயாண்டி சரக்கெல்லாம் ஒரு சரக்காடா…இதைப்பார் ஒரே மடக்கு. சும்மா குப்புனு ஆளைத் தூக்கிரல…?" என்று வாயைத் துடைத்துக்கொண்டான் ஜெமினி கணேசன். அந்த ஊரில் அவன்தான் காதல் மன்னன். ஷோக்குப் பேர்வழி.
"மாப்ள நீயும் எங்ககூட வேலைக்கு வந்துர்றியா?" என்று மாடசாமி கேலி செய்தான். "ஐய காலைல எழுந்து பரேடு பிதுக்கி எடுத்துறுவான்…நமக்கு லாயக்கு படாது" என்றவனைப் பார்த்து மற்றவர்கள் சிரித்தார்கள்.
"இந்த வாட்டி எத்தனை நாள்றே லீவு?"
"ரெண்டு மாசம் கேட்டிருக்கேன்…ரெண்டு மாசம் இருக்கேலாது. தந்தி வந்துரும்" என்றான் மாடசாமி.
போகும்போதே கம்பனியில் சொல்லித்தான் அனுப்பியது. "முடிஞ்ச வரை அனுபவிப்பா. நிலைமை சரியில்ல, உனக்குத் தெரியும்ல. கூப்ட வேண்டியிருந்தாலும் இருக்கும். போ போயிட்டு வா…" என்றார் ஹவில்தார் மேஜர்.
சிதம்பரம் தங்கமான மனுசன். அவரு காலில் நாலு இடத்தில் குண்டு பாஞ்ச தழும்பு இருக்கு. எல்லாக் குண்டையும் சரியான நேரத்துல வெளியேத்திட்டதால கால் தப்பிச்சது. பழைய சண்டைகளைப் பத்தி ராத்திரி தூங்கக் கொள்ளாத நேரத்துல அவர் பேச்செடுத்தா படு சுவாரஸ்யம். அவங்களுக்கு அவர் தந்தை போல. இவன் அப்பா மடியில் உட்கார்த்தி வைத்துக் கொண்டு எத்தனை கதைகள் சொல்லியிருக்கிறார்?
மிலிட்டரி வேலையில் இது ஒரு சங்கடம். வேலை என்று எங்கோ பனியிலும் வெயிலிலும் கிடந்தால் வீட்டு ஞாபகமாகவே இருக்கும். எப்படா லீவு போட்டுட்டுப் போகலாம் என்றிருக்கும். இங்கே வந்தால் லீவு முடிஞ்சுருமோ, முடிஞ்சுருமோ என்று யோசனை, கவலை.
போஸ்ட்மேன் வரும்போது எல்லாரும் லெட்டர் இல்லை, தந்தி இல்லை என்றால் கவலைப்படுவார்கள். மாடசாமி “தகவல் இல்லியா, அப்பா” என்று சிரிப்பான்.
நாலாம் நாளே தகவல் வந்தது. "எல்லை நிலைமை கருதி விடுப்பு விலக்கிக் கொள்ளப்படுகிறது. உடனே வேலையில் சேரவும்." அவன் ஆத்திரத்துடன் கையில் குத்திக் கொண்டான். செய்தித்தாள் பார்க்கப் பார்க்க அவனே நிலைமையை ஊகித்திருந்தான். "இந்த நாய்களுக்கு வேற வேலையே கிடையாதப்பா…வெறி நாய்ங்க. கார்ப்பரேஷன் வண்டிதான் இவர்களுக்கு லாயக்கு."
அதிலும் இவ முகத்தைப் பார்க்கவே சகிக்கல. இதுக்கா இவ்ள தூரம் கிளம்பி வந்தது, என்று அவளுக்கு அழுகை. "இப்ப நீ தனியாள் இல்லாட்டி…உனக்குத்தான் துணையா எம் பயபுள்ள இருக்கானே…இருக்கில்லடா?" என்று குனிந்து குழந்தையை முத்தமிட்டான். இவனைப் பிரிவதுதான் என்னமோ போலிருந்தது.
அவன் ஐயா சொல்வாரு. "ஏல நம்மளப் போல ஜவான்களுக்கெல்லாம் டூட்டி ஃபர்ஸ்ட்…வீடு அப்பறந்தான். நம்ம வீடு மட்டும் நம்ம வீடு இல்ல, இந்த தேசமே நமக்கு வீடு மாதிரிதான், கேட்டியாடே?"
அது சரிதான், என்றிருந்தது. பரபரப்பாய் இருந்தது. ஐயாவை நினைத்ததுமே அவனுக்கு நரம்புகளில் வேகம் வந்தது. உடனே கிளம்ப வேண்டும். நேரமில்லை. வருவதாக ஒரு பதில் தந்தி அடித்தான்.
ஐயா 62 ல் நடந்த சண்டையில் வீர மரணம் அடைந்தார். அப்போது அவனுக்குப் பத்து வயது. மிலிட்டரி வண்டியில் மாலை மரியாதை வரிசையுடன் தேசியக்கொடி போர்த்தி ஐயா வந்தது இன்னும் ஞாபகம் இருக்கிறது.
எல்லா ஊரிலிருந்தும் ஆட்கள் வந்திருந்தார்கள். எல்லைக்கோவில் ஆலமரத்தடி நிழலில்தான் ஐயாவை வைத்திருந்தார்கள். ஊரே வந்து மரியாதை செலுத்திய பின் பஞ்சாயத்து எல்லையில் ஓரிடம் பார்த்து அவரை அடக்கம் செய்தது. “மிலிட்டரிக்காரர் வூடு”என்றால் யாருமே அடையாளம் காட்டுவார்கள்.
ஐயாவின் கல்லறை முன்னால் நின்றபோது மேனி சிலிர்த்தது. கூட நின்றிருந்த சிநேகிதர்களே உணர்ச்சி வசப்பட்டார்கள். திரும்பி அவன் "ஜெமினி கணேசா வரும்போது, வந்தா, உனக்கு பெரிய ரம் பாட்டில் கொண்டு வரேன்."
"அட போப்பா நீ வேற. பத்திரமா நீ திரும்பி வா, அதே போதும்" என்று அவன் கையைப் பிடித்துக் கொண்டான். அழுதுவிடுவான் போலிருந்தது.
ஐயாவுக்கு ஒரு மாலையும், காவல் தெய்வத்துக்கு ஒரு மாலையும் சாத்திய போது தெம்பாய் இருந்தது. அவனுக்கு பஸ் மாலை நாலு மணிக்கு. அதுவரை வேடிக்கை பேசிக் கொண்டிருந்தார்கள். மயினி எப்பவும் வேடிக்கை பேசுகிறவள், பேசாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவன்தான் "என்ன மயினி…" என்று அவளைத் தூண்டினான்.
ராசாத்தி பச்சை உடம்புக்காரி. அவளை பஸ் ஏற்றிவிட வரவேண்டாம், வரவேண்டாம் என்று பார்த்தார்கள். பிடிவாதமாய் வண்டியில் வந்தாள் ராசாத்தி. புசுபுசுவென்று அழுதழுது அவள் முகம் வீங்கியிருந்தது. அவளைப் பார்க்கவேயில்லை அவன். பார்த்தால் நெகிழ்ந்து விடுவான் போலிருந்தது. அழுகை வரும்போதெல்லாம் ஐயாவை நினைத்துக் கொண்டான்.
சேதி கேட்டு கிராமமே பஸ் ஏற்றிவிட வந்திருந்தது. எவ்வளவு கூட்டம். எல்லாரும் ஆளாளுக்கு மாலை போட்டார்கள். பங்குனிக் கோடை போலிருந்தது அவனுக்கு. சிரிப்பு. பஸ் வர எல்லாரும் காத்திருந்தார்கள்.
திடீரென்று அவன் ராசாத்தி பக்கத்தில் வந்து நின்று அவள் கையைப் பிடித்துக் கொண்டான். "ஏய் எம்பிள்ளைய சிப்பாய் மாதிரி வளக்கணும், வளப்பியா?" என்று கேட்டான்.
எல்லாருக்குமே ஆச்சரியம். ராசாத்தி அவனை நிமிர்ந்து பார்த்தாள். கண்ணுக்கு நேரே பார்த்தாள். தலையாட்டினாள்.
பஸ் ஏறிக்கொண்டு எல்லாருக்கும் கையாட்டினான். ஜனங்களும், தாண்டி எல்லைச்சாமியும் கண்ணுக்குத் தெரிந்தன.
(‘இரத்த ஆறு‘ மின்னூலில் இருந்து)