புராணத் துளிகள் (4)

கிருஷ்ணர் வில்லை முறித்த சம்பவம்!

ராமர் வில்லை முறித்த சம்பவம் பிரசித்தமானது. கிருஷ்ணரும் வில்லை முறித்திருக்கிறார். அதைப் பற்றி ஸ்ரீமத் பாகவதம் கூறுவது இது:-

வில் வைத்திருக்கும் இடம் எது என்று பட்டணத்து ஜனங்களை வினவிக் கொண்டு அந்த இடத்திற்குச் சென்றான் அச்சுதன். அங்கு இந்திர தனுசு போல அற்புதமாக இருந்த வில்லைக் கண்டான். அதைப் பல மனிதர்கள் பாதுகாத்துக் கொண்டிருந்தனர். மற்றும், அது பூஜிக்கப்பட்டு ஸ்வர்ணாலங்காரத்துடன் பல மேன்மைகள் அமைந்ததாய் இருந்தது. அப்போது அதைப் பாதுகாப்போர் "வேண்டாம்! வேண்டாம்" என்று தடுத்தபோதும் ஸ்ரீகிருஷ்ணன் அதைப் பொருட்படுத்தாமல் பலாத்காரமாக அந்த வில்லை எடுத்துக் கொண்டான். திரிவிக்கிரமாவதாரம் செய்த மஹாபுருஷனான ஸ்ரீ கிருஷ்ண பகவான் அந்த வில்லை ஒரு நிமிடத்தில் இடக்கையால் அவலீலையாக எடுத்து நாணேற்றி, ஜனங்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே யானை கரும்புத் தடியை முறிப்பது போல இழுத்து இடையில் முறித்தான். அப்போது முறிகின்ற அந்த தனுசின் ஒலி பூமி, அந்தரிக்ஷ லோகம் ஆகியவற்றையெல்லாம் நிறைத்து விட்டது. கம்சன் பயம் அடைந்தான்.

-ஸ்ரீமத் பாகவதம் – தசம ஸ்கந்தம் – பூர்வ பாகம் – 42ஆம் அத்தியாயம்

காயத்ரி ஸ்தோத்ரம் கூறுவதால் ஏற்படும் பயன்

தேவி பாகவதம் 12ஆம் ஸ்கந்தத்தில் காயத்திரி ஸ்தோத்ரம் வருகிறது. அதைச் சொல்வதால் ஏற்படும் பயனை நாராயணர் நாரதருக்கு ஸ்தோத்திரத்தின் முடிவில் இப்படிக் கூறுகிறார்.

"ஓ மஹாதேவீ! ஓ ஈஸ்வரியே! ஓ சந்தி ஸ்வரூபிணீ! உன்னை நமஸ்கரிக்கிறேன்" என்று எவன் சந்தியாகாலத்தில் பக்தி சிரத்தையோடு பாராயணம் செய்கின்றானோ அவனுக்கு அளவில்லாத புண்ணியம் கிடைக்கும். மஹா பாபத்தைப் போக்கும். மஹா சித்தியைக் கொடுக்கும். புத்திரன் இல்லாதவனுக்கு புத்திரனையும், செல்வம் இல்லாதவனுக்குச் செல்வத்தையும், சகல தீர்த்த ஸ்நான பலத்தையும், தவம், யக்ஞம், யாகம் ஆகியவற்றின் பலனையும் வேண்டியவர்க்கு வேண்டிய பலனையும் கொடுக்கும். போக மோக்ஷங்களை வேண்டியவர்க்கு இம்மையில் போகத்தையும், அந்திய காலத்தில் மோக்ஷத்தையும் அடையும்படி செய்யும். இத்துதியை எந்தெந்த ஸ்நான காலங்களில் எவன் படித்து எந்த ஜலத்தில் ஸ்நானம் செய்தபோதிலும் சந்தியா காலத்தில் ஸ்நானம் செய்த பலனை அடைவான். இதில் சந்தேகம் கிடையாது. ஓ நாரதரே! இது அமிர்த வாக்கியமாகும். இது சத்தியம்! சத்தியம்!!

-12ஆம் ஸ்கந்தம், ஐந்தாம் அத்தியாயம்.

ருத்ராக்ஷம் அணிவதன் மஹிமை

நாயாய் இருந்தாலும் கழுத்தில் ருத்ராக்ஷம் தரிக்கப் பெறுமானால் அதுவும் முக்தி அடையும் என்று சொல்லப்பட்டிருக்கிறபோது, மானிடனுக்கு என்ன சொல்ல வேண்டும்? ஒருவன் ஜபம் மற்றும் தியானம் இல்லாதவனாய் ருத்ராக்ஷம் மட்டுமே தரிப்பவனாகி இருப்பின் அவன் கூட சர்வ பாவங்களிலிலிருந்தும் விடுபட்டவனாகி மேலான கதியை அடைகிறான். ஆதலால், ஒருவன் முயற்சி மேற்கொண்டு ஒரு ருத்ராக்ஷத்தையாவது தரிக்க வேண்டும். அப்படித் தரிக்கிறவன் 21 தலைமுறைகளை உய்வித்து சிவலோகத்தில் பூஜிக்கப்பட்டவனாக இருப்பான்.

-ஈஸ்வரர் ஷண்முகனுக்கு உரைத்தது – தேவி பாகவதம் 11ஆம் ஸ்கந்தத்தில் ஆறாம் அத்தியாயம்.

மீன் போலப் பார்வையாலேயே ரக்ஷிக்கும் தேவி

தன் முகத்தினுடைய சௌந்தர்யப் பிரவாஹத்தில் ஓடும் மீன்களைப் போல இருக்கும் கண்களை உடையவள்.

வக்த்ர லக்ஷ்மி பரிவாஹ சலன் மீனாபலோசனா

இப்படி லலிதா சஹஸ்ரநாமத்தின் 18ஆவது நாமத்தில் தேவி வர்ணிக்கப்படுகிறாள்.

மீனானது தன் குஞ்சுகளைப் பால் கொடுத்து வளர்ப்பதில்லை என்றும், தன் கண்களால் பார்ப்பதனாலேயே வளர்க்கின்றது என்றும் சொல்வதுண்டு. அதே போல, தேவியானவள் அனைத்து லோகங்களையும் தன் பார்வையினாலேயே ரட்சித்து வருவதால் அவளை மீனாக்ஷி என்று சொல்வது வழக்கம். அதே அர்த்தத்தைத் தரும் மீனாபலோசனா என்ற பெயர் இங்கு குறிப்பிடப்படுகிறது.

– பிரம்மாண்ட புராணத்தில் இடம் பெறும் லலிதா சஹஸ்ர நாமம் – 18ஆவது நாமம்.

சரஸ்வதி ஸ்தோத்ரம் / ஸ்துதி பற்றிய ஒரு தொகுப்பு

சரஸ்வதியைத் துதிக்கும் ஸ்தோத்ரங்கள் / ஸ்துதிகள் ஏராளமாகப் புராணங்களிலும் இதர நூல்களிலும் உள்ளன. அவை எங்கெங்கே உள்ளன என்பதைக் கீழே காணலாம்.

அஷ்வதரக்ருத ஸ்துதி – மார்கண்டேய புராணம்.
(க்ருத என்றால் இயற்றிய என்று பொருள்).
மார்கண்டேயக்ருத ஸ்துதி – வாமன புராணம்.
(மார்கண்டேய க்ருத என்றால் மார்கண்டேயரால் இயற்றப்பட்ட, அல்லது துதிக்கப்பட்ட ஸ்துதி என்று பொருள்).
நவரதக்ருத ஸ்துதி – கூர்ம புராணம்.
வசிஷ்டக்ருத ஸ்துதி – வாமன புராணம்.
யாக்ஞவல்க்யக்ருத ஸ்துதி – பிரம்ம வைவர்த புராணம்.
விஷ்வவிஜய கவசம் – பிரம்ம வைவர்த புராணம்.
சரஸ்வதி அஷ்டகம் – பத்ம புராணம்.

இவை தவிர, கீழே தரப்பட்டுள்ளவையும் சரஸ்வதி ஸ்துதிகளாக அமைந்துள்ளன.

பிருஹஸ்பதிக்ருத சரஸ்வதி ஸ்தோத்ரம்.
சரஸ்வதி ரஹஸ்யோபனிஷத்.
சரஸ்வதி ஸ்தோத்ரம் – சாரதா திலகம்.
வாகாம்ருணீ சூக்தம் – ரிக் வேதம்.
மங்கணத்ரருஷிக்ருத ஸ்துதி –
மஹாபாரதம்.
வசிஷ்டக்ருத ஸ்துதி
– மஹாபாரதம்.

About The Author