அவளா இவள்?

என்னால் அதற்கு மேலும் படுத்திருக்க முடியவில்லை. வழக்கமாய் வரும் ஒற்றைத் தலைவலி. இனி மாத்திரை எடுத்துக் கொண்டே ஆக வேண்டும்.

எழுந்திருந்தேன். கல்யாண மண்டபத்தின் ஒரு மூலையில் எங்களுக்காக அறை ஒதுக்கி இருந்தார்கள். பிள்ளை வீட்டுக்காரன் நான். என் சகோதரியின் மூத்த மகன் தான் மணமகன்.

மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலம் முடிந்தது. நிச்சயதார்த்தம் பேசி.., உணவு உண்டு.., படுக்க வந்த போதே மணி பனிரெண்டு ஆகிவிட்டது. அரை மணி நேரம் இந்தத் தலைவலியுடன் போராடியாகி விட்டது.

ஹாலின் ஒரு மூலையில் மட்டும் குழல் விளக்கு எரிய.., பத்துப் பனிரெண்டு மின் விசிறிகள் சுழன்று கொண்டிருந்தன. பெரிய பெரிய ஜமுமக்காளங்களில் வந்தவர்கள் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தனர். ஸ்டோர் ரூமில் இளவட்டங்கள் அரட்டை அடித்துக் கொண்டு முகூர்த்தப் பை தயார் செய்து கொண்டிருந்தனர்.

பக்கவாட்டுக் கதவு உள்புறம் தாளிடப்பட்டு இருந்ததைத் திறந்து கொண்டு வெளியில் வந்தேன். மண்டப வாசலுக்கு எதிரே 24 மணிநேர மருந்துக் கடை இருந்ததை ஏற்கனவே கவனித்து வைத்திருந்தேன்.

அப்போதுதான் அந்த அழுகையும், தேம்பும் குரலும், பேச்சும் கேட்டது.

"…ஸ்ஸ்..அழாதே..விஜி..என்னது..?"

"உங்ங்களைப் போய் நம்பினேன் பாருங்க! கடைசி வரைக்கும் எதுவுமே செய்யாமே.."

"நான்தான் அப்பவே சொன்னனே விஜி! எனக்கு வேலை கிடைக்கிறவரை.., கல்யாணத்தைப் பத்தி நினைச்சுப் பார்க்க முடியாதுன்னு.."

ஆண் குரலில் இப்போது விரக்தியை மீறி உறுதியும் தெரிந்தது. தேம்பும் பெண் குரல்.. விஜி.. கல்யாணப் பெண்ணா?..

எனக்குள் பதற்றம் கூடியது. நான் நின்ற இடத்தில் இருந்து அவர்களைப் பார்க்க இயலவில்லை. இன்னும் சற்று முன்னேறினால் அவர்கள் உஷாராகி விடலாம்.. நான் நினைக்கிறபடி மணப்பெண்தானா..? காதல் தோல்வியா?

"யாருக்கு யார் அமையணும்னு விதி இருக்கு.."

"பேசாதீங்க..எவ்வளவு கெஞ்சினேன். ஒரு வார்த்தை எங்க வீட்டுல வந்து சொல்லுங்கன்னு…"

"என் நிலைமை புரியாம பேசறியே"

"என் மேல நீங்க வச்ச பிரியம் .. அவ்வளவுதான்.."

"விஜி..ப்ளீஸ்!"

யாரோ நடைபாதை விளக்கைப் போட, சட்டென்று அவர்கள் கதவு வழியே விலகிப் போனதைச் சரசரக்கும் காலடிகளால் உணர முடிந்தது.

என் தலைவலி இப்போது இரண்டாம்பட்சம் ஆனது.

இன்னொருவனை மனசார நேசித்தவள், எப்படி எங்கள் வீட்டுப் பையனுடன் குடித்தனம் நடத்துவாள்..? வேண்டாம் என்று நிறுத்தி விடலாமா? தப்பில்லையா.. இப்போது விட்டு விட்டால் பின்பு அவர்கள் வாழ்வில் அமைதி குலைந்தால்..?

எண்ணங்கள் போராடின. தலைவலிக்காக எடுத்துக் கொண்ட மாத்திரை தோற்றுப் போய் தூக்கம் கெட்டதில் வலி இரட்டிப்பானது.

சரசு கூட என் கண்களின் சிவப்பைப் பார்த்து மிரண்டு போனாள்.

"என்ன ஆச்சு உங்களுக்கு..? தண்ணி அடிச்ச மாதிரி இருக்கீங்க..?"

"ஒ..ஒண்ணுமில்லை..?"

மனைவிதான். இதுவரை எதுவும் மறைத்ததில்லைதான். ஆனாலும் இந்த விஷயம் சட்டென்று சொல்லி விடக் கூடியதா?

பேசாமல் விட்டு விட்டேன். தாலி கட்டிய மறுநிமிடம், முதல் பந்தியில் சாப்பிட்டு விட்டு கிளம்பி விட்டேன்.

"இரேன்..எல்லாருமா..நாளைக்கு வேன்ல போயிரலாம்!" என்றாள் என் சகோதரி.

"இல்லே.. அர்ஜெண்டா ஒரு வேலை இருக்கு.." என்று மழுப்பினேன்.

சரசுவுக்குக் கூட வருத்தம்தான். இப்படியா அரக்கப் பரக்க கிளம்புவது?

பஸ்சில் வரும் வழியெல்லாம் புலம்பித் தீர்த்து விட்டாள். ஏதாவது உளறிவிடப் போகிறேன் என்று தூங்குவது போல பாவனை செய்தேன்.

நாலு மாதங்களுக்குப் பிறகு.. தற்செயலாக சகோதரி மகன் ஆனந்த் வீட்டுக்குப் போக வேண்டிய நிர்ப்பந்தம். அந்த ஊருக்கு ஒரு வேலையாகப் போனவன், அவர்கள் வீட்டிற்கும் போனேன்.

விஜி தான் கதவைத் திறந்தாள்.

"நான் வந்து.."என்று அறிமுகப் படுத்திக் கொள்ள முயன்றேன்.

"நினைவு இருக்கு..அவரோட மாமாதானே.. வாங்க.." என்று புன்னகையுடன் வரவேற்றாள்.

"ஆனந்த் எப்ப வருவான்..?"

"வர்ற நேரம்தான்..உட்காருங்க..டிபன் காபி சாப்பிடுங்க.!."

"அவனும் வந்திரட்டுமே.."

"அய்யோ அப்புறம் என்னைத் திட்டுவாரு.."

உள்ளே போய் விட்டாள். இன்னொருத்தனைக் காதலித்தவள்? இங்கே எப்படி மனசொப்பி நிற்கிறாள்?

டிபன் சாப்பிட்டதும் சொன்னாள்.

"கடைத் தெரு வரைக்கும் போகணும், இங்கே இருக்கீங்களா..?"

"நானும் வரேன். எனக்கும் வேலை இருக்கு…"

வீட்டைப் பூட்டி எதிர் வீட்டில் சாவியைக் கொடுத்தாள். வெகு இயல்பாக வந்து கொண்டிருந்தாள். பழைய தடங்களே மனசில் இல்லையா?

"விஜி.." என்ற குரல் கேட்டது.

யாரிவன்..? ஓ..அன்று மண்டப இருட்டில் அவளுடன் பேசியவனா..?

"நீ..ங்களா?" என்றாள்.

"உன்னைப் பார்க்கலாம்னு வந்தேன். அட்ரஸை எங்கேயோ விட்டுட்டேன். சரி.. பாரதி தெருவுல.. போய் விசாரிக்கலாம்னு வந்துக்கிட்டிருந்தேன்.எதிர்ல ..நீயே வரே.. "

விஜியின் முகத்தில் கடுமை பிரதிபலித்தது போலத் தோன்றியது. "அவரு இப்ப ஊர்ல இல்லே..டூர் போயிருக்காரு.."என்றாள்.

"அதனால என்ன..நான் உன்னைப் பார்க்கத் தானே.."

"இல்ல சேகர்..அப்புறம் பார்க்கலாம். இன்னொரு சமயம்.."

என் பக்கம் திரும்பினாள்.

"வாங்க.. மாமாபெரியப்பா.. நாம போகலாம்.."

சேகர் ஸ்தம்பித்து நிற்க எனக்குப் புரிந்து விட்டது.

விஜியைப் பின் தொடர்ந்தேன்.

"யாரு..இது?"என்றேன், எதுவும் தெரியாதவன் போல.

"எங்க ஊர்க்காரன்தான். பக்கத்து வீடு..கொஞ்சங்கூட மேனர்ஸே இல்லே..அவர் வீட்டுலே இல்லேன்னு நாசூக்காக சொன்னாக்கூட புரியாம.. வரேன்னுகிட்டு.."

"பாவம்…தெரிஞ்சவருதானே!"

"உங்களுக்குப் புரியாது பெரியப்பாமாமா.. சில பேரை ரொம்பவும் சேர்த்துக்கக் கூடாது. வைக்க வேண்டிய இடத்துல வச்சிரணும். இல்லே.. நமக்குத்தான் பிரச்சனை…! இப்ப..நான் என்ன பழைய விஜியா.. ஒருத்தரோட மனைவி இல்லியா..?"என்றாள் யதார்த்தமாகப் பேசுவது போல.

என்னை நானே பாராட்டிக் கொண்டேன். நல்லவேளை! இந்த திருமணத்தை அவசரக் குடுக்கையாய்.. நிறுத்த முயற்சிக்காமல் ..விட்டேனே…பேசாமல் விட்டது புத்திசாலித்தனம் தானே!”

About The Author