நாலைந்து மைலில் சாமந்தியின் கிராமம். வெள்ளனேந்தல். அங்கே வாடகை வீடெடுத்திருந்தார்கள். சுந்தரமூர்த்தி ராத்திரி படுத்தால் கூட எதிர்த் திசையில்தான் தலைவைத்துப் படுத்தார். பிள்ளையை நினைத்தாலே அவருக்குக் குமுறியது. இவளானால் பொழுதன்னிக்கும் போய் அவனைப் பார்த்துவர அடம். ஏட்டி! நீயும் வேணா அவங்ககூட போய்த் தொலை, என்று கத்த வாய்வரை வந்தது. ஆனால் சரி என்று போய்விட்டால், என்று பயமாய் இருந்தது. மூஞ்சியில் இத்தனை பெரிய மீசை. இருந்து என்ன? எவன் மதிக்கிறான் நம்மை, என்று நொம்பலப்பட்டார். இந்த வேதவல்லி, கல்யாணமாகி வந்த புதுசில் தினசரி எழுந்துகொள்கிறபோது தாலியை எடுத்துக் கண்ணில் ஒத்திக்கொண்டு… எல்லாம் சம்பிரமமாய்ச் செய்தாள். எல்லாம் வேஷம். நாலே வருஷத்தில் சாயம் வெளுத்தாச்சி. ஒரு தடவைக்கு ரெண்டு தடவை கூப்பிட்டால்தான் என்னன்னே கேட்கிறாள். இப்போ நிலைமை இன்னும் மோசம். காலையில் எழுந்து தாலியை எடுத்துப் பார்த்தாலே ஆத்திரம் வருகிறது.
அவளைக் கேட்டால் இவர்தான் இத்தன்னாள் வேஷம் போட்டு என்னை ஏமாத்தியது, என்பாள். குட்டியில் கழுதை கூட அழகு.
பையனைப் பற்றி யார் பேச்செடுத்தாலும் இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் விட்டுவிடுவார் சுந்தரமூர்த்தி. சிவன் கோவில் பிராகாரத்தில் கரங்கூப்பி வருகையில் எனக்கு ஏன் இப்படி வாழ்க்கையே நிம்மதி இல்லாமலாச்சு, என முனகுவார். ஊர்ப் பெரிய மனிதர் அவர். யாரிடமும் பகிர்ந்துகொள்ள முடியாது. பயபிள்ளை எந்த ஊரில் இருந்தாலும் சத்தியப்பிரியனின் விசேஷ வைபவங்கள் வந்தும் போயும் இருந்ததால் அவ்வப்போது திடல் வளாகத்தில் பெரிய வினைல் போர்டுகள் எழும்பியபடி இருந்தன. பிறந்த நாள், புதுப்பட ரிலீஸ்… கலை இறைவனுக்கு வெற்றி விழா. டாக்டர் பட்டம் வரை வாங்கிவிட்டான் அவன். வர வர யார் யாருக்கு டாக்டர் பட்டம் வழங்கறதுன்னே இல்லாமல் போச்சு. சத்தியப்பிரியனா? கம்பௌண்டர் என்ன, வார்டு பாய் பட்டத்துக்குக் கூட அவன் லாயக்கில்லை. பலகையில் ஆள் சைசுக்கும் மேல் சத்தியப்பிரியனின் படம். அந்த நெட்டுக்குத்தல் தலைமுடி. கீழே வரிசையாய் ரசிகர் மன்ற முகங்கள். அவர் போகவரப் பார்க்கும்படி, எழில்வேந்தன்.
அன்றைக்குப் பிராகாரம் சுத்தும்போது பார்த்தார். பிராகார ஓரத் திண்ணையில் வரிசையாய் அறுபத்து மூன்று நாயன்மார்களின் விக்கிரகங்கள். பெரிய மூலக மூர்த்தி சந்நிதியையும் பிராகாரத்தில் இந்த அறுபத்து மூவரையும் பார்த்தபோது, அந்த வினைல் போர்டு, கலை இறைவன்… ஞாபகம் வந்தது. திடுக்கிட்டார்.
இவளுக்குதான் மனசே ஆறவில்லை. தண்ணியெடுக்க போகவர அந்த வினைல் போர்டில் பிள்ளையைப் பார்க்க அவளுக்குப் பூரிப்பு. சாமந்தியைத்தான் பார்க்கக் கண் இல்லாமல் ஆச்சு. எப்படி இருக்கிறாளோ தெரியவில்லை. பார்த்தால் அடக்கமான நல்ல பெண்ணாய்த்தான் தெரிகிறது. ரொம்ப ஒல்லியாய் வெடவெடவென்று இருப்பாள். களை பறிக்க வருகையில் பார்த்தது உண்டு. அதிராத பேச்சு. எதைக் கேட்டாலும் பதில் சொல்கையில் லேசான புன்னகை சேர்த்துப் பரிமாறுவது அழகாய் இருக்கும். என் பிள்ளையை முந்தானையில் முடிஞ்சிக்கிட்டாளே, என்று நினைக்க அவளுக்கும் சிரிப்பு வந்தது. அவர்களைப் பற்றிப் பேச்செடுத்தாலே இந்தாளுக்கு சாமி வந்திருது. இப்பவெல்லாம் அவளுக்கும் அவருக்கும் பேச்சுவார்த்தை கூட அதிகம் இல்லாமல் போனது.
வயசாயிட்டால் அது சகஜம் தான். ஒருத்தர் மேல் ஒருத்தர் பிடிப்பு கழண்டு விடுகிறது. என்னத்தைப் புதுசா இனி நமக்கு ஆகப்போகுது என்று ஆயாசம். அடுத்தவரை நினைக்கையில் நல்ல விஷயங்கள் மனசில் வராமல் ஏடாகூடமான விஷயங்களே அலையடித்து எரிச்சல்படுத்துகின்றன. அதற்கு மாற்றுதான் என்ன? வயதானவர்கள் வீட்டில் இருக்கையில் வீட்டில் புதிய வரவுகள் வேண்டும். பிள்ளைக்குக் கல்யாணம். அது முடிந்து குழந்தைகள்… என இளரத்தம், சிரிப்பு வீட்டில் வளையவர வேண்டும். தனியே நீயும் நானுமடி எதிரும் புதிருமடின்னு எதைக் காவல் காத்துக் கிடக்க? குடும்ப கௌரவத்தையா? நாசமாப் போக அது…
சாமந்தி முழுகாமல் இருந்தாள். சினிமா தியேட்டரில் சத்தியப்பிரியன் நடித்த, எப்பவுந்தான் ராசா என்கிற படம். எழில்வேந்தனிடம் சாமந்திக்குப் பிடித்த விஷயம்… அவளை நிறைய சினிமாக்களுக்குக் கூட்டிப்போவான். சினிமா, கூத்து எல்லாம் குடும்பப் பெண்களுக்கு வேணாண்டி என்பார் சுந்தரமூர்த்தி. பாடாவதிப்படம், பக்திப்படம் என்றால் வேதவல்லியை அழைத்துப் போவார். எதுக்கெடுத்தாலும் பாட்டு. சாமி முன்னால் கையைக் காட்டிக் காட்டிப் பாட்டு. அவர் அப்படியே பரவசப்பட்டுப் பார்ப்பார். விட்டால் அங்கேயே விழுந்து வணங்கி விடுவாராய் இருக்கும். வேதவல்லி பார்த்தபடி, ஊர்ப்பெண்கள் இப்படிக் கையைக் கையைக் காட்டிப் புருஷர்களைத் திட்டுவாளுகள்.
படம் ஆரம்பிக்குமுன் தனலெட்சுமி தரை டிக்கெட்டில் இருந்து மேலே பார்த்தால் சாமந்தி. கூட எழில். சாமந்திதான் அவளைக் கண்டுபிடிச்சது. தனா… என்று அங்கிருந்தே கத்தினாள் சாமந்தி. பஃப் வைத்த ரவிக்கை. கண்ணுக்கு மையென்ன, தலையில் மஞ்சள் கனகாம்பரம் என்ன… தனலெட்சுமிக்கு அவளைப் பார்க்கப் பொறாமையாய் இருந்தது. கத்தாதேடி, என்று எழில் சாமந்தியை அடக்கப் பார்த்தான். என்றாலும் நாம மாடி டிக்கெட் என்பதை நாலு பேர் அறிந்துகொள்வதில் அவனுக்கும் பெருமைதான். தானும் இங்கிருந்து யாரையாவது கத்திக் கூப்பிடலாமா என்று நினைத்தான்.
ஒண்ணுக்கு தண்ணிக்கு இடைவேளையில் சாமந்தியும் தனமும் சந்தித்தார்கள். தனலெட்சுமி வேதவல்லியிடம் மறுநாள் தகவல் பரிமாறினாள். வேதவல்லி சினிமாவுக்குப் போவது இல்லை என்றாலும் அவளுக்கு சினிமாக் கதைகள் கேட்க ரொம்ப இஷ்டம். சின்ன வயசில் தொலைத்த குழந்தையைத் தேடி அலையும் அம்மா கதைகள் அவளை அழ வைத்தன. மகனே அம்மாவிடம், அவள்தான் தன் அம்மா என்று தெரியாமல், நான் உங்களை அம்மான்னு கூப்பிடலாமா என்று கேட்கிற வசனங்களில் அவள் துடித்துப் போவாள். தனலெட்சுமிக்கும் தனது கதை சொல்லும் திறமையை வெளிப்படுத்த இது நல்ல சந்தர்ப்பமாய் இருந்தது. கொஞ்சம் கூ.ட்டியும் குறைத்தும், தானே திரைக்கதை அமைப்பதும் உண்டு அவள். நேற்றைய படத்தின் கதையை விட சுவாரஸ்யமான கதை ஒண்ணு அவளிடம் இருந்தது. அடியே வேதவல்லி, உனக்கு சேதி தெரியுமா? எனக்கென்ன தெரியும்? சொன்னால்தானே தெரியும்? உன் மருமகள்… சாமந்தி… முழுகாமல் இருக்கிறாள்.
-தொடரும்…
“