சில வருடங்களுக்கு முன்பு நாளேடு ஒன்றில் வெளியான பத்திச்செய்தி:
ஒரு மழைநாளில் அதிகாலை நான்கு மணிக்கு கிரண்டர் பிரதர்ஸ் நிறுவனத்தின் படிக்கட்டுகளில் சிறுவனொருவன் படுத்துறங்கிக் கொண்டிருப்பதைக் காவலர் ஒருவர் பார்த்தார். அவனை எழுப்பி யாரென்று விசாரித்தபோது, அவன் அந்த நிறுவனத்தில் வேலைபார்ப்பதாகவும் வழக்கமாக ஆறு மணிக்கு அவனுடைய பணிநேரம் துவங்கும் என்றும் அன்று தாமதமாகிவிட்டதென்று பயந்து ஓடி வந்ததாகவும் சொன்னான். காவலர், சிறுவனின் கையிலிருந்த பொட்டலத்தை வாங்கி ஆராய்ந்தார். சுத்தமான ஏப்ரான் துணியொன்றும் மூன்று ரொட்டித் துண்டுகளும் கொஞ்சம் சர்க்கரைப் பாகும் அதிலிருந்தன.
அந்தச் சின்னப் பையன் கண்விழித்தபோது பணிக்குச் செல்லத் தாமதமாகிவிட்டதென்று நினைத்துவிட்டானாம். "நீ ஏன் உன் அம்மாவை எழுப்பி நேரம் கேட்கவில்லை?" என்ற கேள்விக்கு, அவள் வேலைக்குச் சென்றிருப்பாள் என்று நினைத்ததாகச் சொன்னான். "நீயே ஏன் நேரம் பார்த்தறியவில்லை?" என்ற கேள்விக்கு, அவர்கள் வீட்டில் கடிகாரம் இல்லையென்றான். "கடிகாரம் இல்லையென்றால் உன் அம்மாவுக்கு மட்டும் எப்படி நேரம் தெரியும்" என்ற கேள்விக்கு அவனால் பதில் சொல்ல இயலவில்லை.
தாயைச் சார்ந்து வாழும் சிறார்களுக்கெல்லாம் தங்கள் தாயின் மதிநுட்பத்தின்பால் அளவிடற்கரிய நம்பிக்கை இருப்பதுபோல் அவனுக்கும் இருந்திருக்கலாம். அவனுடைய பெயர் ஆர்வி ஆஸ்பினால். அவன் ஜோன்ஸ் ஆலியில் வசித்து வந்தான். அவனுக்கு அப்பா இல்லை.
நெஞ்சைத் தொடும் அந்நிகழ்வைத் தொடர்ந்து மற்றொரு செய்தியை அதே பத்திரிகை சில நாட்களுக்குப் பின் பெருமகிழ்வோடு வெளியிட்டது. தயாள குணமுள்ள பெண்ணொருத்தி தன் தோழிகளிடம் நிதி திரட்டி, கிரண்டர் பிரதர்ஸ் நிறுவனத்தின் படிக்கட்டுகளில் படுத்துறங்கிய சிறுவனுக்கு ஒரு புதிய கடிகாரம் வாங்கிக் கொடுத்தாள் என்பதே அச்செய்தி.
அந்தக் கடிகாரம் சிறுவனின் தாயிடம் கொடுக்கப்பட்டது என்பதும் அவள் நன்றிப் பெருக்குடன் வாங்கிக்கொண்டாள் என்பதும் தொடர்ந்து வெளியிடப்பட்ட செய்திகள். இவையெல்லாம் பெரிதும் மிகைப்படுத்தப்பட்ட செய்திகள் என்று மற்றோர் ஏடு தெரிவித்தது. தயாள குணமுள்ள அப்பெண், கிரண்டர் பிரதர்ஸ் உரிமையாளரின் மகள்தான் என்று தெரியவந்தபோது, நெஞ்சைத் தொடும் அந்நிகழ்வின் நீட்சி வசீகரமிழந்தது.
ஈஸ்டர் விடுமுறைக் காலத்தின் கடைசி நாள். ஆர்வி ஆஸ்பினால் சளியாலும் தொண்டை அழற்சியாலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுப் படுக்கையில் கிடந்தான். இரவு மணி ஒன்பது இருக்கும். ஜோன்ஸ் ஆலியின் கடைத்தெருக்களில் வர்த்தகம் முழுவீச்சில் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
"இப்போது பரவாயில்லை அம்மா. முன்னைக்கு இப்போது நன்றாக இருக்கிறேன். சர்க்கரையும் வினிகரும் கபத்தைக் கட்டுப்படுத்தியிருக்கின்றன. இருமல் தொந்தரவும் இப்போது இல்லை…" சொல்லி முடிக்குமுன்னரே தொடர் இருமல் வந்து கொஞ்ச நேரத்துக்கு அவனைப் பேசவிடாமல் செய்தது. மூச்சைத் திரும்பப் பெற்றதும் அவன் சொன்னான், "நன்றாக இருந்தாலும் சரி, மோசமாக இருந்தாலும் சரி, நான் நாளைக்கு வேலைக்குப் போயே ஆக வேண்டும்! அந்தக் கடிகாரத்தை எடுத்துக் கொடுங்கள் அம்மா!"
"உன்னைப் போகக்கூடாது என்று நான் சொல்லிவிட்டேன். அது உன் உயிருக்கே ஆபத்தாகிவிடும்!"
"பேசிப் பயனில்லை அம்மா. நம்மால் பட்டினி கிடக்க முடியாது. ஒருவேளை, எனக்குப் பதிலாக வேறு யாரையாவது வேலைக்கு வைத்துவிட்டால் என்ன செய்வது? அந்தக் கடிகாரத்தை எடுத்துக் கொடுங்கள் அம்மா!"
"நான் குழந்தைகளில் யாரையாவது அனுப்பி உனக்கு உடல்நிலை சரியில்லையென்று சொல்லச் சொல்கிறேன். நிச்சயமாக, ஒன்றிரண்டு நாள் விடுப்புக் கொடுப்பார்கள்."
"அதனால் பயனிருக்காது அம்மா. அவர்கள் காத்திருக்க மாட்டார்கள். எனக்கு உடல்நிலை சரியில்லையென்றால் கிரண்டர் பிரதர்ஸுக்கு என்ன அக்கறை? நீங்கள் கவலையை விடுங்கள். அம்மா! நான் என் தம்பி தங்கைகளை வளர்த்து ஆளாக்க வேண்டும். என்னிடம் அந்தக் கடிகாரத்தைக் கொடுங்கள்!"
அவள் அவனிடம் கடிகாரத்தைக் கொடுத்தாள். அவன் அதற்கு சாவி கொடுத்து அலாரம் வைத்தான்.
"மணியடிப்பதில் ஏதோ தவறு நேர்கிறது. இரண்டு இரவுகளாகத் தவறாகவே அடிக்கிறது. இப்போது சரி செய்துவிட்டேன். காலை ஐந்து மணிக்கு அலாரம் வைத்திருக்கிறேன். அப்போது எழுந்தால்தான் உடை மாற்றிக்கொண்டு சீக்கிரம் கிளம்ப முடியும். அவ்வளவு தூரம் நடக்க வேண்டியிராமல் இருந்தால் நன்றாக இருக்கும்."
கடிகாரத்தின் முகப்பில் பொறித்திருந்த வாசகத்தை வாசித்தான்.
சீக்கிரமாய்த் தூங்கி சீக்கிரமாய் எழுதல்
ஒருவனுக்கு அறிவும் செல்வமும்
ஆரோக்கியமும் தரும் வழிகள்!
இந்த வாசகத்தை இதற்கு முன்பும் பல தடவை வாசித்திருக்கிறான். வாசகத்தின் சந்தமும் ஓசைநயமுமே கவனத்தை ஈர்த்திருந்தன. எவ்வித ஒப்பீடுகளுமின்றி அவன் அதை மீண்டும் மீண்டும் தனக்குள் சொல்லிப் பார்த்துக் கொண்டிருந்தான். அச்சடிக்கப்பட்ட ஒன்றில் தனக்கு ஐயம் எழக்கூடும் என்று அவன் கனவிலும் நினைத்ததில்லை. இதுவோ அச்சையும் மீறி ஆழமாய்ப் பொறிக்கப்பட்டிருந்தது. அவன் முகத்தில் ஒரு புத்தொளி படர்ந்தது. அவன் அந்த வாசகத்தை ஊன்றிப் படித்தான். ஒருமுறை வாய்விட்டுப் படித்தான். மீண்டும் மனத்துக்குள் அமைதியாக ஒருமுறை வாசித்துப் பார்த்தான்.
சட்டென்று, "அம்மா! இது பொய் சொல்கிறது என்று நான் நினைக்கிறேன்" என்றான். தாய் அந்தக் கடிகாரத்தை வாங்கித் தாங்குபலகையில் வைத்துவிட்டு அவனை ஸோஃபாவில் நன்றாகப் படுக்க வைத்துவிட்டு விளக்கை ஊதியணைத்தாள்.
ஆர்வி தூங்கிவிட்டாற்போலிருந்தது. ஆனால் அவளோ, அவள் வாழ்க்கையின் பல்வேறு பிரச்சினைகளைப் பற்றி யோசித்தபடி விழித்திருந்தாள். ஒருநாள் காலையில், பணியிடத்தில் இறந்துபோய், வீட்டுக்குத் தூக்கிவரப்பட்ட தன் கணவனைப் பற்றி, சிறைக்குச் செல்லாத காலங்களில் ரொட்டிக்காக மட்டுமே தாயைத் தேடிவரும் மூத்த மகனைப் பற்றி, அடுத்த ஊரில் தனியாக வசித்துக்கொண்டு யாரைப் பற்றியும் கவலைப்படாமல் தன்வரையிலும் சுகமாய் வாழும் இரண்டாமவனைப் பற்றி, பள்ளிக்குச் செல்லவேண்டிய வயதில் கிரண்டர் பிரதர்ஸ் நிறுவனத்தில் தன் பால்யத்தை அழித்துக்கொண்டு, தாய்க்கு உதவும் நோக்கோடு துணிவுடன் போராடிக்கொண்டிருக்கும் பலவீனமான சிறுவன் ஆர்வியைப் பற்றி, அடுத்த அறையில் உறங்கிக் கொண்டிருக்கும் அறியாக் குழந்தைகள் ஐந்தினைப் பற்றி, விடியற்காலை ஐந்தரை மணி முதல் எட்டு மணி வரையிலும் துடைத்துப் பெருக்கும் வேலையும் அதன் பின் நாள் முழுவதும் சலவைத் தொழிலும் செய்து கஷ்ட ஜீவனம் நடத்தும் தன்னைப் பற்றி, வீட்டுக்கு வாடகை கொடுக்க வழியில்லாமல் இப்படியொரு மோசமான சூழலில் குழந்தைகளை வளர்ப்பது பற்றி……
ஆர்வி தூக்கத்தில் ஏதோ முனகினான். "நீ இன்னும் தூங்கவில்லையா, ஆர்வி?" தாய் கேட்டாள். "தொண்டை வலிக்கிறதா? ஏதாவது வேண்டுமா?"
"தூங்கத்தான் நினைக்கிறேன் அம்மா, ஆனால்… அதற்குள் நேரம் முடிந்துவிடுமென்று நினைக்கிறேன்."
"எதற்குள், ஆர்வி?" மகன் காய்ச்சல் வேகத்தில் உளறுகிறானோ என்று பயந்தவளாய் அவசரமாகக் கேட்டாள்.
"அலாரம் அடிப்பதற்குள்."
அவன் தூக்கத்திலேயே பேசிக்கொண்டிருந்தான். அவள் மெல்ல எழுந்து சென்று அலாரத்தை இரண்டு மணி நேரம் தள்ளி வைத்துவிட்டுப் படுத்தாள்.
‘இப்போது அவன் நிம்மதியாகத் தூங்கலாம்’ அவள் தனக்குத் தானே மெதுவாகச் சொல்லிக்கொண்டாள்.
திடீரென்று ஆர்வி எழுந்து உட்கார்ந்துகொண்டு சொன்னான், "அம்மா… அலாரம் அடித்துமுடித்துவிட்டதென்று நினைக்கிறேன்." பதிலுக்குக் காத்திராமல் மறுபடியும் படுத்து உறங்கிப்போனான்.
மழை விட்டிருந்தது. பளிச்சிடும் நட்சத்திரங்கள் நிறைந்த வெளிறிய வானம், கடலுக்கு, நகருக்கு, மாளிகைகளுக்கு, குடிசைகளுக்கு… எல்லாவற்றுக்கும் மூடி போட்டது போல் கவிழ்ந்திருந்தது. ஆர்வி ஆஸ்பினாலின் வீட்டு மேற்கூரைத் துவாரங்கள் வழியே தென்சிலுவை விண்மீன் கூட்டமும் அதைச் சூழ்ந்திருந்த சில விண்மீன்களும் காட்சியளித்தன.
கிரண்டர் மாளிகையின் முற்றத்தில் நிலவொளிர்ந்துகொண்டிருந்தது. நீர் வடிந்துகொண்டிருக்கும் தோட்டமும், ஈஸ்டர் நடனத்துக்கென்று ஒளியலங்காரம் செய்யப்பட்ட சாளரங்களும், பிரத்யேக மேசை நாற்காலிகளால் அழகுபடுத்தப்பட்ட வரவேற்பறையும், அங்கமர்ந்திருந்த விருந்தினர்களின் மனம் உருகும்படி செல்வச் சீமாட்டியான கிரண்டரின் மகள்களில் ஒருத்தி, தெருவோரத்தில் துப்புரவுப் பணிபுரியும் சிறுவனைப் பற்றிப் பாடிய சோக கீதமும் ஒன்றிணைந்து அந்த இரவை அற்புதமானதாக ஆக்கிக்கொண்டிருந்தன.
கடிகாரத்தில் கோளாறு அல்லது திருமதி ஆஸ்பினால் செய்த தவறு… ஏதோ ஒன்று கடிகாரத்தை அகால இரவில் அலறச் செய்தது. அவள் சிரமத்துடன் விழித்து, ஆர்வி எழுவதை எதிர்பார்த்து அசையாது படுத்திருந்தாள். அவன் எழுவதாய்த் தெரியவில்லை. அவள் பயத்தால் வெளிறிய முகத்தோடு ஸோஃபாவின் பக்கம் பார்த்தாள்.
சன்னல் வழியாக உள்ளே வந்த தெருவிளக்கின் வெளிச்சத்தில், அவன் அசைவற்றுக் கிடப்பது தெரிந்தது. அலாரச் சத்தம் கேட்டு ஏன் அவன் எழவில்லை? தூக்கத்தில் சட்டென்று விழித்துக்கொள்பவனாயிற்றே!
"ஆர்வீ!…" தாய் அழைத்தாள். பதிலில்லை. "ஆர்வீ!…" அவள் மறுபடியும் அழைத்தாள். அவள் குரல் பயத்தால் நடுக்கமுற்று விநோதமாய் ஒலித்தது. ஆர்வி பதிலளிக்கவே இல்லை.
"கடவுளே!" அவள் முனகினாள்.
அவள் எழுந்து ஸோஃபாவின் அருகில் வந்து நின்றாள். ஆர்வி வழக்கமாய்த் தூங்கும், அவனுக்கு விருப்பமான நிலையில்… கைகளைக் கட்டியபடி மல்லாந்து படுத்திருந்தான். மேற்கூரையையும்… அதைத் தாண்டி கடவுள் இருப்பதாகச் சொல்லப்படும் வெளியையும் வெறித்தபடி அவனுடைய கண்கள் அகலத் திறந்திருந்தன.
(ஆஸ்திரேலியப் பிரபல கவிஞரும் கதாசிரியருமான ஹென்றி லாசன் (1867-1922) எழுதிய Arvie Aspinall’s Alarm Clock என்ற ஆங்கிலக் கதையின் தமிழாக்கம்).
நல்ல கதை கதையை வாசித்ததும் கவலையாக இருந்தது . அதனால் தானோ என்னவோ இப்பொலுதெல்லாம் கணவன் இல்லாத மனைவிக்கும் 18 வயதிட்கு குறைந்த பிள்ளைகளுக்கும் அரசாஙம் மாதா மாதம் பணம் கொடுக்கிறது.