ஒருமுறை, வயதான ஏழை வழிப்போக்கர் ஒருவர் சாலையிலே போய்க் கொண்டிருந்தார். வெகுநேரம் நடந்து நடந்து அவருக்குச் சோர்வு ஏற்பட்டது. இரவு வேறு தொடங்கி விட்டதால் இருட்டில் அவரால் நடக்க முடியவில்லை. பார்வை வேறு மங்கி விட்டிருந்தது. அதனால், எங்காவது தங்க இடம் கேட்கலாமென்று முதியவர் ஒரு பெரிய வீட்டின் கதவைத் தட்டினார்.
"அம்மா தாயே! இரவுப் பொழுதைக் கழிக்கக் கொஞ்சம் இடம் தாருங்கள்" என்று வேண்டினார்.
பணக்காரியான அந்த வீட்டுக்காரி, முதியவரின் குரல் கேட்டு வெளியே வந்தவள், அவரைப் பார்த்ததும் திட்டத் தொடங்கினாள்.
"என்ன?… தங்க இடம் வேண்டுமா? நாய்களை அவிழ்த்து விட்டு விரட்டியடிக்கச் சொல்வேன். மரியாதையாக இங்கிருந்து போய்விடு" என்று கத்தினாள்.
முதியவர் ஒன்றும் பேசாமல் அங்கிருந்து விலகி நடந்தார். அடுத்ததாக ஒரு சிறு குடிசை இருப்பதைக் கண்டு அங்கே சென்று கதவைத் தட்டினார்.
"தாயே! இன்று இரவு இங்கே கொஞ்சம் தங்கிக் கொள்ளலாமா" என்று கேட்டார்.
கதவு திறந்தது, "ஐயா பெரியவரே! உள்ளே வாருங்கள்" என்று அந்த வீட்டுப் பெண்மணி அழைத்தார். "இன்று இரவு நீங்கள் இங்கேயே தங்கலாம். ஆனால் இங்கே சப்தமாய் இருக்கும். இடமும் அதிகமில்லை. பரவாயில்லையா?" என்று அன்போடு அழைத்தாள்.
"பரவாயில்லை அம்மா" என்று முதியவர் குடிசைக்குள் வந்தார். பார்த்தவுடனே, பரம ஏழைக் குடும்பம் என்று தெரிந்தது. குழந்தைகள் நிறையப் பேர் இருந்தனர். கந்தலாய்க் கிழிந்த பழைய சட்டைகள் அணிந்திருந்தனர். அவர்கள் முதியவரைப் பார்த்ததும், "தாத்தா!" என்று அன்போடு சூழ்ந்து கொண்டனர்.
முதியவர் அப்பெண்ணைப் பார்த்து, "அம்மா! குழந்தைகள் ஏன் இப்படிக் கந்தலாய் உடுத்தியிருக்கிறார்கள்? புதிய சட்டைகள் தைத்துத் தரக்கூடாதா?" என்று கேட்டார்.
அப்பெண் அதற்கு, "எங்கே போவேன் நான்?" என்று பதிலளித்தாள். "என் கணவர் இறந்து விட்டார். தன்னந்தனியாக இவர்களை வளர்க்கக் கஷ்டப்படுகிறேன். அன்றாடம் சாப்பிடுவதற்கே கையில் காசு இல்லை. துணிமணிகளுக்கு எங்கே போவேன்" என்று வருத்தத்துடன் கூறினாள்.
இதைக் கேட்ட முதியவர் மேற்கொண்டு பேசாமல் மௌனமாகி விட்டார். பிறகு அந்தப் பெண், இருக்கும் உணவை எடுத்து வந்து வைத்து முதியவரையும் தம்முடன் சேர்ந்து சாப்பிட வருமாறு அழைத்தாள்.
அதற்குப் பெரியவர், "நன்றி தாயே! எனக்குப் பசிக்கவில்லை. நான் சற்று முன்புதான் சாப்பிட்டேன். நீங்கள் சாப்பிடுங்கள்" என்றார்.
பிறகு, தமது மூட்டையை அவிழ்த்து அதிலிருந்த தின்பண்டங்களை எடுத்துக் குழந்தைகளிடம் கொடுத்துச் சாப்பிடச் சொன்னார். பின்னர் படுத்துக் கொண்டார். உடனே தூங்கியும் விட்டார்.
பொழுது விடிந்ததும் முதியவர் எழுந்து, தமக்குக் காட்டிய அன்புக்காக அப்பெண்ணிடம் நன்றி தெரிவித்தார்.
"அம்மா! நீ காலையில் செய்வதை அந்தியாகி, இரவு வரை செய்து கொண்டிருப்பாய்!" என்று வாழ்த்திவிட்டு அவளிடம் விடைபெற்றுக் கொண்டார்.
பெரியவர் சொன்னதன் பொருள் அவளுக்குப் புரியவில்லை. ஆனால், அதைப் பற்றி அவள் கவலைப்பட்டுக் கொள்ளவில்லை. வாசல் வரை சென்று அவரை வழியனுப்பி வைத்து விட்டுக் குடிசைக்குள் திரும்பி வந்தாள்.
பிறகு அந்தப் பெண், இரவு அந்த முதியவர் சொன்னதைத் திடீரென்று நினைத்துக் கொண்டாள். ‘என் குழந்தைகள் கந்தலை உடுத்தியிருப்பதாய் இந்த ஏழை முதியவரே சொன்னால், மற்றவர்கள் என்னவெல்லாம் சொல்வார்கள்’ என்று யோசித்தாள்.
கடைசியாய் அவளிடம் எஞ்சியிருந்த சொற்ப அளவுத் துணியிலிருந்து ஒரே ஒரு சட்டையாவது தைப்பதென்று முடிவு செய்து கொண்டாள். அந்தத் துணி ஒரு சட்டை தைக்கும் அளவிற்காவது இருக்குமா என்று அளந்து பார்க்க எண்ணினாள். அதற்குள், ‘அளந்தவுடன் வெட்டுவதற்குக் கத்தரிக்கோல் வேண்டுமே’ என்று தோன்றியது. பக்கத்து வீட்டுப் பணக்காரியிடம் கத்தரிக்கோல் வாங்கி வரச் சென்றாள்.
கத்தரிக்கோலை வாங்கி வந்ததும், நேராக உள் அறைக்குச் சென்று அலமாரியில் இருந்து துணியை எடுத்து அளக்க ஆரம்பித்தாள். அவள் அளந்து செல்லச் செல்ல அந்தத் துணி நீளமாய் மேலும் மேலும் நீண்டு கொண்டே சென்றது. முடிவில்லாமல் நீண்டு கொண்டே சென்றது. பகல் பொழுது முழுவதும் அளந்து கொண்டே இருந்தாள். மாலைப் பொழுதாகி இரவு வந்ததும்தான் அந்தத் துணி நீண்டு கொண்டே செல்வது நின்றது.
அதைப் பார்த்த அந்தப் பெண், தனக்கும் தன் குழந்தைகளுக்கும் வாழ்நாள் முழுவதற்கும் தேவையான துணி கிடைத்து விட்டதையறிந்து மகிழ்ச்சியடைந்தாள்.
‘வயதான பெரியவர் இதைத்தான் கூறிச் சென்றிருக்கிறார்’ என்று இப்பொழுது புரிந்து கொண்டாள்.
அடுத்த நாள் காலை, கத்தரிக்கோலைத் திருப்பிக் கொடுப்பதற்காகச் சென்றவள், அந்தப் பணக்காரியிடம் தனக்கு அம்முதியவரின் வாழ்த்தால் அறை நிறையத் துணி கிடைத்ததை மறைக்காமல் கூறினாள். தனக்கும் தன் குழந்தைகளுக்கும் ஆயுள் முழுவதும் துணி எடுக்கத் தேவை இருக்காது என்று தெரிவித்து விட்டு மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினாள்.
அதைக் கேட்டதும் பணக்காரி திடுக்கிட்டாள். ‘அந்தப் பிச்சைக்காரக் கிழவனை என் வீட்டில் தங்க வைக்காமல் விரட்டி அடித்தேனே! தவறு செய்து விட்டேன்’ என்று நினைத்து வருந்தியவாறு, தன் வேலைக்காரனை அவசரமாக அழைத்தாள்.
“சீக்கிரமாய் வண்டியைப் பூட்டிக் கொண்டு, அந்தப் பிச்சைக்காரன் எங்கே இருக்கிறான் என்று தேடு! வேகமாகச் சென்று, எப்படியாவது அந்தக் கிழவனைத் தேடிப் பிடித்து என்னிடம் அழைத்து வா! ஏழைகளுக்குத் தாராளமாய் எப்பொழுதும் உதவ வேண்டும் என்று என் தந்தை அடிக்கடி கூறியுள்ளார்” என்று சொல்லி அவனை அனுப்பி வைத்தாள்.
வேலைக்காரன் உடனே புறப்பட்டு வண்டியை விரட்டிக் கொண்டு கிழவரைத் தேடிச் சென்றான். மறுநாள்தான் அவனால் கிழவரைப் பிடிக்க முடிந்தது. ஆனால், கிழவர் வர மறுத்தார்.
உடனே வேலைக்காரன். "ஐயோ! நான் என்ன பாவம் செய்தேனோ" என்று புலம்பினான். "ஐயா பெரியவரே! உம்மை நான் அழைத்துச் செல்லாமல் திரும்பிப் போனால் என் எஜமானி சம்பளமும் கொடுக்காமல் வேலையிலிருந்தும் என்னை விரட்டி விடுவாள்" என்று கூறி மனம் வருந்தினான்.
“அப்பா தம்பி! நீ வருத்தப்படாதே! என்னால் பிறர் கஷ்டப்படுவது எனக்குப் பிடிக்காது. உன் விருப்பப்படியே உன்னுடன் வருகிறேன்” என்று முதியவர் அவனுக்கு ஆறுதல் கூறி அவனுடன் சென்றார்.
பிறகு, வண்டியில் ஏறி இருவரும் அந்தப் பணக்காரி வீட்டிற்குச் சென்றனர்.
பணக்காரி பொறுமை இழந்தவளாய் வெளிவாசலில் நின்று கொண்டிருந்தாள். முதியவர் வந்து சேர்ந்ததும், தலை குனிந்து வணங்கி மகிழ்ச்சியுடன் அவரை உள்ளே அழைத்துச் சென்று உணவும், பானமும் அளித்து உபசரித்தாள். பிறகு, மிருதுவான படுக்கை போட்டுக் கொடுத்தாள்.
"ஐயா பெரியவரே! வசதியாகப் படுத்து உறங்குங்கள். வேறு ஏதாவது வேண்டுமா?" என்று கேட்டு விழுந்து விழுந்து உபசரித்தாள்.
முதியவர் அந்தப் பணக்காரியின் வீட்டில் ஒரு நாள் முழுவதும், பிறகு இரண்டாம் நாளும், பிறகு மூன்றாம் நாளும் தங்கியிருந்தார். சாப்பிட்டும், பானம் அருந்தியும், தூங்கியும் பொழுதைக் கழித்தார். பணக்காரி அவருக்கு வேண்டியவையெல்லாம் அளித்தாள். ஆனால், வெளியே இனிக்க இனிக்கப் பேசினாலும் உள்ளுக்குள் புகைந்து கொண்டிருந்தாள்.
‘இந்தக் கிழவன் எப்பொழுது என் வீட்டை விட்டுப் போய்த் தொலைவானோ’ என்று தன்னுள் கூறிக் கொண்டிருந்தாள்.
முதியவரைப் போகச் சொல்வதற்கு அவளுக்கு வாயும் வரவில்லை. அவருக்காகச் செய்த இவ்வளவும் விரயமாகிவிடக் கூடாதே என்று பொறுமையாய் இருந்தாள்.
பிறகு அவள் பெருமகிழ்ச்சி அடையும்வண்ணம், நான்காம் நாள் அதிகாலையில் முதியவர் அங்கிருந்து புறப்படத் தயாரானார். பணக்காரிக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. அவள் முதியவரை வெளிவாசல் வரை வந்து வழி அனுப்பி வைத்தாள். ஆனால், அவர் வாயைத் திறக்கவில்லை. மௌனமாகவே வெளிவாசலைக் கடந்து, தெருவிற்கும் போக ஆரம்பித்து விட்டார். அதற்கு மேல் பொறுக்க முடியாமல் பணக்காரி, "ஐயா பெரியவரே! எனக்கு எந்த வாழ்த்தும் சொல்லாமலேயே செல்கிறீர்களே!" என்று கேட்டாள்.
தலையைத் திருப்பிப் பார்த்த முதியவர், "அம்மா! இன்று காலையில் நீ செய்வதை மாலையாகி இருட்டும் வரை செய்து கொண்டே இருப்பாய்" என்று கூறி விட்டுச் சென்றார்.
உடனே பணக்காரி வீட்டிற்குள் ஓடிச் சென்று பணத்தை எண்ணுவதற்காகக் கையில் எடுத்தாள்.
ஆனால் அச்சமயத்தில் பலமாகத் தும்மல் வந்ததால் தும்மினாள். அன்று பகல் முழுவதும் ஓயாமல் தும்மிக் கொண்டிருந்தாள்.
"அச்… அச்… அச்" என்று ஓயாமல் தும்மிக் கொண்டே இருந்தாள். அவளால் சாப்பிட முடியவில்லை. தண்ணீர் குடிக்க முடியவில்லை. எவர் கேட்கும் கேள்விக்கும் பதிலளிக்க முடியவில்லை. தும்மித் தும்மி மூக்கும் முகமும் வீங்கின. எல்லோரும் அவளிடமிருந்து பத்தடி தூரத்துக்குத் தள்ளியே பேசினர். எதற்கும் அவளிடமிருந்து "அச்… அச்…" என்ற ஒரே பதில்தான் வந்தது.
மாலையாகி, இருட்டியதும்தான் நின்றது. அப்போதுதான் அவள் தன் தவற்றை உணர்ந்தாள். அது அவளுக்கு, அதிகப் பொருளுக்கு ஆசைப்படக்கூடாது! எல்லோரையும் மதிக்க வேண்டும்! இருப்பதை ஏழை எளியவர்களுக்குக் கருணையுடன் கொடுத்து உதவ வேண்டும்! அதையும் மனப்பூர்வமாகச் செய்ய வேண்டும் என்கிற பாடங்களைக் கற்றுக் கொடுத்தது. அவளும் மனம் திருந்தினாள்.
அருமையான கதாபாத்திரம். அதிஷ்டம் கதவை தட்டும்போது பயன்படுத்தி கொள்பவன் தான் புத்திசாலி என்பதற்கான சரியான அறிவுபூர்வமாக சிந்தனைக்கதை. வாழ்த்துக்கள் ஹேமா! எப்படி யோசிக்கின்றீர்கள்