அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில் (428)
– திருக்குறள்
புதன்கிழமை காலை சிவகாமி ஆபிசிற்குக் கிளம்பிய போது சந்திரசேகர் உடன் கிளம்பவில்லை. மகள் இன்று டாக்டரிடம் போகும் நேரத்தில் வழியனுப்ப வீட்டில் இருக்க முடிவு செய்தார். காலையில் இருந்து மகளின் கூடவே இருந்தார். "பயப்படாதே…. எல்லாம் சரியாயிடும்" என்று அடிக்கடி சொன்னார்.
அவள் கிளம்பிய போதும் அதையே சொல்ல ‘பதினேழு’ என்று ஆர்த்தி எண்ணினாள். அவர் இப்படி தைரியமூட்டுவது இன்று இது பதினேழாவது முறை. உண்மையில் ஆர்த்திக்கு பயமோ, பதட்டமோ அதிகம் இருக்கவில்லை. டாக்டர் ப்ரசன்னாவிடம் அவளுக்கு ஏற்பட்டிருந்த நம்பிக்கை அவளுடைய பயத்தை நிறையவே குறைத்திருந்தது. அவளுக்குத் தந்தையின் இந்த தைரியமூட்டல் மனதை நெகிழ வைத்தது. அதே நேரத்தில் ‘இத்தனை பாசத்தைக் கொட்டும் அப்பா இத்தனை காலம் ஏன் தன்னைத் தேடக் கூட பெரிதாக முனையவில்லை?’ என்ற கேள்வி அவள் மனதில் எழுந்தது. ஆனால் வாய் விட்டுக் கேட்டு அவர் மனதை அவள் புண்படுத்த விரும்பவில்லை.
நீலகண்டன் அன்னையின் படத்திற்கு மலர்களை வைத்து நிறைய நேரம் பிரார்த்தனை செய்தார். "அன்னையே அன்னையே. என் மகளைக் கொன்றவளை என் பேத்தி மனசுல இருந்து சரியாக அடையாளம் காட்டுங்கள்".
அவள் ஆகாஷுடன் மதியம் காரில் கிளம்பிய போது பஞ்சவர்ணம் தனதறையில் இருந்து அவளைக் கவனித்துக் கொண்டு இருந்தாள். நீலகண்டன், பார்வதி, அமிர்தம், சந்திரசேகர் எல்லாரும் வழியனுப்பியதை ஏளனமாகப் பார்த்தாள். "ஏதோ வெளிநாட்டுக்குப் போகிறவளை அனுப்பறது போல வந்து வழியனுப்பறாங்க சனியன்கள்."
பிறந்த நாள் விழாவில் ஆகாஷ் மீது காதல் குறையவில்லை என்பதை எப்போது ஆர்த்தி காட்டினாளோ அந்தக் கணத்தில் இருந்து ஆர்த்தி பஞ்சவர்ணத்தின் ஆத்திரத்துக்கு ஆளாகி விட்டாள். என்ன தான் பேரனிடம் இதெல்லாம் சகஜம் என்பது போல் பேசினாலும் அவள் உள்ளுக்குள் கொதித்தாள். தன்னுடைய கணிப்பின் படி நடந்து கொள்ளாதவர்களை அவளால் என்றுமே சகிக்க முடிந்ததில்லை. ‘முதல்ல என் பேரனை உன் கழுத்துல தாலி கட்ட வைக்கிறேன். பிறகு கவனிச்சுக்கறேன்டி உன்னை" என்று மனதினுள் சொல்லிக் கொண்டாள்.
அவர்கள் கார் கிளம்பியதும் மூர்த்திக்கு ஃபோன் செய்தாள். "ஆர்த்தி கிளம்பிட்டாடா. அந்த அசோக்கிற்கு ஃபோன் போட்டு எதுக்கும் ஞாபகப்படுத்திடு. அவன் மறந்துடப்போறான்"
மூர்த்தியும் ஃபோன் செய்து ஞாபகப்படுத்தினான். அரை நிமிட மௌனத்திற்குப் பின் அசோக் சொன்னான். "இனிமேல் எதையும் நீங்க ரெண்டாவது தடவை சொல்லி தொந்திரவு செய்ய வேண்டாம் மூர்த்தி. நான் பிசியா இருக்கேன்." மூர்த்தியின் பதிலுக்காகக் காத்திராமல் இணைப்பை துண்டித்தும் விட்டான். மூர்த்தி முகம் சிவந்தது. "என்னவோ இவன் பெரிய ஆள் மாதிரியும், நானெல்லாம் தொந்திரவு செய்யற வாண்டுப்பயல் மாதிரியும் நடந்துக்கறான். ஆனாலும் ஒரு மனுசனுக்கு இவ்வளவு கர்வம் ஆகாது".
காரில் சென்று கொண்டிருந்த போது ஆகாஷ் நிறைய நேரம் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. அதே நேரம் முகத்தில் கடுகடுப்பும் இல்லை. தந்தையின் அன்றைய அறிவுரைக்குப் பின் முகத்தை ஆர்த்திக்காகக் கூட அப்படி வைத்துக் கொள்வதில்லை என்று அவன் தீர்மானித்திருந்தான்.
ஆர்த்தியாகப் பேசினாள். "நீங்க வயலின் வாசிப்பீங்கன்னு எனக்கு ஞாயித்துக் கிழமை வரை தெரியவே இல்லை. நல்லா வாசிக்கிறீங்க. எப்ப இருந்து கத்துக்கறீங்க"
"பத்து வயசுல இருந்து" சொன்னவன் மீண்டும் வாயைத் திறக்கவில்லை. ஆர்த்தி அவனிடமிருந்து தந்தி வார்த்தைகளை வாங்க விருப்பமில்லாமல் தானும் அமைதியானாள். ஆனாலும் அவளுக்கு அவன் நன்றாகப் பேசாததில் பெரிய வருத்தமில்லை. அது அவளுக்கு இப்போதெல்லாம் பழகி விட்டது. அவனுடன் அமர்ந்து பயணிப்பதே சந்தோஷமாக இருந்தது. அவன் உடலில் இருந்து லேசாக வீசிய மஸ்க் செண்ட் வாசனை அவளுக்குப் பிடித்திருந்தது. அந்த மௌனத்திலும் அவனுடைய அருகாமை தந்த நிறைவிலும் கண்களை மூடிக் கொண்டு லயித்தாள்.
நேரம் செல்லச் செல்ல அவனுக்கும் லேசாக அவளுடன் செய்யும் பயணம் ஒருவித ஆனந்தத்தைத் தர ஆரம்பிக்க அவன் எரிச்சலடைந்தான். இவளுக்கு எதாவது வசிய வித்தை தெரியுமோ? கஷ்டப்பட்டு ஆபிசில் செய்ய வேண்டிய வேலைகள் பற்றி சிந்திக்க ஆரம்பித்தான். ஆனால் இடை இடையிடையே மனம் முரண்டு பிடித்தது.
ப்ரசன்னாவின் க்ளினிக்கை அடைந்த போது மாலை ஐந்து மணியாகி இருந்தது. காரை நிறுத்தும் போது பக்கத்தில் ஏதாவது கார் இருக்கிறதா என்று கவனித்தான். அருகில் எந்தக் காரும் இல்லை. இன்று யாரோ தன்னைக் கண்காணிக்கிறார்கள் என்று ஆர்த்தி சந்தேகப்படக் காரணம் இல்லை. ஆர்த்தியும் அருகில் எந்தக் காரும் இல்லை, தனக்கு அந்தக் கண்காணிக்கும் உணர்வும் வரவில்லை என்று நிம்மதியுடன் ஆகாஷைத் தொடர்ந்து கிளினிக்கினுள் நுழைந்தாள்.
உள்ளே ப்ரசன்னாவின் செகரட்டரி ஆகாஷைப் பார்த்து பிரத்தியேகமாய் ஒரு புன்னகை பூத்து ஆர்த்தியை அதிருப்தியடைய வைத்தாள். "ஹலோ ஆகாஷ், ஆர்த்தியோட அப்பாயின்மென்டுக்கு இன்னும் பத்து நிமிஷம் இருக்கு. டாக்டர் அவங்களை அட்டெண்ட் செய்ய டைம் இருக்கிறதால் நீங்கள் ஏதாவது அவர் கிட்ட பேசறதாயிருந்தா இப்ப போய் பேசிக்கலாம்"
ஆகாஷ் ஆர்த்தியைப் பார்க்க அவள் தலையசைத்தாள். ஆகாஷ் உள்ளே செல்ல செகரட்டரியின் எதிரே இருந்த நாற்காலிகளில் ஒன்றில் ஆர்த்தி அமர்ந்தாள். அந்த செகரட்டரி அவளைப் பார்க்க பிரியப்படாதவளாக ஒரு புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தாள்.
"ஹலோ ப்ரசன்னா"
"ஹாய் ஆகாஷ், வா உட்கார். அண்ணி வெளியே உட்கார்ந்திருக்காங்களா?"
"அண்ணியா…" ஆகாஷ் புருவத்தைக் கேள்விக்குறியாக்க ப்ரசன்னா சிரித்துக் கொண்டே சொன்னான். "நண்பனின் மனைவியை அண்ணின்னு தான் பெரும்பாலானவங்க கூப்பிடறாங்க"
"முட்டாள்…." என்று ஆகாஷ் ரௌத்திராகாரமாக, ப்ரசன்னா "கூல் டவுன் மேன். சரி மனைவி இல்லை, மனைவியாகப் போறவங்க" என்று சமாதானப்படுத்தினான்.
ஆகாஷ் முறைத்தான். "என்னடா நீ பாட்டுக்கு கற்பனை செய்யறாய்"
"அந்தப் பொண்ணு பார்வையில் ஓப்பனாத் தெரியுது. நீ அடக்கி வாசிக்கிறாய்ன்னாலும் விஷயம் அதே தான். காதல்"
"உன் செக்ரட்டரி கூட என்னை ஒரு மாதிரியாய் தான் பார்க்கிறாள்"
"ஆனா என் செக்ரட்டரி ஆர்த்தி அளவு உன்னப் பாதிக்கலையே"
ஆகாஷ் கண்களை மூடி தன்னை அமைதிப்படுத்திக் கொண்டான். "சரி விஷயத்துக்கு வா. நீ ஏன் என்னை முதல்ல பார்க்கணும்னாய்"
ப்ரசன்னா புன்னகைத்தான். "அது தான் ஆகாஷ். என் செக்ரட்டரி கேஷுவலாய் சொன்னாலும் நான் தான் தனியாய் உன்னை வரச்சொன்னேன்னு புரிஞ்சுகிட்டாய் பார்".
அரை நிமிடம் மௌனம் சாதித்த ப்ரசன்னா அடுத்துப் பேசிய போது பழைய கேலிப்பேச்சின் சுவடே இல்லை. "ஆகாஷ். ஆர்த்தியை ஹிப்னாடைஸ் பண்ணறப்ப எத்தனையோ உண்மைகள் வெளியே தெரிய வரலாம். ஏன்னா அவள் மனதில் எத்தனையோ நிகழ்வுகள் படமாகப் பதிந்திருக்கு. சில செஷன்கள்லயே அதை வெளியே கொண்டு வந்துடலாம்கிற நம்பிக்கை எனக்கிருக்கு. நானாய் அதை அவளைத் தவிர யார் கிட்டயும் சொல்லப் போறதில்லை. உன் கிட்ட கூடத்தான்…."
அது நியாயம் தானே என்பது போல ஆகாஷ் தலையாட்டினான்.
"ஆனால் இதில் ஒரு பெரிய ஆபத்து ஆர்த்திக்கு இருக்கு"
ஆகாஷ் குழப்பத்துடன் ப்ரசன்னாவைப் பார்த்தான். "என்ன?"
"பதினெட்டு வருஷங்களுக்கு முன்னால் ஒரு கொலை நடந்திருக்கிற மாதிரி தெரியுது. அது உண்மையாய் இருந்து, அந்தக் கொலையாளி இப்பவும் உங்க வீட்டுல இருந்தால்…."
"….இருந்தால்?"
"உண்மை வெளியே வரப்போகிறதை ரசிப்பாங்கன்னு உனக்குத் தோணுதா?"
ஆகாஷுக்குப் புரிந்தது. ஹிப்னாடிசம் செய்து உண்மை வெளிவரப்போகிறது என்று கொலையாளிக்குத் தெரிந்தாலே ஆர்த்தியின் உயிருக்கு ஆபத்து தான்…. ஆகாஷுக்கு இரத்தம் உறைந்தது. இந்த ஹிப்னாடிச விஷயம் இப்போதே வீட்டில் உள்ள எல்லோருக்கும் தெரியும்…..
ஆகாஷ் வாயடைத்து அமர்ந்திருக்க ப்ரசன்னா சொன்னான். "ஆர்த்தியைப் பாதுகாக்க இனி எல்லா ஏற்பாடும் செய்யுங்க. தனியா எங்கேயும் விடாதீங்க. சரி நேரமாச்சு. போய் ஆர்த்தியை உள்ளே அனுப்பு"
(தொடரும்)”
how long you are gonna drag this story… its frustrating as the scenes are not moving at all
i did not read this story for a month and when i read it again it was in the same point. There is no improvement…
திரு கனேசனின் படைப்புக்கள் மிகவும் விறுவிறுப்பானவை.அதுவே அவரது பலம்.
இந்த கதை ஏனோ இழுக்கிறார். தயவு செய்து உங்கள் பாணிக்கு மாறுங்கள்:)