மஹாபாரதத்திலும் மற்ற பூர்வ பூராணங்களிலும் வேதரிஷிகளைப் பற்றிய கதைகளும் சரித்திரங்களும் ஒரே சித்தாந்தமாக, வேத ரிஷிகளுக்குத் துறவறம் என்ற விஷயமே இன்னதென்று தெரியாது என்ற என் வார்த்தையை நிலைநிறுத்துகின்றன. மேலும், சுவாமி விவேகானந்தர், வேதத்தின் பிற்சேர்க்கைகளாகிய உபநிஷத்துக்களையே முக்கியமாகப் பயின்றவர். இந்த உபநிஷத்துக்கள் வேதாந்தம் என்ற பெயர் படைத்தன. அதாவது, வேதத்தின் நிச்சயம். இவை வேத ரிஷிகளால் சமைபட்டனவல்ல. பிற்காலத்தவரால் சமைபட்டன. ஸம்ஹிதைகள் என்று மந்திரங்கள் சொல்லப்படுவனவே உண்மையான வேதங்கள். அவையே ஹிந்து மதத்தின் வேர். அவை வசிஷ்ட வாமதேவாதி. தேவ ரிஷிகளின் கொள்கைகளைக் காட்டுவன.
உபநிஷத்துகள் மந்திரங்களுக்கு விரோதமல்ல. அவற்றுக்குச் சாஸ்திர முடிவு. அவற்றின் சிரோபூஷணம். ஆனால், பச்சை வேதமென்று அறியப்படுவது மந்திரம் அல்லது ஸம்ஹிதை எனப்படும் பகுதியேயாம். இந்த மந்திரங்கள் அல்லது ஸம்ஹிதைகள் பழைய, மிகப் பழைய ஸம்ஸ்கிருத பாஷையில் எழுதப்பட்டிருக்கின்றன. அதாவது, வேதங்களின் ஸம்ஸ்கிருதம் மதுரைச் சங்கத்துக்கு முந்திய தமிழைப் போலவும் உபநிஷத்துக்களின் பாஷை சங்கத்துக்குப் பிந்திய தமிழைப் போலவும் இருக்கின்றன.
ஆனால், இந்த உவமானம் முற்றிலும் பொருந்துவதாகக் கூறலாகாது. இன்னும் அதை உள்ளபடி விளக்குமிடத்தே, ஸம்ஸ்கிருத பாஷையிலுள்ள மற்றெல்லா நூல்களும் ஒரு பாஷை, வேதம் மாத்திரம் – அதாவது, ஸம்ஹிதை அல்லது மந்திரம் மாத்திரம் – தனியான பாஷையாக இருக்கிறது. இஃதொரு பெருவியப்பு அன்றோ? வேத ஸம்ஸ்கிருதம் வேறெந்த நூலிலும் கிடையாது. உபநிஷத்தில் சில, மிகச் சில பகுதிகளில், விசேஷமாக வேத மந்திரங்களை மீட்டு உரைக்குமிடத்தே வேத பாஷையைக் காணலாம். மற்றபடி, உபநிஷத்துக்கள் முழுவதும் பிற்காலத்துப் பாஷையிலேயே சமைந்திருக்கின்றன.
இங்ஙனமிருக்கப் பிற்காலத்து ஆசார்யார்களிலே சிலர் வேதத்தைக் கர்மகாண்டம் என்றும், அதனால் தாழ்ந்தபடியைச் சேர்ந்ததென்றும் உபநிஷத்தே ஞானகாண்டம் என்றும், ஆதலால் அது வேதத்தைக் காட்டிலும் உயர்ந்ததென்றும் கருதுவாராயினர்.
இங்ஙனம் பிற்காலத்து ஆசாரியார்கள் நினைப்பதற்கு உண்டான காரணங்கள் பல. அவற்றுள் சிலவற்றை இங்கே தருகிறேன். முதலாவது காரணம், வேத பாஷை மிகவும் பழைமைப்பட்டுப் போனபடியால் அதன் உண்மையான பொருளைக் கண்டுபிடித்தல் மிகவும் துர்லபமாய்விட்டது. நிருத்தம் என்ற வேத நிகண்டையும், பிராம்மணங்கள் என்று சொல்லப்படும் பகுதிகளே காணப்படும் வேத மந்திர விளக்கங்களையும் கற்ற பின்னரே, ஒருவாறு வேதமந்திரங்களின் பொருளையறிதல் சாத்தியமாயிற்று. வேதம் பிரம்மாண்டமான நூல். அதில் இத்தகைய ஆராய்ச்சி செய்வோர் மிக மிகச் சிலரேயாவார். இப்போது வேதத்திற்கு விளக்குப் போல நிற்கும் சாயணரென்ற வித்தியாரண்ய சங்கராச்சாரியரின் பாஷ்யம் பிராம்மணங்களையும் நிருத்தத்தையுமே ஆதாரமாகவுடையது. பிராம்மணங்களில் பெரும்பாலும் கற்பனைக் கதைகளும் கற்பிதப்பொருளுமே கூறப்பட்டிருக்கின்றன. நிருத்தத்திலே என்றால் பெரும்பாலும் வேதப் பதங்களுக்குச் சரியான பொருளே கூறப்பட்டிருக்கிறது. ஆனால், பல இடங்களில் அதன் தாது நிச்சயங்கள் மிகவும் சம்சயத்துக்கு இடமாகவும் சில இடங்களில் அதன் பொருள்களே பிழைபட்டதாகவும் இருக்கின்றன.
வேத மந்திரங்களுக்குச் சரியான அர்த்தம் கண்டுபிடிக்க வேண்டுமென்று தற்காலத்திய ஐரோப்பாவிலும் இந்தியாவிலும் அநேக பண்டிதர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். சில வருஷங்களுக்கு முன்னே, காலம் சென்றவராகிய சுவாமி தயாநந்த சரஸ்வதி வேதத்துக்குத் தாம் எப்போதுமில்லாத புதிய அர்த்தமொன்று கற்பித்து அதற்கிணங்க ‘ஆரிய சமாஜம்’ என்ற புது மதக் கொள்கையொன்று ஸ்தாபித்தார்.
ஆனால், சிற்சில பதங்களுக்குச் சாயணாசாரியர் சொல்லும் உரை பிரத்தியக்ஷமாகப் பிழையென்று தோன்றினும், பொதுப்படையாகச் சொல்லுமிடத்தே தற்காலத்து ஹிந்து வைதிகர்களால் அங்கீகாரம் செய்யப்பட்டிருக்கும் சாயணபாஷ்யமே பூர்வ வியாக்கியானங்களுக்கு விரோதமில்லாமலும், தெளிவாகவும், உண்மையாகவும் அமைந்திருக்கிறது.
சாயண பாஷ்யமில்லாவிட்டால், வேதம் ஹிந்து ஜாதிக்குப் பயன்படாமலே போயிருக்கும். சரியான சமயத்தில் சாயணர் வேதங்களுக்குப் பாஷ்யம் எழுதி வைத்தார். எனினும், சாயணாச்சாரியர் கூடத் தம்முடைய குருக்களைப் போலவே வேதம் கர்ம நூலென்று கருதிவிட்டார். அதனால், அது ஹிந்து மதத்துக்கு ஆதிவேர் என்பதை இந்த ஆசாரியர்களால் மறுக்க முடியாவிடினும், அதற்கு ஞானநெறியில் எவ்விதப் பிரமாணமுமில்லையென்று அவர்கள் தவறாக எண்ணும்படி நேர்ந்துவிட்டது. ஏனென்றால், வேதத்தைக் கர்மங்களைப் போற்றும் நூலாகக் கருதிய இவர்கள் கர்மங்களென்ற இடத்தே யாகங்களைக் கருதிக் கூறினர். அதாவது, யாகங்களுக்கு மாத்திரம் உபயோகப்படும் நூலாக எண்ணி, கர்மங்கள் என்றால் யாகங்களெனப் பொருள்கொண்டு இவர்கள் வேதத்தைக் கர்மகாண்டம் என்றார்கள். மேற்படி யாகங்களே பெரும்பாலும் பல வதைகளும், குதிரைக் கொலைகளும், ஆட்டுக் கொலைகளும் முக்கியமாகப் பாராட்டிய கொலைச் சடங்குகள். இவ்விதமான கொலைகளைச் செய்தல் மோக்ஷத்துக்கு வழியென்ற போலி வைதிகரைப் பழிசூட்டி, அந்தக் கொலைச் சடங்குகளால் மனிதன் நரகத்துக்குப் போவான் என்பதை நிலைநாட்டிய புத்த பகவானும், அவருடைய மதத்தைத் தழுவிய அரசர்களும் இந்தியாவில் யாகத் தொழிலுக்கு மிகவும் இகழ்ச்சி ஏற்படுத்திவிட்டார்கள்.
அந்தத் தருணத்தில் புத்த மதத்தை வென்று ஹிந்து தர்மத்தை நிலைநாட்ட சங்கராசாரியர் அவதரித்தார். அவர் புத்த மதக் கருத்துக்களைப் பெரும்பாலும் ருசி கண்டு சுவைத்துத் தம்முடைய வேதாந்தத்துக்கு ஆதாரங்களாகச் செய்துகொண்டார். ஷண்மத ஸ்தாபகராகிச் சைவம், வைஷ்ணவம் முதலிய ஆறு கிளைகளையும் வேதாந்தமாகிய வேரையுமுடைய ஹிந்து மதம் என்ற அற்புத விருஷத்தை ஸ்ரீ சங்கராச்சாரியார் தமது அபாரமான ஞானத் திறமையாலும் கல்வி வலிமையினாலும் மீள உயிர்ப்பித்து அதற்கு அழியாத சக்தி ஏற்படுத்திவிட்டுப் போனார். தம்மாலே வெட்டுண்ட புத்த மதம் என்ற விருக்ஷத்தின் கிளைகள் பலவற்றை ஹிந்து தர்மமாகிய மரத்துக்கு நல்ல வளர்ச்சி உண்டாகும்படி எருவாகச் செய்து போட்டார். இங்ஙனம் புத்தமதக் கொள்கைகள் பலவற்றை ஹிந்து தர்மத்துக்கு ஆதாரமாகச் சேர்த்துக்கொண்டது பற்றியே, சங்கராச்சாரியாரை அவருடைய எதிர்க்கட்சியார் பலர் ‘பிரசன்ன பௌத்த’ (மறைவுபட்ட பௌத்தர்) என்று சொன்னார்கள். எனினும் அவர் ஹிந்துதர்மத்துக்குச் செய்த பேருபகாரத்துக்காக ஹிந்துக்களிலே பெரும்பாலோர் அவரைப் பரமசிவனின் அவதாரமாகக் கருதிப் போற்றினார்கள்.