நண்பனின் தவறு
சேரனின் வேண்டுகோளை ஏற்று, காரைக் கிளப்பிய டிரைவர் பின்னே வரும் அம்பாசிடருக்குப் போக்குக்காட்டி ஏமாற்ற நினைத்துக் காரைச் செலுத்தினான். அம்பாசிடர் தன்னைப் பின்தொடர்வதை அறிந்ததும், உற்சாகத்தோடு, உதகை மார்க்கெட்டைச் சுற்றிக் கொண்டு, வந்த வழியே திரும்பினான். அம்பாசிடரும் அதைத் தொடர்ந்தது. கார், சூப்பர் மார்க்கெட்டை நெருங்கியபோது, அம்பாசிடரை ஓட்டிக் கொண்டிருந்த குறுந்தாடிக்காரன் – அவன்தான் பாபு, கொஞ்சம் மிரண்டவனாய், "ஜாக்கி! இதென்ன, பியட் கார் வந்த வழியிலேயே திரும்பிப் போகுதே!" என்று வியப்பை வெளிப்படுத்தினான்.
டிரைவரின் அருகே உட்கார்ந்திருந்த சுருள் முடிக்காரனான ஜாக்கி, "இதை மட்டுந்தான் கவனிச்சியா? காரின் பின் சீட்டில் உட்கார்ந்திருந்த பையனையும் காணோம். அதைக் கவனிக்கலையா?" என்று கேட்டான்.
அதற்குள் பியட் கார் சேரிங்கிராஸை அடைந்து திரும்பிக் கொண்டிருந்தது. அதனால் அதன் வேகம் குறைந்திருந்தது. எனவே பாபு அந்தக் காரை நன்றாகப் பார்க்க முடிந்தது. பின் சீட்டில் யாரும் இல்லை. காரில் டிரைவரைத் தவிர யாரும் இல்லை.
"ஆமாம். பொடியனைக் காணோம். அவன் எங்கே போனான்?"
"லாரி நம்மை வழிமறிச்சுதே! அப்போ, காரிலிருந்து இறங்கிப் போயிருப்பான். பையன் இல்லைங்கிறதை நானும் கொஞ்ச நேரம் பொறுத்துத்தான் கவனிச்சேன். அதுக்கப்புறம் பிடிக்க முடியும்னு தோணலை. அதான் சும்மா இருந்துட்டேன்."
"இப்போ வீணா எதுக்கு இந்தக் காரைப் பின் தொடரணும்?"
"நாம நேத்து பையன் மறைஞ்ச ரோடிலே காத்திருந்து இந்தக் காரையும், காரிலிருந்த பையனையும் பிடிச்சோம்."
"ஆமாம். பையன் அவன்தான்னு நீ சொன்னே. அதே நீலநிற ஸ்வெட்டர் போட்டிருக்கான்னு காட்டினே."
"இப்போ அவனைத்தான் நேத்து நாம விரட்டினோங்கறது உறுதியாயிடுச்சு. அதனாலேதான் நம்மைப் பார்த்ததும் பயந்து வழியிலே இறங்கிட்டான். நாம காத்திருந்த ரோடிலே திடீருன்னு காரைப் பார்த்தோம். அது எந்த வீட்டிலிருந்து வந்ததுன்னு நமக்குத் தெரியாது. பியட் பின்னாடியே போய், அந்த வீட்டைக் கண்டுபிடிப்போம். அதுக்கப்புறம் பையனைப் பிடிச்சுடுவோம்."
ஜாக்கியின் யோசனையின்படி அம்பாசிடர், பியட்டைப் பின்தொடர்ந்து, விஜய் பங்களாவுக்குள் அது நுழைந்ததைப் பார்த்துவிட்டுப் பிறகு திரும்பியது.
அம்பாசிடரை வேறொரு குறுக்குத் தெருவில் நிறுத்தி விட்டு, இருவரும் விஜய் பங்களாவை நோக்கி வந்தனர். அந்த பங்களாவுக்குள் நுழையவில்லை. அதற்கு முன்னே இருந்த பங்களாவை நோட்டம் விட்டார்கள்.
அந்த பங்களாவின் முன்புறம், செடிகளுக்குப் பூவாளியால் ஒரு கிழவன் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தான்.
ஜாக்கி, "தாத்தா" என்று சொந்தப் பேரனைப் போலத் தேனொழுக அழைத்தான்.
கிழவன் தன் வேலையை நிறுத்தி விட்டு, குரல் வந்த திசையில் பார்த்தான். அதற்குள் ஜாக்கியும், பாபுவும் உரிமையோடு பங்களாவுக்குள் நுழைந்து, கிழவன் அருகே வந்தனர்.
பங்களாவின் தோட்டம் பிரமாதம் என்றும், கிழவனின் தோட்டக்கலை அறிவும், கடுமையான உழைப்பும் செடிகளைப் பார்த்தாலே தெரிகின்றன என்றும் கொஞ்சநேரம் புகழ்ந்தார்கள். பிறகு மெதுவாக அந்த வீட்டைப் பற்றி விசாரித்தான் ஜாக்கி. விஜய் பற்றியும் அவன் தந்தை பற்றியும், கிழவன் சொன்னான். அந்த வீட்டில் விஜயின் விருந்தாளியாக ஒரு பையன் வந்திருக்கிறான் என்றும் அவனைப் பற்றித் தனக்கு எதுவும் தெரியாது என்றும் கூறினான்.
ஜாக்கி ஒரு பத்து ரூபாயைக் கிழவனின் கையில் திணித்து, பக்கத்து பங்களாவில் ரெண்டு பையன்களும் அப்போது இருக்கிறார்களா? -இருவருடைய கோயமுத்தூர் முகவரிகள் என்ன- என்னும் விவரத்தைப் பெற்றுத் தருமாறு வேண்டினான்.
கிழவன் அடுத்த பங்களாவுக்குள் நுழைந்தான். சமையற்காரனிடம் பேசினான். பத்து நிமிஷத்தில் திரும்பி வந்தான்.
வீட்டில் விஜய் மட்டும் இருக்கிறான். இன்னொரு பையன் சேரன், அவசரமாகக் கோயமுத்தூருக்குப் போய் விட்டான் – என்ற தகவலைக் கொடுத்து, விஜயின் கோவை முகவரியையும் கொடுத்தான் தோட்டக்காரன். சேரனின் முகவரி சமையற்காரனுக்குத் தெரியாதாம்.
பாபுவும் ஜாக்கியும் கிழவனுக்கு நன்றி தெரிவித்து விட்டுப் புறப்பட்டனர். அந்த பங்களாவை விட்டுப் புறப்பட்டார்களே தவிர, அந்தச் சாலையை விட்டுப் புறப்படவில்லை. வீட்டில் இருக்கும் பையனைப் பார்த்து, அவன் தாங்கள் தேடுகிற பையன்தானா என்று அறிய விரும்பினார்கள். சுமார் அரை மணி நேரம் அந்த பங்களாவுக்கு அருகிலேயே திரிந்தபோது, ஒரு முறை விஜய் வெளியே வந்ததைப் பார்த்தான், ஜாக்கி. உடனே தான் தேடுகிறவன் அவன் அல்ல – கோவைக்குப் போய் விட்டதாகக் கூறிய சேரனே தங்களுக்குத் தேவையானவன் என்பதை உணர்ந்து கொண்டான். அதன் பின்பு அவர்கள் இருவரும் அங்கே தாமதிக்கவில்லை. காரிலேயே புறப்பட்டுக் கோவை நகரை அடைந்தார்கள்.
விஜயின் முகவரியைக் கண்டுபிடிப்பதில் சிரமம் இருக்கவில்லை. விஜயின் வீட்டுக்குப் போனார்கள். பங்களாவுக்குள்ளே ஒரு வாட்ச்மேன் இருந்தான். அவனிடம் பேச்சுக் கொடுத்து ஊட்டியில் சேரனைப் பார்த்ததாகக் கூறினார்கள்.
"நான் போட் கிளப்பில் வேலை செய்கிறவன். சேரனுக்கு தூரத்து உறவு. அவனுக்கு நான் ஊட்டியிலே இருக்கிறது தெரியாது. என்னைத் திடீர்னு பார்த்து சந்தோஷப்பட்டான். கோவைக்கு வந்தா வீட்டுக்கு வரச் சொல்லி இந்த அட்ரஸ் கொடுத்தான். இன்னிக்கே கோவை வரவேண்டிய வேலை இருந்தது. வந்துட்டேன். சேரனும் இன்னிக்கே திரும்பி வர்றதா சொன்னான். சேரன், பின்னாடி அவுட் அவுஸ்லே இருக்கானா?" – ஜாக்கி கேட்டான்.
"சேரன் வீடு இதில்லே! நெசவாளர் காலனியிலே இருக்கு. அவன் ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி இங்கே வந்துட்டுப் போனான். என்னமோ ஒரு மாதிரியா இருந்தான். இங்கிருந்து டாலரையும் எடுத்துக்கிட்டுப் போனான்."
வாட்ச்மேன் சொன்னதும், "டாலரையா!" என்று வியப்போடு கேட்டான், ஜாக்கி.
"டாலர்னு ஒரு நாயுங்க."
ஜாக்கி அந்த வாட்ச்மேனிடம் சேரன் வீடு எங்கே இருக்கிறது என்று விசாரித்துக்கொண்டு, தேடிக் கண்டுபிடித்துக் கதவைத் தட்டியபோது மணி பிற்பகல் இரண்டு.
கதவு தட்டியதும் உடனே திறக்கப்படவில்லை. மீண்டும் கதவைத் தட்டினார்கள். உள்ளே படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த சேரனின் தாய் எரிச்சலோடு எழுந்து வெளியே வந்தாள். தாழை நீக்கி, கதவைக் கொஞ்சமாய்த் திறந்து வெளியே பார்த்தாள்.
ஜாக்கியும் பாபுவும் நின்றிருந்தார்கள்.
"யாரு நீங்க?" என்று கேட்டாள்.
இப்போதும் ஜாக்கியே பேசினான்.
"சேரன் இல்லைங்களா?"
"இல்லை, ஊட்டிக்குப் போயிருக்கான். ஆமாம், நீங்க யாரு?"
"ஊட்டியிலிருந்து திரும்பிக் கோயமுத்தூருக்கு வந்துட்டானுங்களே!"
"வந்தான். விஜயோடு வந்தானாம். திரும்பவும் ஊட்டிக்குப் போறேன்னு போயிட்டான். ஆமாம், நீங்க யாரு?"
ஜாக்கியும் பாபுவும் திகைத்தார்கள்.
"திரும்ப, ஊட்டிக்கேவா போயிட்டான்? எதுக்கு மறுபடியும் ஊட்டிக்குப் போனான்? எப்போ திரும்பி வர்றதா சொல்லிட்டுப் போனான்?" ஏமாற்றத்தோடு கேட்டான் ஜாக்கி.
"ஏன் போனான் – எப்போ வருவான்னு தெரியாது. ஆமாம், என்னை இத்தனை கேள்வி கேக்கறீங்களே, நீங்க யாருன்னு ஒரு கேள்வி கேட்டேன். அதுக்கு பதில் சொல்லலையே!"
ஜாக்கியும் பாபுவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
"நான் ஊட்டியிலே இருக்கிறவன். நேத்து அங்கே அவனைப் பார்த்தேன். கோயமுத்தூருக்கு வந்தா, என்னைப் பாரு. விஜய் வீட்டிலே வேலை வாங்கித் தரேன்னான். அதான் வந்தேன்."
"அப்படின்னா ஊட்டிக்கே போய் அவனைப் பாருங்க."
பதில் சொல்லி விட்டு, பட்டென்று கதவை மூடித் தாழிட்டு, விட்ட தூக்கத்தைத் தொடரச் சென்றாள், சேரனின் தாய்.
சேரன் வீட்டின், மூடிய கதவுக்கு முன்னே ஜாக்கியும் பாபுவும் ஒன்றும் புரியாமல் குழப்பத்தோடு நின்றார்கள்.
‘அவசரமாகக் கோவைக்கு வந்த சேரன், திரும்பவும் ஏன் ஊட்டிக்குப் போனான்? விஜயுடன் வந்தான் என்பது பொய். அதைப் போலவே ஊட்டிக்குத் திரும்பவும் போனான் என்பதும் பொய்யா? ஒரு வேளை… அதை ஊட்டியிலே வைத்துவிட்டு வந்துட்டானோ?’
ஜாக்கி பல வகையாகச் சிந்தித்து மேலும் குழப்பமடைந்தான்.
அவனுக்கு அதிர்ஷ்டம் இருக்கும் போலும்!
–புலி வளரும்...
“