அம்மாவிடமிருந்து கடிதம் வந்திருந்தது. கடிதத்தைப் பார்த்தவுடன்தான் அம்மாவுடன் பேசி வெகு நாட்களாகி விட்டன என்று அனுவுக்கு ஞாபகம் வந்தது. தொலைபேசியில் பேசும் பத்து நிமிசப் பேச்சில் மனத்தில் இருப்பதையெல்லாம் பேச முடியாது என்பாள் அம்மா. இவளும் இவள் தோழிகளும் தோழர்களும் நியூயார்க்கிலிருந்து அலாஸ்க்காவுக்கும் கலிஃபோர்னியாவுக்கும் பாஸ்டனுக்கும் சிகாகோவுக்கும் மணிக்கணக்கில் பேசுவதும், அதற்கு அவர்கள் கொடுக்கும் முக்கியத்துவமும் அம்மாவுக்குப் புரியாது. இவளுடன் பேசும்போது அம்மா கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டே பேசுவாள். இவள் டாலரில் கட்டணம் செலுத்தினாலும் "நீ செலவழிச்சா என்ன, அது பணமில்லையா?" என்பாள்.
தமிழில் கடிதம் படிப்பது பூர்வ ஜென்மத்தை நினைவூட்டிற்று. "நீ டெலிபோனில் பேசி ரொம்ப நாள் ஆகிவிட்டது. உடம்பு சரியில்லையா இல்லை டான் டூர் போயிருந்தியா? நான் இரண்டு தடவை போன் செய்தேன். மணி அடித்துக் கொண்டே இருந்தது. பதில் சொல்லும் கருவியை இணைத்திருப்பாயே, அதுவும் இல்லை. உன்னிடமிருந்து போன் வந்து நாளாயிற்று என்று நளினியும் சொன்னாள். உடம்புக்கு ஒன்றுமில்லாமல் சௌக்கியமாக இருக்கிறாயா? அங்கே இந்த வருஷம் குளிர் ரொம்ப அதிகமாமே? இந்தியாவுக்கு வரும் உத்தேசமிருக்கிறதா? இங்கே பாட்டிக்கு உடம்பு சரியில்லை. ஆஸ்பத்திரியில் சேர்க்கும்படியாக இல்லை என்றாலும் நடமாட சிரமப்படுவதால் குளிப்பாட்டி கக்கூசுக்கு அழைச்சுச் சென்று புடவை உடுத்தி எல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது. வயிற்றில் பிறந்த பிள்ளையானாலும் ஆண்பிள்ளை என்பதால் உன் அப்பாவை இதையெல்லாம் செய்ய பாட்டி அனுமதிப்பதில்லை. இதில் ஆசாரம் வேறு. கண்கொத்திப் பாம்பாக பார்த்துக் கொண்டிருக்கிறாள். என்னுடைய நிலைமை எப்படியிருக்கும் என்று யோசித்துப்பார். எனக்கும் வயது அறுபத்திரெண்டு ஆகிறது."
அம்மா அவளிடம் உதவி கோரவில்லை. குற்றம் சாட்டவில்லை. ஏனென்றால் இரண்டிற்கும் எப்படியும் எந்த அர்த்தமும் இருக்கப் போவதில்லை. அம்மாவுக்குத் தேவை ஓய்வு பாத்திரம் தேய்ப்பதிலிருந்து, சமையல் செய்வதிலிருந்து ஓய்வு. அது பாட்டி உயிருடன் இருக்கும் வரை முடியாது. கைக்கு ஒரு ஆள் காலுக்கு ஒரு ஆள் போட்டுக் கொள்ளக் கூடிய வசதி இருந்தும் முடியாது. பாட்டியின் சமையலை கொல்லைக் கிணற்றிலிருந்து நீர் எடுத்து சமைக்கும் யோக்கியதை கல்யாணமாகி வீட்டிற்குள் நுழைந்ததும் தோள்களில் சங்கு சக்கர சூடு இழுத்துக் கொண்ட அம்மாவுக்குத்தான் உண்டு அல்லது ஒரு ஸ்ரீ வைஷ்ணவ பிராமணனுக்கும் உண்டு.
அம்மா சென்றமுறை ஸ்ரீரங்கத்துக்குப் போனபோது அக்கம் பக்கத்து கிராமத்திலெல்லாம் ஆளுக்குச் சொல்லி விட்டு வந்தாளாம். யாரும் வரத் தயாராயில்லை என்கிறாள். கிணற்றில் இருந்து நீர் இழுக்க மாட்டார்களாம். துணி துவைக்க போன வருஷத்திலிருந்து அம்மா ஒரு மெஷினை வாங்கிப் போட்டிருக்கிறாள். வீடு கூட்டிப் பெருக்கும் வேலைக்காரிக்கு சமையலறைக்குள் எட்டிப் பார்க்கக் கூட உரிமையில்லை. இதை ஒரு கௌரவப் பிரச்னையாகக் கருதி வேலைக்காரிகள் வேலைக்கு முழுக்குப் போட்டிருக்கிறார்கள். குளித்து விட்டு மடித்துண்டு உடுத்தி அம்மா குளியல் அறையிலிருந்து வெளியே வரும்போது அவளுடைய சிவந்த புஜங்களில் தென்படும் கன்னிக் கறுத்த வடுக்கள் அனுவுக்கு நினைவுக்கு வந்தது. கடிதத்தின் மீது மீண்டும் பார்வையை ஓட்டினாள். ‘கண்கொத்திப் பாம்பாய் பார்க்கிறாள்.’ அதாவது விழுப்புப் பட்டுவிடுமோ என்று, "பாவம்" என்றாள் அனு வாய்விட்டு. அது அம்மாவுக்கா பாட்டிக்கா என்று புரியவில்லை. இருவருமே பாவப்பட்ட ஜன்மங்கள் என்று தோன்றிற்று. பாட்டியின் அம்மாவும், பாட்டி அவளது ஒரே பெண் என்பதால் அவர்கள் வீட்டிலேயே இருந்தார்கள். பதினைந்து வயதில் அவள் விதவை ஆனாளாம். அதிலிருந்தே அதி பயங்கர ஆச்சாரம் என்பாள் பாட்டி. அதை ஒருவிதப் பெருமையுடன் சொல்வாள். 45-ஆம் வயதில் விதவை; விதவையானதும் பாட்டியும் அந்த வட்டத்துக்குள் சேர்ந்தாள். மேல படாதே, இங்க நிக்காதே, அது மேல சாயாதே என்று சதா தங்களைச் சுற்றி ஒரு வேலியைப் படரவிட்டு அதிலேயே தங்களுக்கு முக்கியத்துவத்தைத் தேடிக் கொள்ளப் பார்த்தாலும், இருவரும் தங்களது அன்பினால் வீட்டையே வளைத்துக் கொண்டது போல இருக்கும். அதற்காகவே பிறவி எடுத்தது போல் இருக்கும்.
யாருடைய ஸ்பரிசமும் மேலே படாவிட்டால் நெருக்கம் எப்படி ஏற்படும் என்று அனுவுக்கு ஆச்சரியம் ஏற்பட்டது. ஆனால் கொள்ளுப்பாட்டி கடைசி மூச்சு விடும்போது ‘கோபால் (அதாவது அனுவின் அப்பா) சாப்பிடலியா இன்னும்’ என்ற கேள்வியைத்தான் கேட்டு விட்டு செத்தாள். அப்பா அதைப் பற்றி வெகு நாட்களுக்குச் சொல்லிப் பெருமைப்பட்டுக் கொள்வார்.
"பாவம்" என்றாள் அனு மறுபடி. கடிதத்தை மடித்து டிராயருக்குள் வைக்கும்போது சங்கிலி கோர்த்த மாதிரி ஓடிய தமிழ் வார்த்தைகள் ஜனன ஞாபகங்களை உசுப்பி விட்டது போல இருந்தது. அவள் இருக்கும் அந்த அறையும் ஜன்னலை மூடிய விரையைச் சற்று விலக்கினால் வெளியே தெரியும் வெண்பனிக் குவியலும் அந்த வரிகளிலிருந்து பல யுகங்களுக்கு அப்பால் நகர்த்திச் சென்று விட்டதைப் போல இருந்தது. சிகாகோ பல்கலைக்கழக வாசகசாலையில் அமர்ந்தபடி ஏ.கே.ராமானுஜனின் குறுந்தொகை – அகம் – கவிதையின் ஆங்கில மொழி ஆக்கத்தைப் படிக்கிற மாதிரி. அவள் சொன்னது: அவன் சொன்னது: அவர்கள் சொன்னது – "குறிஞ்சியும் முல்லையும் மருதமும் கற்பனையில் விரிந்து ஸ்பரிசம், காதல் என்ற ஆதார உணர்வுகளுக்கு 2000 வருஷங்கள் என்பது வெறும் சரித்திர அளவுகோல்" என்று புரிகிற மாதிரி. ஆனால சங்க காலத்தைப் புரிந்து கொள்ள முடிந்தது. பாட்டியையும் அம்மாவையும்தான் புரிந்துகொள்ள முடியவில்லை. அவர்களுக்காக அனுதாபம்கூட பட முடியவில்லை.
"போன் செய்யணும்" என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள். இப்பொழுது அங்கு இரவு நேரம். ராத்திரி எட்டு மணிக்கு செய்தால் அங்கு காலை எட்டு ஒன்பது மணி. அம்மா குளித்து விட்டுத் திருவாய்மொழி சொல்லிக் கொண்டே காய்கறி நருக்கிக் கொண்டிருப்பாள். அப்பா அடுக்களையின் வாயிலில் ஈசிசேரில் அமர்ந்து பேப்பரைப் படித்தபடியே ஜெயின் ஹவாலா மோசடியை விவரித்துக் கொண்டிருப்பார். ஞாபகமாகச் செய்ய வேண்டும். அம்மாவுக்கு அனுதாபம் தேவை. "ருக்கு, அனு பேசறா" என்று அப்பா குரல் கொடுத்ததுமே அம்மாவுக்குத் தொண்டை அடைக்கும். "ஏண்டி அனு, போனே பண்ணல்லே. எங்களையெல்லாம் மறந்துட்டியா?" என்னும் போது கடைசி வார்த்தை கண்ணீரில் அமுங்கிப் போகும்.
இந்த மாதிரி தன்னுடைய வார்த்தைகள் கண்ணீரில் அமுங்கிப் போகுமோ என்பதற்காகவே அவள் இரண்டு மாதங்களாக போன் செய்யவில்லை என்று அம்மாவிடம் சொல்ல முடியாது. இரண்டு கண்டங்கள், மூன்று மகா சமுத்திரங்களுக்கப்பால் இருக்கும் மகள் போனில் அழுதாள் நடுங்கிப் போவார்கள். மாமியார், அவளது மடி ஆச்சாரத்துக்கு ஈடுகொடுப்பது, முழங்கால் மூட்டுவலி போன்ற பிரச்னைகளையே சந்திக்கும் அம்மாவுக்குக் கல்யாணமாகாத தனது பெண் நியூயார்க்கில் பனிக்குவியலுக்கு நடுவே நின்று அழுவது விபரீத கற்பனைகளை எழுப்பி கலவரப்படுத்தும்.
அனு எழுந்து காபி மேக்கரில் காபி தயாரித்து அதை காபி மக்கில் ஊற்றி ஜன்னலுக்கருகில் சென்று திரையை நகர்த்தி விட்டு அமர்ந்து பருகியபடி 25-ஆம் மாடியிலிருந்து பார்க்கும் போது தெருவெல்லாம் வெள்ளைப் போர்வை விரித்தமாதிரி இருந்தது. கடந்த நூறு ஆண்டுகளில் இப்படிப்பட்ட பனி பெய்ததில்லை என்கிறது வானிலை அறிக்கை. ஆனால் சுரங்க ரயிலில் சென்று வேலை பார்க்கும் அரங்கத்தை அடைய முடிகிறது. இன்று ஞாயிற்றுக் கிழமை என்றாலும் போக வேண்டும். பனிக்காலம் முடிந்ததும், டூர் ஆரம்பிக்கும். பிறகு சகலமும் மறந்து போகும்.
இன்று நளினிக்கும் டெலிபோன் செய்ய வேண்டும் என்று அவள் சோம்பலுடன் நினைத்துக் கொண்டாள். தனது மனக் கிளர்ச்சிகளை சூசனிடமும் ஜோனிடமும் காரலினிடமும் தெரிவிக்கும் நெருக்கத்துடன் நளினியிடம் ஏன் தெரிவிக்க முடிவதில்லை என்று அடிக்கடி ஏற்படும் வேதனை இப்பவும் ஏற்பட்டது. கலிஃபோர்னியாவில் பத்து வருஷங்களாக இருந்தாலும் அவள் அம்மாவுடைய உலகத்தின் பிரதிநிதி என்று தோன்றிற்று.
டெலிபோன் ஒலித்தது. நளினியாக இருக்குமோ என்ற எதிர்பார்ப்புடன் அதை எடுத்தபோது நளினியின் குரல் ஒலித்தது.
"ஹலோ அனு, ஊர்லே இருக்கலியா நீ?"
"ஊர்லேதான் இருந்தேன்க்கா. இப்பத்தான் உன்னைப் பத்தி நினைச்சேன்."
"பொய்! பின்னே ஏன் போனே பண்ணலே? உனக்கு நான் பண்ணும் போதெல்லாம் நீ வீட்டிலேயே இல்லையே – ஆன்ஸரிங் மெஷின் என்ன ஆச்சு?"
"அதைப் போடவே மறந்துடுவேன். நா தியேட்டர் வேலையிலே ரொம்ப பிஸியா இருந்தேன்க்கா. வீட்டுக்கு தினமும் காலையிலேதான் வருவேன். அப்புறம் தூங்கிடுவேன். டெலிபோன் அடிச்சாலும் காதிலே விழாது."
"உடம்புக்கு ஒண்ணுமில்லையே?"
"இல்லே."
"அம்மாகிட்டேந்து லெட்டர் வந்திருக்கு. பாட்டிக்கு உடம்பு சரியில்லையாம். பாட்டியைக் கவனிக்கிறதும் தனிகை பண்றதும் முடியவேயில்லேன்னு எழுதியிருக்கா. பாவம். உங்கிட்டேந்து போனே வரலேன்னு எழுதியிருக்கா."
"இன்னிக்குக் கண்டிப்பா பண்ணறேன்."
"கலிஃபோர்னியாவுக்கு வாயேண்டி!"
"எங்கக்கா வரது? எனக்கு நேரமேயில்லை. டூர் வேற ஆரம்பிச்சுடும்."
"போன் கூட பண்றதில்லே நீ."
"பண்றேன் இனிமே."
பின்னால் குழந்தையின் அழுகுரல் கேட்டது.
"என்ன, சீனு அழறானா?"
"ஆமாம் எழுந்துட்டான்."
"அத்திம்பேர் எப்படி இருக்கார்?"
சீனுவின் அழுகையில் அவள் பதில் சொல்ல முடியாமல், "அப்புறம் பேசலாம் அனு" என்று போனை வைத்தாள்.
(தொடர்ச்சி அடுத்த இதழில்)
(வாஸந்தி சிறுகதைகள் தொகுப்பில் இருந்து)
“