கதவு
தட்டாமலேயே
திறந்து கொள்வதற்கு
கடமைப்பட்டிருக்கிறது
அந்தக் கதவு.
தட்டப்படுகிறது
தட்டப்படுவது தொடர்கிறது
தேவை கருதி.
தட்டலின் அதிர்வு கண்டு
திறந்து கொள்கிறது
பக்கத்துக் கதவு.
இப்போது
கடமைப்பட்ட கதவு
வெட்கித்
தலைகுனிந்து கிடக்கிறது
தட்டுவோர் இன்றி.
அவனுள்
சப்தமேயில்லாமல்
விழுந்துவிட்டான்
நீர் நிறைந்த என் தடாகத்திற்குள்
அந்த ராஜகுமாரன்.
பலம் கூட்டி முன்னேறுகிறான்
நீந்தியபடி.
நீளும் நீந்துதலில்
கரை எங்கும் பூக்கின்றன
நுரைப் பூக்கள்.
தடாகமெங்கும் தன் வாசனை நிரப்பி
அதிகாலையில் கரையேறிய
ராஜகுமாரனைப் பார்த்தபடியே
மூழ்கிப் போகிறேன் நான்
அவனுள்!
–தொட்டுத் தொடரும்