(நிலாச்சாரலுக்காக விசேஷ அனுமதியுடன் ‘வெற்றிப் படிகள்’ நூலிலிருந்து)
பெண்களுக்குப் பொருளாதார சுதந்திரம்
ஒரு முயற்சி வெற்றி பெறும்போது நமக்கு என்ன கிடைக்கிறது?
நாம் விரும்பியதை அடைகிறோம்.
நம் சாதனை – நம்மால் முடியும் என்று நிரூபிக்கிறது.
நமக்கு நம மீதே ஒரு பெருமை ஏற்படுகிறது.
நமக்கு மனநிறைவைத் தருகிறது.
மேலே கூறிய நான்கு விளைவுகளையும் பார்த்தோமானால் கடைசியில் கூறப்பட்ட மூன்று விளைவுகளும் நம் மனதில் ஏற்படுகின்ற உணர்வுகள் என்பது புரியவரும்.
நம்மைப் பற்றி நம் மனதில் ஏற்படும் பெருமை, நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை, நமக்குள் ஏற்படும் மனநிறைவு – இவைதான் வாழ்வை அர்த்தமுள்ளதாக ஆக்குகின்றன. மேலும் சாதனை செய்யத் தூண்டுகின்றன.
இப்படிப்பட்ட எண்ணங்கள் ஆணின் மனதில் அதிகம் எழுகின்றனவா அல்லது பெண்ணின் மனதில் அதிகம் எழுகின்றனவா என்று கேட்டால், அந்த வாய்ப்பு, குறிப்பாக கிராமங்களில் வாழும் பெண்களுக்கு அதிகம் கிடைப்பதில்லை.
சாதனை புரியும் வாய்ப்புகள் பொதுவாக பெண்களுக்குக் குறைவு. அதிலும் கிராமப் பெண்களுக்கு இன்னும் குறைவு. காரணம் கல்வியறிவின்மை மற்றும் நமது சமூகப் பழக்க வழக்கங்கள், கட்டுப்பாடுகள், மரபுகள்.
வெற்றிக்கு முதல்படி: அறிவு – படிப்பு
ஒரு ஆணுக்குக் கொடுக்கக்கூடிய வாய்ப்புகளை நாம் ஒரு பெண்ணுக்குக் கொடுப்பதில்லை.
"ஒரு பெண் எதற்குப் படிக்க வேண்டும்? கல்யாணம் செய்து கொண்டு கணவன் வீட்டுக்குப் போகிறவள்தானே?" என்று ஒரு பெண்ணைத் திருமணத்திற்காகவே வளர்க்கிறோம்.
ஒரு ஆண் திருமணம் ஆகாமல் இருக்கலாம். ஒரு பெண் திருமணம் ஆகாமல் இருந்தால் அபவாதம். ‘கெட்ட பெயர்’. இப்படி ஒரு மரபு. மேனாடுகளில் ஆண்களைப் போல பெண்கள் இப்போது காலந்தாழ்ந்து திருமணம் செய்துகொள்கிறார்கள் அல்லது திருமணம் செய்து கொள்ளாமல் தனித்து வாழ்கிறார்கள்.
ஒரு பெண்ணின் முன்னேற்றத்தைத் தடை செய்வது படிப்பின்மைதான். படிப்பு இருந்தால்தான் ஊர் உலகம் தெரியும்; படிப்பு இருந்தால்தான் நல்ல வேலைக்குப் போக முடியும். நல்ல வேலைக்குப் போனால்தான் நிறைய சம்பாதிக்க முடியும்; தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியும். தன் குடும்பத்தைக் காப்பாற்ற முடியும்.
வெற்றி என்பது: தன் காலில் நிற்கும் பெருமை
தன் காலில் நிற்கும் பெருமை இருக்கிறதே.. அதை நம் நாட்டில் பெண்களுக்கு இல்லாமல் செய்துவிட்டோம். பெண்களை "சார்ந்து நிற்க வேண்டிய ஒரு சமுதாயமாக" உருவாக்கிவிட்டோம்.
ஒரு பெண்ணோ, ஆணோ, தன் காலில் நிற்கும்போது – தன்னால் சம்பாதித்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை வரும்போது, அவர்களுக்கு சுதந்திரம் கிடைக்கிறது. அவர்கள் யாரையும் ‘சட்டை’ செய்யவேண்டிய அவசியமில்லை. அவர்களுக்கு சமூக மதிப்பு, சமூகத்தில் ஒரு பெருமை கிடைக்கிறது. வாத்தியாரம்மா, டாக்டரம்மா, வக்கீலம்மா என்று ஊரும் உலகமும் உங்களைப் பெருமையுடன் அழைப்பதைப் பாருங்கள். வேலை பார்க்கும் பெண்களுக்கும் வீட்டிலே இருந்துகொண்டு வேலைக்குப் போகாத பெண்களுக்கும் கொடுக்கப்படும் மரியாதை வெவ்வேறானது.
சம்பாதிக்கிற மருமகளை மாமியார் அதிகம் அதட்டிக் கேட்க முடிவதில்லை; அதிகாரம் செய்வதில்லை. மாறாக மதிப்பும் மரியாதையும் கிடைக்கின்றன.
"பொட்டைக் கழுதை" என்று பெண்களை இழிவுபடுத்துவதும், "பொம்பளை மாதிரி பேசறீயே!" என்று பெண்களை உதாரணம் காட்டுவதும் சமுதாயத்தில் பெண்களைக் கேவலப்படுத்துகிறது.
"சாண் பிள்ளையானாலும் அவன் ஆண்பிள்ளை!" என்று ஆண்பிள்ளையைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவது அவனது சகோதரியின் மண்டையில் அடிக்கிறது. "உன்னால் ஒன்றும் செய்ய முடியாது; ஏனெனில் நீ ஒரு பெண்!" என்று சொல்லாமல் சொல்கிறது, நம் சமுதாயம்.
முன்னேற விரும்பும் பெண்கள் இந்த சமுதாயப் பழக்க வழக்கங்களைக் கிள்ளி எறிய வேண்டும். அதற்கு முதலில் பெண்கள் படிக்க வேண்டும்.
வெற்றிக்குத் தேவை: பொருளாதார சுதந்திரம்
பொருளாதார சுதந்திரம் – அதாவது தன்னைக் காப்பாற்றிக்கொள்ள, ஒரு பெண் வாழ்வதற்குத் தேவையான வருமானம்தான் அவளுக்கு உறுதுணையாக என்றும் நிற்கும்.
ஆணுக்குள்ள அத்தனை திறமைகளும் ஒரு பெண்ணிடம் இருக்கின்றன. அதற்கு மேலும் இருக்கின்றன. இதை நாம் புரிந்துகொண்டு மதிப்புக் கொடுத்து நம் பெண்களை வளர்க்கத் தவறிவிட்டோம். பெண்களுக்கு ஏன் பொருளாதார சுதந்திரம் வேண்டும்? இந்த உலகத்தைப் பார்த்தோமானால் ஒருவன் படித்தவனா.. படிக்காதவனா என்பது முக்கியமல்ல; பணமிருந்தால் படிக்காதவன் கூட மதிக்கப்படுகின்றான். மரியாதை செய்யப்படுகிறான்.
(மீதி அடுத்த இதழில்)
“