இன்றோடு ஒரு வாரமாகி விட்டது. ரமாவிடம் முகம் சிணுங்கிக்கொண்டு.
வேளை தவறாமல் சாப்பாடு, டிபன், காபி, பேச்சு. ஆனால் லிமிட் அவ்வளவுதான்.
சங்கர் படுக்கைக்கு வந்தால், நடுவில் பாபுவைக் கவசமாக்கிக் கொண்டு அந்தப் பக்கம் ரமா படுத்திருப்பாள்.
போன வாரம் வரை பிரச்சனை இல்லைதான். தற்செயலாக ஆரம்பித்த பேச்சில் வந்த விபரீதம் இது.
ஆபீசில் நண்பன் ரமேசுக்கு இரண்டாவது குழந்தை என்று சாக்லெட் கொடுத்தான். அதோடு விடாமல் ஒரு கேள்வியும் கேட்டான்.
“என்னடா உன் பையனுக்கு அஞ்சு வயசு ஆயிருச்சு போலிருக்கே..?”
மனதில் கணக்கு போட்டு தலையாட்டப் போக, உடனே கேட்டான்.
“அடுத்தது எப்படா?”
பக்கத்தில் நின்ற இன்னொரு நண்பனும் சீண்டினான். “தனி மரம் தோப்பாகாது தெரியுமா?”
அதாவது ஒரு குழந்தை கணக்கில் வராதாம். சங்கர் நெளிந்தான். “இல்லடா, ஒண்ணு போதும்னு…”
“என்னடா கல்லூரி நாள்ல எல்லாம் ரெண்டு முணு பெத்துப்பேன்னு பேசுவே. இப்ப சடார்னு மாறிட்டே?”
கூடவே படித்தவன். ஒன்றாக வேலையில் சேர்ந்தார்கள்.
உண்மைதான். அப்போதெல்லாம் குழந்தைகள் என்றாலே கொள்ளைப்பிரியம்! அபெக்ஸ் கம்பெனி காலண்டர் வாங்குவதற்காகவே ஒருத்தரை நட்பாக்கிக் கொண்டவன். என்ன அழகாய்.. குண்டு குண்டாய் குழந்தைகள் போட்டோ!
ரமா அடித்து சொல்லி விட்டாள்.
‘ஒரே ஒரு குழந்தைதான். அதுக்கு மேல் எனக்கு விருப்பம் இல்லே.’
அவள் பக்கத்தில் நின்று குழந்தையே வேண்டாம் என்று சொன்னால் கூட தலையாட்டத் தோன்றும். விலகி வந்தால் நாலைந்து குழந்தைகளாவது வேண்டும் என்ற ஆசை கிளம்பும்.
போன வாரம் தீவிரமாய் வாதம் செய்யப் போக கண்டித்துச் சொல்லி விட்டாள்.
“இத பாருங்க, நீங்க என்ன நினைச்சாலும் சரி, ஒரே குழந்தைதான். நீங்களும் இதுக்கு ஒத்துக்கிட்டீங்க. இப்ப ஆபீசுல எவனோ கிளப்பி விட்டான்னு இங்கே வந்து வம்பு பண்றது கொஞ்சங்கூட நல்லா இல்லே.”
“இப்ப ஏன் வேணாங்கறே? உன்னை எது தடுக்குது? காரணம் சொல்லு. நான் என்ன நாலைஞ்சா பெத்துக்க சொல்றேன்? இன்னும் ஒண்ணே ஒண்ணு,” என்றான் சமரசம் பேசும் குரலில்.
“உங்க சம்பளம் பிடித்தம் போக இப்போ என்ன வருது?”
சொன்னான்.
“இதுல இவன் ஒருத்தனை வச்சு ஆளாக்கவே சிரமப்படறோம். இன்னொன்று அவசியமா?” என்றாள், முதல் லா பாயிண்டாக.
உண்மைதான். ஆனால், திடீரென அவனிடம் உற்சாகம் பீரிட்டது.
“அடுத்த மாதம் எனக்கு பதவி உயர்வு வருது. கூடவே சம்பள மாற்றமும்! நிச்சயம் ஐநூறு ரூபா கூட வரும்.”
“ஓ, என்னோட இரண்டாவது பாயிண்ட். நெசமா சொன்னா இதுதான் முதல் பாயிண்ட். எனக்கு இரண்டாவது குழந்தை பெத்துக்க விருப்பம் இல்லே. மறுபடி என்னை வற்புறுத்த முயற்சிக்காமே உருப்படியா உங்க மூளையை வேற வழியில் திருப்புங்க, புரியுதா?”
அவள் சொன்னால் சொன்னதுதான்.
கோபம் பீறிட, “போடி சர்தான்” என்று சிணுங்கிக் கொள்ள ..இன்னும் ‘உடன்படுக்கை’ ஏற்படவில்லை.
சலிப்புடன் வீட்டில் நுழைந்தான்.
“அப்பா உனக்கு லெட்டர்” என்றான் பாபு. அலட்சியமாய் வாங்கினான்.
ரமா எதிரில் வந்து நின்றாள், காபி டம்பளருடன். “யாரு தெரியுதா, உங்க சென்னை அப்பா” என்றாள் புன்னகையுடன்.
அத்தனை கோபத்திலும் சங்கரிடம் பதற்றம் வந்துவிட்டது. சிறுவயதிலேயே அனாதையான அவனை பெரியப்பா குடும்பத்தினர் படாதபாடு படுத்தி விட, வேலை தேடி பம்பாய் சென்ற போது அறிமுகமானவர்கள்தான் சிவராமனும் சாவித்திரியும்.
‘அப்பா, அம்மா’ என்றுதான் அவர்களை அழைப்பான். இருவருக்கும் குழந்தை கிடையாது என்பதால் இவன் மீது தனிப்பாசம்.
அவர்களிடம் இருந்த பணத்தை உறவினர் ஒருத்தர் ஏமாற்றி விட, இப்போது சென்னைக்கே வந்து விட்டனர்.
அவ்வப்போது கடிதம் எழுதிக்கொள்வார்கள்.
சமீபத்தில் ஒருமுறை உடம்பு சரியில்லை என்று கடிதம் வர, இவன் மட்டும் போய்ப் பார்த்தான்.
சிரமப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.
“எனக்கு ஏம்மா சொல்லலே?” என்று சாவித்திரியிடம் கேட்டான்.
“உனக்கும் குடும்பம் ஆச்சு. குழந்தை பிறந்தாச்சு. உன்னை எப்படிரா சிரமப்படுத்துறது?” என்றாள்.
இரண்டொரு முறை பணம் அனுப்பினான். பிறகு இவனுக்கே சிரமப்பட அனுப்ப இயலாமல் போனது.
இப்போது இவர்களிடம் இருந்து லெட்டரா?
“பாபு எப்படி இருக்கிறான்? மாட்டுப்பெண் நலமா? உன்னைப்பார்த்து ரொம்ப நாளாச்சு. அப்பாவுக்கு இருமல் அதிகம். உன் கடிதம் பார்த்து வெகு நாட்கள் ஆனதால் எழுதினேன்” – உன் அம்மா
அம்மாவின் பிழைகளுடன் கூடிய கிறுக்கலான கையெழுத்தில் கடிதம் பார்த்ததும் மனசு கனமானது. என்ன வற்புறுத்தியும் இவனுடன் வந்து இருக்க மறுத்து விட்டார்கள்.
“இதாம்பா வசதி. தப்பா நினைக்காதே. அடிக்கடி வந்து போயிக்கலாம்.”
வரத்தான் முடியவில்லை. மத்திய தர குடும்பத்தில், பாசத்தை நிர்ணயிக்க பணம்தான் அளவுகோலாகி விடுகிறது.
ரமா அருகில் வந்து தலையை வருடினாள். அந்த ஸ்பரிசம் இந்த நேரத்துக்கு மனசுக்கு இதமா இருந்தது.
“பாவம் எப்படி சிரமப்படறாங்களோ?” என்றான்.
“நான் ஒண்ணு சொல்லட்டுமா?” என்றாள் மென்மையான குரலில்.
“என்ன?”
“உங்களால இன்னொரு குழந்தையை வளர்த்து ஆளாக்க முடியும் இல்லையா? அந்த பணத்தை உங்க அப்பா அம்மாவுக்குக் கொடுங்களேன். உங்களையே மகனா நினச்சு பாசத்தைக் கொட்டறவங்களுக்கு உதவறதுல திருப்திப்படுங்களேன்! இந்த பிடிவாதத்தை விட நியாயமான காரணமும் கிடைச்ச மாதிரி ஆகும். என் மேலயும் கோபம் வராது. என்ன சொல்றீங்க?”
அவனுள் நெகிழ்ச்சி வந்தது. நியாயம்தான்! ஏன் அப்படிச் செய்யக்கூடாது?
சந்தோசமாய் தலையசைத்தான்.
“நானும் இன்னொரு குட் நியூஸ் தரேன். இன்னைக்கு உங்களுக்கு அது
சர்ப்ரைஸ்! என் பிடிவாதம் இன்று முதல் கைவிடப்படுகிறது” என்றாள் முகம் சிவந்து!!
பாபுவுக்குப் புரியவில்லை, ஏன் அப்பா இப்படி துள்ளிக் குதிக்கிறார் என்று!
அருமையான கருத்தும் எளிமையான நடையும் பாராட்டுக்கள்