வணக்கம் நண்பர்களே,
வாழ்க்கை எப்படிப் போய்க்கிட்டு இருக்கு! நீங்க சினிமா பார்ப்பதெல்லாம் உண்டா? அதுக்கெல்லாம் எங்க நேரமிருக்குங்கிறீங்களா?
இப்போதெல்லாம் பல இயக்குனர்கள் பல புதுமுக ஹீரோ, ஹீரோயின்களை அறிமுகப்படுத்திக் குறைந்த பட்ஜெட்டில் நல்ல படங்களை எடுத்து வருவது பாராட்டக் கூடியதே. அதே போல குடும்பக் கதைகளை மட்டுமே கதைக் கருவாகக் கொள்ளாமல் சில வித்தியாசமான விஷயங்களையும் படமாக எடுத்து வருவது ஆரோக்கியமான முயற்சிதான்.
அப்படி வெளிவந்த ஒரு படம்தான் ஈரம். ஆவிகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். ஆவிகளைப் பற்றி நம்பாத ஹீரோ ஒரு கட்டத்தில் ஆவிகளைப் பற்றி ஆராய்ச்சி செய்பவரை தொடர்பு கொண்டு பல விஷயங்களைத் தெரிந்து கொள்கிறான். ஆவிகள் என்பது நம்முடைய உடலில் இருந்து வெளியேறிய ஆன்மாதான். அதே ஆன்மா எப்படி ஒரு பெண்ணின் கருவின் மூலம் மீண்டும் உலகுக்கு வர முடியுமோ அதேபோல் ஒரு சில ஆவிகளால் பஞ்சபூதங்கள் (ஈரம் படத்தில் நீர்) மூலமாக வர முடியும் என்பதுதான் கரு.
இந்த வரிசையில் வந்த இன்னொரு படம் பொம்மாயி. இந்த படம் பில்லி, சூனியத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். இந்த பில்லி, சூனிய விவகாரத்தை முழுமையாக வெறுக்கும் ஹீரோ இறுதியில் தன் மகளைக் காப்பாற்ற ஒரு மந்திரவாதியை நாடவேண்டியதாகிவிடுகிறது. படத்தை மிக மென்மையாக ஆரம்பித்து விட்டு, பின்பு சூனியம் எப்படி வைக்கிறார்கள், அதன் இரகசியம் என்ன? அவற்றை எப்படி எதிர்கொள்வது என்பதுவரை நேர்த்தியாக எடுத்திருக்கின்றனர்.
என்னப்பா இது! ஒரே திரை விமர்சனமா இருக்குன்னு நினைக்கிறீங்களா? சரி..சரி கடைசியா ஒரே ஒரு விஷயம். பெரும்பாலும் மொழி மாற்றம் செய்யப்பட்ட ஹாலிவுட் படங்கள் பெரிய அளவில் வசூல் சாதனை செய்வதில்லை. குறிப்பாக ஜுராசிக் பார்க் வெளியான ஒரு வாரத்தில் 10லட்சம் ரூபாயும், தி மம்மி 9 லட்சமும் எடுத்த வசூல்தான் சாதனையாக இருந்தது. இப்போது அதை மிஞ்சி ஒரே வாரத்தில் 4 கோடிகளை அள்ளிக் குவித்து இன்னும் ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக் கொண்டிருக்கிறது ஒரு ஹாலிவுட் படம். அது என்ன படம்ன்னு நீங்களே கண்டுபுடிச்சிருப்பீங்க. 2012 ருத்ரம் தான் அது. அப்படி என்ன விஷேசம் அந்தப் படத்துல?
சில வாரங்களுக்கு முன்னாடி ஹேமா 2012ல வரப்போற உலக அழிவைப் பற்றி எழுதியிருந்தாங்க. இதைப் பற்றின வீடியோ காட்சியை போன வருடமே யூ-ட்யூப்லேயும் வெளியிட்டிருந்தாங்க. இந்த உலக அழிவை மையமா வச்சு எடுக்கப்பட்ட படம்தான் இந்த 2012 ருத்ரம். அப்போ உண்மையிலேயே உலகம் அழியப்போகுதா என்ன? இந்தக் கேள்வியோடு நாசா வெப்சைட்டை அலசின அப்புறம்தான் தெரிந்தது. உலகம் அழியாது, பாதிப்படைவதற்கு மட்டுமே வாய்ப்பு உண்டு என்று. அப்படி அவர்கள் என்னதான் சொல்கிறார்கள்?
அதாவது சில வருட சுற்றுக்கு (cycle-time) ஒருமுறை படத்தில் உள்ளவாறு சூரியனில் ப்ளாக் ஹோல் (black hole) விழுமாம். இதனால் அந்த இடத்தில் இருந்து ஒளி வெளியாவதற்கு பதிலாக, காமா கதிர்கள் என்று அழைக்கப்படக்கூடிய மிக அபாயகரமான கதிர்கள் நம் புவி மீது விழுமாம். இந்த 2012ல் ஏற்படக்கூடிய ப்ளாக் ஹோல் மிக அதிக உக்கிரமானதாக இருக்கும் என்று கூறுகின்றனர். மேலும் இதனால் மனிதர்களுக்கு பெரிய பாதிப்புகள் வராது, மாறாக விண்ணில் இருக்கும் செயற்கைக் கோள்கள் அனைத்தும் செயல் இழந்துவிடுமாம். தொலைத் தொடர்புள்ள அனைத்து வசதிகளும் செயல் இழக்கும் அபாயம் உண்டாம். குறிப்பாக தொலைபேசி இணைப்புகள் அனைத்தும் ஸ்தம்பித்து விடும் என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
2012 பற்றிய இன்னொரு முக்கிய விஷயம், பண்டைய மாயன் இன மக்களின் காலண்டர் காலண்டர் முற்றுபெறும் வருடமும் 2012. ஹு..ம் இப்படியே ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமா சொல்லிக்கிட்டே போறாங்க, என்ன நடக்க போகுதோ தெரியல!
“பாம்பைக் கண்டால் படையே நடுங்கும்”
ஒரு பாம்பை எடுத்து அஞ்சாநெஞ்சம் கொண்ட ஒரு பெரிய போர்ப் படையினுள் விட்டுவிட்டால் என்ன ஆகும்? அத்தனை பேரும் போரை நிறுத்திவிட்டு தலைதெறிக்க ஓடி விடுவர் அல்லவா! அப்படி என்ன பாம்பைக் கண்டால் பயம் கொள்ள வேண்டிக் கிடக்கு? இத்தனைக்கும் முக்கால்வாசி பாம்பினங்களில் உயிரைக் குடிக்கும் விஷம் கிடையாது.
நடைபாதை ஓரத்தில் பாம்பாட்டி ஒரு பாம்பை படம் எடுக்க வைத்துவிட்டானென்றால், இங்கே நமக்கு வயிற்றைக் கலக்கி விடும். இருந்தாலும் பாம்பின் வாய் கட்டப்பட்டிருக்கும் என்ற நம்பிக்கையில் தூரத்தில் அதுவும் ஓடுவதற்கு தயாராய் நின்று கொண்டு பார்த்துவிட்டு வந்துவிடுகிறோம். ஆனால் அந்த பாம்பாட்டியோ தன் எதிரில் அதை நிற்க வைத்து, மகுடி வாசித்து பாம்பை ஆட வைக்கிறான். உண்மையிலேயே பாம்பு மகுடி ஒலியில் ஆடுகிறதா? இல்ல பாம்பாட்டி கைகளை ஆட்டுவதால் ஆடுகிறதா?
பாம்புக்குக் காது கேட்காது. ஆகையால் அந்த மகுடிச் சத்தத்தை அதனால் கேட்க முடியாது. ஆகவே அது பாம்பாட்டியின் ஆட்டத்திற்கேற்ப மட்டுமே ஆடுகிறது என்கின்றனர் அறிவியலாளர்கள்.
ஒருமுறை ஊட்டிக்கு டூர் போயிருந்தப்ப ஒரு பாம்பாட்டி பாம்பை வைத்துக் கொண்டு பல வித்தைகளைக் காண்பித்துக் கொண்டிருந்தார். அப்போ எங்களுள் இருந்த ஒருவன் கேட்டான், பாம்பு ஓடிடுச்சுன்னா என்ன பண்ணுவீங்கன்னு? மகுடி இருக்குல்ல.. அத வாசிச்சுப் பிடிச்சுருவோம்னார். பாம்புக்குத்தான் காது கேட்காதே, எப்படி திரும்ப வரும்ன்னு கேட்டோம். அட போப்பா! அதுக்கு காது கேக்குமா, கேக்காதானெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனா அதுங்க எந்த ஒரு சத்தத்தையும் உணர்ந்து கொள்ளும் என்றார். அப்படின்னா அந்த மகுடிச் சத்தத்தையும் அவைகளால் உணர முடியும்தானே!
சரி.. பாம்பு கதையை விடுங்க, உங்களுக்கு ஜோதிடம், நியூமராலஜிலெல்லாம் நம்பிக்கை உண்டா? இன்றைக்கு மக்கள் மனதில் இந்த நியுமராலஜி, அதிர்ஷ்டக்கல் போன்ற சமாச்சாரங்கள் ஒரு பெரிய இடத்தையே பிடித்து விட்டன. சமீபத்தில் கூட குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படும் sivakasiயைக் கூட sivakaasi எனப் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று அவ்வூர் கவுன்சிலர்கள் ஒன்று கூடி முடிவெடுத்துள்ளனர். அப்படியென்றால் எந்த அளவுக்கு நியூமராலஜியின்படி பெயர் மாற்றம் செய்வது என்பது சர்வ சாதாரணமாகிவிட்டது பார்த்தீர்களா? அதற்காக நியூமராலஜியையோ, ஜோதிடத்தையோ குறை கூற வரவில்லை. பெயர்மாற்றத்திற்குப் பிறகு குட்டி ஜப்பான் எப்படி முன்னேறுதுன்னு பார்ப்போம்.
சிதம்பரம் வைத்தீஸ்வரன் கோவிலுக்கு சென்றீர்களென்றால், அனேகர் அகத்தியர் நாடியைப் படிக்கச் சொல்லி கேட்பார்கள். ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள் கூட வாய் பிளந்து கேட்டுக் கொண்டிருப்பார்கள். சொல்பவை அனைத்தும் அப்படியே நடந்திருக்கும். அந்த ஜோதிட வாக்குகள் அனைத்தும் பல நூறு வருஷங்களுக்கு முன்பே அகத்தியர் போன்ற ரிஷிகளாலும், சித்தர்களாலும் சுவடிகளாக்கப்பட்டது என்கின்றனர். மேலும் அது கிடைக்க வேண்டும் என்ற சித்தம் உள்ளவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்கின்றனர்.
இது நூறு சதவீதம் உண்மையானது என்று சொல்பவர்களும் உண்டு, இது சுத்த டுபாக்கூர் என்று சொல்பவர்களும் உண்டு. அது சரி! ஜோதிட, ஜாதக கணிப்புகளைப் பற்றிய உங்களோட கண்ணோட்டமென்ன?
இன்றைக்கு கொடிகட்டிப் பறக்கும் துறைகளுள் ஒன்று விளம்பரத் துறை. இன்று தொலைக்காட்சி, வானொலி, சுவரொட்டிகள் என பலப் பல வழிகளில் விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. அதுவும் இப்போது மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பேருந்து மற்றும் இரயிலில் கூட விளம்பரத் தாள்களை ஒட்டி விடுகின்றனர். விமானம் ஒன்றுதான் பாக்கி!
பேருந்தின் முன்னால், பின்னால், பக்கவாட்டில் என்று ஒட்டாத இடமே இல்லை. இதைவிட பேருந்தில் ஏறினால், ”நோ சேல்ஸ், நோ மார்க்கெட்டிங், நோ ரிஸ்க்”, “பகுதி நேர வேலை வாய்ப்பு” போன்ற விளம்பரத் தாள்கள்நிறையவே ஒட்டப்பட்டு இருக்கின்றன. இதன்மூலம் சிலருக்கு நன்மைகள் இருந்தாலும் பெரும்பாலும் பலருக்கும் இது போன்ற விளம்பரங்கள் வெறுப்பைத்தான் தருகின்றன.
இப்படித்தான் ஒரு மொபைல் நம்பருக்கு போன் செய்துவிட்டோம். சார் உங்களுக்கு வருகிற ஞாயிற்றுக்கிழமை அப்பாய்ண்மென்ட் கொடுக்கிறோம், கண்டிப்பா வந்துடுங்க என்றபடி இடத்தையும் சொல்லிவிடுகிறார்கள். ஆனால் என்ன வேலை என்று மட்டும் சொல்வதில்லை. அவர்கள் சொல்லும் ஹோட்டலுக்குச் சென்றால் ஒரு மணி நேரம் ஒரு ரூமில் போட்டு மந்திரித்து விடுகின்றனர். அங்கு செல்வதற்கு முன்பு மொபைலை அணைத்துவிட வேண்டும், யாரிடமும் பேசக்கூடாது, இடைமறித்துக் கேள்விகள் கேட்கக்கூடாது என்பது போன்று பல கண்டிஷன்கள் வேறு.
இது போன்ற பல விளம்பரங்கள் எம்.எல்.எம்(மல்ட்டி லெவெல் மார்க்கெட்டிங்) அடிப்படையாகக் கொண்டவையாகவே இருக்கின்றன. அனேக மக்கள் இதன் அடிப்பை வியூகம் தெரியாமல் சேர்ந்து விட்டு ஏன்டா சேர்ந்தோம் என்று புலம்புகின்றனர். நாம்தான் இது போன்ற விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.
சரி அன்பர்களே! மீண்டும் அடுத்த அரட்டையில் சந்திக்கலாம்.
அன்புடன்,
மாயன்
“
அருமையாய்ச் சொன்னீர்கள் மாயன்! இந்த ஜாதகம், நியூமராலஜி இதையெல்லாம் நம்புவதைக் காட்டிலும் உழைப்பின் மேல் நம்பிக்கை வைத்தால் பலன் கிடைக்கும். இப்படிப்பட்ட விளம்பரங்களைப் பார்த்து ஏமாறாமல் இருந்தாலே போதுமானது. வாழ்த்துக்கள்.
என்னைப் பொறுத்தவரை மல்ட்டி லெவல் மார்க்கெட்டிங் முறை சமுதாயத்தின் சீர் கெடுக்கும் முறை. ஒரு நல்ல ஆரம்பம் கிடைத்து விட்டால் அதன்பின் ஒரு வேலையும் செய்யாமலேயே பணத்தை அள்ளி எடுக்கக் கூடிய வகையில் அதன் அமைப்பு அமைந்திருக்கிறது (அவர்களுக்குக் கீழே வேலை செய்பவர்களாக ஒரு சிலர் அமைந்து விட்டாலே போதும்).
பாம்புக்கு கட்செவி என்று பெயர். வைத்தீஸ்வரன் பற்றி நிந்தாஸ்துதி ஒன்று உண்டு. வாதக்கால் என்பதால் காலைத்தூக்கி வைத்துள்ளார். மைத்துனர் நாராயணனுக்கு நீரிழிவு; எனவே தண்ணீரிலே சயனிக்கிறார். மூத்த மகனுக்கோ பெரிய தொந்தி! அடுத்தவனுக்கோ ஆறுமுகம். இப்படிப்படவரை எப்படி வைத்தீஸ்வரன் எனலாம்? என்ற கருத்தில் அமைந்த பாடல் வாதக்காலாம் தமக்கு மைத்துனருக்கு நீரிழிவாம்…..என்று அமையும்.