அழகுக்கு நல்ல அகமே முக்கியம்!

வணக்கம்! நாம் எல்லோரும் அழகாக இருக்க வேண்டும் என ஒவ்வொரு நிமிடமும் நினைக்கிறோம். அதனால்தான் நம்மிடம் நம்மைவிட, நம் வீட்டுக் கண்ணாடி மிகுந்த நட்போடு இருக்கிறது!

எது உண்மையான அழகு? பரு, சுருக்கங்கள் ஆகியவற்றை மறைக்க மணிக்கணக்காக அழகு நிலையத்தில் அமர்ந்து மேக்கப் போட்டாலும், நம்ம மனசு நல்லா இல்லைன்னா அது முகத்தில பிரதிபலிச்சுடும். அதனால நம்ம உடம்புக்கு வெளியில் இருக்கிற அழகை எப்படிப் பாதுகாக்கணும் நினைக்கிறோமோ, அதே மாதிரி உள்ள இருக்கிற அழகையும் பாதுகாக்கணும். இது முக்கியமான ஒரு கடமை.

அக அழகைப் பெறுவதெப்படி? நம்மிடம் உள்ள நல்ல குணங்கள், எண்ணாங்கள் மட்டுமே அந்த அக அழகைத் தீர்மானிக்கின்றன. நம் மனதிற்குள் இருக்கிற நல்லது – கெட்டது, மனிதத்தன்மை – விலங்குத்தன்மை, விருப்பு – வெறுப்பு ஆகிய இந்த குணங்களை நாம் ஏதாவது ஒரு சமயத்தில் எங்காவது வெளிப்படுத்தும்போது அந்தக் குணங்களின் தன்மையானது நம் உடம்பிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும்.

எடுத்துக்காட்டாக, நாள் முழுவதும் செய்யும் வேலையினால் ஏற்படும் டென்ஷன்,அதனால் வரும் கோபம், எரிச்சல் – இவற்றை மற்றவர்களிடம் வெளிப்படுத்துவதன் பின் வரும் பிரச்சினைகள் என்று உங்கள் மனம் முழுதும் இப்படி இருந்தால் அதன் பாதிப்பானது கண்டிப்பாக உங்கள் உடலிலும் எதிரொலிக்கும். உடலையும், உள்ளத்தையும் பாதிக்கும் இவ்வகை குணங்களை விட்டுவிட்டு அன்பாக இருந்தாலே, அதன் கூடவே மற்ற எல்லா வகையான நல்ல குணங்களும் வந்து சேர்ந்துவிடும்.

ஒரு கருணை நிறைந்த பார்வையானது, பார்க்கும் எல்லோரையும் வசியப் படுத்தும் திறன் வாய்ந்தது. ‘அன்னை தெரசா அழகில் சற்றுக் குறைவுதான்’ என்று யாராவது சொல்லப் பிரியப்படுவார்களா? அக அழகின் மூலம் அழகுக்கு அழகு சேர்த்தவர் அவர்! அமைதியான கருணையும் அன்பும் நிறைந்த உள்ளமானது வயதைத் தாண்டிய ஒரு வசீகரத்தை நமக்குத் தருகிறது.

ஆனால் இன்றைய இளைய சமுதாயத்தினரின் அழகிற்கான வாய்ப்பாடு வேறு விதமாக இருக்கிறது. புகழின் உச்சியில் இருக்கும் ஒரு சிலரைப் பார்த்து அதுதான் அழகு என்று தவறாகப் புரிந்து கொள்கிறார்கள். புகழ் அடைந்த ஒரு சிலரின் அக அழகானது எப்படி இருக்கிறது என்பது வெளிப்படையாகத் தெரிந்திருந்தும், அவர்களின் புகழின் கவர்ச்சி இவர்களைப் புற அழகில் மட்டுமே நாட்டம் கொள்ளத் தூண்டுகிறது!

கொறிக்கும் உணவுகள், அதன் மூலம் கிடைக்கும் மிக ஒல்லியான தேகம் இதுதான் அழகு என்று நினைத்துக் கொள்கிறார்கள். ஆடைகளும் தேகத்தை அப்பட்டமாய் வெளிக்காட்டுவதாய் ஆகிவிட்டன. உடையையும் எடையையும் குறைத்து அதையும் வெட்ட வெளிச்சமாக்கிக் காட்டுவது ஒரு நாளும் அழகாகிவிட முடியாது.

நல்ல எண்ணங்கள் கொண்டவர்களாக, சமுதாயத்தில் நல்ல மனிதர்களாக நமது அக அழகை மாற்றிக் கொண்டு, நமக்கென்று இருக்கும் அழகை நல்ல தரமான அழகு சாதனப் பொருட்களை உபயோகித்துப் புற அழகையும் பேணிக் காத்தால் உங்களுடன் அந்த உலக அழகிகள் / அழகர்கள் கூட போட்டி போட முடியாது.

(அகத்தின் அழகு முகத்தில் தெரியும்ன்னு ஒரே வரில சொல்லிட்டுப் போக வேண்டியதுதானே! அதுக்கு எதுக்கு இவ்ளோ பெரிய கதைன்னு கேட்கிறீங்களா!!!!)

About The Author

5 Comments

  1. gomathi mylraj

    மிகவும் அருமை. அக அழகை மேம்படுத்த நம் தவறுகளை நாமே கண்டறிந்து திருத்திக்கொள்ள வேண்டும்.

  2. Rishi

    தேவி,
    கட்டுரையைக் காட்டிலும் உங்க ஸ்பெஷல் டச் வச்சு முடிச்ச விதம் அருமை. 🙂

  3. DeviRajan

    வருகைக்கும், தங்களின் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி கோமதி!

Comments are closed.