நாய்ப் பிழைப்பு

அந்த ஹோட்டலின் உள்ளே திடீரென ஒரு நாய் நுழைந்தது. அதன் வாயில் ஒரு பேப்பர். ஹோட்டல் முதலாளி ஆச்சரியத்துடன் அந்தப் பேப்பரை எடுத்துப் பார்க்க, அதில் ”நாலு சப்பாத்தி, இரண்டு தோசை பார்சல் – பணம் இதனுடன் இணைக்கப்பட்டிருக்கிறது" என்று எழுதியிருந்தது.

ஆச்சரியமான அந்த ஹோட்டல்காரர் பார்சலை நாயின் வாயில் வைத்தார். நாய் அதனைக் கவ்விக் கொண்டு கிளம்பியது. ஹோட்டல் மூடும் நேரமானதால் நாய் என்னதான் செய்கிறது என்பதைப் பார்க்கும் ஆர்வத்துடன் கடையைச் சாத்திவிட்டு அவர் நாயைப் பின் தொடர்ந்தார்.

நாய் தெருவில் நடந்து ஒரு சாலையைக் கடக்கும் இடத்தில் வந்து சிக்னலில் பச்சை விளக்கு வரும் வரை காத்திருந்து சாலையைக் கடந்து பஸ் நிறுத்தத்திற்கு வந்து பஸ்சுக்காகக் காத்திருந்தது. அந்த ஹோட்டல்காரர் ஆச்சரியத்துடன் நாயைத் தொடர்ந்து கொண்டே இருந்தார்.

ஒவ்வொரு பஸ் வரும் போதும் முன்னால் சென்று நின்று நம்பர் என்ன என்று பார்க்கும். தனக்கு வேண்டிய பஸ் இல்லை என்றதும் திரும்பப் போய் நிற்கும். அரை மணி நேரத்திக்குப் பிறகு ஒரு பஸ் வர அதன் நம்பரைப் பார்த்து விட்டு வாயில் கவ்விய டிபன் பையுடன் பஸ்சில் ஏறியது. ஹோட்டல்காரரும் வியந்து போய் என்னதான் நடக்கிறது பார்க்கலாமே என்று பஸ்சில் ஏறினார்.

பஸ் பல நிறுத்தங்களைக் கடந்து சென்றது. நகரத்தின் எல்லையைக் கடந்து ஒரு நிறுத்தத்தில் பஸ் நின்றவுடன் நாய் தனது இருக்கையிலிருந்து எழுந்து பஸ்ஸிலிருந்து இறங்கியது. ஹோட்டல்காரரும் வாயைப் பிளந்தபடியே நாயைத் தொடர்ந்தார்.

பல தெருக்களைக் கடந்து ஒரு வீட்டிற்கு முன் வந்தவுடன் நின்றது. உணவுப் பொட்டலத்தைக் கீழே வைத்துவிட்டு வேகமாக ஓடி வந்து முன் கதவில் மோதியது. உள்ளிருந்து யாரும் கதவைத் திறக்க வரவில்லை. பின்னர் மீண்டும் இரண்டு மூன்று முறைகள் கதவில் மோதியது. பின்னரும் வீட்டிலிருந்து யாரும் வெளி வரவில்லை. அதற்குப் பிறகு பின்புறமாகச் சென்று அங்கு கொல்லைப் புறத்திலிருந்த சின்ன சுவரைத் தாண்டி ஜன்னல் பக்கம் சென்று ஜன்னலைத் தலையால் பலமுறை மோதியது.

அத்தனை மோதலுக்குப் பிறகு குண்டாகப் பயில்வான் போலிருந்த ஒருவன் வந்து கதவைத் திறந்தான். நாயைப் பார்த்தவுடன் அதனைக் கோபமாக அடித்து உதைத்து அகராதியில் இல்லாத வார்த்தைகளால் வசை பாடித் தீர்த்தான் .

இதனைப் பார்த்த அந்த ஹோட்டல்காரர் அதிர்ச்சியாகி அந்த ஆளிடம் சென்று, "இந்த நாயை ஏன் அடிக்கிறாய், அது எவ்வளவு அறிவான நாய் தெரியுமா? இந்த மாதிரி ஒரு நாயைப் பார்க்கவே முடியாது" என்று சொல்ல, அந்த ஆள், "இந்த நாயா, சரியான புத்தி கெட்டதுங்க! அறிவிருந்தா இப்படி என் தூக்கத்தைக் கெடுத்து கதவைத் தட்டுமா? போகும்போது சாவியை எடுத்துக் கொள்ளத் துப்பில்லை.. இது இரண்டாவது தடவை, இந்த நாய் சாவியை மறக்கறது!" என்று அலுத்துக் கொண்டான்.

நாய்ப் பிழைப்பு என்பது இது தானோ ?

கதையின் நீதி :

நீங்கள் எவ்வளவுதான் திறமையாக வேலை செய்தாலும் உங்கள் முதலாளியைத் திருப்திப் படுத்த முடியாது (!!!)

About The Author

3 Comments

  1. P.Balakrishnan

    ஒரு சிலருக்கு எவ்வளவுதான் நல்லது செய்தாலும் நல்ல பெயர் கிடைப்பதில்லைதான்!

  2. Rishi

    மற்றுமொரு நீதி :
    ஒரு நிகழ்வை எதிர்மறையான பார்வையில் மட்டுமே பார்த்து வாழ்க்கையில் சுவாரஸ்யத்தை இழப்பது தகாது! கோணங்கள் மாற எண்ணங்களும் மாறும்!

Comments are closed.